முதலில் வட நாட்டில் வேலைக்கு போன போது, பின்னர் இங்கிலாந்தின் பழக்க வழக்கங்களைப் பார்த்த போது, சீனாவில் வேலை நெறிகளைப் பார்த்த போது தமிழகத்தின் அடக்கம், தன்னை உயர்த்திச் சொல்லாமை, வாழ்க்கையில் அடுத்தவரைப் பின் தள்ளிப் போய் விட வேண்டும் என்ற உந்துதல் இல்லாமை என்பதெல்லாம் அவமானமாகப் பட்டன. தமிழகத்தின் ஒரே குறை தம்முடைய சிறப்புகளை உலகம் அறியச் சொல்லாமல் இருப்பதுதான் என்று இந்தியா டுடே பத்திரிகை நடத்திய ஒரு கருத்தரங்கில் பேச்சாளர்கள் ஒரு மனதாக சொன்னார்கள்.
அடுத்தவர்களைப் பார்த்துக் கொள்வது. அடுத்தவர் மனம் நோகக் கூடாது என்று அவதானம் நமது மிகப் பெரிய சொத்து. அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமா அல்லது இன்றைய அமெரிக்க கலாச்சாரத்திற்கு ஏற்றபடி அதை ஒழித்துக் கட்டி விட வேண்டுமா என்பது நம் கையில் உள்ளது.
தமிழகம் இந்து மதத்தின் பல சிறப்புகளின் தொட்டில். பெரியவர்களுக்கு மரியாதை, அடாவடி இல்லாத பேச்சு, தன்னடக்கம், சுயநலமின்மை என்பவைதான் உயர் குணங்கள் என்று இன்றும் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லீம் ஆட்சியாளர்கள், ஆங்கிலத் தலைவர்களின் கீழ் வட இந்திய தன் இயல்பை விட்டுக் கொடுத்து விட பாதிப்புகளைத் தவிர்த்து நம் கலாச்சாரத்தின் அடிப்படைப் பண்புகளைத் தக்க வைத்துள்ளோம் நாம். வட ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் முஸ்லீம் தோல் தொழிற்ச்சாலைகளில் பணியாளர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை ஒரு சமயப் பணியாகவே செய்கிறார்கள். வந்த விருந்தினருக்கு பானமோ, உணவோ கொடுக்காமல் இருப்பது மேல் அதிகாரிகளின் கடும் கண்டனத்தை வரவழைக்கும் என்று தெரிந்து கொண்டேன்.
வணிக நோக்கில் பார்த்தால் நிறுவனத்திலேயே உணவு சமைத்துக் கொடுப்பதில் உள்ள சிக்கல்கள், ஊழலுக்கான சாத்தியங்கள் இவற்றை முன்னிட்டு ஒவ்வொருவருக்கும் அதற்கான காசை கையில் கொடுத்து உன் பாட்டை நீ பார்த்துக் கொள் என்று சொல்வதுதான் லாபம் தரும். டாடா நிறுவனத்தில் நான் வேலை பார்க்கும் போது அப்படி நடக்கவும் செய்தது.
எல்லாவற்றையும் ரூபாய் கணக்கில் வடித்து விடாமல் நாம் இன்றும் இயங்குகிறோம். அந்த அடிப்படைதான், எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்ட தமிழகத்துக்குத் தகுதியைக் கொடுக்கிறது.
மதுக்கடை திறந்து அதன் விற்பனை வரியில் வருமானம் ஈட்டுவதுதான் அரசாங்கத்தின் பொருளாதாரத் திறமை. அந்த வருமானத்தை இழந்தாலும் பரவாயில்லை உழைப்பாளிகளின் உழைப்பை உறிஞ்சும் ஒரு பழக்கத்தின் மூலம் என் அரசு பணம் சம்பாதிக்கக் கூடாது என்று ஒரு முதலமைச்சர் முன் வந்தால் அது தார்மீக தலைமை.
குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் செலவளிப்பது பொருளாதார முட்டாள்தனம் என்பது சந்தைப் பொருளாதரத்தின் அலசல் முடிவு. பரவாயில்லை, எதிர்கால குடிமக்களுக்கு சத்தான உணவு கொடுப்பதால் நான் கோமாளி என்று ஆனாலும் பரவாயில்லை என்று உயர்ந்தது ஒரு தலைவனின் பெருமை.
வாசலில் வந்து நிற்கும் அதிகாரப் பிச்சைக்காரனை நம்ப முடியவில்லை. ஆந்திராவுக்கு வேலை செய்யப் போனேன். லாரியில் சேலத்துக்கு ஊர் திரும்பும் வழியில் சண்டை வந்து வழியிலேயே இறக்கி விட்டு விட்டான் என்று கதை சொல்லும் குண்டான அழுக்கான முண்டாசு கட்டிய, கிழிந்த சட்டை போட்ட ஆளுக்குக் காசு கொடுப்பது எதில் சேரும்? ஏமாற்றுப் பேர்வழி என்று ஒதுக்கி விட்டுப் போய் விடலாமா? கையில் இருக்கும் சில்லறையைக் கொடுக்க வேண்டுமா?
உங்கள் பொருட்களில் கடந்த ஆறு மாதங்களாக பயன்படுத்தாதவற்றை தானம் செய்து விடுங்கள் என்று எழுதியுள்ளார் குமுதம் சாமியார். எத்தனை அடைசல்கள் வெளியே வரும். நமக்குப் பயன் இல்லாமல் கிடக்கும் பொருட்கள் யாரோ ஒருவரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்து விடலாம்.
நம்முடைய வேர்களை சரிவரப் பராமரித்து வந்தால் மேனாட்டு நாகரீகத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல் இருந்தால் எல்லோரின் வாழ்வும் சிறக்க கண்டிப்பாக வழி உள்ளது.
12 கருத்துகள்:
"அடுத்தவர்களைப் பார்த்துக் கொள்வது. அடுத்தவர் மனம் நோகக் கூடாது என்று அவதானம் நமது மிகப் பெரிய சொத்து. அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமா அல்லது இன்றைய அமெரிக்க கலாச்சாரத்திற்கு ஏற்றபடி அதை ஒழித்துக் கட்டி விட வேண்டுமா என்பது நம் கையில் உள்ளது."
ரொம்ப உண்மை. அதாவது, முன்னேறுவதா இல்லையா என்பது நம் கையில்தான் உள்ளது. நல்லவனாக இருந்து ஏழையாகவே இருக்கலாம், இரண்டு வேளை உடை, ஓராண்டுக்கு இரண்டு செட்டுகள் துணி, இருக்க சிறு வாடகை வீடு என்றெல்லாம் ரேஞ்சில் யோசித்து நல்லவனாகவே வாழ்வதில் ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் மற்றவர்களுக்கு ஒரு உதவியும் செய்ய முடியாமல் போகலாம்.
ஆனால் என்ன, நல்லவனாகவே இருப்போமே என்று நினைப்பவர்களை மதிக்கிறேன். ஆனால் நான் வல்லவனாக இருக்கவே ஆசைப்படுவேன். மேலும், உதவுவது என்பதிலும் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்றுதான் இருக்க வேண்டுமே தவிர சப்ஸிடி எல்லா அளித்து, மற்றவர்களை ஒட்டுண்ணியாக வளரச் செய்யக் கூடாது என்பதுதான் என் பாலிசி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் டோண்டு சார்,
கலியுகத்தில் முக்தியடையும் வழியைக் கற்பதற்கு படாத பட்டுக் கற்றுக் கொண்டபின் அதை வெளியே சொன்னால் நரகத்துக்குப் போவாய் என்ற குருவின் எச்சரிக்கையையும் மீறி, தான் நரகத்துக்குப் போனாலும் பல நூறு மக்கள் முக்தியடையட்டும் என்று கோபுரத்தில் ஏறி ஊரறிய முக்திவழியை உரக்கச் சொன்ன பகிர்ந்து கொள்ளும் பண்பாடுதான் தமிழ் பண்பாடு என்று நான் கருதுகிறேன்.
மற்றபடி, முன்னேற்றம் என்பது ஆண்டுக்கு ஒரு கார் மாற்றுவது, அமெரிக்காவுக்குள்ளேயே பேஸ்பால் உலகக்கோப்பை நடத்திக் கொள்வது, மற்றவர்களைத் துச்சமாக நினைப்பது (ஒரு சில உதராணத்துக்குத்தான்) என்ற அமெரிக்கப் பண்புகளைக் கொண்டு வருமென்றால் அது நமக்கு வேண்டாம். மாறாக நேர்மையான உழைப்பு, புதிய கண்டுபிடிப்புகள், சேர்த்த சொத்தில் பெரும்பகுதியை தர்மத்துக்கு கொடுக்கும் பெரும் குணம் போன்ற பண்புகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் கண்டிப்பாக வேண்டும்.
புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளாமல் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு அல்லதைத் தள்ளி விட வேண்டும். ஒரு உதாரணத்தைப் பாருங்கள். அமெரிக்காவில் யூதர்கள் மிகச் சிறுபான்மையினர்தாம், அவர்களது கருத்துக்கு மதிப்பளித்து இசுரேலுக்கு அசையாத ஆதரவளிக்கும் அமெரிக்க தேசிய கொள்கையை எடுத்துக் கொள்வோம். அதனால் அமெரிக்காவுக்கு நல்லது நடக்கிறதா, கெட்டது நடக்கிறதா?
இந்தியாவின் சிறுபான்மை முஸ்லீம்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நமது அரசுகள் செய்யும் எதுவும் போலி மதச்சார்பின்மை என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவக்குமார் (இதிலேயே குழப்பம், உங்களை பெயர்சொல்லி அழைக்கலாமா இல்லையா என்று)
உங்கள் பதிவுகளில் தெரியும் முதிர்ச்சி அதிசயிக்கத்தக்கது. அருமையான தலைப்புகளில் எளிய நடையில் எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
ஹலோ சிரில் அலெக்ஸ்,
விட்டா என்னைக் குடுகுடு தாத்தா ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே :-). தாராளமாக பேர் சொல்லிக் கூப்பிடுங்கள். நீங்க நாகர்கோவில்தானே? உங்கள் ஒரு பதிவில் கார்மல் பள்ளி பற்றிக் குறிப்பிட்டிருந்த நினைவு.
நாம் இருவரும் பேச ஆரம்பித்தால் ஒருவேளை நாகர்கோவிலில் பொதுவான நண்பர்கள் கூட நினைவுக்கு வந்து விடலாம்.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவக்குமார்,
உங்களை விட வயதில் மூத்தவன் என்பதால் இப்படி அழைக்கிறென்.
தவறெனில் மன்னிக்கவும்.
உங்கள் தமிழர் நாகரீகம் பற்றிய பதிவைப் படித்ததும் உண்மையில்கேயெ அழுதேன்!
உடனே எழுதுகிறேன்.
எப்படி ஐயா இதுபோல,
ஒரு கருவின் உயிரை,
கதியாய் இல்லாமற்போன ஒன்றை,
விதி வசத்தால் நழுவிப் போன ஒன்றை,
நம் உயிரின் உயிராய் இருக்க வேண்டிய ஒன்றை,
உருவாய் இல்லாமல் மறந்து போன ஒன்றை
நினைவில் கொண்டு
எம் உள்ளம் தைக்கும் வண்ணம்
அழகுற உரைக்க முடிகிறது
உங்களால்!??
நன்றி!
வணக்கம் சிவகுமார்.என்னை ஞாபகம் இருக்கின்றதா?காலம் மாற மனிதர்களும் மாறதான் செய்கின்றார்கள்.நாம் நல்லவர்களாக இருப்பதின் பலன் என்னவென்றால் பிறர் நம்மை ஏமாளிகளாக ஆக்குவதுதான் .இக்காலத்தில் தமிழர்கள் வல்லவர்களாக இருப்பது தான் நமக்கு பாதுக்காப்பு.இல்லையென்றால் எல்லோரும் நம் தலையில் ஏறி மிளகாய் அரைத்து விடுவார்கள்.மலேசியவில் நம் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டிய நிலமை.அதனால்தான் நாம் வல்லவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றேன்.அதே சமயம் நம் கலாச்சாரத்தையும் போற்றி காப்பாற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
உங்களது அமெரிக்க யூதர், இந்திய முஸ்லீம் கருத்து குறித்து எனக்கு ஒரு சிறு ஐயப்பாடு உள்ளது.
இருவரும் சிறுபான்மையினர் என்ற அளவில் உங்கள் ஒப்பீடு சரியே!
ஆனால், மனமார்ந்த ஆதரவு[loyalty] என்னும் வகையில் மிகப் பெரிய வேறுபாடினைக் காண்கிறேன் நான்!
இந்த மிக முக்கியமான அடிப்படையில், உங்கள் சமன்பாடு அடிபட்டுப் போகிறது!
அமெரிக்க வழக்கில் சொல்லப் போனால், ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள்!
பதிவில் நன்கெழுதி, பின்னூட்டத்தில் சறுக்கி விட்டிர்களோ எனக் கருதுகிறேன்.
அன்புள்ள எஸ்கே ஐயா அவர்களுக்கு,
என்னைத் தொடர்ந்து பேர் சொல்லி எழுதுங்கள்.
ஒரு சில ஆண்டுகளாவது இந்தியாவை விட்டு தமிழகத்தை விட்டு வெளியே வசித்தவர்களிடையேதான் நம் பண்பாட்டின் பெருமை பற்றி ஒரு விழிப்புணர்வு உள்ளது என்று நினைக்கிறேன். உள்ளூரிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள், அடாவடியாக மேற்கத்திய எல்லாவற்றையும் கண்மூடித்தனமாகப் போற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.
அமெரிக்கா செய்தால் அதுதான் சரி என்றில்லாமல் மெய்ப்பொருள் காண வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.
உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி ஐயா.
மற்றபடி, நாம் எதையும் இழந்து விடவில்லை. இந்த உணர்வுடன் விவாதிக்க முடியும் நம்மைபோன்றவர் இருக்கும் வரை தமிழ்ப் பண்பாடு தளராமல் இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்.
எஸ்கே ஐயா,
யூதர்களுக்கு இருக்கும் நாட்டுப் பற்று இந்திய முஸ்லீம்களிடம் இல்லை என்கிறீர்களா? இருக்கலாம்.
அதே போல சராசரி அமெரிக்கனிடம் இருக்கும் நாட்டுப் பற்றும் சமூகக் கடமையும் சராசரி இந்தியனிடம் இருக்கிறதா என்பதையும் நினைத்துப் பாருங்கள். குழுப் பண்புகள் பலவற்றில் நாம் அமெரிக்கர்களை விடப் பின் தங்கி இருக்கும் போது, நம் நாட்டின் சிறுபான்மை சமுதாயத்தின் பற்று அமெரிக்க சிறுபான்மையினரை விடக் குறைவாக இருக்கிறதோ?
நானும் இதை உரத்த சிந்தனையாகவே எழுதுகிறேன். நான் அமெரிக்கா வந்ததேயில்லை. எல்லாம் படித்தறிவுதான். அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம் துர்கா,
நன்றாக நினைவிருக்கிறது. தமிழில் பதிவுகள் ஆரம்பித்ததற்கு பாராட்டுக்கள்.
மலேசியாவில் நாம் ஏன் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டிய நிலைமை இருக்கிறது? அது தமிழ் சமூகத்தின் தவறுகளாலா அல்லது பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரான தமிழரை மதிப்பதில்லையா?
உங்கள் எண்ணங்களை இங்கோ உங்கள் பதிவிலோ வெளியிட்டால் நாங்கள் எல்லோரும் கற்றுக் கொள்வோம்.
அன்புடன்,
மா சிவகுமார்
நல்ல கேள்வியைக் கேட்டு என்னை நன்றாக மாட்டிவிட்டிர்கள்.இதற்கு பதில் சொல்ல சற்று தயக்கமாக இருகின்றது.என்ன பண்ணுவது?இக்காலத்தில் உண்மையைப் பேச பயப்பட வேண்டிஉள்ளது.நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு என் பதில் ஆம் என்பதுதான்.இதற்கு என்னால் பல உதாரணங்களைக் கூற முடியும்.ஆனால் சிலவற்றை என்னால் தற்பொழுது சொல்ல முடியவில்லை.என் வாழ்க்கையில் எனக்கு நடந்த சம்பவங்களைப் பற்றி வேண்டுமானல் சொல்கின்றேன்.நான் ஐந்து வருடங்களாக ஒரு மலாய் இடைநிலை பள்ளியில் படித்தேன். என் வாழ்க்கையில் நான் மிகவும் வேதனைப்பட்ட நிகழ்ச்சிகள் அங்குதான் நடந்தது.என்னுடன் படிக்கும் சில சக மலாய் மாணவர்களும் ஆசிரியார்களும் தமிழ் மாணவர்களைப் படுத்திய அவமானங்களை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.என் முகத்திற்கு நேராகவே ஒருத்தன் இது அவன் நாடு என்றும் என்னை இந்தியாவிற்கு திரும்பி செல் என்று சொன்னான்.இது போல் பல சம்பங்கள் என் பள்ளி வாழ்க்கையில் நடந்துள்ளது.சில சமயங்களில் தமிழ் மாணவர்களை மட்டம் தட்டி பேசுவார்கள்.இதற்கு ஏற்றால் போல் தமிழ் மாணவர்களும் கட்டொழுங்குப் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு பிற மாணவர்களுக்கும் ' நல்ல ' பெயரைச் சம்பாரித்து கொடுத்து விடுவார்கள்.இப்படி குட்ட குட்ட குனிந்து போனது எங்கள் தவறு அல்லவா?இப்படியெல்லாம் நடக்கும் பொழுது வாய் மூடி நின்றதும் எங்கள் தவறுதான்.அவர்கள் எங்களை அப்படி பேசுமாறு நடந்துக் கொண்டதும் எங்களின் தவறுதான்.இது ஒரு சிறு பகுதிதான்.இன்னும் நிறைய உள்ளது.சொல்லதான் முடியவில்லை.....
துர்கா,
உங்கள் அனுபவங்களைப் பற்றிக் கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. பள்ளி வயதில் உங்கள் மனது என்ன பாடுபட்டிருக்கும் என்று என்னால் முழுவதும் உணர முடியாவிட்டாலும், அது மிக கடுமையான காலகட்டமாகவே இருந்திருக்க வேண்டும்.
அமெரிக்காவில் யூதர்கள் எப்படி துன்பப்படுத்துப்படுகிறார்கள் என்று கதைகளில் படித்திருக்கிறேன். சிறுவர்கள் யூத சிறுவர்களை "ஏசுவைக் கொன்ற மதத்தவனே, ஓடிப் போய் விடு" என்று துன்புறுத்துவதோடு, கையில் கிடைத்தால் அடிக்கக் கூடச் செய்வார்களாம். ஆனாலும் அவர்களின் உறுதியாலும், உழைப்பாலும் அமெரிக்காவின் பெரிய பதவிகளில் அமர்வதோடு, வணிக அமைப்புகளையும் உருவாக்கி தம்மை வளர்த்துக் கொண்டுள்ளார்கள் அவர்கள். இன்றைக்கு யூதர்கள் லாபி அமெரிக்க அரசின் பல கொள்கைகளை நடத்திச் செல்கிறது என்று படித்திருக்கிறேன்.
அது போல மலேசியாவின் தமிழர்கள் தம்மை ஏளனம் செய்யும் பிற இனத்தவரின் வாயடைக்கச் செய்ய என்ன வழி? சீனர்களின் நிலை மலேசியாவில் எப்படி உள்ளது? யார் என்ன சொன்னாலும், மலேசியா உங்களுடைய நாடும்தான். உங்கள் தாய் தந்தையர் அங்கேயே பணி புரிந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளார்கள். நீங்களும் அங்கு பிறந்த அந்த நாட்டு குடிதானே?
ஸ்டீபன் கோவியின் The 7 Habits of Highly Effective People புத்தகத்தில் நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது என்று அழகாக விவரித்திருப்பார். வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக