திங்கள், ஜனவரி 12, 2009

சத்தியம்

'உங்களில் பாவமே செய்யாதவர் முதல் கல்லை எறியுங்கள்' என்று சொன்னாராம் இயேசுபெருமான்.

சத்தியம் நிறுவனத்தை உருவாக்கி வளர்த்த ராமலிங்க ராஜூவை வில்லனாக்குவதில் ஆளுக்கு ஆள் போட்டி போடுகிறார்கள். இன்ஃபோசிசின் நாராயண மூர்த்தியில் ஆரம்பித்து, தணிக்கை அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பல நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிறுவன மேலாளர்கள் 'ராமலிங்க ராஜூதான் தப்பு, அவரை சிறையில் அடைத்து தண்டனை கொடுத்து விட்டால் வணிக உலகம் சரியாகி விடும்' என்று எழுதிக் குவித்து, பேசித் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி குழுமம் ஒன்றின் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். உள்தணிக்கைக் குழு என்று வைத்திருப்பார்கள். நிர்வாக இயக்குனருக்கு நேரடி கண்காணிப்பில் வேலை செய்யும் ஒரு குழுவினர் பல்வேறு அலுவலகங்களின் நடைமுறைகளை தணிக்கை செய்து அறிக்கை கொடுப்பார்கள். ஏதாவது நெறிதவறி நடப்பதை கண்டு பிடித்து சரி செய்து கொள்ளும் முறை.

நான் ஏற்றுமதி விற்பனைப் பிரிவில் உதவியாளராக இருந்தேன். எனக்கு பயிற்சிக்காகவோ, அல்லது வேறு ஏதோ காரணத்துக்காக ஒரு உள்தணிக்கை நடவடிக்கையை என்னை எதிர்கொள்ளச் சொன்னார் எனது மேலாளர். அவர் அதில் தலையிடவே இல்லை.

'நம்ம தொழிற்சாலையிலிருந்து மாதா மாதம் நிறைய அளவில் பொருட்கள் மாதிரி என்று துரித அஞ்சலில் அனுப்புகிறோம். அது பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும்'

'கேளுங்களேன்'.

அப்படி நிறைய அளவில் அனுப்புவது குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்துக்குத்தான் பெருமளவில் போய்க் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட தினமும் சில நூறு டாலர்கள் மதிப்பு வரை மாதிரிப் பொருட்கள் போய்க் கொண்டிருக்கும். கணக்கெடுத்துப் பார்த்தால் மாதா மாதம் ஆயிரக் கணக்கான டாலர்கள் மதிப்பு இருக்கும். அதனால் இந்த தணிக்கை நடவடிக்கை.

பல நேரங்களில் வழக்கமான விமான சேவையில் அனுப்பினால் தாமதமாகி விடும் என்று பெரிய அளவிலும் மாதிரி என்று பெயரில் அனுப்பி வைப்போம்.

துரித அஞ்சலில் (தனியார் சேவை) அனுப்பும் போது மாதிரிகளுக்கு 'வணிக மதிப்பு எதுவும் இல்லை. இலவசமாகத்தான் அனுப்புகிறோம்' என்று ஒரு உறுதிப் பத்திரமும் சேர்த்து அனுப்ப வேண்டியிருக்கும். அப்படி இருந்தால்தான் சுங்கக் கட்டுப்பாடுகளைத் தாண்டி பொருள் நேரத்துக்குப் போய்ச் சேரும்.

இதை விளக்கினேன்.

'இப்படி ஆயிரக் கணக்கான மதிப்பிலான பொருட்களை இலவசமாக அனுப்பி வைத்து விட்டால், நமது நிறுவனத்துக்கு இழப்புதானே! அதற்கு என்ன செய்கிறீர்கள்' என்று அவர் ஒரு கேள்வியைப் போட்டார்.

அது தெரியாமலா இருக்கிறது. 'மாதிரிப் பொருட்கள் எவ்வளவு அனுப்பியிருக்கிறோம் என்று குறித்து வைத்துக் கொண்டு, அடுத்த முறை வழக்கமான வணிக விற்பனை ஆவணம் அனுப்பும் போது இந்த மதிப்பையும் சேர்த்து விடுவோம்' அது மறுதரப்புக்கும் தெரியும். அவர்கள் பணத்தைக் கொடுத்து விடுவார்கள்.

'வெறும் மதிப்பை மட்டும் எப்படி சேர்ப்பீர்கள். விலையை அதிகரித்துக் காட்டுவீர்களா என்ன?'

'இல்லை இல்லை. 100 பொருட்கள் வணிகஆவணமாக அனுப்பும் போது, முன்கூட்டியே மாதிரி என்ற பெயரில் அனுப்பப்பட்ட 10 பொருட்களையும் சேர்த்து 110 பொருட்கள் என்று காட்டி, மதிப்பு அதிகரிப்போம்' அப்படித்தான் செய்து கொண்டிருந்தோம்.

'ஓஓஓஓஓஓஓஓஓ! அப்படி 100 பொருட்கள் அனுப்பும் போது 110 பொருட்கள் என்று வணிக ஆவணம் தயாரித்து அனுப்பினால், சுங்கத்துறையினர் அதைப் பிரித்து சரிபார்க்கும் போது, கண்டுபிடித்து விட்டால், நிறுவனத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விடுமே! சுங்கத்துறையிலுருந்தும், அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டுத் துறையிடமிருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு தண்டங்களை சந்திப்போமே'

இப்படி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு விட்டு போய் விட்டார். அவரது அறிக்கையையும் அப்படியே கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். எனக்கு கதி கலங்கி விட்டது. எனது மேலாளரும் நிறுவன இயக்குனரும் எப்படியோ சிரமப்பட்டு சமாளித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இப்படி செயல்பாட்டு வசதிக்காக செய்யும் குறுக்குவழியை சரியாக கிடுக்குப்பிடி போட்டு பிடித்து விட்டார் தணிக்கையாளர். அதன் பிறகும் நடைமுறை அப்படியே தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

கதை இது இல்லை. இதற்கு மேல் நடந்ததுதான் முக்கியம்.

நிறுவனத்தில் இன்னொரு பழக்கம், வாடிக்கையாளர்களிடமிருந்து தரம் குறித்து புகார் வந்து அதை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தால் அவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்போது இருந்த அன்னியச் செலாவணி கெடுபிடி நிலையில், யாரும் இது போல தரக் குறைவுக்காக பணத்தைத் திருப்பி அனுப்பிகிறேன் என்று சொன்னால், ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, திருட்டுத்தனமாக டாலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை என்று நிறுவ வேண்டியிருக்கும்.

அந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, எந்த வாடிக்கையாளருக்குப் பணம் கொடுக்க வேண்டுமோ அவருக்கு எதிர்கால விற்பனைகளின் போது, பொருளின் விலையைக் குறைத்து ஆவணம் அனுப்பி விடுவோம்.

ஆனால் இது அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிகளின்படி பெருங்குற்றம். பொருளின் விலையைக் குறைத்துக் காட்டி பணத்தை வெளியில் விட்டுக் கொடுப்பது தண்டனைக்குரிய செயல். கிட்டத்தட்ட எல்லா வாடிக்கையாளருக்குமே இது போல விலைப் குறைப்பு நடந்து கொண்டிருக்கும்.

அடுத்த தணிக்கை நடவடிக்கை வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் தரக் குறைவு புகார் மற்றும் அதற்கான நிவாரணம் அளிப்பது குறித்து. என்னை அந்த பக்கமே நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டு என் மேலாளர் தனியாக எதிர் கொண்டார்.

ஆண்டுக்கு நூற்றுக்கு மேல் வரும் அத்தகைய புகார் மற்றும் நிவாரணத் தொகை அளிப்பை அப்படியே மறைத்து விட்டார். அதற்கு முந்தைய ஆண்டில் ஒரு வாடிக்கையாளர் தரக் குறைவுக்காக நிவாரணத் தொகையை ஏற்றுக் கொள்ளாமல், பொருட்களை திருப்பி அனுப்பி விட்டார். அதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றி அரசின் விதிகளுக்குட்பட்டு பொருட்களைத் திருப்பிப் பெற்று பணத்தை அந்த பெயரில் வாடிக்கையாளருக்கு அனுப்பியிருந்தோம்.

இந்த ஒரே ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொண்டு அது தொடர்பான ஆவணங்களை குவித்து தணிக்கையாளரை அங்குமிங்கும் நகர விடாமல் பார்த்துக் கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் அவர் பல கோணங்களில் கேள்வி கேட்டும் வேறு எந்த விபரமும் பெற முடியவில்லை. 'இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர் குறைபாடுகள், அதற்கு பணம் திருப்புவது குறித்த நடைமுறைகள் சரியாக இருக்கின்றன' என்று அறிக்கை கொடுத்து விட்டார்.

நடைமுறை : சிறிதளவு அனுபவமும் கெட்டிக்காரத் தனமும் இருக்கும் மேலாளர் ஒருவர் நினைத்தால் தணிக்கை செய்பவர் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் உண்மையை வெளியில் கொண்டு வர முடியாது.

வணிக நிறுவனங்களில் விதிமுறைகளை மீறுவது என்பது தினசரி வாடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

நடைமுறைக்கு ஒத்து வராத சட்டங்கள், விதிமுறைகள் ஒரு புறம் இருக்க, 'சட்டத்தை மீறுவது சரிதான். எல்லாவற்றையும் சட்டத்துக்குட்பட்டு செய்து கொண்டிருந்தால் பிழைக்கத் தெரியாதவன் என்ற பேர்தான் வரும். கொடுப்பதை கொடுத்து உடைப்பதை உடைத்து நம்ம வேலையை பார்த்துக்கிட்டுப் போவதுதான் புத்திசாலித்தனம்' என்ற நமது போக்குதான் அடிப்படை காரணம்.

'அவசரமாக ஒரு அச்சு வேலை வருகிறது. அதைச் செய்வதற்கு 50 ரூபாய்தான் செலவாகும் என்று உங்களுக்குத் தெரியும். அதை செய்து தருமாறு வந்திருப்பவருக்கு இருக்கும் அவசரத்தில் 500 ரூபாய் கூட செலவழிக்கத் தயாராக இருக்கிறார் என்று உங்களுக்குப் புரிந்து விடுகிறது. எவ்வளவு ரூபாய் விலை வைப்பீர்கள்?'

'வாகன ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும். போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் கையூட்டு கொடுத்தால்தான் வேலை நடக்கும். உங்களுக்கு ஏற்கனவே வண்டி நன்றாக ஓட்டத் தெரியும். ஏதாவது ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து விட்டால் அவர்கள் கொடுப்பதை கொடுத்து வேலையை முடித்து விடுவார்கள் என்று சேருவீர்களா? நீங்களே போய் விண்ணப்பித்து உரிமம் பெற முயற்சிப்பீர்களா?'

'அப்படி நீங்கள் மட்டும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று இருந்தால் மற்றவர்கள் எல்லாம் உங்களை முந்திப் போய் விடுவார்கள், நீங்கள் மட்டுமின்றி உங்களைச் சார்ந்தவர்களும் துன்பப்படுவதுதான் மிஞ்சும்!'

ராமலிங்க ராஜூ தனது தகிடுதத்தங்களை செய்வதற்கு இப்படி ஒரு நியாயப்படுத்தல் இருந்திருக்கும். 'அவங்க எல்லாம் எப்படி இவ்வளவு ஆதாய வளர்ச்சி காட்டுகிறார்கள். நம்ம ஊழியர்கள், நம்ம நிறுவனத்துக்கும் அதே மாதிரி வளர்ச்சி காட்ட வேண்டாமா!' எதையும் செய்து நமது வேலையை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கும் போது நிலைமை இப்படித்தான் போய் நிற்கும்.

'ஏதாவது ஒரு நிறுவனம் 20%, 30% ஆதாயம் என்று செயல்பட்டுக் கொண்டிருந்தால், அவர்கள் நிச்சயமாக பல விதிகளை மீறிக் கொண்டிருக்கிறார்கள். பல வியாபார தருமங்களை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.'

பல விதிமீறல்களை செய்வதால்தான் அவ்வளவு ஆதாயம் ஈட்ட முடிகிறது. இன்றைக்கு சத்தியம் நிறுவனத்தின் கணக்குகளை எப்படி பூதக் கண்ணாடி வைத்து ஆராய்கிறார்களோ அதே போல மற்ற நிறுவனங்களின் கணக்குகளையும் தணிக்கை செய்து பார்க்கட்டும். எவ்வளவு எலும்புக் கூடுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிய வரும்.

மனிதரின் பேராசையை உந்துகோலாக வைத்து செயல்பட்டு வரும் முதலாளித்துவ பொருளாதார முறையில் விதிமுறை சட்டம் என்பவை உடைப்பதற்காக ஏற்பட்டவை. சேவை மனப்பான்மையில் அல்லது ஆண்டவனுக்குப் பயந்து மட்டும்தான் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அப்படி 100% விதிமுறைகளுக்குட்பட்டு நடக்கும் எந்த நிறுவனத்திலும், செலவுகள் போக வரி செலுத்திய பிறகு, முதலீட்டாளர்களுக்கு நியாயமான ஆதாயம் வழங்கும் அளவுக்கு மட்டுமே ஆதாயம் எஞ்சியிருக்கும். விற்பனையில் 40% ஆதாயம் என்பது எல்லாமே அரசாங்க சட்டங்கள் அல்லது வியாபார தர்மங்களை உடைத்து மட்டுமே பெற முடிவது.

இப்போது வரிந்து வரிந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வெளிச்சத்தை தம் மீதே திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும். அரசாங்கமும் சத்தியத்துக்கு செய்து கொண்டிருக்கும் கிரியைகளை எல்லா பெரிய நிறுவனங்களுக்கும் செய்து பார்க்கட்டும். அதன் பிறகு பேசலாம்.

7 கருத்துகள்:

புருனோ Bruno சொன்னது…

//. இன்ஃபோசிசின் நாராயண மூர்த்தியில் ஆரம்பித்து, தணிக்கை அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பல நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிறுவன மேலாளர்கள் '//

இதில் உச்சகட்ட நகைச்சுவை இன்போசிஸ் மூர்த்தியும் அவரது அல்லக்கைகளும் அளிக்கும் பேட்டிகள் தான்

--

மிக மிக நன்றாக எழுதப்பட்ட கட்டுரை

பாராட்டுக்கள் மா.சி.

குடுகுடுப்பை சொன்னது…

வ புருனோ Bruno said...

//. இன்ஃபோசிசின் நாராயண மூர்த்தியில் ஆரம்பித்து, தணிக்கை அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பல நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிறுவன மேலாளர்கள் '//

இதில் உச்சகட்ட நகைச்சுவை இன்போசிஸ் மூர்த்தியும் அவரது அல்லக்கைகளும் அளிக்கும் பேட்டிகள் தான்

--

மிக மிக நன்றாக எழுதப்பட்ட கட்டுரை

பாராட்டுக்கள் மா.சி.//

அவர் பொதுவாக எழுதியிருக்கிறார், நீங்கள் நாராயணமூர்த்தியை மட்டும் குறி வைப்பதன் நோக்கம் என்ன டாக்டர்.

வெட்டிப்பயல் சொன்னது…

Ramakrishna Raju? I think he is Ramalinga Raju

தமிழ் சசி | Tamil SASI சொன்னது…

You are talking purely based on accounting perspective.
Look at the way the promoters sold their shares, Insider Trading by executives and various other things

You are not talking about a Mannar & Company
You are looking at the 4th largest Software Company which had 50,000+ employees whose future is now in Question due to this fraud

The question is not just about Greed and Excesses in Wall Street and Dalal Street

It is about insufficient Gov regulation and nexus of independent board members and various other things which common people and employees have to rely on in judging a company

மா சிவகுமார் சொன்னது…

நன்றி புருனோ, குடுகுடுப்பை.

ராமலிங்க ராஜூதான் வெட்டிப்பயல். திருத்தி விட்டேன் நன்றி. இவ்வளவு நாள் ராமகிருஷ்ண ராஜூ என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன் :-)

வாங்க தமிழ் சசி,

நான் சொல்ல வருவது அரசுக் கட்டுப்பாடுகளும், தணிக்கை முறைகளும் மட்டும் நேர்மையை நிலைநாட்ட முடியாது. தொழிலின் அடிப்படை நோக்கம் மாற வேண்டும் என்பதுதான்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

IT companies have plenty of margin. real margin. they dont need to pay income tax. There is huge currency arbitrage. It is very easy to make 20 percent margin . Also they would have billed same head under multiple projects. Normally IT projects are quoted with 40-45 percent margin. Raju is simply hiding the money and lying no profits.
If they have only 3 percent margin, no one will be in IT business or they wont pay those fat salaries.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,
கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்துடன் அடிப்படையில் வேறுபடுகிறேன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

பொருளாதார விதிகளின்படி, சமூக நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் எந்த வியாபாரத்திலும் real margin என்பது சாத்தியமே கிடையாது. (real margin என்பது செலவுகள், வரி, முதலீட்டுக்கு ஆதாயம் போக மிஞ்சும் கூடுதல் மதிப்பு)

அன்புடன்,
சிவகுமார்