ஞாயிறு, ஜூலை 09, 2006

காவல் நிலையத்தில் நியாயங்கள

நிலையத்தின் எழுத்தர் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த மேசையின் பின்னால் இருந்தார். அவருக்கு இடது பக்கம் நுழை வாசல். வலது பக்கம் அறையின் கோடியில் லாக்கப்.

"அய்யா, நேத்தைக்கு குடிச்சுட்டு வந்து சண்டை போட்டு என் சட்டையெல்லாம் இழுத்துக் கிழிச்சிட்டான்யா, அதான் ஒங்ககிட்ட சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கலாம்னு வந்தோம்யா" கொஞ்சம் குள்ளமான வெள்ளை வேட்டி சட்டையில் சென்னை பேட்டை ஒன்றில் கட்சியின் குட்டித் தொண்டர் போன்ற வடிவில் ஒரு நடுத்தர வயது ஆண்.

"அவன எங்க, கூப்பிடு"

"ரைட்டர் ஐயா கூப்பிடுறாரு" என்றக் கட்டியத்துடன் அவன் உள்ளே வந்தான். மெலிய உறுதியான உடல் வாகு, இறுகிய முகம். குளித்து நெற்றியில் சந்தனம் இட்டிருந்தான்.

"என்ன வேலடா செய்யறா"

"அய்யா கார்பென்டர் வேலக்கு போவேங்க"

"ஏண்டா குடிச்சிட்டு வந்து பொண்டாட்டிய அடிக்கிறயே, நீயெல்லாம் ஆம்பளயா?"

"குடிக்கல்லாம் இல்லையா, அவ அப்பா வீட்டில போய் இருந்துக்கிட்டு வீட்டுக்கு வரவே மாட்டேங்கிறா!"

"அப்படியா ?? ?? "

"இல்லய்யா அவ முழுகாம இருக்கா அதான் கூட்டிட்டு வந்திருக்கோம்" இது அப்பா.

"ஏண்டா பொண்டாட்டி முழுகாம இருக்கும் போது ஓன் வீட்டில இருந்து ஒனக்கு ஆக்கிப் போடவா செய்வா? அவ அப்பா அம்மா வீட்டில இருந்தாத்தான் சரியா பார்த்துப்பாங்க. நீ என்னான்னா சாயங்காலம் ஆனா குடிச்சிட்டு கலாட்டா பண்ணக் கூடிய பய, ஒன்ன நம்பி எப்படி வீட்டில இருப்பா, சரி அவங்களையும் கூப்பிடுங்க" என்றதும் தோளில் ஒரு பெண் குழந்தையுடன் வயதான ஒரு பெண்மணியும், தள்ளிய வயிற்றுடன் ஒரு கர்ப்பிணி பெண்ணும், இன்னொரு இளைஞனும் உள்ளே வந்தனர்.

குழந்தை அப்பா என்று இறங்கி இவன் பக்கம் வந்து நின்றது, மூன்று வயதிருக்கும். "ஏம்மா, இந்தப் பய ஒன்ன அடிப்பானா?"

"ஆமாங்க தெனமும் குடிச்சிட்டு வந்து அடிப்பாருங்க"

"தெனம்லாம் ஒண்ணுமில்லங்க, இவ அப்பா வீட்டுல போய் இருந்துக்கிட்டு வம்பு பண்றதுனாலத்தான் ..."

"ஏண்டா, திரும்பத் திரும்ப அதயே சொல்லிட்டு, அவ புள்ளத்தாச்சின்னுதான அம்மா வீட்டுல இருக்கா"

"கொழந்தயக் கூடக் கடத்திட்டுப் போயிருவேன்னு மிரட்டுராருங்க? ஏற்கனவே அசோக் நகரில கேஸ் பதிஞ்சிருக்கு."

"ஏண்டா?"

"ஐயா கொழந்த கூட வெளயாடக் கூட விட மாட்டேங்கறாங்க, கடைக்குக் கூட்டிப் போய் ஒரு மிட்டாய் வாங்கிக் கொடுக்கலாம்ணா கூட என் கூட விட மாட்டேங்கறாங்க"

"எப்படிறா விடுவாங்க? எதுக்குக் கடைக்குக் கூட்டிட்டுப் போகணும், வீட்டிலயே விளையாட வேண்டியதுதான? ஆமா ஒங்க வீட்டு ஆளுங்கள எல்லாம் கூட்டிட்டு வரச் சொன்னேனே என்னாச்சு?"

"..."

"எவன் வருவான் ஒனக்குத் தொணையா, மொதல்ல பொண்டாட்டிய நல்லா வச்சுக்கப் படி. மீதெயெல்லாம் அப்புறம்தான், புரிஞ்சா?"

"ஐயா நேத்தைக்கு வீட்டுப் பக்கம் தண்ணி போட்டுட்டு வந்து ஒரே கலாட்டா, நான் போய்க் கேட்டா ஏஞ் சட்டயப் புடிச்சி இழுத்து கிழிச்சிட்டான்." அதே கிழிந்த சட்டையைப் போட்டிருந்த வெள்ளை வேட்டி காலரின் ஓரத்தில் ஒரு கிழிசலை இழுத்துக் காட்டினார்.

ரைட்டர் அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல், "ஏண்டா இனிமேல் ஒழுங்கா இருப்பயா, அல்லது, பொண்டாட்டிய கொடும பண்ணினே என்று உள்ள போட்டுருவமா? கோர்ட்டுக்குப் போனா நாலு வருஷம் தீட்டிருவான். ஜெயிலுக்குப் போனே, உள்ள இருப்பவனே ஒன்ன அடிப்பான். கொல கொள்ள செஞ்சவன கூட விட்டுருவானுங்க, பொம்பளய அடிச்சவன்னு உள்ள போனவனுக்கெல்லம் நல்லா பூச போட்டு விடுவாங்க"

"..."

"சரி முடிவா என்னதான் சொல்ற?"

"அவ எங்கூட வர மாட்டன்னு சொல்லட்டும், நான் விட்டுர்றேன்."

"ஏம்மா நீ என்ன சொல்ற?"

ஒரு சில விநாடிகள் தயக்கம்.

"நான் இவர்கூடப் போக மாட்டேங்க!"

"பாருடா, அவளே சொல்லிட்டா, இப்படிப் போட்டு அடிச்சா யாரு ஒங்கூட வருவா?" அவன் முகத்திலிருந்த உணர்ச்சிகளைப் பார்த்தாரோ என்னவோ ரைட்டரின் குரல் மாறியது.

"இப்போ எத்தனாவது மாசம்?"

"ஏழாவது மாசம்ங்க, இப்போ நல்லாப் பாத்துக்கிட்டாத்தான பொறக்கப்போற கொழந்தக்கு நல்லது" அம்மாக்காரி.

"ஏண்டா, கொழந்த பொறந்து மூணு நாலு மாசம் போகட்டும், ஒங்கூட அனுப்பி வக்கச் சொல்றேன். நீ அப்பப்ப போய் பார்த்துட்டிரு. இவன் ஒங்க வீட்டுக்கு வரலாமில்ல?"

"வரலாங்கய்யா, ஆனா சண்ட போடக் கூடாதுன்னு சொல்லிடுங்க"

"அப்பப்ப போ, கொழந்தக்கு எதாவது வெளயாட்டுச் சாமான் வாங்கிட்டுப் போ. பொண்டாட்டிக்கு பூ வாங்கிட்டுப் போ. ஏண்டா வீணா சண்ட போட்டு அழியுற!."

"...."

"ஆமாமா அப்பப்ப போயப் பார்த்துக்கணும். பொண்டாட்டி புள்ளய போய்ப் பார்க்காதவன் என்ன ஆம்பிள, சரி இப்போ எங்க போவே?"

"ஐயா அப்படியே நேரா வேலக்குப் போக வேண்டியதுதான்." வேறு எந்தப் பக்கமும் பார்வை திரும்பி விடாமல் தவிர்ப்பது போல தெரிந்தது. குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. கர்ப்பிணிப் பெண்ணின் கண்கள் இவன் முகத்தைத் துளாவின.

"சரி நீ இப்போ போகலாம், இன்னொரு மொற இத மாதிரி நடந்தது, புடிச்சி உள்ள தள்ளிருவேன். பொண்டாட்டி புள்ளய பார்த்துக்க, நல்ல ஆம்பிளயா இரு. சரி இதில ஒரு கையெழுத்து போட்டுட்டு போயிரு."

வெடுக்கென்று கையெழுத்துப் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வெளியே நடந்தான். குழந்தை "அப்ப்ப்பாஆஆ" என்று ஓட முயன்றது. பெண் வீட்டார் கூட வந்திருந்த இளைஞன் அதை பிடித்துக் கொண்டான்.

========================

"சரி சரி, அந்த எதிர்க் கடயில நான் சொன்னேன்னு சொல்லி டீ சொல்லிட்டு வாங்க. யாருக்கெல்லாம் டீ வேணும்? கேட்டுட்டுப் போய்ச் சொல்லிடுங்க!"

"சரி ஐயா" சட்டைக் காலர் ஓரம் கிழிந்த அந்த அப்பாக்காரர் வெளியே போகிறார். வெளியில் குடும்பமாய் தரையில் வட்டமாக உட்கார்ந்து கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் டீக்கடை குழந்தைப் பையன் கிளாஸ் டீகளுடன் வருகிறான்.

"காசு நானே கொடுத்து விட்டேங்கய்யா" சட்டை காலர் ஓரம் கிழிந்த அப்பாக்காரர்.

வெளியே குடும்பமே டீயை உறிஞ்சுகிறது.

"சரி அப்போ நாங்க போயிட்டு வாரோம், ஒங்க ஒதவிக்கு ரெம்ப நன்றி". ஒரு நூறு ரூபாய் நோட்டு தோன்றுகிறது.

"என்னது இது, நாங்க எத்தன பேரு இருக்கோம்னு பார்க்கீங்க இல்ல?"

"அய்யா, எவ்வளவு வேணும்னு சொன்னீங்கண்ணா...."

"ஒரு நானூறாவது இருந்தாத்தான் ஆளுக்குக் கொஞ்சம் தேறும்".

"அய்யா, இப்போ இருநூத்தம்பதுதான் இருக்கு" இன்னும் ஒரு நூறும் ஐம்பதும் தோன்றுகின்றன.

"சரி சரி, இதுல கையெழுத்துப் போட்டுட்டுப் போங்க".

2 கருத்துகள்:

சீமாச்சு.. சொன்னது…

சிவகுமார்..
நல்லா இருந்தது.. இப்பத்தான் இதே பாணியில் ஒரு போஸ்ட் எழுதினேன்...

நேரமிருந்தால் படித்துப் பாருங்க..

http://seemachu.blogspot.com/2006/07/21.html


சீமாச்சு...

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சீமாச்சு,

அழகாக எழுதியிருக்கிறீர்கள். அப்படித்தான் ஒவ்வொரு காவலரும் பணியாற்ற வேண்டும். ஊழல் பெருச்சாளிகளால் நிறைந்து விட்டது நமது சமூகத்தின் அவலம்.

அன்புடன்,

மா சிவகுமார்