1. பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் பெரு வணிக நிறுவனங்களுக்குச் சாதகமான கொள்கைகள் பின்பற்றப்படாது. பரவலான பொது மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பலனளிக்கும் நடவடிக்கைகளைத்தான் எதிர்பார்க்கலாம். அதனால் இந்தியாவிலும், வியாபாரிகள், பெரு நிறுவனங்கள் சார்ந்த பொருளாதாரத்துக்கு நிவாரணம் சீக்கிரம் கிடைத்து விடாது.
2. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கலவையாக ஒரு கிச்சடி அரசு அமைவது வணிகர்கள் சார்ந்த கட்சிகளான பாசக அல்லது காங்கிரசு தலைமையில் அரசு அமைவதை விட நல்லதாகவே இருக்கும். மும்பை பங்குச் சந்தைக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், எகனாமிக் டைம்சு படிப்பவர்களுக்கும் சாதகமான பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், கிராமத்து மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சாதகமான நிர்வாகம் அமையலாம்.
3. Wealth at the bottom of pyramid என்று சி கே பிரகலாத் சொன்ன மந்திரத்தைப் பிடித்துக் கொண்டு ஒரு ரூபாய் சாம்பூ பொதி, 2 ரூபாய் துணி துவைக்கும் பொடி பொதி என்று பன்னாட்டு நிறுவனங்கள் கிராமத்து நுகர்வோரை நோக்கி சந்தைப்படுத்தலை திருப்பின.
அதைப் போல, வணிக நிறுவனங்களுக்குச் சாதகமான கொள்கைகள் மட்டும்தான் பொருளாதாரத்துக்கு நல்லது என்ற கடந்த 30 ஆண்டு கால உலகப் பொதுப்புத்தியை விடுத்து, ஏழைகள், பொருளாதார ஏணியில் கீழ்ப்படிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான கொள்கைகள் சமூகத்தை உறுதி பெறச் செய்யும் என்ற எம் ஜி ஆர் பாணி அரசியல், அமெரிக்காவில் 1930களில் அதிபராக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பாணி பொருளாதார அரசியல் இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டில் தேவையான நடவடிக்கைகள்.
அமெரிக்காவில் முந்தைய சனநாயகக் கட்சி நிர்வாகமாக பில் கிளின்டன் ஆட்சி செய்த போதும், பிரிட்டனில் தொழிற் கட்சி ஆட்சியின் தலைவராக டோனி பிளேர் இருந்த போதும். அந்தக் கட்சிகளின் பாரம்பரிய பொருளாதாரக் கொள்கைகளை கிடப்பில் போட்டு விட்டு வணிகர்களின் நல ஆட்சியே நடத்தினார்கள். அது மாறி உண்மையான சனநாயகக் கட்சி, தொழிற்கட்சி ஆட்சி வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்காவில் பராக் ஒபாமாவும், பிரிட்டனில் கார்டன் பிரௌனும், இந்தியாவில் மாயாவதி/பொதுவுடமை கட்சிகள்/சமூகவாதக் கட்சிகள் கூட்டணியும் இத்தகைய கொள்கைகளை கடைப்பிடிப்பதற்கு பொருத்தமானவர்கள்.
இந்தியாவிலும், தமிழகத்திலும் அதே போல மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
திமுகவை விட்டால் மாற்று அதிமுக என்று ஆயாசம் அடைய வேண்டாம். நாமெல்லாம் மனதளவில் தயாராகும் போது அதற்கான தேர்வு மிக வேகமாக வந்து விடும். பராக் ஒபாமா இரண்டு ஆண்டுகளுக்குள் அரசியல் மேடையில் வெளிச்சம் பெற்று அமெரிக்க அதிபராகி விட்டது போல, மக்கள் கருத்து திருப்பம் பெற்றதும் திமுக/அதிமுக, காங்கிரசு/பாசக அரசியலுக்கான மாற்று கிடைத்து விடும்.
சோவியத் புரட்சிக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குள் லெனின் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சிப் பொறுப்பை சோவியத் ஏற்க வைத்தாராம். மாற்றங்களுக்கு சமூகம் தயாராகும் போது அதற்கான தேர்வுகளும் உருவாகி விடுகின்றன.
3 கருத்துகள்:
yenna solla varinga? Kaptain illa Sarthkumara elect pannidalama?
//வணிக நிறுவனங்களுக்குச் சாதகமான கொள்கைகள் மட்டும்தான் பொருளாதாரத்துக்கு நல்லது என்ற கடந்த 30 ஆண்டு கால உலகப் பொதுப்புத்தியை விடுத்து, ஏழைகள், பொருளாதார ஏணியில் கீழ்ப்படிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான கொள்கைகள் சமூகத்தை உறுதி பெறச் செய்யும் //
இந்தக் கருத்தை வரவேற்கிறேன்.
//திமுகவை விட்டால் மாற்று அதிமுக என்று ஆயாசம் அடைய வேண்டாம். நாமெல்லாம் மனதளவில் தயாராகும் போது அதற்கான தேர்வு மிக வேகமாக வந்து விடும். பராக் ஒபாமா இரண்டு ஆண்டுகளுக்குள் அரசியல் மேடையில் வெளிச்சம் பெற்று அமெரிக்க அதிபராகி விட்டது போல,//
இங்கே அது போல யார் வருவார் அல்லது வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தெரியலையே அனானி, தெரியலையே!!!
வணக்கம் செல்வகுமார்,
இப்போது வெளியில் தெரியும் கட்சிகளும் தலைவர்களும் நம்பிக்கை அளிப்பவர்களாகத் தெரியவில்லை.
அகில இந்திய அளவில் மாயாவதி - பொதுவுடமை கட்சியினர் - மற்ற உதிரிக் கட்சிகள் வர வேண்டும் என்று ஒரு ஆசை. தமிழகத்தில் வலுவான கடிவாளத்துடன் (பொதுவுடமை கட்சியினர்) விசயகாந்த் ஆட்சி ஏற்பட்டால் நன்றாக இருக்குமோ?
'வருவார்' என்பதை விட 'வந்தால் நன்றாக இருக்கும்' என்ற நினைப்புகள்தான்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக