காந்தி ஏன் ஒத்துழையாமை இயக்கத்தை தேர்ந்தெடுத்தார் என்று நேரு தனது அலசலைச் சொல்கிறார். அதைக் குறித்து எழுதுவதற்கு காந்திதான் பொருத்தமானவர் என்று குறிப்பிடுகிறார்.
நேரு சொல்லிப் போகும் பறவைப்பார்வையில் காந்தி அதை அணுகவேவில்லை. நேருவைப் பொறுத்த வரை, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடும் மாற்று வழிகள் எல்லாம் பலன் தரும் நிலையில் இல்லாததால் ஒத்துழையாமை கவர்ச்சியாக தெரிகிறது. காந்திக்கு மாற்று வழிகள் பலன் தருவதாக இருந்தாலும் ஒத்துழையாமையும் அகிம்சையும், சத்தியாக்கிரகமும்தான் ஒரே வழி.
பிரச்சனைக்குத் தீர்வு பிரச்சனைக்குள்தான் இருக்கிறது. ஆனால் அந்த தீர்வைப் பார்க்க பிரச்சனையிலிருந்து வெளியில் வந்து பார்க்கும் வித்தை தெரிய வேண்டும். பிரச்சனைக்குத் தீர்வு என்று குறுகிய கண்ணோட்டத்தில் இல்லாமல் பிரச்சனையின் அடித்தளத்தையே அசைத்துப் போடும் நடவடிக்கைகளை எடுக்கிறார். கூடாரத்தைத் தகர்க்க வேண்டுமானால், பளபளக்கும் ஆயுதங்களுடன் வந்து கூடாரத்தை தாக்கலாம், அல்லது கூடாரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தோள்களை நகர்த்திக் கொள்ள வேண்டும்.
ஆங்கிலேயே ஆதிக்கத்தை முறியடிக்க அவர்களுடன் மோதுவதன் மூலம் பலன் கிடைக்கலாம். அதில் பெருமளவு உயிரிழப்பும் அழிவும் ஏற்படும். ஆதிக்க சக்தியிடம் இருக்கும் ஆயுதங்களும், சக்திகளும் அதனுடன் மோதுபவர்களைத்தான் அதிக இழப்புகளுக்கு உள்ளாக்கும். கடைசியில் ஆதிக்கம் உடைந்தாலும் மோதலில் செலவான ஆற்றல்கள் நம்மைப் பொறுத்த வரை வீண்தான்.
ஆங்கிலேயரின் ஆதிக்கம் அதை நாம் ஏற்றுக் கொள்வது வரைதான் இருக்கும். படையெடுத்து வந்த நெப்போலியனின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாமல் மாஸ்கோ நகரத்தை விட்டுச் சென்று விட்ட மக்கள் கூட்டத்தைப் போல இந்தியர்கள் அனைவரும் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் அதிகார, வணிக, பொருளாதார அமைப்புகளை கைவிட்டுவிட்டால் எதன் மீது அவர்கள் அதிகாரம் செலுத்த முடியும். அத்தகைய போராட்டத்தின் வெற்றி தோல்வி ஆங்கிலேயர் கையில் இருக்காது. இந்தியர்களின் கையில் மாறியிருக்கும்.
எதிரி வரையறுத்த விதிகளின்படி போராட ஆரம்பித்த உடனேயே எதிரிக்கு பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. போராட்டத்தின் களத்தை நாம் வரையறுத்துக் கொண்டு இறங்கினால் எதிரி என்னதான் செய்தாலும் அவனது தோல்விப் பயணம் ஆரம்பித்து விடுகிறது.
'இது எல்லா சூழலுக்கும் பொருந்தாது. எதிராளியின் நேர்மையையும் பெரியமனிதத்தன்மையையும் பொறுத்தது' என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. கொடூரக் குணமும் வஞ்சகமும் சிங்கள அரசுக்கோ இசுரேலிய ஆதிக்கவாதிகளுக்கோ எந்த விதத்திலும் குறைந்ததில்லை. காந்தியின் தலைமையில் நடந்த விடுதலைப் போராட்டத்தால் இந்தியத் தரப்பு மட்டுமில்லாமல், ஆங்கிலேயர்களும் உயர்வு பெற்றார்கள். அறவழியில் நடக்கும் போராட்டம் இரு தரப்பையும் மேம்படுத்தி விடுகிறது.
மனிதனின் உயர் குணங்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் காந்தி காட்டிய வழியைப் பின்பற்றலாம். காந்தி காட்டிய வழி என்றால் உப்பு சத்தியாக்கிரகமும், ஒத்துழையாமை இயக்கமும், சட்ட மறுப்பு இயக்கமும் இல்லை. அவை அவரது தத்துவத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகள் மட்டுமே. போராட்டத்தில் வாழும் ஒருவர் காந்தீய தத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் ஆதிக்கம் தேவைக்கு மேல் ஒரு நாள் கூட நிலைக்காமல் விரட்டி அடிக்கும் வழிமுறையைக் கண்டு கொள்ளலாம்.
அது என்ன தேவைக்கு மேல்? எது வரை ஆதிக்கம் தேவை? அறவழிப் போராட்டத்தில், காந்தியின் சத்தியாக்கிரகத்தில், சத்தியாக்கிரஹி தேடல் விளக்கை தன் மீதே திருப்பிக் கொள்கிறான். தம்முள் இருக்கும் குறைகளைக் கழைந்து இறுக்கிப் பிடித்த கை போல குத்து விடும் போது ஆதிக்கம் உதிர்ந்து தீர்வு மலரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக