நான் தான் மாறி வருகிறேனா அல்லது சமூகமே மாறி விட்டதா என்று தெரியவில்லை. ஆனால் கடந்து பதினைந்து ஆண்டுகளில் தமிழ் சமூகத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. பல நல்ல மாற்றங்கள், சில தேவையற்ற தீங்குகள்.
நல்லவற்றின் வரிசையில், வெளிநாடுகளில் பணி புரிந்து வந்துள்ள இளைஞர்கள், வெளி நாட்டாருடன் உறவாடும் பணியில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது. தமிழ் டாட் நெட் மடற்குழுவில் நடந்த விவாதங்களில் பெரும்பகுதி புலம் பெயர்ந்த தமிழரும், மலேசிய சிங்கப்பூர் தமிழர்களுமே இருந்தார்கள். வலைப்பதிவுகளில் சென்னையில் வசிப்போரின் எண்ணிக்கைதான் அதிகம்.
சமூகப் பொறுப்புணர்ச்சி அதிகரித்துள்ளது. நம் பண்பாட்டின் அடக்கமும், கரிசனமும் பதிவுகளில் வெளிப்படுகின்றன. அதே நேரம், யாராவது பாராட்டப்படும் போது, எதிர்வினையாக போலி அடக்கத்தைக் காட்டும் பதில்கள் பெரிதும் குறைந்து போய் விட்டன. பாராட்டு உண்மையாக இருந்தால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவிப்பதும், தகுதியில்லாத பாராட்டு என்று பட்டால் அதை அப்படியே சொல்வதும் அழகான மாறுதல்கள்.
சமூகப் பிரச்சினைகளை விவாதிக்க முனையும் வலைப்பதிவுகளும் அதிகரிக்கின்றன. இடையினமான திருமங்கை ஒருவரின் பதிவைப் படித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடபெறுகின்றன. அதே நேரம் பெண் வலைப் பதிவர் ஒருவர், மட்டுறுத்தல் மட்டும் இல்லை என்றால் தம்மால் வலையில் பதியவே முடியாது என்று சொன்னார். பின்னூட்டமாக வரும் வக்கிரங்களை அவர் வடிகட்டி விட்டாலும் அவரளவில் அது ஒரு பெரும் தொந்தரவு தான்.
குறுஞ்செய்திகளில் தொல்லை கொடுக்கும், மின்னஞ்சலில் செய்தி கொடுக்கும் அதே மனங்கள், வலைப் பதிவு வரை வந்து சேர்ந்து விடுகின்றன. தமிழ் டாட் நெட் குழுவில் சென்னையைச் சேர்ந்த ஒரு சகோதரி ஒரு மடல் போட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே வளைகுடாவிலிருந்து "நான் பேச்சுத் துணை இல்லாமல் இருக்கிறேன். அன்பே, எனக்கு தனி மடலில் அடிக்கடி செய்தி அனுப்புகிறாயா, நாம் இருவரும் அன்பர்களாகி விடுவோம்" என்று ஒரு பதில் குழுவுக்கே வந்து விட்டது. அவரது தனி முகவரிக்கு அனுப்ப நினைத்து தவறுதலாக குழுவுக்கு அனுப்பி விட்டார்.
இது ஒன்றில் இந்தத் தவறு நடந்தது. மற்ற நூற்றுக் கணக்கான நேரங்களில் பெண்கள் வெளியில் தெரியாமல் சகித்துக் கொள்கிறார்கள். மேற்சொன்ன நிகழ்ச்சியைத் தொடர்ந்து குழுவில் எந்த விதமான விவாதமோ, கண்டனமோ ஏற்படவில்லை. அதுதான் பெண்களின் பயமாக இருக்க வேண்டும். இவற்றை வெளியில் சொல்லிப் பெரிது படுத்தினாலும் பெரும்பான்மையினர் கண்டு கொள்ளப் போவதில்லை. டோண்டு போலி டோண்டுவை எதிர் கொள்ள துணிந்தது போன்ற உறுதி நமக்கு இருக்கிறதா என்று மடித்து விடுகிறார்கள்.
கவிதா எஸ் எம் எஸ் பற்றிய பதிவில் வந்த பின்னூட்டங்களில் சொல்வது போல, நம் பெயரை நாமே ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும், கேட்பவர்கள் நீ என்ன செய்தாய் அவன் இப்படி எழுதுவதற்கு என்று கேட்டு விடுவார்களோ என்ற அச்சங்கள் பெண்களை இவற்றை வெளிப்படையாக எதிர்த்துப் போராட முடியாமல் செய்து விடுகின்றன.
இந்த ஆரோக்கியமான சூழலை வளர்த்து கவைக்குதவாத வாதங்களை தவிர்த்தால் நல்லது நடக்கும்.
டோண்டுவுக்கு ஒரு போலி டோண்டு அந்தப் போலி டோண்டுவுக்கு ஒரு போலி வலைப்பதிவு என்று ஆபாசக் களஞ்சியங்களை மாறி மாறி உருவாக்க இந்த தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தும் நமக்கெல்லாம் என்றுதான் விடிவு?
6 கருத்துகள்:
"டோண்டு போலி டோண்டுவை எதிர் கொள்ள துணிந்தது போன்ற உறுதி..."
Thanks for the line.
Regards,
Dondu N.Raghavan
டோண்டு சார்,
எனக்கு சில சந்தேகங்கள். தனி மடலில் அல்லது தொலைபேசியில் கேட்கலாம் என்றிருந்தேன். இங்கேயே கேட்டு விடுகிறேன்.
1. போலியன் என்ற வலைப்பதிவை உருவாக்கியது யார்?
2. மூர்த்தி என்பவரைப் பற்றிய விபரங்களைத் திரட்டி அவர் இறந்து விட்டது வரை உங்களுக்குத் தெரிவிப்பது யார்? இனிமேல் போலி வலைப்பதிவுகள், பின்னூட்டங்கள் மறைந்து விடுமா?
3. டூண்டுவின் வலைப்பதிவில், அவரை திருந்தச் சொல்லி நான் போட்ட பின்னூட்டம் உங்களுக்கு உடனேயே எப்படித் தெரிந்தது? நீங்கள் அடிக்கடி அங்கே போய் என்ன நடக்கிறது என்று எதிரியின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பீர்களா?
நீங்கள் தேவையில்லாமல் இந்த விவகாரத்தை வளர்க்கிறீர்கள் என்பது என் கருத்து. நீங்கள் நினைத்தால் மொத்தப் பிரச்சனைக்கும் ஒரே நாளில் முற்றுப் புள்ளி வைத்திருக்கலாம். "நான் என கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன். ஆயினும், எனது எழுத்துக்களால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன். அதற்காக வேண்டாத இழிவான வேலைகளில் ஈடுபட வேண்டாம்" என்று ஒரு பதிவு போட்டு என்றைக்கோ இந்த விஷயத்தை உங்கள் முதிர்ச்சிக்கும் அனுபவத்துக்கும் பெருமையாக தீர்த்து வைத்திருக்கலாம்.
அன்புடன்,
மா சிவகுமார்
"3. டூண்டுவின் வலைப்பதிவில், அவரை திருந்தச் சொல்லி நான் போட்ட பின்னூட்டம் உங்களுக்கு உடனேயே எப்படித் தெரிந்தது? நீங்கள் அடிக்கடி அங்கே போய் என்ன நடக்கிறது என்று எதிரியின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பீர்களா?"
கண்டிப்பாக போய் பார்ப்பேன். யுத்தம் என்று வந்து விட்ட பிறகு எதிரியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது ரொம்ப முக்கியம் அல்லவா?
""நான் என கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன். ஆயினும், எனது எழுத்துக்களால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன். அதற்காக வேண்டாத இழிவான வேலைகளில் ஈடுபட வேண்டாம்" என்று ஒரு பதிவு போட்டு என்றைக்கோ இந்த விஷயத்தை உங்கள் முதிர்ச்சிக்கும் அனுபவத்துக்கும் பெருமையாக தீர்த்து வைத்திருக்கலாம்."
ரொம்பவும் குழந்தைத்தனமாகச் சிந்தித்திருக்கிறீர்கள். மேலும், என் கருத்து என் கருத்துதான். அதற்காக போலியாகவெல்லாம் வருத்தப்படும் ஆள் நானில்லை.
அந்த இழிபிறவி என்னைத் திட்டியதால் நான் ஒன்றும் குறைந்து போகவில்லை. ஆனால் என் பெயர், போட்டோ எல்லாம் போட்டு என்னுடைய வலைப்பூ போலவே போட்டு என் பெயரில் மற்றவர்களை இழித்ததை நான் பெருந்தன்மையாக மன்னிக்க வேண்டுமா? என்ன கூறுகிறீர்கள் நீங்கள்? துளசி, கீதா சாம்பசிவம், ராமசந்திரன் உஷா ஆகிய பெண் பதிவாளர்களை எப்படியெல்லாம் என் வேஷத்தில் வந்து திட்டினான்?
இவ்வளவு யுத்தம் செய்ததில் மட்டுறுத்தல் வந்து அந்த இழிபிறவியின் பல் பிடுங்கப்பட்டதல்லவா? அப்புறம் இன்னும் என்ன என் யுத்த முறையில் சந்தேகம்?
எனக்கு முன்னாலேயே அவன் பாரா, வெங்கடேஷ், இகாரஸ் பிரகாஷ் ஆகியோரைக் கண்டபடி திட்டி அவர்கள் வலைப்பூ பதிப்பதையே விடச் செய்தவன் அவன். அவன் துரதிர்ஷ்டம் டோண்டு ராகவன் என்ற 59 வயது இளைஞனிடம் மோதியதேயாகும். மற்றவர்களை போல நான் ஓடாது அவனை எதிர்த்தேன். வெற்றியும் பெற்றேன். அதை விட வேறு என்ன மன நிறைவு வேண்டும்? எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள்தானே.
சிறுமை கண்டு பொங்குவாய் என்றான் முண்டாசுக் கவிஞன். நானும் அதை வழி மொழிகிறேன். நான் நுட்பமாகக் கண்டு எத்தனை பேரை அதர் ஆப்ஷனை தூக்க வைத்திருக்கிறேன்? உங்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.
எனக்கு வந்த செய்தி போலி டோண்டு இறந்து விட்டதாகத்தான். அது பலருக்கு மின்னஞ்சலாக வந்தது. ராபின்ஹுட் என்றவர் போட்டது. அவர் பதிவில் உங்களுக்கு விடை கிடைக்கலாம். அதில் நான் இட்ட என் பின்னூட்டத்தையும் பாருங்கள். அவர் உரல் robinhoot.blogspot.com
இதை நேரடியாகப் பார்க்க இயலாது. பிராக்ஸி செர்வரை உபயோகிக்கவும். http://www.pkblogs.com/jaathiveriyan மற்றும் http://www.pkblogs.com/doondu வலைப்பூக்கள் ஜூலை 7லிருந்து இற்றைப்படுத்தப்படவில்லை. ஆனால் பலருக்கு அவன் பெயரில் அசிங்கப் பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. Draw your own conclusions.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இந்த ப்ளாக்ஸ்பாட் கலாட்டாவில் இன்றுதான் உங்களது இப்பின்னூட்டத்தைப் பார்த்தேன்.
டோண்டு சார்,
நீங்கள் நடத்திய யுத்தத்தினால் எவ்வளவு சேதம் தெரியுமா? இன்றைக்கு பலரின் மனமும் கெட்டு போலி என்ற முகமூடியுடன் ஒரு கும்பலே வந்து அசிங்கத்தைக் கிளறிக் கொண்டு இருக்கிறது. வலைப்பதிவு உலகில் சுதந்திரத்தை கட்டுப் படுத்தி, பலரையும் தொல்லைக்குள்ளாக்கியதுதான் யுத்தம் என்றால் அகிம்சை மீதான நம்பிக்கை எனக்கு இன்னும் அதிகமாகிறது.
"என் கருத்து எனக்கு, அது மற்றொருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம" என்று ஒத்துக் கொள்வதால் நாம் என்ன குறைந்து போவோம்? நாமெல்லாரும் குழந்தைகளாகவே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். குழந்தைகளிடம் இது மாதிரி, தான் என்ற ஆணவம் இருப்பதே இல்லை.
என்னுடைய முதல் கேள்விக்குப் பதில் உங்களுக்குத் தெரியுமா? "போலியன் என்ற வலைப்பதிவை உருவாக்கியது யார்?"
அன்புடன்,
மா சிவகுமார்
"நீங்கள் நடத்திய யுத்தத்தினால் எவ்வளவு சேதம் தெரியுமா?"
நான் யுத்தம் நடத்தும் வரை போலி டோண்டு என்ற இழிபிறவி தன் பூர்வ ஜன்ம பெயரிலேயே எல்லோரையும் பீடிக்கும் கட்டியாக இருந்தது. அவரவர் வேகமாக வலைபதிப்பதையே விட்டுச் சென்றனர். நானும் அவ்வாறு செய்வேன் என எதிர்பார்த்தது அந்த இழிபிறவி. ஆனால் அதன் துரதிர்ஷ்டம் டோண்டு ராகவனுடன் போய் மோதியதுதான். நான் செய்ததெல்லாம் கட்டியை பழுக்கவைத்து உடைத்ததுதான்.
"வலைப்பதிவு உலகில் சுதந்திரத்தை கட்டுப் படுத்தி, பலரையும் தொல்லைக்குள்ளாக்கியதுதான் யுத்தம் என்றால் அகிம்சை மீதான நம்பிக்கை எனக்கு இன்னும் அதிகமாகிறது."
உங்கள் அகிம்சையின் லட்சணம்தான் தெரிந்ததாயிற்றே. சீனா போல வெளிஉறவு விவகாரத்தில் தன்னலம் பார்க்காது இந்தியா எல்லா நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டவர்தானே நீங்கள். அதைத்தானே நேரு செய்து நாம் பல ஆண்டுகள் எல்லோரிடமும் செருப்படி பட்டோம். இல்லாவிட்டால் அடிக்க வேண்டியதையெல்லாம் அடித்து விட்டு இவன் நல்லவண்டா அழவேயில்லை என்று கூறிவிட்டுச் சென்றனர். அந்த அகிம்ஸை நமக்குத் தேவையேயில்லை.
உங்களது அகிம்சை யுத்தத்துக்கெல்லாம் ஆகாது ஸ்வாமி.
மற்றப்படி மட்டுறுத்தல் கட்டுப்பாடு என்று ஏன் கூறுகிறீர்கள்? அது இல்லாவிட்டால் இணையமே நாறியிருக்கும். என்னுடைய யுத்தமும், இக்கட்டுப்பாடும் காலத்தின் கட்டாயங்களே. போலி டோண்டு என்னும் இழிபிறவியை பல்லைப் பிடுங்கி ஓரத்தில் கடாசியவை அவை.
மறுபடியும் செய்ய வேண்டியிருந்தால் அந்த யுத்தத்திலிருந்து பின்வாங்க மாட்டான் இந்த 60 வயது வாலிபன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
உங்களுக்குப் பதிலாக நான் எழுதியது இங்கே. நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
=================
யுத்தம் என்று நடந்ததின் மிச்சம் இப்போது யார் வேண்டுமானாலும் யாரையும் போலியின் பெயரால் மிரட்டலாம் என்ற நிலைதான். இன்றும் பெண் வலைப்பதிவாளர்கள், அவர்களைப் பற்றி பிற பதிவர்களுக்கு தொல்லைகள் வந்து கொண்டே இருக்கின்றன. போலி என்று யுத்த வழிகளில் உருவகித்துக் கண்டு பிடித்து அவர் இறந்து விட்டார் என்று அறிவித்த பிறகும் கூட எதுவும் நின்று விடவில்லை.
"Mission Accomplished" என்று ஜார்ஜ் புஷ் அறிவித்து ஆண்டுகள் கழிந்தும் அமெரிக்கப் படைகளும் ஈராக் மக்களும் அவதியுறுவதைப் போல போலி ஒழிந்தான், என்னுடைய யுத்தத்தில் எதிரி வீழ்ந்தான் என்று டோண்டு அறிவித்த பிறகும் எந்த மாறுதலும் இல்லை. நல்லவர்களை எல்லாம் அவதிக்குள்ளாக்கும் கட்டுப்பாடுகள், யாரும் யாரையும் நம்பாத மன நிலைகள், எதிர் மறையான விவாதங்கள், கருத்துக்களில் இருந்த பிளவுகள் சமூகத்தையே அசைத்துப் போட்டது என்று எந்த ஒரு யுத்தமும் கொண்டு வரும் அழிவுகள் தமிழ் வலைப்பதிவு உலகிலும் காணக் கிடைக்கின்றன.
வன்முறையால், முரட்டு அடியால் நமக்கு வேண்டியது கிடைப்பது போலத் தோன்றினாலும் ஒரு மனித மனத்தை துப்பாக்கிக் காட்டி ஒடுக்கவோ, நாம் நினைத்தபடி நடக்கச் செய்யவோ முடியாது. "நல்லவர்களை ஆண்டவன் நிறையச் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறையக் கொடுப்பான், ஆனா கைவிட்டுருவான்" என்றா ரஜினி வசனம் ஒன்று நேற்று மாலை விவாதத்தில் சொன்னார் நிறுவனத் தலைவர். அலுவலகத்துக்குத் திரும்பி வரும் போது ரஜினி சொல்வது போல அந்த வசனம் காதில் ஒலித்தது.
தென் ஆப்பிரிக்காவில் நூற்றாண்டாக நடந்த நிறவெறிக்கு எதிரான போருக்குப் பிறகு, ஹீலிங் கமிஷன் என்ற மன வடுக்களை ஆற்றும் குழு ஒன்று வெள்ளையரையும் கறுப்பரையும் தமது காயங்களை பேசி ஆற்றிக் கொள்ள முயன்றது. இன்றைக்கு உலகத் தலைவர்களிலேயே, மனித குலத் தலைமைப் பண்பு உள்ள நெல்சன் மாண்டேலாவால் அப்படிச் சிந்திக்க முடிந்தது.
"நான் வெற்றி பெற்று விட்டேன்" என்று அவரும் கொக்கரித்துக் கொண்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவும் ஜிம்பாப்வே போல அழிவுப் பாதைக்கு வித்திட்டிருக்கலாம். வன்முறையை பறை சாற்றும், அது மனதளவில் இருந்தாலும் சரி, உடலளவில் மலர்ந்தாலும் சரி, வன்முறையை கையிலெடுக்கும் கூட்டங்களும், அமைப்புகளும் தனி நபர்களும் இந்த மனித குலத்துக்கு பெரிய பின்னடைவைச் செய்து வருகிறார்கள்.
அது ஒரு டோண்டு வலைப்பதிவுகளில் செய்தாலும் சரி, ஒரு தந்தை தனது குழந்தையிடம் காட்டினாலும் சரி, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தைப் பார்ப்பதிலும் சரி, ஒரு நாட்டையே அழித்து விட வேண்டும் என்று கோரும் குழுக்களானாலும் சரி, அப்படி நாட்டையே அழித்து விட முயலும் திமிர் பிடித்த நாடுகளும் சரி எல்லாமே திரும்பிப் பெற முடியாத மனித வளத்தை மிதித்து நசுக்கும் கொடூரங்கள்தான்.
=======================
கருத்துரையிடுக