செவ்வாய், ஏப்ரல் 25, 2006

எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி....?்?

"சன் டிவியைப் எதிர்த்து எழுதும் நீங்கள் நடுநிலையாளர் என்று காட்டிக் கொள்ளாதீர்கள். நான் அதிமுக ஆதரவாளன் என்று கட்சிக் கொடியை மேலே போட்டுக் கொண்டு வலைப்பூ எழுதுங்கள்" என்று ஒரு நண்பர் கேட்டுக் கொண்டார்.

என்னுடைய நோக்கில் திமுக, அதிமுக இரண்டுமே எரிகிற கொள்ளிகள்.

இரண்டில் எது தேறுமோ, எது குறைந்த சேதம் விளைவுக்குமோ அதற்கு வாய்ப்பளிப்பதுதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. 1996ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று மாநிலமே திரண்டு திமுகவிற்கு ஆட்சிப் பொறுப்பை அளித்தது.

2004ல் இப்படியே விட்டால், இந்த அம்மா தன்னை அரசியாக முடிசூட்டிக் கொள்வார்கள் என்று 39 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்தனர் மக்கள்.

2006 தேர்தலில் அப்படித் தலை போகும் பிரச்சனை என்ன?

ஊடகங்கள் என்ற கண்ணாடியின் மூலம்தான் மக்கள் உலகையும், சமூகத்தையும் பார்க்கிறார்கள். ஊடகத்துறை ஒரே கருத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம், திரிக்கப்பட்ட கருத்துகளை அளிக்கும் வண்ணம் வளர்ந்து விட்டது, அவ்வாறு வளர அரசியல் கருவிகள் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலைக்கிடமளிப்பது.

நிலைமை இன்னும் மோசமாகி விடாமல் தடுக்க, திமுகவுக்கு கூடுதல் அரசியல் பலம் கிடைக்காமல் இருப்பது நல்லது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, கூட்டணிக்கட்சிகளை பெரிதும் நம்பி ஆட்சி அமைக்கும் நிலை வருவது மாநிலத்துக்கு நல்லது.

ஆனால், தம்மை ஓரளவே சார்ந்திருக்கும் மத்திய அரசையே தமது குடும்ப தொழில் நன்மைக்கேற்ப வளைக்க முனையும் திமுக தலைமை, மாநில அரசு அதிகாரத்தைத் தனியாகவோ கூட்டாகவோ கைப்பற்றி விட்டால் இன்னும் தீவிரமாக தமது ஊடக ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனையும்.

ஆகவே, இந்த தேர்தலில திமுக ஆட்சி அதிகாரம் பெறாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது என்பது என் கருத்து.

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அது என்ன '"எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி....?" என்று தலைபிட்டுவிட்டு கடைசி வரியில் ஒரு கொல்லி மிக நல்ல கொல்லி இல்லை என சொல்லி இருக்கின்றீர்?

மாயவரத்தான் சொன்னது…

கடைசி ஒரு வரி சும்மா 'நச்'சுன்னு இருந்திச்சு வாத்யாரே!

Bharaniru_balraj சொன்னது…

ஆகா மாயவரத்தான் கருத்துச் சொல்லிட்டாருய்யா. ஜெயகுமாரை இன்னும் கானோம்.

குழலி / Kuzhali சொன்னது…

அரசு ஊழியர்களின் வயிற்றில் அடித்தது, சாலை பணியாளர்கள் 60+ பேரின் உயிரைக்குடித்தது, எம் மக்களின் சிறு தெய்வ வழிபாட்டிற்கு ஆப்பு வைத்தது, நெசவாளிகளுக்கு கஞ்சித்தொட்டி திறக்கும் நிலை வந்தது, அந்த எதிர்ப்பு குறியீட்டையும் பிரியாணி தொட்டி திறந்து அசிங்கப்படுத்தியது, அதிக படியாக கிட்டங்கிகளில் இருந்த ரேசன் பொருட்களை கூட சரியாக வினியோகிக்காமல் விவசாயிகள் எலிக்கறி தின்றது, பேருந்தில் வைத்து உயிரோடு மாணவிகளை எரித்தது, தேவையான போது வீரமணி போன்ற ரவுடிகளை பயன்படுத்தி எதிர்கட்சிகளின் மீது வன்முறையை ஏவியது, இதோ இன்று பார்வர்டு பிளாக் வேட்பாளர்களையும் லீலாவதி(எம்.ஜி,ஆரின் அண்ணன் மகள்)யை கடத்தியது, கஞ்சா வழக்குகள், பொடா அத்து மீறல்கள் என்ற மற்ற கொள்ளிகளை பார்க்கும் போது ஊடக கொள்ளி எவ்வளவு தேவலாம், ஜேஜே டிவிக்காக நடந்த அத்துமீறல்கள் சூப்பர் டூப்பர் கேபிள் இணைப்பிற்காக மிரட்டப்பட்டவர்களையும் நினைவில் கொள்ளலாம், உயிர், உரிமை போகும் பிரச்சினகள் தான் முதலில் பிறகுதான் ஊடகங்களும் மற்றவைகளும்

gulf-tamilan சொன்னது…

//உயிர், உரிமை போகும் பிரச்சினகள் தான் முதலில் பிறகுதான் ஊடகங்களும் மற்றவைகளும் //
kuzhali ரொம்பா சரி!!புரியுமா இவர்கள்கு?

மா சிவகுமார் சொன்னது…

குழலி,

ஒத்துக் கொள்கிறேன். எந்தப் பிரச்சனை முக்கியமானது என்பதில்தான் நான் மாறுபடுகிறேன். ஜெயலலிதா செய்யும் கொடுமைகள் வெளிப்படையானவை, பிடித்தால் உள்ளே போக வைக்கும் தண்டனைச் சட்டக் குற்றங்கள். மக்களும், ஊடகங்களும், நீதி மன்றங்களும் விழிப்போடு இருந்தால் தடுக்க முடிபவை. ஊடக ஆதிக்கம் சம்பந்தமாக திமுக செய்யும் முறை கேடுகள் மறைமுகமானவை. இதுவரை, அவர்களின் ஜென்ம எதிரிகள் அதிகாரத்தில் இருந்தும் கூட கடைசி நேரத்தில் ஒரு மசோதா கொண்டு வர முடிந்து, அதுவும் ஆளுநரால் முடக்கப்பட்டு விட்ட நிலைதான். நீதி மன்றங்களோ நடுவண் அரசு முறை செய்யும் நிறுவனங்களோ இன்னும் இதை கவனத்தில் கூட கொள்ளவில்லை. திமுகவுக்கு இன்னும் அதிகாரம் கிடைத்தால் இது இன்னும் பயங்கரமாக உருவெடுத்து விடும் என்பதுதான் என் வாதம்.

குழலி / Kuzhali சொன்னது…

//மக்களும், ஊடகங்களும், நீதி மன்றங்களும் விழிப்போடு இருந்தால் தடுக்க முடிபவை
//
10 ஆண்டுகால ஆட்சியில் இது வரை தடுக்க முடியவில்லை என்பது நிதர்சனம், மக்கள் விழிப்புணர்வோடு இருந்திருந்தால் எந்த பிரச்சினையுமே இல்லையே...நீதி மன்றங்கள் எந்த அளவில் விழிப்புணர்வோடு இருக்கின்றன?? உதாரணத்திற்கு ஜெயலலிதா மீதான வழக்கு பெங்களூர் சென்றும் கூட இன்றுவரை அதன் நிலை? தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கின் நிலை? பொடா வழக்குகள்?.... ஊடகங்கள் இன்றைய நிலையில் ஊடகங்கள் என்று சொல்வதை விட ஊதுகுழல்கள் என்று சொல்வது சாலப்பொருத்தம் இப்படி சொல்வதாலேயே இது சன்,தினகரன் தவிர்த்த என்று பொருள் அல்ல, அவைகளும் சேர்ந்து தான், 1ரூபாய்க்கு டெக்கான் ஹெரால்டு வெளியிட்டபோது அது எப்படி சாத்தியம், அதில் எத்தனை லாபம் எப்படி முடியும் என்று ஆய்ந்து அறிந்து கட்டுரை எழுத முடியும் அதே தினகரன் 1 ரூபாய்க்கு வெளியிடும்போது வயிற்றில் அடித்துக் கொண்டுள்ளனர், ஊடகம் என்று சொல்வதற்கு அருகதையற்ற நிலையை தினமலர்,குமுதம்,சன்,தினகரன் உட்பட அனைத்து ஊடகங்களும் எடுத்துள்ளன

திமுக, அதிமுக என்ற இரு கொள்ளிகளில் திமுக என்ற கொள்ளி அதிமுக என்ற கொள்ளியைவிட பரவாயில்லை என்பது என் நிலை....

லக்கிலுக் சொன்னது…

//ஆகவே, இந்த தேர்தலில திமுக ஆட்சி அதிகாரம் பெறாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது என்பது என் கருத்து.//

மா.சி. திமுக ஆட்சி அமைத்து இன்னமும் மூன்று மாதங்களில் ஒரு ஆண்டு முடியப்போகிறது. உங்களது இந்த பழைய கருத்து இப்போதும் பொருந்துகிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

தி.மு.க. ஆட்சி 100 சதவிகிதம் எனக்கு திருப்தி தராவிடினும் கூட முந்தைய அ.தி.மு.க ஆட்சியை விட பல மடங்கு மேல் என்று தோன்றுகிறது.

முடிந்தால் தனி பதிவிடவும்.

அன்புடன்
லக்கிலுக்

மா சிவகுமார் சொன்னது…

//உங்களது இந்த பழைய கருத்து இப்போதும் பொருந்துகிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.//

பழைய கருத்து சிலவற்றில் பொருந்துகிறது. சிலவற்றில் பொருந்தவில்லை. தனி பதிவு போடுகிறேன், லக்கிலுக்.

அன்புடன்,

மா சிவகுமார