ஞாயிறு, ஜனவரி 18, 2009

அமெரிக்க பொருளாதார நெருக்கடி - ஒரு உரையாடல்

'மூன்று மாதங்களுக்கு முன்பு நினைத்ததை விட சிறப்பாகவே சீராகி வருகிறது. தனது வீட்டை விற்று விட்டு காரிலேயே வாழ்க்கை நடத்த ஆரம்பித்திருக்கும் ஒருவரதுப் படித்தேன். அவ்வளவு மோசமான வறுமை.'

'சாப்பாட்டுக்கு குறையில்லை, தங்குவதற்கு கார் இருக்கிறது அது வறுமை என்றால் இங்கு நாம் பார்ப்பது என்ன'

'அப்படி ஒப்பிடக் கூடாது, அவர்களது வாழ்க்கை முறைக்கு அது வறுமைதான்'.

'நிச்சயமாக ஒப்பிட வேண்டும். தேவையான வசதிகள், கூடுதல் வசதிகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது தமது பிறப்புரிமை என்று ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கர்கள் உண்மையை உணர வேண்டும். அவர்கள் வசிக்கும் அதே உலகத்தில் வசிக்கும், அவர்கள் எடுத்துக் கொள்ளும் அதே வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியர்களையோ சோமாலியர்களையோ அவர்கள் பொருட்படுத்துவது கூட இல்லை. உலகமனைத்தையும் சுரண்டி தமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வது என்றிருப்பவர்களுக்காக ஏன் பரிதாபப்பட வேண்டும்'

'சத்தியம் நிறுவனத்தில் அடுத்த மாதம் சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை என்று அரசாங்கத்திலும் ஊடகத்திலும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் செழிப்பை அனுபவித்தவர்கள் நிறுவனம் சறுக்கும் போது அதன் வலிகளையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்'

'அது நிறுவனத்தின் தலைவர் செய்த தவறு. அதற்கு அதன் ஊழியர்களை ஏன் தண்டிக்க வேண்டும். படித்து முடித்த நல்ல வேலைக்குச் சேர்ந்தான். கடன் இருக்கிறது. திடீரென்று வேலை போய் விட்டால் என்ன செய்வார்கள்?'

'அந்த வாழ்க்கை முறை வசதிகளை அனுபவிக்கும் போது மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தார்களா? நமது பெற்றோர்களோ அவர்களது பெற்றோர்களோ இப்படி ஒரு வாழ்க்கை முறை வேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுத்தார்களா? அமெரிக்க பொருளாதார கலாச்சார ஆதிக்கத்தின் கீழ் கற்றுக் கொண்டு விட்ட நாம் அந்த வாழ்க்கை முறைக்கு அரசாங்க ஆதரவு வேண்டும் என்பது அடாவடித்தனம்'

21 கருத்துகள்:

Vetirmagal சொன்னது…

அமெரிக்காவில் இருக்கும் குளிரும் , கடும் வெய்யிலும், பொருட்களின் விலையும் , சுமாரான ஊதியம் வாங்குவர்களே சமாளிக்க கடினம். காரில் வாழ்க்கை நடத்துவது மிக ஏழைகள் தான். இந்திய வாழ்க்கையும் தட்ப வெப்ப நிலையும் , சொற்ப்ப ஊதியம் இருந்தாலும் சமாளிக்கலாம்!

KARTHIK சொன்னது…

என்னத்த சொல்ல
வேலைலைல இருக்கறவங்கள விடுங்க இப்போ படிக்குற பசங்க நிலைதான் ரொம்ப கஷ்டம்.பெற்றோர்களின் நீண்ட கால முதலீடு,பசங்களோட கனவு இப்படி எல்லாமே கேள்விக்குறியா இருக்கு..எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதான்.

K.R.அதியமான் சொன்னது…

pls also see :

http://poar-parai.blogspot.com/2009/01/it.html
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

மா சிவகுமார் சொன்னது…

வெற்றி மகள்,
சென்னையில் இருக்கும் கடும் கோடை வெயிலை சொற்ப ஊதியத்தில் எப்படி சமாளிக்கிறோம்? எல்லோருக்கும் அறை குளிரூட்டி வைத்தா வாழ்கிறோம்?

கார்த்திக்,

"பெற்றோர்களின் நீண்ட கால முதலீடு"
பிள்ளைகளைப் படிக்க வைப்பதை முதலீடாக நினைப்பது காலத்தின் சீர்கேடு. 'இத்தனை லட்சங்கள் கொடுத்து படிக்க வைத்தால் இத்தனை லட்சம் சம்பளம் வரும் என்று கனவு காண்பவர்களின் நிலைமை கேள்விக்குறியாக போவது சரிதான்'

அதியமான்,
பேராசையை தூண்டுவதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தின் அவலங்கள்தானே சத்தியமும், என்ரானும்!

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

Dear Shiva,

When will you understand that being greedy in the legal and ethical way is ok and actually results in production and innovation like this internet and your own business. It is only cheating, frauds and other illegal and unethical methods to acheive one's ambituons that are evil and result in all kinds of mess.

You too are 'greedy' when you declared you want to develop your s/w company into a million dollar company. same with me.

We, entrepreuners make the world and create products, serivices, employment and wealth. We are the modern Brahmas and no need to feel guilty about all this.

You knew this implictly and hence your hard work for your company..

குடுகுடுப்பை சொன்னது…

அதியமான்,
பேராசையை தூண்டுவதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தின் அவலங்கள்தானே சத்தியமும், என்ரானும்!

அன்புடன்,
மா சிவகுமார்//

ஒத்துக்கொள்கிறேன்,அப்படியே மத்த இசங்களின் அவலங்களையும் சொல்லுங்கள்

கல்வெட்டு சொன்னது…

சிவா,
நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் வறுமை ஒப்பீட்டளவு. அதற்கு எந்த நிரந்தர அளவு கோலும் கிடையாது. எதனோடு எதை ஒப்பிடுகிறோம் எனபதில்தன் சூட்சுமம் இருக்கிறது.

ரோட்டில் செருப்பு தைக்கும் தொழிலாளி Vs ரோட்டில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்பவர் இவரில் யார் வறுமையானவர் என்பதும், அதே செருப்பு தைக்கும் தொழிலாளி Vs அடுத்த தெருவில் செருப்பு தைக்கும் தொழிலாளி இதில் யார் வறுமை அதிகம் என்பதும் வேறுபடும்.

**

சோறு கிடைக்கிறதா?
இருக்க இடம் கிடைக்கிறதா?
குறைந்த பட்ச உடை கிடைகிறதா?

என்ற மூன்றையும் அவரவர் வாழும் சூழலில் வைத்து பார்க்க வேண்டியது அவசியம். பாலைவனத்தில் டெண்ட் அடித்தாலே (காற்று, மணல், வெயில் பாதுகாப்பு) இருக்க இடம் ஆயிற்று. இந்த டெண்ட்டை ஆர்டிக் நானூக்கிற்கு பொறுத்திப் பார்க்கக்கூடாது. "நான் டெண்டுல இருக்கேன் , உனக்கு என்ன ஐஸ்கட்டி வீடு என்று கேட்கக்கூடாது.

**

// 'நிச்சயமாக ஒப்பிட வேண்டும். தேவையான வசதிகள், கூடுதல் வசதிகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது தமது பிறப்புரிமை என்று ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கர்கள் உண்மையை உணர வேண்டும். //

நிச்சயம் ஒப்பிட வேண்டும். இந்த ஒப்பீடு அமெரிக்கா மட்டும் அல்ல இந்தியாவிற்கும் சரியே. நகரத்தில் உள்ள வீட்டுக்கு ஒரு வகை மின்வெட்டு கிராமத்தில் ஒரு வகை மின்வெட்டு என்று ஆரம்பித்து, தனி நபர் நலன் .... அனைத்தையும் ஒப்பிடலாம்.

//அதே வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியர்களையோ சோமாலியர்களையோ அவர்கள் பொருட்படுத்துவது கூட இல்லை. உலகமனைத்தையும் சுரண்டி தமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வது என்றிருப்பவர்களுக்காக ஏன் பரிதாபப்பட வேண்டும்'//

நேட்டிவ் அமெரிக்கன்/ சிவப்பு இந்தியர்கள் என்று சொல்லலாம்.பொதுவாக இந்தியர்கள் என்று சொன்னால் அது போஷாக்குடன் இங்கே வளர்ந்து வரும் இந்திய மக்களைக் குறித்துவிடும். :-)))

//'சத்தியம் நிறுவனத்தில் அடுத்த மாதம் சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை என்று அரசாங்கத்திலும் ஊடகத்திலும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் செழிப்பை அனுபவித்தவர்கள் நிறுவனம் சறுக்கும் போது அதன் வலிகளையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்'//

இது பாயிண்டு . ஆனால் நீங்கள் பங்குதாரர்களைச் சொல்கிறீர்களா அல்லது மாதச்சம்பளக்காரனைச் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை.மாதச்சம்பளக்காரர்கள் கார்ப்பொரேட் வழிகாட்டுதலில் பங்கு இல்லை. சத்யம்,என்ரான் மொத்தமும் மேல்தட்டு வர்க்கத்தின் விளையாட்டு.

//'அந்த வாழ்க்கை முறை வசதிகளை அனுபவிக்கும் போது மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தார்களா? நமது பெற்றோர்களோ அவர்களது பெற்றோர்களோ இப்படி ஒரு வாழ்க்கை முறை வேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுத்தார்களா? அமெரிக்க பொருளாதார கலாச்சார ஆதிக்கத்தின் கீழ் கற்றுக் கொண்டு விட்ட நாம் அந்த வாழ்க்கை முறைக்கு அரசாங்க ஆதரவு வேண்டும் என்பது அடாவடித்தனம்'//

இது சூப்பர் பாயிண்டு. ஐடி வேலை அப்படீன்னால ஏதோ பெரிய பிஸ்து மாதிரி வாழ்ந்ததும் தப்பு. (அப்படி வாழ்ந்தவர்களை மட்டும் சொல்கிறேன்). எந்தவித சமுதாயப் பொறுப்பும் இல்லாமல், சக மனிதனை சகிக்கும் குறைந்தபட்ச பண்புகூட இல்லாமல் இருந்தது தவறுதான்.

அதே சமயம் ஐடி தவிர மற்றவர்கள் எல்லாம் (உதாரணம்:பேங்கில் வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தா )ஏதோ பெரிய சமுதாய போராளி, நல்லவர்கள் என்று சொல்ல முடியாது.

பேங்குகாரங்க,வாத்தியாருக எல்லாரும் ஸ்டைரிக் செய்தால் அது பெரிய செய்தியாகிறது. பேங்குகாரங்க,வாத்தியாருக எல்லாரும் , "பனை ஏறும் தொழிலாளிக்காக" என்ன செய்தார்கள்? அல்லது நெல் விவசாயி எலிக்கறி சாப்பி்ட்டபோது என்ன செய்தார்கள்?

பேங்குகாரங்க,வாத்தியாருகளை அழைத்துப் பேசும் அரசு அல்லது பேங்குகாரங்க,வாத்தியாருக நலன் காக்கும் அரசு பனையேறிகளுக்கு என்ன செய்கிறது?

***

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கேடு கெட்ட மனிதன் எங்கு இருந்தாலும் கேடு கெட்டவனாகவே இருக்கிறான்.மதம்,சாதி,தொழில்,இடம்,பணம் ஏதும் பண்புகளைக் கற்றுத்தராது.

சூழலை உற்று கேள்வி கேட்டு சுய பரிசோதனை செய்து கொள்பவன் மட்டுமே திருந்த வாய்ப்பு உள்ளது.

ஒருவன் ஒரு(1) நிலையில் இருந்து அடுத்த(2) நிலையை அடைய, முதலில் அவன் இந்த(1) நிலையில் இருப்பதை நினைத்து அவமானப்படவேண்டும்,குமுற வேண்டும் அப்போதுதான் அடுத்த நிலை பற்றி யோசிப்பான். ரோட்டில் குப்பை போடுவதை ஒருவன் தவறு என்றே நினைக்காதபோது அவன் எந்த ஜென்மத்திலும் திருந்தமாட்டான்.

வேறு வழியே இல்லாமல் குப்பையை ரோட்டில் போட்டால்கூட "அய்யோ இப்படிப் போட நேர்கிறதே " என்று அவமானப்படுபவன் மட்டுமே, நாளை நல்ல வாய்ப்பு வரும்போது அதே தவறைச் செய்யமால் இருக்க முடியும்.

*
நாய்கள் டை கட்டுவதால் ஜென்டில்மேனாக முடியாது. டைகட்டிய நாயாகவே இருக்கும். (நாய் சமூகம் மன்னிக்க)

Unknown சொன்னது…

மாசி,

//'நிச்சயமாக ஒப்பிட வேண்டும். தேவையான வசதிகள், கூடுதல் வசதிகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது தமது பிறப்புரிமை என்று ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கர்கள் உண்மையை உணர வேண்டும். அவர்கள் வசிக்கும் அதே உலகத்தில் வசிக்கும், அவர்கள் எடுத்துக் கொள்ளும் அதே வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியர்களையோ சோமாலியர்களையோ அவர்கள் பொருட்படுத்துவது கூட இல்லை. உலகமனைத்தையும் சுரண்டி தமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வது என்றிருப்பவர்களுக்காக ஏன் பரிதாபப்பட வேண்டும்'//

யாருடைய பரிதாபமும் அமெரிக்கர்களுக்கு வேண்டியதில்லை. மற்றவர்கள் பார்த்து பரிதாப்பபடவேண்டிய நிலையிலும் அவர்கள் இல்லை.அவர்கள் என்ன கப்பரை ஏந்திக்கொண்டு வந்து நம் வீட்டுமுன் நின்று 'அம்மா, தாயே" என்றா பிச்சை கேட்கிரார்கள்?:-)
பிறகு எதற்கு இந்த வேண்டாத பரிதாபமும், அனுதாபமும்?:-)

//'சத்தியம் நிறுவனத்தில் அடுத்த மாதம் சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை என்று அரசாங்கத்திலும் ஊடகத்திலும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் செழிப்பை அனுபவித்தவர்கள் நிறுவனம் சறுக்கும் போது அதன் வலிகளையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்'
//

ஆமாம்.யார் இல்லை என்றார்கள்:-)

சத்யம் நன்றாக ஓடியபோது அவர்களை என்ன எல்லோரும் வாழ்த்தினார்களா என்ன? அப்பவும் திட்டினார்கள்.இப்பவும் திட்டுகிறார்கள்.வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் வையகம் தானே இது மாசி?:-)

//'அந்த வாழ்க்கை முறை வசதிகளை அனுபவிக்கும் போது மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தார்களா? நமது பெற்றோர்களோ அவர்களது பெற்றோர்களோ இப்படி ஒரு வாழ்க்கை முறை வேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுத்தார்களா? அமெரிக்க பொருளாதார கலாச்சார ஆதிக்கத்தின் கீழ் கற்றுக் கொண்டு விட்ட நாம் அந்த வாழ்க்கை முறைக்கு அரசாங்க ஆதரவு வேண்டும் என்பது அடாவடித்தனம்//

Government has no business to be in business.

அரசாங்கத்தின் ஆதரவு ஐடிக்கு வேண்டியதில்லை.சத்தியத்துக்கும் அரசாங்கம் எந்த உதவியும் தர வேண்டியதில்லை.அரசுக்கு வரவேண்டிய வரிபாக்கியை புத்திசாலித்தனமாக சத்தியத்தின் சொத்துக்களை வைத்து மீட்டுக்கொண்டால் போதும்.

சத்யம் விழுந்ததை ஏதோ பெர்லின் சுவர் வீழ்ந்ததற்கு ஒப்பாக சிலர் கருதுவது ஏன் என்றுதான் புரியவில்லை. புத்தியுள்ள பிள்ளை எங்கும் பிழைக்கும்.

கல்வெட்டு சொன்னது…

// 'நிச்சயமாக ஒப்பிட வேண்டும். தேவையான வசதிகள், கூடுதல் வசதிகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது தமது பிறப்புரிமை என்று ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கர்கள் உண்மையை உணர வேண்டும். //

பில் கேட்சும் , வாரன் பப்ஃபட்டும் அமெர்க்க கார்போரேட் கோடிஸ்வரகள்தான ஆனால் இவர்கள்தான் உலக அளவில் நல்ல திட்டங்களுக்காக பணத்தைக் கொடுப்பவர்கள். அதிகமுள்ள பணம் என் பணம் அல்ல என்ற அளவில்.

இந்தியாவில் இருக்கும் அம்பானியோ அய்ஸ்வர்யாவோ இப்படி இல்லை. இந்தக்கூத்தை எங்கே சொல்ல?


# ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இந்தித் திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்
# ஓமர் அப்துல்லா காஷ்மீரில் தலைவராகியிருக்கிறார்
# சச்சின் டெண்டூல்க, டிராவிட், கும்ப்ளே, கங்கூலி போன்றவர்கள் கிரிக்கெட்டில் தமது முத்திரையைப் பதித்திருக்கிறார்கள்.
# ராகுல் காந்தி தனது குடும்ப ஆதரவில் காங்கிரசு கட்சியில் உயர்ந்திருக்கிறார்.


உங்களுக்குப் பிடித்தவர்களாக பட்டியலிட்ட இந்த மேன்மக்கள் எல்லாம் தேவையான வசதிகள், கூடுதல் வசதிகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது தமது பிறப்புரிமை என்று ஆடிக் கொண்டிருக்கும்
கொண்டிருப்பவர்கள்தான்.

இவர்கள் எல்லாம் கஸ்டப்பட்டு வந்தார்கள் என்று சொல்லாதீர்கள். பில்கேட்சும் கஸ்டப்பட்டவர்தான் , முன்னேறிய பின்னால் அவரால் திரும்பிப்பார்க்க முடிகிறது.
உலக அழகி? அல்லது
இந்திய ஐடி புரட்சி மாகான் மூர்த்தி அய்யா?


India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html


இந்திய ஐடி புரட்சி மாகான் மூர்த்தி அய்யா தான் கெடக்குரது கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மனையில் வை என்ற கதையாக, கார்னெல் பல்கலைகழகத்திற்க்கு அள்ளிக் கொடுத்துள்ளார்.


350 கோடி 200 கோடி 10 கோடி .. அப்புறம் அந்த Cornell பல்கலைக்கழகம் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கொம்பனஹள்ளி என்ற இடத்தில் உள்ளது.

http://kalvetu.blogspot.com/2008/05/350-200-10-cornell.html



:-(((((

கல்வெட்டு சொன்னது…

செல்வன்,
//சத்யம் விழுந்ததை ஏதோ பெர்லின் சுவர் வீழ்ந்ததற்கு ஒப்பாக சிலர் கருதுவது ஏன் என்றுதான் புரியவில்லை. புத்தியுள்ள பிள்ளை எங்கும் பிழைக்கும்.//

இப்படி குன்ஸா பேசக்கூடாது. :-))

புத்தியுள்ள திருடன்,கொலைகாரன்கூடதான் நன்றாக பிழைக்கிறான். 100 ரூபாய் பிக்பாக்கெட் அடித்தவன் மாட்டிக்கிடால் , புத்தியுள்ளவன் பிழைத்துக் கொள்வான் என்று வக்கலாத்து வாங்குவீர்களா? கார்போரேட் குற்றவாளி 1000 கோடி கொள்ளை அடித்தாலும் அண்ணாந்து பார்த்து " அட, எப்படி சிந்திக்கிறான் பாரு" என்று வியந்து கொள்வது நல்லதா ?

எப்படி வாழ்கிறோம் எனபது முக்கியம். சத்தியம் ராஜு புத்தியுள்ளவர் என்று நீங்கள் மெச்சிக்கொள்ளுங்கள். :-))

ஜெய்ப்பூர் செயற்கைக்கால் செய்து குறைந்த விலைக்கு விற்ற ஒரு ஏமாளிகூட புத்தியுள்ளவர்தான். புத்தி எதற்குப் பயன்படுகிறது என்பது முக்கியம்.

ராஜூ சார் இந்த சத்திய சோதனையில் இருந்து மீண்டுவந்து புத்தியுடன் இன்னும் நல்ல பிராடுகளைச் செய்யட்டும்.

Unknown சொன்னது…

கல்வெட்டு,

நான் புத்தியுள்ள பிள்ளை என்று குறிப்பிட்டது ராஜுவை அல்ல, சத்யத்தில் வேலை பார்த்த கணிணி தொழிலாளர்களை.

புத்தியுள்ள தொழிலாளி வேலை போவதை நினைத்து வருந்த மாட்டான்.வேறு வேலை தேடிக்கொள்வான் என்று குறிப்பிட்டேன்.

கல்வெட்டு சொன்னது…

//நான் புத்தியுள்ள பிள்ளை என்று குறிப்பிட்டது ராஜுவை அல்ல, சத்யத்தில் வேலை பார்த்த கணிணி தொழிலாளர்களை.//

Oh...ok Selvan ... sorry :-(

மா சிவகுமார் சொன்னது…

குடுகுடுப்பை,

கடந்த 20, 30 ஆண்டுகளாக முதலாளித்துவம்தான் எல்லா கேள்விகளுக்கும் விடை என்று மண்டையில் தட்டித் தட்டிச் சொல்லிக் கொடுக்க முயன்றார்கள். அந்த வகையில் கொஞ்சம் உண்மை நிலை தெரிந்து கொள்ள முயற்சிக்கணும்.

அதியமான்,

பேராசை (greed) என்றால் புதிய பொருள் எல்லாம் கொடுக்க சிரமப்படாதீங்க. தொழில் முனைவு அல்லது வளத்தை உருவாக்கும் முயற்சிகள் பேராசையால் தூண்டப்படுவதில்லை.

புதிதாக உருவாக்குவது, வாடிக்கையாளர்களுக்கு, நிறுவன ஊழியர்களுக்கு, நம்மைச் சார்ந்தவர்களுக்கு சேவை செய்வது, உலகை இன்னும் சிறப்பாக மாற்றிக் காட்டுவது என்ற நோக்கங்கள்தான் தொழில் முனைவின் தூண்டல்கள்.

'எல்லாம் எனக்கே' என்ற பேராசையையும் தொழில் முனைவையும் தொடர்புபடுத்துவது இன்றைய உலகை உருவாக்கிய பெருமனிதர்களை எல்லாம் கொச்சைப்படுத்துவதாகி விடும். திருட்டும், ஊழலும், தகிடுதத்தமும் செய்பவர்களை எல்லாம் தொழில் முனைவர்கள் கிடையாது.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

கல்வெட்டு, செல்வன் - விவாதத்துக்கு நன்றி.

//ரோட்டில் செருப்பு தைக்கும் தொழிலாளி Vs ரோட்டில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்பவர் இவரில் யார் வறுமையானவர் என்பதும், அதே செருப்பு தைக்கும் தொழிலாளி Vs அடுத்த தெருவில் செருப்பு தைக்கும் தொழிலாளி இதில் யார் வறுமை அதிகம் என்பதும் வேறுபடும்.//

ஆமாம், அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்? அமெரிக்காவில் வீடு இல்லாமல் காரில் வசிப்பவரின் வறுமை, சோமாலியாவில் பட்டினியால் இறக்கும் குழந்தையின் வறுமையுடன் எப்படி மாறுபடுகிறது?

அமெரிக்காவில், இந்தியாவில் பெரிய மால்கள் கட்டி சீமான்கள் மகிழ்ந்திருக்க வழி செய்தால் அவர்கள் செலவழிக்கும் பணத்தில், பொசிந்து போகும் (trickle down) வளங்கள் சோமாலிய குழந்தைக்குப் போய்ச் சேர்ந்து காப்பாற்றும் என்று செயல்பட்டால் போதுமா?

//இந்தியாவிற்கும் சரியே. நகரத்தில் உள்ள வீட்டுக்கு ஒரு வகை மின்வெட்டு கிராமத்தில் ஒரு வகை மின்வெட்டு என்று ஆரம்பித்து, தனி நபர் நலன் .... அனைத்தையும் ஒப்பிடலாம்.//

ஒப்பிட்டு விட்டு என்ன செய்யப் போகிறோம்? நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவுகளில் உலகம் போகும் திசை தீர்மானிக்கப்படுகிறது. '25 ரூபாய் கொடுத்து குடிதண்ணீர் வாங்கிக் கொள்கிறேன்' என்று நாம் முடிவு செய்யும் போது அது ஒரு சோமாலிய குழந்தையின் வயிற்றில் அடிக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.

//மாதச்சம்பளக்காரர்கள் கார்ப்பொரேட் வழிகாட்டுதலில் பங்கு இல்லை//

ராமலிங்க ராஜூ மட்டும்தான் வில்லன். மற்றவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்று நான் நம்பத் தயாராக இல்லை.

சத்தியம் நிறுவனத்தில் பணி புரிந்த ஒவ்வொருவருக்கும் நடந்த குளறுபடிகளைப் பற்றிய குறைந்த பட்ச உணர்வாவது இருந்திருக்கும். 'நமது மாதச் சம்பளமும், வீட்டுக் கடன் அடைப்பும் தொடர்வது வரை எப்படி இருந்தால் என்ன' என்றுதான் பணி புரிந்திருக்கிறார்கள். அதற்கான பரிகாரம் செய்ய வேண்டும்.

//பேங்குகாரங்க,வாத்தியாருக எல்லாரும் , "பனை ஏறும் தொழிலாளிக்காக" என்ன செய்தார்கள்? அல்லது நெல் விவசாயி எலிக்கறி சாப்பி்ட்டபோது என்ன செய்தார்கள்?//

கேளுங்க! ஒரு திசையில் விரல் சுட்டினால். 'அவங்க எல்லாம் செய்றாங்களே நாங்களும் செய்கிறோம்' என்பது பொருத்தமான பதிலாகாது. பேங்குகாரங்களும், வாத்தியாருங்களும் பனை ஏறும் தொழிலாளிக்காக நெல் விவசாயிக்காக பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.

//யாருடைய பரிதாபமும் அமெரிக்கர்களுக்கு வேண்டியதில்லை. மற்றவர்கள் பார்த்து பரிதாப்பபடவேண்டிய நிலையிலும் அவர்கள் இல்லை.அவர்கள் என்ன கப்பரை ஏந்திக்கொண்டு வந்து நம் வீட்டுமுன் நின்று 'அம்மா, தாயே" என்றா பிச்சை கேட்கிரார்கள்?:-)//

சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா என்று ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து விடக் கூடாது என்று தாங்கிப் பிடித்து பணத்தைக் கொட்ட வேண்டி வந்தது (அதற்கு காரணம் சுயநலம் என்பதை விடுங்கள்).

திறமையாக, கெட்டிக்காரத்தனமாக பிற நாடுகளை எல்லாம் தமது பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வளைத்துப் போட்டு மற்றவர்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்க பொருளாதார அமைப்பும் வாழ்க்கை முறையும்.

வேதங்கள், மத நூல்கள் என்று எழுதி பெரும்பான்மை மக்களை உழைக்க வைத்து தாம் மட்டும் சுக வாழ்வு வாழ்ந்த ஆதிக்க பிரிவுகளுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

//சத்யம் விழுந்ததை ஏதோ பெர்லின் சுவர் வீழ்ந்ததற்கு ஒப்பாக சிலர் கருதுவது ஏன் என்றுதான் புரியவில்லை.//

ஏனென்றால் இன்றைய கார்பொரேட் நிறுவனங்களின் பேராசை வழி நடவடிக்கைகளின் உச்சகட்ட பிரதிநிதியாக சத்தியம் விளங்குகிறது. சத்தியம் ஒரு விதிவிலக்கு இல்லை, மற்றவர்கள் எல்லாம் மாட்டிக் கொள்ளவில்லை அவ்வளவுதான்.

//பில் கேட்சும் , வாரன் பப்ஃபட்டும் அமெர்க்க கார்போரேட் கோடிஸ்வரகள்தான ஆனால் இவர்கள்தான் உலக அளவில் நல்ல திட்டங்களுக்காக பணத்தைக் கொடுப்பவர்கள். அதிகமுள்ள பணம் என் பணம் அல்ல என்ற அளவில்.//

ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு திருப்பதி உண்டியலில் பங்குப்பணமாக போடுபவர்களுக்கும் பில்கேட்சுக்கும் வேறுபாடு கிடையாது. பில்கேட்சு செய்த சுரண்டல்களுக்கும், முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியதற்கும் ராமலிங்க ராஜூவை விடக் கொடும் சிறைக்கு அனுப்பப்பட வேண்டியவர்தான்.

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

மாசி,

தெளிவான பதில்களுக்கு நன்றி.

//சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா என்று ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து விடக் கூடாது என்று தாங்கிப் பிடித்து பணத்தைக் கொட்ட வேண்டி வந்தது (அதற்கு காரணம் சுயநலம் என்பதை விடுங்கள்). //

அமெரிக்கா விழுந்துவிடகூடாது என்ற தரும எண்னத்தில் எந்த நாடும் பணத்தை கொட்டவில்லை.தமக்கு ஆதாயமிருப்பதால் தமது பனத்தை அமெரிக்காவில் முதலீடு செய்கின்றனர்.அவ்வளவுதான்...அதாவது வங்கியில் பணம் போடுபவன் தனக்கு ஆதாயமிருப்பதால் தான் போடுகிறான்.வங்கி அதை வைத்து லாபம் சம்பாதித்தால் அது வாடிக்கையாளர் வங்கிக்கு கொடுத்த பிச்சை என்று கருத முடியாதல்லவா?நடப்பது வணிகம்.அவ்வளவே.

//திறமையாக, கெட்டிக்காரத்தனமாக பிற நாடுகளை எல்லாம் தமது பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வளைத்துப் போட்டு மற்றவர்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்க பொருளாதார அமைப்பும் வாழ்க்கை முறையும்//

சுரண்டல்,சுண்டல் என்பதெல்லாம் எடுபடாத லெனின் காலத்து வாதம் சிவகுமார்.அமெரிக்க முதலீடும், சாப்ட்வேர்,பிபிஓ எதுவும் வேண்டாம் என்றால் அவர்களை திருப்ப அனுப்பிவிடுவது தான் முறை.ஐடி,பிபிஓ வேண்டும் என கூறி அமெரிக்காவுக்கு போய் முதலீட்டாலர்களை வருந்தி வருந்தி இந்தியாவுக்கு அழைத்து, சாப்ட்வேர் வேலையும் செய்துகொண்டு,மற்ரவர்களை விட அதிக சம்பளமும் வாங்கிக்கொண்டு சுரண்டல் என கூறுவது சரியில்லை.

//வேதங்கள், மத நூல்கள் என்று எழுதி பெரும்பான்மை மக்களை உழைக்க வைத்து தாம் மட்டும் சுக வாழ்வு வாழ்ந்த ஆதிக்க பிரிவுகளுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. //

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் இருக்கும் சம்பந்தம் தான் இரண்டுக்கும்.

//ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு திருப்பதி உண்டியலில் பங்குப்பணமாக போடுபவர்களுக்கும் பில்கேட்சுக்கும் வேறுபாடு கிடையாது. பில்கேட்சு செய்த சுரண்டல்களுக்கும், முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியதற்கும் ராமலிங்க ராஜூவை விடக் கொடும் சிறைக்கு அனுப்பப்பட வேண்டியவர்தான்.//

ராமலிங்கராஜு ஏ க்ளாஸ் ஜெயிலில் இருக்கிறார்.அதை விட கொடும் சிறை என்றால் பி க்ளாஸ் ஜெயிலா?:-)

கல்வெட்டு சொன்னது…

சிவா,
நான் சொல்வது சுருக்கமாக...

அமெரிக்காவையே எல்லாவற்றிற்கும் குறைகூறாமல் நம்மையே பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே ..சென்னை உதாரணங்கள்.

*

சத்யம் மட்டும் அல்ல , பெரிய நிறுவனங்களில் கடை நிலை தொழிலாளி வரை இரகசியங்கள் தெரிந்து இருப்பது இல்லை. தெரிந்தாலும் அவர்களின் முடிவை மேல்மட்டம் கேட்டு நிற்பது இல்லை.

தொழிலளி என்பவன் ,பூட்டப்பட்ட வண்டியில் இருக்கும் மாடுபோலத்தான். செலுத்துவது ராஜூ போன்றவர்களே.

மன்மோகன் என்ற சூப்பர் மனிதரால் நீங்கள் ஆளப்படுகிறீர்கள். அவர் எடுக்கும் முடிவில் உங்கள் பங்கு என்ன? அது போலத்தான்.

சமூகப்பார்வை இல்லாமல்,சம்பளம் கிடைத்தால் போதும் என்று வாழ்ந்தது மட்டும் குற்றம் என்றால், சத்யம் மட்டும் அல்ல அப்படி ஒரு எண்ணம் உள்ள அனைத்து தரப்பினரும் குற்றவாளிகளே.

*

நான் சொல்லவருவது மனிதம் மட்டுமே.

*

K.R.அதியமான் சொன்னது…

'பொருள் செய்ய விரும்பு' (உங்கள் மனை ஒன்றின் தலைப்பு அது !!) என்பதே பேரசையல்லதானே ? :)))

அதை பெரிய அளவில் செய்ய (சட்டபடி) விரும்பவதும் பேரசையல்ல‌தானே ? தொழில் முனைவின் தூண்ட‌ல்க‌ள் ப‌ற்றி நாம் இருவ‌ரும் அறிவோம்தான்.

அது ச‌ரி,

////பேராசை (greed) என்றால் புதிய பொருள் எல்லாம் கொடுக்க சிரமப்படாதீங்க. தொழில் முனைவு அல்லது வளத்தை உருவாக்கும் முயற்சிகள் பேராசையால் தூண்டப்படுவதில்லை.

புதிதாக உருவாக்குவது, வாடிக்கையாளர்களுக்கு, நிறுவன ஊழியர்களுக்கு, நம்மைச் சார்ந்தவர்களுக்கு சேவை செய்வது, உலகை இன்னும் சிறப்பாக மாற்றிக் காட்டுவது என்ற நோக்கங்கள்தான் தொழில் முனைவின் தூண்டல்கள்.

'எல்லாம் எனக்கே' என்ற பேராசையையும் தொழில் முனைவையும் தொடர்புபடுத்துவது இன்றைய உலகை உருவாக்கிய பெருமனிதர்களை எல்லாம் கொச்சைப்படுத்துவதாகி விடும். திருட்டும், ஊழலும், தகிடுதத்தமும் செய்பவர்களை எல்லாம் தொழில் முனைவர்கள் கிடையாது.////

'எல்லாம் என‌க்கே' என்ப‌து எந்த‌ அடிப்ப‌டையில் ச‌ரி அல்ல‌து த‌வ‌று ? ஒருவ‌ன் க‌டும் உழைப்பு / ஊக்கம் / திறமை போன்றவையால் ஈட்டும் பொருள் அவனுக்கே சொந்தம் என்று நினைப்பது தவறா / பேராசையா ?
அதை என்ன‌ வ‌ரைமுறையில் யார் எப்ப‌டி நிர்ணிய‌ப்ப‌து ? what parameters for this ? இது போனற‌ எண்ண‌ங்க‌ள் தாம் இந்தியாவில் லைசென்ஸ், பெர்மிட் ராஜை உருவாக்கி ந‌ம்மை சீர‌ழ‌த்த‌து என‌ப்தை எண்ணிப்பாருங்க‌ள்.

பொருளாதார‌ விசிய‌ங்க்ளை ப‌ற்றி ப‌ல‌ நூறு ப‌திவுக‌ள் அருமையாக‌ எழுதும் நீங்க‌ள் இன்னும் இந்த‌ அடிப்ப‌டை உரிமைக‌ள் விசிய‌த்தில் (Right to property, which is at the heart of free market capitalism)தெளிவ‌டைய‌வில்லை.

மா சிவகுமார் சொன்னது…

//வங்கி அதை வைத்து லாபம் சம்பாதித்தால் அது வாடிக்கையாளர் வங்கிக்கு கொடுத்த பிச்சை என்று கருத முடியாதல்லவா?நடப்பது வணிகம்.அவ்வளவே.//

கொத்தடிமை முறையை ஏற்படுத்திக் கொண்டு 'அவன் வாங்கிய காசுக்கு எனக்கு வேலை செய்கிறான், விருப்பம் இல்லை என்றால் காசை வட்டியோடு எண்ணி வைத்து விட்டு போகட்டும்' என்று கல் குவாரி முதலாளிகள் கூட சொல்லலாம்.

தமது பொருளாதார சுக வாழ்வுக்கு ஆதாரமாக தேவைப்படும் எல்லா இடங்களுக்கும் படைகளை அனுப்பி அல்லது வணிக நிறுவனங்களை அனுப்பி தமது ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ளும் அமெரிக்காவின் போக்கு கொத்தடிமைகளை கொண்டு போகும் முதலாளிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

பராக் ஒபாமா நிர்வாகத்தில் இந்தப் போக்கு கொஞ்சம் மாறலாம் என்று எதிர்பார்க்கலாம்.

//சுரண்டல்,சுண்டல் என்பதெல்லாம் எடுபடாத லெனின் காலத்து வாதம் சிவகுமார்.//
எந்தக் காலத்து வாதமாக இருந்தாலும் உண்மை மறைந்து போகாது.

//அமெரிக்க முதலீடும், சாப்ட்வேர்,பிபிஓ எதுவும் வேண்டாம் என்றால் அவர்களை திருப்ப அனுப்பிவிடுவது தான் முறை.ஐடி,பிபிஓ வேண்டும் என கூறி அமெரிக்காவுக்கு போய் முதலீட்டாலர்களை வருந்தி வருந்தி இந்தியாவுக்கு அழைத்து, சாப்ட்வேர் வேலையும் செய்துகொண்டு,மற்ரவர்களை விட அதிக சம்பளமும் வாங்கிக்கொண்டு சுரண்டல் என கூறுவது சரியில்லை.//
மேலே சொன்ன கொத்தடிமை பற்றி யோசித்துப் பாருங்கள்.

//அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் இருக்கும் சம்பந்தம் தான் இரண்டுக்கும்.//
நிச்சயமா, அமாவாசை அப்துல்காதரையும் பாதிக்கும்தான்.

//ராமலிங்கராஜு ஏ க்ளாஸ் ஜெயிலில் இருக்கிறார்.அதை விட கொடும் சிறை என்றால் பி க்ளாஸ் ஜெயிலா?:-)//

அமெரிக்க சிறை. ராமலிங்க ராஜூ அமெரிக்க சிறைக்குத் தப்பத்தான் அவசரமாக இந்திய காவல்துறையிடம் சரணடைந்தார் என்று ஒரு நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

கல்வெட்டு
//தொழிலளி என்பவன் ,பூட்டப்பட்ட வண்டியில் இருக்கும் மாடுபோலத்தான். செலுத்துவது ராஜூ போன்றவர்களே.//

சத்தியத்தில்தான் வேலை பார்க்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தியிருக்க மாட்டார்கள்தானே! செலுத்துபவன் சரியில்லை என்று தெரிந்தால் மாடு அவிழ்த்துக் கொண்டு ஓடியிருக்க நிறைய மறு வாய்ப்புகள் உண்டு.

நான் ஏற்கனவே சொன்னது போல வண்டி ஓட்டுபவன் எப்படி வேண்டுமானாலும் செலுத்தட்டும் எனக்கு வர வேண்டியது வந்த என் சுக வாழ்வு நிலைத்தால் போதும் என்று மட்டும் கவலைப்பட்டவர்களுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்!

//சமூகப்பார்வை இல்லாமல்,சம்பளம் கிடைத்தால் போதும் என்று வாழ்ந்தது மட்டும் குற்றம் என்றால், சத்யம் மட்டும் அல்ல அப்படி ஒரு எண்ணம் உள்ள அனைத்து தரப்பினரும் குற்றவாளிகளே.//

ஆம்

அதியமான்,

//பொருளாதார‌ விசிய‌ங்க்ளை ப‌ற்றி ப‌ல‌ நூறு ப‌திவுக‌ள் அருமையாக‌ எழுதும் நீங்க‌ள் இன்னும் இந்த‌ அடிப்ப‌டை உரிமைக‌ள் விசிய‌த்தில் (Right to property, which is at the heart of free market capitalism)தெளிவ‌டைய‌வில்லை.//

கொஞ்ச கொஞ்சமாகத்தான் தெளிவு கிடைத்து வருகிறது :-)

சந்தைப் பொருளாதாரம்தான் தெய்வ கட்டளை என்று நீங்கள் பேசுகிறீர்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லையே, அப்படி இருக்க அதன் இதயமாக இருக்கும் சொத்துரிமையை அடிப்படை உரிமை என்று நான் ஏன் தெளிவுபட்டுக் கொள்ள வேண்டும்?

அன்புடன்,
மா சிவகுமார்

கல்வெட்டு சொன்னது…

//சத்தியத்தில்தான் வேலை பார்க்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தியிருக்க மாட்டார்கள்தானே! செலுத்துபவன் சரியில்லை என்று தெரிந்தால் மாடு அவிழ்த்துக் கொண்டு ஓடியிருக்க நிறைய மறு வாய்ப்புகள் உண்டு.//

உண்மை/நிஜம்/நிதர்சனம்.. அப்படி இல்லை சிவா. பல நிர்பந்தங்கள். நான் பல முறை பல் வேறு தருணங்களில் உங்கள் பதிவுகளில் சொன்னது போல, காட்டில் சென்று வாழ்ந்தால் மட்டுமே நாம் நாமாக இருக்க முடியும். அதுவும்,காட்டு விலங்குகளின் ஆதிக்கம் நம்மை மாற்றும். அதாவது தற்காக்க விலங்கை கொல்ல வேண்டியது வரலாம்.

சமூகத்தில் இருக்கும்போது பல் நிர்பந்தங்களின் பேரிலேயே வாழ்க்கை அமைகிறது. விரும்பினாலும் அவிழ்க்கமுடியாத சூழல்கள் உண்டு.

பூட்டப்பட்ட வண்டிகளில் இருந்து மாடுகள் ஓடினாலும் அடுத்த வண்டியில் பூட்டப்படும்.

//நான் ஏற்கனவே சொன்னது போல வண்டி ஓட்டுபவன் எப்படி வேண்டுமானாலும் செலுத்தட்டும் எனக்கு வர வேண்டியது வந்த என் சுக வாழ்வு நிலைத்தால் போதும் என்று மட்டும் கவலைப்பட்டவர்களுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்!//

நான் சொன்னது போல , வக்காலத்து இல்லை. முடிவுகள் எடுக்க முடியாத சூழலில் செலுத்தப்பட்ட அம்பாக இருப்பவர்களை நோக முடியாது.

சமூகப்பார்வை இல்லாத எந்த ஒருவரும் ... சாதரண பொது ஜனம் ,ஐடி மக்கள், ஐஸ்வர்யா ,அம்பானி யாரக இருந்தாலும் வாழும் ஜடங்களே. அதில் மாற்று கருத்து இல்லை.

கல்வெட்டு சொன்னது…

அதியமான்,
கேப்பிட்டலிஸம்,கம்யூனிசிம், மேலும் நீங்கள் படித்துள்ள அனைத்து பொருளாதரச் சரக்குகளையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு, இன்று ,இப்போது நீங்கள் கண்முன்னே காணும் மக்களுக்குத் தேவையான புதிய இசங்களை உருவாக்குங்கள். அதுதான் தேவை. எந்த இசமாக இருந்தாலும் அது எல்லாக் காலத்திற்கும் உதவும் சர்வரோக நிவாரண சஞ்சீவி கிடையாது.

இல்லையென்றால், புன்நவீனத்துவத்தை மாய்ந்து மாய்ந்து மொழிபெயர்த்து பேசும் நவீனவாதிகள் போல இந்த பொருளாதார இசங்களும் பேச மட்டுமே உதவும். நடைமுறைக்கு உதவா.

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html