சனி, ஆகஸ்ட் 19, 2006

விடை் கொடுக்கும் மந்திரக்கோல் (economics 5)

  • சென்னையில் எழுபத்தைந்து லட்சம் மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குக் தினமும் சராசரியாக பத்து டன் தக்காளி தேவைப்படும்.
  • வீட்டில் சமைக்காமல் வெளியில் சாப்பிடுபவர்களுக்காக இரண்டரை லட்சம் இட்லிக்கள் செய்ய வேண்டும்.
இப்படி எல்லாம் யாரும் இருந்து திட்டம் போடுவதில்லை. கோயம்பேட்டில் பேருந்து நிலையம் திறந்த உடன் சுற்றிலும் முளைத்த தங்கும் விடுதிகள் அரசாங்கம் சொல்லி நடக்கவில்லை.

இந்தத் திட்டமிடுதலுக்கு அவசியமே இல்லாமல் செய்து விடுகிறது ஒரு மந்திரக் கோல். ஒவ்வொருவரும் தன்னுடைய நலத்தைப் பார்த்துக் கொள்ளும் போது இந்த மந்திரக் கோல் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
  • சென்னையில் நிறைய பேர் தக்காளி வாங்குகிறார்கள், தக்காளி விளைவித்து அனுப்பினால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பல நூற்றுக் கணக்கான விவசாயிகள் தானாக முடிவு எடுக்கிறார்கள்.
  • காலையில் வீட்டில் சாப்பிட நேரம் இல்லாமல் வெளியில் எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களுக்கு இட்டிலி செய்து விற்றால் நமக்கும் காசு என்று பல நூற்றுக் கணக்கான உணவு விடுதிகள் தனது நலனுக்காக அமைக்கிறார்கள்.
எந்தப் பொருளுக்கு காசு கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்களோ அவற்றை உற்பத்திச் செய்ய இந்த மந்திரக் கோல் பலருக்கும் மந்திரம் போடுகிறது. இப்படி பலரும் இதில் இறங்கு போது யார் குறைந்த விலையில் விளைவிக்கிறார்களோ அவர்கள்து விலை குறையும் அல்லது லாபம் அதிகமாகும். அதனால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு உள்ளதில் குறைந்த விலையில் உற்பத்தி நடக்கிறது. யாருக்கு இவை போய்ச் சேர வேண்டும்? யார் வேலை செய்து பணம் வைத்திருக்கிறார்களோ அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இப்படியாகப் பணம் என்ற ஊடகத்தின் மூலமாக சுயநலம் என்னும் நூலிணைப்பில் மூன்று கேள்விகளையும் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் தீர்மானிக்கின்றன.

மக்களின் வாங்கும் விருப்பமும், உற்பத்தி செய்வதின் சாத்தியங்களும்தான் என்ன உண்டாக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.
  • நிலவுக்கு சுற்றுலா போக வேண்டும் என்று நிறையப் பேர் விருப்பப்படலாம், ஆனால் அதற்கான நுட்ப சாத்தியங்கள் அதை பெருமளவில் கொடுக்க அனுமதிப்பதில்லை.
  • அஜினோமோட்டோ என்று உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வர முடிந்தது. ஆனால் வாங்க ஆளில்லை என்றால் அவ்வளவுதான் அதன் கதை.

இந்தச் சந்தைப் பரிமாற்றங்களின் மூலமாக ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த தனது திறமையை முழுதும் பயன்படுத்தும் வேலையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுகிறது.

(உமி அகற்றாத) நெல்லையே பார்க்காமல் வாழ்ந்து இறந்து விடும் மனிதர்கள் கூட இருக்கிறார்கள். இருதய நிபுணர் ஒருவர் ஈட்டும் பணத்தில் தேவையான அரிசியை வாங்கிக் கொள்ள முடிவதால், நிலத்தில் இறங்கி உணவுக்காக அவர் வேலை செய்ய வேண்டியிருக்கவில்லை. இப்படி வெவ்வேறு வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வதால் ஒவ்வொருவரும் தான் செய்யும் வேலையிலேயே கவனம் செலுத்தி அதைச் சிறப்பாகச் செய்வதால் எல்லோருக்கும் பலன் ஏற்படுகிறது.

தான் இருதய மருத்துவம் படித்தால் தனக்குக் கிடைக்கும் பணத்தில் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இல்லா விட்டால் யாருமே மருத்துவப் படிப்பு படிக்க மாட்டார்கள். அப்படி ஒரு கொடுக்கல் வாங்கல் முறை இது போல சிறப்பு பொருட்கள் உருவாக அடிப்படைத் தேவை. இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கும் வாடிக்கையாளருடன் உரையாடும் வேலையைச் செய்து சென்னையில் வாழ்க்கை நடத்த முடிகிறது என்றால் சந்தை முறையின் அற்புதம்தான் அது.

இந்த கொடுக்கல் வாங்கல்களில் ஒரு முக்கியமான காரணி பணம். எனக்குக் கிடைக்கும் பணத்தில் எனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று நம்பிக்கை இருந்தால்தான் சந்தை இயங்க முடியும். இல்லை என்றால் பண்ட மாற்று முறையில், "நீ எனக்கு முடி வெட்டி விடு, நான் உனக்குத் தேவையான கணினி மென் பொருள் எழுதிக் கொடுக்கிறேன் என்று ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

17 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

நீங்க சொன்ன பண்ட மாற்றுமுறையில்...கடைசி வரிகள் நன்றாக இருக்கு.
தேவை-விளைச்சல் ஒரு மெல்லிய நூல் இழையில் தான் ஓடுகிறது.

வடுவூர் குமார் சொன்னது…

இது பின்னூட்டம் இல்லை.
ஒரு ஆதங்கம்...
நீங்கள் எழுதும் பல விஷயங்கள் அருமையாக இருந்தாலும் பின்னூட்டம் மிகக்குறைவாக உள்ளதே.பலர் படித்துவிட்டு சும்மா போய்விடுகிறார்களா? அல்லது கவரவில்லையா?
"எழுதுவது என் கடமை" அவ்வளவு தான் என்று நினைக்கலாம்.
ஆனால் ஒரு வாசகன் தான் படிக்கும் விஷயம் நன்றாக இருக்கும் பட்சத்தில் ஒரிரு வரி போட்டு எழுதுவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.இதை எனக்கு தெரிந்து "தமிழ் மனத்தில்"திருமதி துளசி பிரதிபலன் எதிர்பார்காமல் செய்கிறார்.
எனினும் தொடர்க உங்கள் பணியை.
மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
குமார்

dondu(#11168674346665545885) சொன்னது…

"இந்தத் திட்டமிடுதலுக்கு அவசியமே இல்லாமல் செய்து விடுகிறது ஒரு மந்திரக் கோல். ஒவ்வொருவரும் தன்னுடைய நலத்தைப் பார்த்துக் கொள்ளும் போது இந்த மந்திரக் கோல் வேலை செய்ய ஆரம்பிக்கிறது."
இதுதான் சார் பொருளாதாரத்தில் அடிப்படை. அப்படியின்றி திறமைக்கேற்ற வேலை ஆனால் தேவைக்கேற்ற சம்பளம் என்ற கம்யூனிச கோட்பாடு எவ்வளவு அபத்தம் வாய்ந்தது என்பதையும் பார்க்கலாம். அப்படி செய்து வந்த சோவியத் யூனியனில் கூட ஒரு கட்டத்தில் அவர்கள் விஞானிகளுக்கு அதிக சலுகைகள் தர வேண்டியிருந்தது. யாரையும் வேலையை விட்டுத் தூக்க முடியாததால் தான்தோன்றித் தனமாக வேலைகள் நடந்தன. கடைசியில் தேசமே அழிந்தது.

இப்போது கூட சில பிரச்சினைகள். நகரத்தில் இருப்பவர்களுக்கு கட்டுப்படியாக வேண்டும் என்பதற்காக அரிசிக்கு விலை கட்டுப்படுத்துவது, அதே சமயம் விவசாயியின் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாதிருத்தல். சில நேரங்களில் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்றாலே நஷ்டம் என்ற நிலையில் பொருட்களையே அழித்த கதையும் நடந்திருக்கிறது.

சிறிது சிறிதாக விளைநிலங்கள் வீட்டு பிளாட் போடப்பட்டு விற்பதும் நடக்கிறது. ஏன் இந்த சனியன் பிடித்தத் தொழில் செய்ய வேண்டும் என்று பலர் வேறு தொழில்களுக்கு மாறுகின்றனர், நகரங்களுக்கு குடிபுகின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் சொன்னது…

நம்ம டோண்டு சொன்னதுபோல கூட்டம் அதிகமாக ஆக விளைநிலங்கள் எல்லாம் வசிக்கும் இடமாகிவிடும். அப்புறம் விவசாயம் எங்கே?

இது வடுவூராருக்கு:

குமார், நல்ல விஷயங்களைப் படிச்சுட்டு அதைப் பத்தி ஒரு ஆழ்ந்த சிந்தனை வர்றதாலே அதைப் பத்தி யோசிச்சுக்கிட்டே பின்னூட்டம் போட மறந்துடறாங்கன்னு வச்சுக்கலாமா? :-)

ILA (a) இளா சொன்னது…

//நீங்கள் எழுதும் பல விஷயங்கள் அருமையாக இருந்தாலும் பின்னூட்டம் மிகக்குறைவாக உள்ளதே//

சிவாவின் பதிவுக்கு வரும் வாசகனில், நானும் ஒருவன். அவர் சொல்லும் கருத்துகளில் மாற்று கருத்து இல்லையெனில், என்ன சொல்லி பின்னூட்டமிடுவது. நனறாக இருக்கிறது என்று ஒத்தை வரியில் பின்னூட்டம் போட மனசில்லாமல் படித்ததை ரசித்துவிட்டு வேறு பக்கம் போய்விடுவோம். இதுவும் பின்னூட்டம் விழாததற்கு ஒரு காரணியே

மா சிவகுமார் சொன்னது…

//கடைசி வரிகள் நன்றாக இருக்கு.

நன்றி குமார்.

பெரும்பாலான கருத்துக்கள் அமெரிக்க எழுத்தாளரிடம் கடன் வாங்கி நம்ம ஊர் சூழலுக்கு மாற்றிக் கொண்டவை :-) பாராட்டில் ஒரு பகுதி அவருக்கும் போய்ச் சேர வேண்டும்.

இந்தப் பண்ட மாற்று முறை இருபதாம் நூற்றாண்டு அமெரிக்காவில் கூட நடந்ததாம். பல் மருத்துவரிடம் போகும் குழாய் வேலை செய்பவர் காசு வாங்காமல் ஒருவரது பணியை மற்றதுக்கு மாற்றாக ஏற்றுக் கொள்வார்களாம். அதிக வரிச் சுமையைத் தவிர்க்க இப்படி ஒரு குறுக்கு வழி.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//பின்னூட்டம் மிகக்குறைவாக உள்ளதே.பலர் படித்துவிட்டு சும்மா போய்விடுகிறார்களா? அல்லது கவரவில்லையா?

பின்னூட்டம் வரவில்லை என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம். எழுதுவது எல்லாம் உயர் தரமாக இருப்பதால் என்ன சொல்வது என்று படித்து நிறைவுடன் போய் விடுகிறார்கள் என்று சொல்லலாம் (நன்றி துளசி அக்கா, இளா :-)

இன்னொரு பக்கம் ஒன்றுக்குமே உதவாத எழுத்து என்று இருக்கலாம். அது இல்லை என்று நானும் நம்புகிறேன் :-)

மற்றபடி, தமிழ் மணத்தில் பின்னூட்ட நிலவரம் காண்பிக்கத் தேவையான பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாததால் வெளிச்சம் விழுவதும் குறைவு. எனக்கு என்னவோ மட்டுறுத்தல் செய்ய மனம் வரவில்லை.

இப்போது இன்னொரு பக்க வருகை எண்ணும் கருவியைப் பொருத்தியிருக்கிறேன், நேற்று முதல். அதனால் ஊக்கம் நிறையவே கிடைக்கிறது. சமயம் வரும் போது அது பற்றியும் எழுதுகிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

டோண்டு சார்,

கொஞ்சம் அவசரப்படுகிறீர்களே. இந்தப் பகுதிக்கு அடுத்தது, இந்த சுயநலம் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தின் குறைகளை, அது செய்ய முடியாதவற்றைப் பட்டியலிடுகிறார்கள். அதற்கு அரசு தலையீடு நிச்சயம் தேவை. அது எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு.

விவசாயப் பிரச்சனைகள் பெரிய சிக்கல் வாய்ந்தவை. பெரிய பெரிய மூளைகள் தம்மைக் குழப்பிக் கொள்ளும் பிரச்சனைகள். உலக வர்த்தக உடன்பாடுகளையே முடக்கிப் போட்டு விட்டப் பிரச்சனைகள். அதற்கு எளிதான தீர்வு எதுவும் இல்லைதான்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//கூட்டம் அதிகமாக ஆக விளைநிலங்கள் எல்லாம் வசிக்கும் இடமாகிவிடும். அப்புறம் விவசாயம் எங்கே?

அறிவியல் பூர்வமாக அலசிப் பார்த்தால் பத்து சதவீதத்துக்கும் குறைவான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டாலே நாடு முழுமைக்கும் சாப்பாடு போட்டு விடலாமாம். அது இந்தியாவில் 50%க்கும் மேல். நிலங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

ஒரு சர்வாதிகாரி வந்தால், எல்லாவற்றையும் வெளியே அனுப்பி விட்டு இரக்கமற்ற ஆனால் உயர் உற்பத்தி கொடுக்கும் இயந்திர, பண்ணை முறை விவசாயத்தை திணிக்கலாம்.

ஆனால் நடைமுறையில், இது பல கோடி மக்களின் வாழ்க்கைச் சார்ந்த பிரச்சனை. பல தலைமுறைகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறைகளுக்கு மாற்று இன்றைய அறிவியல் கொடுக்கிறது என்பதில் நம்பகத்தன்மையும் குறைவு. பசுமைப் புரட்சியின் பக்க விளைவுகளாக பூச்சிக் கொல்லி கோலாக்கள் இன்று விற்கப்படுவதை ஒரு சான்றாகக் காட்டலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

எளிமையாக,தெளிவாக எழுதுகின்றீர்கள் சிவகுமார். பாராட்டுகள்.
மந்திரக்கோல்:invisible hand என்று ஆடம் ஸ்மித் குறிப்பிடுவது.self instinct என்பதை சுயநலம் என்று கூறுகின்றீர்கள்.இதை தன்முனைப்பு என்றும் invisiblehand அய் கண்ணுக்குப்புலனாகா காக்கும் கரங்கள் என்று வகுப்பறைகளில் கூறுகின்றோம். ஆடம்ச்மித்தின் உதாரணம்:கசாப்புக்கடைக்காரர் ரொட்டிக்கடைக்காரருககு கறி கொடுக்கின்றார்;அவர் கறி சாப்பிடட்டுமெனும் நோக்கத்தில் அல்ல; தன்முனைப்பின்(தனக்கு ரொட்டி கிடைக்கும்) விளைவாகத்தான்.இவ்வாறு ஒவ்வொருவரும் பிறரைப்பாதிக்காத தன்முனைப்புடன் செயல்படும்பொழுது பொது நலம் சிறக்கும்; அரசுத்தலையீடு கூடாது. ஆயினும் சில கேந்திரமன துறைகளில் அரசின் தலையீடு தேவை.
பிற்காலத்தில் கெயின்சு, தனியார் துறை பலமிழக்கும் பொழுது அரசு(பொது)த்துறை அதை ஈடு செய்ய வேண்டும் என்றார். இது கீனிசியப் புரட்சி எனப்படும்.
ரஷ்ய அனுபவம் வேறு.ஜார் மன்னர் ஆட்சியின் அலங்கோலத்தை பின்வரும் உதாரணத்தில் இருந்து அறியலாம்:'உணவுப்பஞ்சம் தலை விரித்து ஆடியது..ஆனால் உணவுப்பொருள்கள் போதுமான இருப்பில் இருந்தது.அவற்றை நாடு முழுதும் சீராக வினியொகிக்கப் போதுமான போக்குவரத்து வசதிகள்-சரக்கு உந்துகள் (லாரிகள்) இல்லை.அதே சமயம் காஸ்பியப் பெருங்கடல் பகுதியிலிருந்து அரசகுடும்பத்துப் பெண்களுக்காக கறுப்பு ரோஜா மலர்களை ஏற்றி வ்ருவதற்காக லாரிகள் பெருமளவில் திருப்பி விடப்பட்டன' இத்தகயப் பொருளாதாரத்தில் திறமைக்கு ஏற்ற உழைப்பு;தேவைக்கு ஏற்ற சம்பளம் எனும் கொள்கைதானே சரி?அக்கொள்கையைப் பின்பற்றியதால்தானே அமெரிக்கா 300 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை ரஷ்யாவால் 30 ஆண்டுகளில் அடைய முடிந்தது?
அண்ணா ஒருமுறை சொன்னார்;ஜனநாயகத்தில் சாதனைகளும் குறைவு;வேதனைகளும் குறைவு. சர்வாதிகாரத்தில் சாதனைகளும் அதிகம்;வேதனைகளும் அதிகம்" ஒரு தலைமுறை வேதனைப்பட்டால்தான் மற்றொரு தலைமுறை நிம்மதியாக வாழ முடியும்

மா சிவகுமார் சொன்னது…

//self instinct என்பதை சுயநலம் என்று கூறுகின்றீர்கள்.இதை தன்முனைப்பு என்றும் invisiblehand அய் கண்ணுக்குப்புலனாகா காக்கும் கரங்கள் என்று வகுப்பறைகளில் கூறுகின்றோம்.

நீங்க பொருளாதாரம் கற்றுக் கொடுக்கிறீர்களா என்ன? தகவல்களுக்கு மிக்க நன்றி.

இராமகி ஐயா சொல்வது போல ஆங்கில சொற்களை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்வதை விட பொருளை உள் வாங்கி புழங்கும் சொல்லைப் பயன்படுத்துவது பொது மக்களும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் தன் முனைப்பு என்பது self instinct (or self interest) என்பதன் நேரடி மொழி மாற்றம். ஆனால், அதன் அடிப்படைப் பொருள் சுயநலம்தானே? அதே போலத்தான் invisible hand க்கு மந்திரக்கோல் அதிகப் பொருத்தம் இல்லையா.

தொடர்ந்து தமிழ் பொருளாதரவியல் பாடப் புத்தகச் சொற்களைக் கொடுத்து வந்தால் இரண்டையும் இணைத்துப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

பொருளாதாரக் கோட்பாடுகளை முற்றிலும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சோவியத் யூனியனைச் சுட்டிக் காட்டித் தாக்குவது சரியில்லை என்பது உங்கள் எடுத்துக் காட்டிலிருந்து தெரிகிறது. எழுபது ஆண்டுகள் நடந்து அந்த பரிசோதனைகளில் பல வெற்றிகள், பல தோல்விகள். அதனால் உலக வரலாறும், பொருளாதார அறிவும் மேன்மையடைந்தன என்று தயக்கம் இன்றி கூறலாம், அல்லவா!

//ஒரு தலைமுறை வேதனைப்பட்டால்தான் மற்றொரு தலைமுறை நிம்மதியாக வாழ முடியும

சீனாவில் பார்த்ததை அடிப்படையாகக் கொண்டு இதிலிருந்து கொஞ்சம் வேறுபடுகிறேன் சார். அப்புறம் விபரமாக எழுதுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்.

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

பொருளியலை 36 ஆண்டுகாலம் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்குப் போதித்து ஓய்வு பெற்றுவிட்டேன்
என் உதவியை எப்பொழுதும் நாடலாம்

மா சிவகுமார் சொன்னது…

//என் உதவியை எப்பொழுதும் நாடலாம


மிக்க நன்றி ஐயா! உங்களை அடிக்கடி தொந்தரவு செய்வேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

கைப்புள்ள சொன்னது…

சந்தையில் கொடுக்கல் வாங்கல்களையும்(market transactions) பணம் புரள்வதையும்(money circulation) நிர்மானிக்கும் காரணிகளைச் சற்றே வேறு விதமாக ஒருங்கிணைத்தும் பார்க்கலாம்.

என்றும் மாறிக் கொண்டே இருக்கும் இக்காரணிகளை(dynamic factors) அறிந்து கொள்ளவே ஒவ்வொரு தொழிற் நிறுவனமும் தங்களுடைய வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு தோறும் இக்காரணிகளின் அப்போதைய நிலையை அறிந்து கொள்வதற்காகச் செலவழிக்கின்றன.
1. சந்தை தேவையும் வாங்குபவர்களின் விருப்பமும்(Market Demand and Customer Preferences)
சந்தை தேவை : ஒரு பொருளைச் சந்தையில் விற்க வேண்டுமாயின் அந்த பொருளுக்கு முதலில் சந்தையில் ஒரு தேவை இருக்க வேண்டும். மேலே குறிப்பிடப் பட்டுள்ள இட்லி உதாரணம் ஒரு சிறந்த உதாரணம். அதையே இன்னும் கொஞ்சம் விரிவாய் காண்போமாயின் - சென்னையில் வேலை தேடி வரும் இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்தினரோடு தங்கி இருப்பதில்லை. காலையில் அவசர அவசரமாக எழுந்து ஆபிசுக்கு ஓடும் ஒரு இளைஞனுக்கு முக்கியமான தேவை காலை உணவு. ஓட்டலில் கிடைத்தாலும் இல்லை ஒரு தள்ளுவண்டியில் கிடைத்தாலும், அக்காலை உணவை மலிவான விலையில், சற்றே வாய்க்கு ருசியாக ஒருவர் வழங்குவார் ஆயின், உணவை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையே ஒரு கொடுக்கல் வாங்கலுக்கான வழிவகை ஏற்பட்டு விடுகிறது. இத்தள்ளுவண்டி விற்பவரிடம் வந்தால் மலிவான விலையில் சுவையான இட்லி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவ்விளைஞனும், இந்த மேன்சனுக்கு அருகில் நம் தள்ளுவண்டியை நிறுத்தினால், இவரைப் போலவே இன்னும் நாலு பேர் நம்மிடம் சாப்பிட வருவார்கள் என்ற நம்பிக்கையில் தள்ளுவண்டிக் காரரும் மறுநாளும் வருவார்கள்.

வாங்குபவர்களின் விருப்பம் : இதே 'தள்ளுவண்டி இட்லி' உதாரணத்தை வாங்குபவர்களின் விருப்பத்தை விளக்கக் காண்போம். சென்னை திருவல்லிக்கேணியில், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் பெருமளவு தங்கியிருக்கும் இடத்தில்(மேன்சன் அருகில்) நம் தள்ளுவண்டிக் காரர் இட்லி விற்று நல்ல லாபம் பார்க்கிறார். தன்னுடைய நண்பன் ஒருவனுக்கு "நீயும் தள்ளுவண்டியில் இட்லி கொண்டு போய் விற்றால் காசு சம்பாதிக்கலாம்" என்று கூறுகிறார். தள்ளுவண்டிக் காரரின் நண்பரும் இட்லியைச் சுட்டு எடுத்துக் கொண்டு சென்னையில் பணக்கார குடும்பஸ்தர்கள்(rich family people) வசிக்கும் ஒரு பகுதிக்குச் செல்கிறார். அங்கு அவரது இட்லி விற்றுப் போகுமா? குடும்பஸ்தர்கள் வசிக்கும் பகுதியில், அவர்கள் தம் வீட்டிலேயே சமைத்து சாப்பிட விரும்புவார்கள். அதுவும் பணம் அதிகம் உள்ளவர்கள் நல்ல ஒரு உணவகத்துக்குச் சென்று குடும்பத்தோடு ஒன்றாய் அமர்ந்து சாப்பிட விரும்புவார்களே தவிர தள்ளுவண்டியாரிடத்தில் இட்லி வாங்க மாட்டார்கள்.

2. தொழிற்நுட்ப சாத்தியக்கூறுகள்(Technological Feasibility)
சரி ஒரு பொருளுக்கு சந்தையில் தேவையும் இருக்கிறது, மக்களின் வாங்கும் விருப்பத்தையும் கணித்தாயிற்று. அப்பொருளை உருவாக்க தொழிற்நுட்ப சாத்தியக்கூறுகள்(Feasibility என்றச் சொல்லுக்குக் கலைச்சொல் தெரியாததால் சாத்தியக்கூறு என்ற சொல்லையே உபயோகிக்கிறேன்)இருக்கிறதா எனக் கண்டறிதல் வேண்டும். உதாரணமாக இட்லி தயாரிப்பவர்களை(சுய தேவைக்குத் தயாரிப்பவர்களும்/ தயாரித்து விற்பவர்களும்)நம்பி இட்லி மாவு அரவை இயந்திரம் தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள். இது வரை மாவு அரைப்பதிற்கு ஒரு இயந்திரம் உருவாக்கப் படவில்லை என்று வைத்துக் கொள்வோமே. அந்த மாவை அரைக்க ஒரு இயந்திரத்தை உருவாக்க வேண்டுமெனில் அவ்வியந்திரத்தைத் தயாரிக்கும் அளவிற்கு "தொழிற்நுட்பம்" இருக்கிறதா, அத்தொழிற்நுட்பம் நம் நாட்டிலேயே கிடைக்கிறதா, அல்லது வெளிநாட்டிலிருந்து தருவிக்க வேண்டுமா என அரவை இயந்திரம் தயாரிக்க விரும்பும் ஒரு நிறுவனம் ஆய்ந்து பின் முடிவெடுப்பார்கள். மேலே கூறப் பட்டுள்ள நிலவு பயணம் உதாரணத்தையும் இக்காரணியோடு தொடர்புடையதே.

3. பொருளாதார சாத்தியக்கூறுகள்(Economies of Scale)
முதல் இரண்டு காரணிகளும் சரியாக இருக்கிறது, ஆனால் ஒரு பொருளை பெருமளவு தயாரித்து விற்கும் போது அது எனக்கு லாபகரமாக இருக்கிறதா என நான் ஆய்வேன். உதாரணத்திற்கு இட்லிகளைத் தானியங்கி முறையில் உற்பத்தி செய்து தள்ளும் ஒரு தானியங்கி இயந்திரம் தயாரித்து விற்பனை செய்ய நான் விரும்புகிறேன் எனில், அவ்வியந்திரத்தை என்னிடத்திலிருந்து வாங்கக் கூடியவர் எவ்வளவு விலை கொடுப்பார் என நான் அறிந்து கொள்ள முற்படுவேன். உதாரணமாக ஒரு இயந்திரத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க அவர் முன் வருகிறார் என வைத்துக் கொள்வோம், ஒரு ஆண்டில் அத்தகைய 10 இயந்திரங்கள் விற்பதற்கான ஆர்டர் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். ஐம்பது லட்சம் ரூபாய் எனக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் ஐம்பது லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்க ஊழியர் சம்பளம், தொழிற்நுட்பத்திற்கான விலை மற்றும் இதர பிற செலவுகள் என நான் அறுபது லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டி வருமெனின், இத்தகைய இயந்திரங்களைத் தயாரித்து விற்கும் எண்ணத்தை கைவிட்டு விடுவேன்.

கொடுக்கல் வாங்கல் நடப்பதை நிர்ணயிக்கும் காரணியாக மேலே குறிப்பிட்டுள்ள உதாரணத்தைக் காண முடியவில்லையே எனக் கருதுவீர்கள் ஆயின், வேறுவிதமாக அதை காணலாம். தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்திற்கான சந்தையை Economies of Scale என்ற காரணி நிர்ணயிக்கின்றது. Economies of Scale என்ற காரணி இயந்திரம் தயாரிப்பவருக்குச் சாதகமாக இருந்திருக்கும் பட்சத்தில் 'தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்திற்கான' சந்தையில் கொடுக்கல் வாங்கலும், பணம் புரளுவதும், அதை நம்பி இன்னும் சில சிறு தொழில்கள் தொடங்கவும் வழிவகை ஏற்பட்டிருக்கும்.

முதலாம் மற்றும் இரண்டாம் உதாரணத்திலும் கூட, கூறப்பட்டுள்ளக் கூற்றைத் தவறு என நிரூபிக்க(negation) முயற்சி செய்து ஆய்வோம் ஆயின், அவ்வுதாரணங்களும் தெளிவாக விளங்கும்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி கைப்புள்ள,

இட்டிலியையே எடுத்துக் கொண்டு எல்லாக் காரணிகளையும் எளிமையாக விளக்கி விட்டீர்கள்.

மூன்றாவதாகச் சொன்ன லாப வீதக் கணக்கில் வருவது முதலீடு. லாபம் முதலீட்டுக்குக் கிடைக்கும் கைம்மாறாகவே கருதப்படுகிறது. அப்படி ஒரு முதலீடு செய்து (உடனடி தேவைகளைத் துறந்து பிற்கால உற்பத்தியில் செலவிடுதல்) உண்டாக்கும் பொருளுக்குக் கிடைக்கும் விலை அந்த முதலீட்டுக்கு ஏற்ற லாபத்தைக் கொடுக்குமா என்பதுதான் மனக் கணக்கு.

நன்றி .

அன்புடன்,

மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

Dear Mr.Siva Kumar


You are ryt. Your Blogs are highly standard so the comments are less. I used to read ur blogs regularly ( Mainly economics related). Basically im an engineering graduate and dont know much abt economics.But by reading ur blogs i learnt a lot.

Regards,
senthil kumar.V

மா சிவகுமார் சொன்னது…

அன்பின் செந்தில் குமார்,

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடுகைக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறீர்கள் :-)

உங்கள் உதவியால் இதை மீண்டும் ஒரு முறை நானும் இன்று படித்தேன்.

நன்றி.

அன்புடன், மா சிவகுமார்