வெள்ளி, ஏப்ரல் 21, 2006

தமிழகத் தேர்தல்கள் - 2

அற்பனுக்கு வாழ்வு வந்த கதையாக தன்னை முடிசூட்டப்பட்ட அரசியாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதா தன்னுடைய ஆசைகளை எல்லாம் பதவியைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ள முனைய அதிமுக ஆட்சி மாநில மக்களின் வெறுப்பை ஈட்டிக் கொண்டது. மகாமகத்தில் குளிக்கப் போனதிலிருந்து, சென்னை நகர சாலைகளின் போக்குவரத்தை முடக்கி வைப்பது, வளர்ப்பு மகனுக்கு கல்யாணம் நடத்துவது, நிலங்களை வாங்கிக் குவிப்பது என்று போட்ட ஆட்டம், அடுத்த தேர்தலில் தமிழகமே ஜெயலலிதாவுக்கு எதிராக திரண்டது. திமுக அதன் பலனை அறுவடை செய்து ஆட்சி அமைத்தது.

இந்தத் தேர்தல் நடந்த சமயம் நான் வேலை முன்னிட்டு இந்தூரில், தங்கியிருந்தேன். தமிழகத்தைப் பார்த்து அந்த ஊர் ஆட்கள் எல்லாம் சிரித்தார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு, ஐக்கிய முன்னணி அரசு, மீண்டும் பாஜக அரசு என்று அதிமுகவும், திமுகவும் மாற்றி மாற்றி ஆதரிக்கும் மத்திய அரசுகள் அமந்தன.

பாஜக என்ற நச்சு சக்திக்கு தமிழகத்தில் முதலில் காலூன்ற வழி செய்த இழி பெருமையை ஈட்டிக் கொண்ட ஜெயலலிதாவின் அடியொற்றி, திமுகவும் தமது பதவி ஆசைக்கு, தனது கொள்கைகள் என்று அது வரை சொல்லி வந்ததற்கு முற்றிலும் எதிரான பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது.

தனது ஐந்தாண்டு ஆட்சி சாதனைகளை முன் வைத்து சாதிக் கட்சிகளின் கூட்டணியுடன், மதக் கட்சியையும் மடியில் கட்டிக் கொண்டு நின்ற திமுக அடுத்த தேர்தலில் தோற்றுப் போனது வருத்தமானது என்றாலும், பாஜக கூட்டுக்கு சரியான தண்டனை என்று நினைத்துக் கொண்டேன்.

ஆணவத்துடன் பாஜகவை மட்டும் கூட்டாகக் கொண்டு தேர்தலை எதிர் கொண்ட ஜெயலலிதா கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வியைத் தழுவியது.

இந்தத் தேர்தலில் மாநிலத்தை எதிர்கொள்ளும் உடனடி ஆபத்து கருணாநிதி குடும்பம் நடத்தி வரும் நெறிபிறழ்ந்த தொழில்களும், அதற்கு கூச்சமில்லாமல் துணை போகும் அந்தக் கட்சியின் அதிகார மையங்களும்தான். ஐந்து வருடங்கள் அவர்கள் கையில் மாநில நிர்வாகமும் போய் விட்டால், பல துறைகளில் நடக்கப்போகும் ஊறுகள் அடுத்த பத்து ஆண்டுகளில் கூட சரி செய்ய முடியாததாகப் போய் விடும்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் தனக்கு அளிக்கப்பட்ட துணி துறை இணை அமைச்சர் பொறுப்பை, தன்னுடைய சகோதரர் குடும்பம், சம்பந்த்தப்பட துறையில் தொழில் செய்வதால் மறுத்து விட்டாராம் இன்றைய நிதிஅமைச்சர் ப சிதம்பரம். அந்த அரசியல் நேர்மை எங்கே, தமது தொழிலுக்கு சாதகமான துறைகளை மிரட்டிப் பெற்றுக் கொண்டுள்ள திமுக தலைவர் எங்கே?

என்னுடைய விருப்பம் என்னவென்றால் முடிவுகள் கீழ் வருமாறு அமைய வேண்டும்:

திமுக : 80
அதிமுக : 80
(நடுநிலைமை :-)
தேமுதிக : 50
மதிமுக : 10
காங்கிரசு : 10
பாமக : 5 (தமிழ் நாட்டின் சிவசேனா இவர்கள்)

தேமுதிகவை நம்பி கூட்டணி அரசு அமைய வேண்டும். கேட்பாரில்லாமல் ஆடும் இந்தத் தலைகளுக்கு கேள்வி கேட்க ஒரு கூட்டம் வேண்டும்.

3 கருத்துகள்:

Muthu சொன்னது…

திருமா வை விட்டு விட்டீர்கள். இவரால் தான் கீழ்மட்டத்தில் உள்ள தாழ்த்தபட்டவர்களுக்காக குரல் கொடுக்க முடியுமென்று நம்புகிறேன். அதற்காகவாவது திருமா போன்றவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பது என் விருப்பம் பொருந்தா கூட்டணியில் இருந்தால் கூட. ஆனால் வாய்ப்பு குறைவென்றே நினைக்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

ஆமாம். திருமாவின் கட்சி பாமகவின் உறவை விட்டு, பண்பான அரசியல் நடத்துமானால், ஆட்சியையேப் பிடிப்பது நாட்டுக்கு நல்லது.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வணக்கத்துடன்,

//"பத்து இடம் கிடைக்கும்னு நெனைச்சேன்" னு சொன்ன கேப்டனுக்கே இல்லாத நம்பிக்கை உங்களுக்கு எப்படி அவர் மீது?

இது எல்லாம் என்னுடைய ஆசைகள், நம்பிக்கைகள் இல்லை. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா?

விஜயகாந்த் மீது பெரிய மதிப்பு எல்லாம் இல்லை. ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் போடும் கொட்டத்துக்கு ஒரு கட்டுப்பாடாக புது முகக் கட்சி ஒன்று இருந்தால் அரசியல் கொஞ்சம் தூய்மையாகும் என்று நப்பாசை, அதனால் தேமுதிகவிற்கு அரசு உருவாக்கும் வலிமை கிடைக்குமாறு ஆசைப்பட்டேன்.

பாமக மீது எனக்கு அதே கருத்துதான்.

நல்ல திறமையான தலைவர்கள் இருந்தாலும், ஒரு குறுகிய அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் பார்வைகள் விரியவே மாட்டேன் என்கின்றன. அடுத்தவர் கருத்துச் சொல்வதையும் அடாவடியாகத் தடுத்து நிறுத்தி விடுவோம் என்ற சிவ சேனாவின் போக்குத்தான் டாக்டரின் கட்சிக்கும் பொருந்துகிறது.

மாற்று நிதி நிலை அறிக்கை, அலசல் பூர்வமான திட்டங்கள் என்று வந்தாலும், உண்மையில் பரவலான மக்களின் மீது புரிதல் கொண்டு எல்லோருக்கும் நல்லபடியாக ஒரு ஆட்சியைத் தர அவர்களால் முடியுமா என்பதுதான் ஐயமாக இருக்கிறது.

இரண்டு முரடர்கள் சேர்ந்தால் அவர்களின் புத்தி நாச வேலைக்குத்தான் உதவும். பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட சமூகத்தின், பிரதிநிதிக் கட்சி தன்னுடைய தார்மீக உறுதியில் தனித்து நின்று வளர்ந்தால், தம்மை ஒடுக்கியவர்களின் மீதும் புரிதலைக் காட்டி உயர்ந்தால், தென் ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் ஆட்சிக்கு வந்து நெல்சன் மாண்டேலாவின் தலைமையில் வெள்ளையரையும் மன்னித்து தேசிய ஓட்டத்தில் சேர்த்துக் கொண்ட வகையில் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழகத்தில் ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட வாய்ப்பு இருக்கிறது.

அதற்குரிய பெரு மனமும் வரலாற்று நோக்கும் கொண்டு திருமாவளவன் செயல்பட்டால் அந்தக் கனவு கூட நனவாகலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்