இல்லையா, என்ன?
என் குழந்தைக்கு 250 ரூபாய் கொடுத்து பொம்மை வாங்கினால் அதில் என்ன தவறு? இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
எதுவும் செய்ய முடியாதா, என்ன?
கொஞ்சம் யோசிப்போம்.
நான் இன்று மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன் என்றால் அதில் பிறரின் பங்களிப்பு எதுவுமேயில்லையா? "நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து" என்று பாடா விட்டாலும், அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.
பெற்று வளர்த்த தாய் தந்தை, கைப்பிடித்து வந்த தாரம், பெற்ற மக்கள் என்று தெளிவாகத் தெரியும் பொறுப்புகள் ஒரு புறம். இன்னும்
- படிக்கப் பள்ளிக்குப் போக மாணவர் சலுகைக் கட்டணம் என்று குறைந்த விலை பேருந்து அட்டை கொடுத்த அரசு
- மலிவு விலையில் பாடப்புத்தகங்களை அச்சடித்துக் கொடுத்த பாட நூல் நிறுவனம்
- பள்ளியைக் கட்டிய பள்ளி நிறுவனர்
- கூடுதல் அக்கறை எடுத்து சிறப்புப் பயிற்சி கொடுத்த இயற்பியல் ஆசிரியர்
- இலவசமாக நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளித்த ரோட்டரி சங்கம்
- மானியத்துடன் சில நூறு ரூபாய் கட்டணத்துடன் பட்டம் தந்த பல்கலைக் கழகம்
- முதல் ஒரு ஆண்டு பயிற்சி அளித்து தவறுகளால் ஏற்பட்ட இழப்புகளை சகித்துக் கொண்ட நிறுவனம்
- வெளி நாடுகளுக்கு அனுப்பிப் பையன் அனுபவம் பெறட்டும் என்று செலவு செய்த நிறுவனம் .
- சீனாவில் வேலை கொடுத்த ஆங்கில நிறுவனம்.
- தொழில் தொடங்க உதவி செய்த உறவினர்கள், நண்பர்கள்.
- எந்த நேரமும் தொலைபேசினால் சலிக்காமல் எனது புலம்பல்களை கேட்டு விட்டு அறிவுரைகள் கூறும் நண்பர்கள்.
- துயரங்கள் வரும் போது தாங்கிப் பிடித்த நண்பர்கள.்
- மானிய விலையில் அரசிடமிருந்து கிடைக்கும் காஸ் சிலிண்டர், பேருந்து பயணம், ரயில் பயணம
- ஏன், வலைப்பதிவுகளில் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு புதிய புரிதல்களை வழங்கிய வலைப் பதிவர்கள்
என்றோ இவர்கள் எனக்காக விதைத்த விதைகளைப் போல நானும் பிறருக்கு விதைக்கிறேன் என்று அந்த அன்பை பரப்பினால்தானே கடன் தீரும்?
எல்லோரும் அவரவர் நலத்தைப் பார்த்துக் கொண்டு போய் விட்டால் உலகத்தில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடுமே என்று பள்ளியில் படிக்கும் போது என் அப்பாவிடம் கேட்டேன். அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்பா ஓரிரு நிமிடங்களுக்கு ஏதும் சொல்லவில்லை. பிறகு, இப்போது எழுந்து போய் உன்னுடைய ஆகாரம், படிப்பு, வீடு எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறாயா என்று ஒரு எதிர் கேள்வி போட்டார்கள்.
அப்போது எனக்கு அழுகையாக வந்தது. என்ன இது ஒரு கேள்வி கேட்டால் இப்படி அடிமடியிலேயே கை வைக்கிறார், சொன்ன கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று ஆத்திரம் வந்தது.
ஒவ்வொரு தந்தையும் தாயும், தான் சம்பாதித்த பணத்தை தான் எப்படி வேண்டுமானாலும் செலவளித்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்தால் என்ன ஆகும்? எங்க அம்மாவுக்கு ஊர்களையெல்லாம் சுற்றிப் பார்க்க ஆசை. அதுதான் முக்கியம் என்று குழந்தைகள் படிப்பை பள்ளி இறுதியோடு நிறுத்திக் கொள்வோம், நாம் சம்பாதிக்கும் காசை ஏன் நம் விருப்பத்துக்கு செலவிடக்கூடாது என்று ஏன் நினைக்கவில்லை?
குழந்தைகள் எல்லோரும் படித்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு தனது ஆசைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். இதே பொறுப்பு சமூகத்துக்கு செய்ய வேண்டியதில் இல்லையா? இந்தியா போன்ற நாட்டில் ஏழைகள் இருக்கத்தான் செய்வார்கள் (குழந்தைகள் என்று இருந்தால் பசி பட்டினி இருக்கத்தான் செய்யும்) என்று சமாதானப் படுத்திக் கொண்டு நாம் சம்பாதித்தப் பணத்தை நம் விருப்பப்படி எதில் வேண்டுமானாலும் செலவளித்துக் கொள்ளலாமா?
உன் கையில் இருப்பது உன் கைக்கு வருவது எல்லாவற்றையும் உன் விருப்பப்படி அழிக்க உனக்கு உரிமை இல்லை. அதை வெளியிலிருந்து யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால் ஒரு பொறுப்புள்ள சமூக உறுப்பினராக, சமூகத்துக்கு நலன் பயக்கும் படி அதைச் செலவளிப்பது உனக்கும் பெருமை, சமூகத்துக்கும் மேன்மை. சமூக மேன்மை என்பதில் உன் சொந்த நலன்களும், உன் மனைவி மக்களின் நலன்களும் அடங்கியுள்ளது. சொந்த செலவுகளை, பிறருக்குக் கொடுப்பது போல விழிப்போடு நடத்தினால் எப்படி இருக்கும்?
அவ்வளவுதான் கேட்கிறது பொதுவுடமை சமூகம்.
- ஏழை ஒருவன் வந்து வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கக் கடன் கேட்டால் கொடுப்போமா?
- குழந்தைகளை இன்பச் சுற்றுலாவுக்குக் கூட்டிப் போக?
- ஐந்து நட்சத்திர விடுதியில் போய்ச் சாப்பிட?
- குழந்தைக்கு 250 ரூபாயில் ஒரு பொம்மை வாங்கிட?
- புதிய தொழில் ஒன்றில் முதலீடு செய்ய?
- கள்ளிக்காட்டு இதிகாசம் வாங்க வேண்டும், ஒரு நூறு ரூபாய் கடன் அல்லது உதவி கொடு என்று ஒரு நண்பர் கேட்டால் கொடுப்போமா? ஒரு புதியவர் கேட்டால்? ஒரு பிச்சைக்காரன் கேட்டால்?
- இணையத்தில் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய கருத்துக்களை எழுதி அடுத்தவர்களுடன் விவாதிக்க வேண்டும் அதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் என்று ஒரு முன்பின் தெரியாத ஏழை மாணவன் கேட்டால் பணம் கொடுப்போமோ?
- மனைவி மக்களுடன் வெளியே போய் வெகு நாளாகி விட்டது. இன்றைக்குப் போய் பிட்சா ஹட்டில் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்களேன் என்று பேருந்து நிலையத்தில் ஒருவர் கேட்டால் என்ன விடை சொல்லுவோம்?
- குழந்தைக்குப் படிக்கப் புத்தகம் வாங்க வேண்டும், பள்ளிக்குப் போக சைக்கிள் வாங்க வேண்டும் என்று கேட்டால்?்.
- என் மகனுக்கு கல்லூரிக்குப் போக இரண்டு சக்கர வண்டி வாங்க வேண்டும் என்றால்? எனது தொழிலுக்கு சுற்றி அலைய இரண்டு சக்கர வண்டி வாங்க உதவி செய்யுங்கள் என்று கேட்டால்?
இதற்கு எல்லாம் வேறு யாரிடமாவது பணம் கேட்கப் போனால் அவர்கள் இப்படி யோசிப்பார்கள், நம்மிடம் யாராவது உதவி கேட்டு வந்தால் நாம் அலசிப் பார்ப்போம்.
எந்தெந்த கேள்விக்கு நாம் பிறருக்குக் கொடுக்க முன் வருவோம் என்று பதில் சொல்வோமோ அந்தந்த செலவுகளை நமக்காகவும் செய்து கொள்ளலாம். அவன் குழந்தையை விட நம் குழந்தை எந்த விதத்தில் உசத்தி? நம் வயிற்றில் பிறந்து விட்டதாலா? எல்லா மனிதரும் சமம்தானே? நாம், சமூக அமைப்பின் சரியான பக்கத்தில் பிறந்து சமூக வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. உதவி கேட்டு வரும் நண்பர் அவரது தவறு எதுவும் இல்லாமல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கலாம்.
அடுத்தவருக்கு என்று வரும்போது என்னென்ன கட்டுப்பாடுகள், என்னென்ன விவாதங்களை அலசி பணம் செலவளிக்க முன் வருகிறோமோ அது நமக்கும் பொருந்தாதா?
இப்படி அடுத்தவருக்கு என்று பார்க்கும் போது நம் பணத்தை எப்படி எப்படி செலவு செய்ய அனுமதிப்போம் அதே விதத்தில் நம்முடைய செலவுகளையும் பார்த்தால் எப்படி இருக்கும்? பணம் நம் கையில் இருந்தாலும் அதன் உரிமை முழுவதும் நமக்குக் கிடையாது. அதைப் பயன்படுத்துவதில் ஒழுக்கம் இருந்தால் ஆடம்பரம் ஒழிந்து விடாது?
- வார இறுதியில் மாயாஜாலுக்குப் போய் விளையாடி வந்தால்தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருமா? கட்டுச் சோறு கட்டிக் கொண்டு கிழக்குக் கடற்கரையில் ஒரு இடத்தில் பாய் விரித்து நாளை செலவழித்தால் குடும்பம் குதிக்காதா?
- ஐந்து நட்சத்திர விடுதியில் சாப்பிட்டு விட்டு வந்தால்தான் எல்லோருக்கும் திருப்தி வருமா? வீட்டிலேயே புதிதாக ஒன்றை சமைப்போம், அம்மாவுக்கு ஓய்வு கொடுத்துப் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஒன்றை செய்வோம் என்று எல்லோரும் இறங்கி வேலை செய்து அதை எடுத்துக் கொண்டு மெரீனா பீச்சிற்குப் போய அல்லது எழும்பூர் மியூசியத்துக்குப் போய் சாப்பிட்டு வருவது திருப்தியைத் தந்து விடாதா?
- தில்லி மாநகரின் வீதிகளில் பளபளக்கும் கார்களில் பெண்கள் கல்லூரி வாசல்களில் நிற்கும் இளைஞர்களுக்கு பணம் கொடுப்பது யார்?
- சின்ன அளவில், என் மகன் கல்லூரியில் படிக்கிறான் என்று வயிற்றைக் கட்டி அவன் பகட்டுக்குப் பணம் கொடுக்கும் ஏழைத் தாய்கள் இல்லையா?
- என் மகனை பெரிய பள்ளியில் சேர்த்து விட்டேன், அங்கு பிற குழந்தைகளுக்கு நிகராக இவனுக்கும் செலவுகள் செய்ய வேண்டும் என்று வாதிட்ட தாய்க்கு என்ன பதில்?
பிறரைப் பார்த்து இவனுக்குக் கொடுப்பதை விட இவனைப் பார்த்து பிறர் கற்றுக் கொள்ளும், நடத்தையை ஏன் கொடுக்க முடியவில்லை.?
நம் சக மனிதர்கள் வளர்ந்து வளப்படும் வரை நம்முடைய ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வோம், அதன் பிறகு எல்லோருடனும் சேர்ந்து அவற்றை நிறைவேற்றிக் கொள்வோம் என்று ஏன் நம்மால் நினைக்க முடியவில்லை? மனித் குலமே ஒரு பெரிய குடும்பம்தானே, என் கூடப் பிறந்தது என் வயிற்றில் பிறந்தது மட்டும்தான் எனது பொறுப்பா?
குரானோ, பைபிளோ, கீதையோ ஒருவன் தனது செல்வத்தை எப்படி வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்றோ, அப்படிச் சேர்ந்த செல்வத்தை எப்படி வேண்டுமானாலும் செலவளித்துக் கொள்ளலாம் என்று கூறுவதில்லை. குரானின் வட்டி வாங்கக் கூடாது என்ற தடையை, "ஆகாகா, என்ன முட்டாள்தனம், வங்கிகள் இல்லாமல் நம்முடைய நவீன பொருளாதாரமே மூழ்கி விடாதா" என்று ஆரம்பிக்காமல் கொஞ்சம் பெட்டிக்கு வெளியே சிந்திக்கலாம்..
கிருத்துவம் போதிக்கும் சேவை வாழ்க்கையை பாருங்கள். கீதையும் தருமகர்த்தா முறையை ஏன் மறந்து விட்டோம்? தர்மகர்த்தா முறையில் பொறுப்பாகச் செல்வந்தர்கள் நடக்க வேண்டும் என்ற காந்தியின் திட்டத்தை நடைமுறைக்கு உதவிடாத ஒன்று என்று கட்டபொம்மன் சொல்லியிருந்தார். அது காந்தியின் தவறா, நமது தவறா?
அந்த மதங்களின் பேரால், அந்தக் கடவுளின் பேரால்தான் வீணடிப்புகளும் அதன் நியாயப்படுத்தல்களும் நடக்கின்றன. உலகில் ஒரு குழந்தை பசியோடு இருந்தாலும், கோயிலில் செய்யப்படும் பாலாபிஷேகம் கடவுளைப் போய்ச் சேராது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இதற்குத் தொடர்புடைய என்னுடைய முந்தைய பதிவு இங்கே..
8 கருத்துகள்:
நல்லா எழுதியிருக்கீங்க சிவா.
சிறந்த எண்ணங்கள்.. அருமையான வாதம்.
பாராட்டுக்கள்.
சீமாச்சு
வணக்கம் சீமாச்சு.
கருத்துச் சொல்ல சங்கடமான பதிவு இது. நாம் எல்லோருமே இத்தகைய குழப்பச் சூழல்களில் மாட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.
விழிப்புணர்வு வர வேண்டும். அது மனதளவில் ஆரம்பிக்க வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெறும் நாள் வரும்.
அன்புடன்,
மா சிவகுமார்
Thanks arasan,
I will treasure your comment.
anbudan,
மா சிவகுமார்
சிவகுமார் ஐயா,
தங்களின் இந்த பதிவை தங்களின் பின்னூட்டத்தின் (என் பதிவில் தாங்கள் இன்று இட்டது...) வாயிலாக தெரிந்து கொண்டேன்.
தெரிவித்ததற்கு மிக்க நன்றி.
இந்த பதிவு கண்டேன்.
என் கருத்துக்களை மேற்படுத்தி அதற்கு தாங்கள் கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள்.
தங்களின் பெரும்பாலான கருத்துக்களில் என் கருத்துக்கள் அழகாக ஒத்துப்போகின்றன.
நான் குழந்தைக்கு பொம்மை வாங்குவது தவறா என்றுதான் கேட்டேன். இந்தியாவில் வறுமை எப்போதும் இருந்து கோண்டே இருக்கிறது என்றும் சொன்னேன். அதற்காக நான் என்ன செய்யட்டும் என்று எங்கும் சொன்னதில்லை. அவ்வாறும் நினைத்ததில்லை.
எல்லோரும் தான் சூழ்ந்த சமுதாயத்திற்காக இயன்ற அளவு முயற்சியும் தியாகமும் செய்ய வேண்டும். இந்த கருத்தில் எனக்கு ஒரு அபிப்ராய பேதமும் இல்லை.
சமுதாய பிரக்ஞை உள்ள எல்லோருமே இவ்வாறுதான் சொல்வார்கள்.
இதற்கு தாங்கள் என்னை எதிர்மறையாக பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், நான் சொல்கிறேன் 'இயன்ற அளவு' என்று. இது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. விருப்பம் மேலும் அவரவர் value system கூட மாறுகிறது.
உதாரணத்திற்கு, நான் என் ஊருக்கு என் அப்பா போக வேண்டும் என்றால், உள்ளூரில் கோயில், குளம் போய் வர ஒரு கார் ஏற்பாடு செய்கிறேன். என்னைப்பொருத்தவரை இது ஒன்றும் luxury விஷயம் இல்லை. ஆனால், என் அப்பா அதை ஒரு தண்டம் என்கிறார். இன்றும் பஸ்ஸூக்காக வெயிட்செய்து வருவேன் என்கிறார். ஏனென்றால், அவருக்கு இது ஒரு பெரிய செலவாக தெரிகிறது. அதனால், ஒவ்வொருத்தரின் அளவுகோல் மாறுகிறது.
ஒரு மனிதன் சமூக பிரக்ஞையாக இருக்க வேண்டும். ஆனால், அதை எவ்வளவு, எப்படி ஏன் என்ற விவரம் அந்த மனிதன்தான் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
நான் temple_cleaners என்று ஒரு குழுவில் மெம்பர். காசு செலவழித்து பாழாய் கிடக்கும் கோயில்களை மறுபடியும் கொஞ்சம் ஒப்பேத்தி கொடுக்கிறோம். இது சமுதாய நலனா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், இதை விட முக்கியமான பல சமூக தேவைகள் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதனால், நான் குற்றவாளி ஆவேனா என்ன? நிச்சயமாக இல்லை.
நான் நியாயமாக நடந்து வரி கட்டி என் வருமானத்தில் கனிசமாக வரியாக செலவழிக்கிறேனே, இதுதான் சமூக பிரக்ஞையின் முதல் படி.
தங்கள் பதிவில் சொன்ன மற்ற எல்லா விஷயமும் வாஸ்தவம் தான்.
நன்றி
ஜயராமன் அவர்களுக்கு,
உங்களுடைய புரிந்து கொள்ளலுக்கும் விளக்கமான பின்னூட்டத்துக்கும் நன்றி. உண்மையில் எது ஆடம்பரம் என்பது ஆளுக்கு ஆள் வயதைப் பொறுத்து சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுகிறது என்பதுதான் என்னுடைய குழப்பமும். அதனால்தான் என்னுடைய முதல் பதிவில் கேள்விகளாக எழுதியிருந்தேன். அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் முயற்சியில் எழுதியதுதான் இந்தப் பதிவு. பல நாட்கள் ஆறப்போட்டு திரும்பப் படித்துப் பார்த்தேன். நடைமுறையில் சிக்கலாகப் பட்டாலும், இதுதான் சரி என்று பட்டதால் பதித்து விட்டேன்.
மீண்டும் நன்றிகள்.
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம் சிவகுமார்.இந்த பதிவில் நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் மிகவும் சரியான கருத்துக்கள்.எல்லாரும் இப்படி நடந்துக்கொண்டால் நல்லதுதான்.ஆனால் இது எல்லாம் நடை முறை வாழ்க்கைக்கு ஒத்து வரும் என்று நினைக்கின்றீர்களா?
எனக்கு வயதும் அனுபவமும் சற்று குறைவுதான்.இருந்தாலும் என் கண்ணோட்டத்திலிருத்து இதை யோசித்துப் பார்தேன்.இது சரியா தவறா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை.தவறாய் இருப்பின் மனித்துக்கொள்ளுங்கள்.
எந்த ஒரு விஷயத்தை நீங்கள் ஆராய்ந்துப் பார்த்தாலும் அதில் கண்டிப்பாக சுயநலம் இருக்கும்.என்றைக்குமே நாம் முதலில் நினைப்பது நம்மை பற்றிதான்.இல்லை நான் அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் எத்தனை பேர்?கைவிட்டு எண்ணி விடலாம்.
அடிப்படை தேவைகளைப் பற்றி எண்ணி பாருங்கள்.நாம் சாப்பிடுவது நாம் வயிற்றுப் பசியைப் போக்கதான்.நாம் ஒன்றும் பிறருக்காக உண்ணவில்லை.முதலில் நாம் அப்புறம்தான் மற்றவர்கள்.இங்கு நானே பட்டனி கிடக்கும் பொழுது எப்படி நான் மற்றவரின் பசியைப் பற்றி அக்கறைப் படப்போகின்றேன்?
நான் பார்த்த வரையில் நாம் தேவைகள் பூர்த்தியாகும் பொழுதுதான் நாம் மற்றவர்களைப் பற்றி சிந்திப்போம்.முதலில் நாம் உழைத்துச் சம்பாதிப்பது நமக்காக நம் குடும்பத்திற்காக.சமூகம் என்பது இரண்டாம் பட்சம்.செலவு பண்ணும் பொழுது முதலில் நம் தேவைகள் மற்றும் குடும்பத்தின் தேவைகள் மட்டும்தான் ஞாபகம் வரும்.யாரும் இந்த பணம் எப்படி மற்றவர்களுக்கு உதவும் என்று யோசிக்க மாட்டார்கள்.
இதைப் பற்றி யோசிக்கும் பொழுதுதான் நீங்கள் சொல்வது எல்லாம் நடக்குமா என்று தோன்றுகிறது.ஒரு சரசாரி மனிதன் கண்டிப்பாக இப்படி எல்லாம் யோசிப்பனா?
துர்கா,
சரியான கேள்விகள். நுட்பமாக சிந்திக்கிறீர்கள்?
நடைமுறைக்கு ஒத்து வருமா என்பதுதான் பெரிய தடைக்கல். நம் பக்கத்து வீட்டுக் காரர்கள் எல்லாம், ஊரெல்லாம் ஒரு முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரே மாதிரி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் வேறுபட்டு இருந்தால் பைத்தியக் காரப் பட்டம்தான் மிஞ்சும். ஆனால், நமது நோக்கங்களும், எண்ணங்களும் தூய்மையாக இருந்தால், நம்மைப் பார்த்து மாறுதல்கள் வர ஆரம்பிக்கலாம்.
எதிலும் சுயநலம் இருக்கும் என்பது உண்மைதான். அந்த சுயநலத்தை ஒழுங்குபடுத்தி எல்லோருக்குமான நன்மை தரும் பாதையில் செலுத்துவதுதானே மனிதப் பண்பாடு, நாகரீகம்? வெறும் சுயநலம் மட்டும் நம்மைச் செலுத்தி வந்திருந்தால் காடுகளில் இருந்து வெளியே வந்து வாழ ஆரம்பித்திருப்போமா? துளசி கோபால் எழுதிய மராய் பற்றிய பதிவைப் படித்தீர்களா? அந்தச் சமூகத்தில் நம்மைப் போன்ற வாழ்க்கை நடத்த ஒருவர் முயன்றால் அவர்தான் நகைப்புக்குள்ளாவார் இல்லையா? ஊரோடு ஒத்து வாழ் என்பது சரிதான், ஆனால் ஊரிலும் மாற்றங்கள் வர வேண்டும்.
அடிப்படை தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆடம்பரங்களில்தான் கேள்வியே எழுகின்றது. என் வீட்டில் குழந்தைகளைப் பட்டினி போட்டு விட்டு ஆடம்பரச் செலவு செய்தால் எப்படி தவறோ அதே மாதிரிதானே, நம் சமூகத்தில் பல குழந்தைகள் பட்டினி கிடக்கும் போது நான் ஆடம்பரச் செலவு செய்வதும்?
நாமெல்லாருமே சராசரி மனிதர்கள்தான். நம்முடைய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டால் பலர் மாறுவார்கள், சமூகமும் மாறி விடும்.
சுருக்கமாக உங்கள் கேள்விக்கு என்னுடைய பதில், இவை நடைமுறைக்கு ஒத்து வரும். நமக்கு மனத் திடமும் பொறுப்புணர்ச்சியும் இருந்தால் வேண்டிய மாற்றங்கள் கண்டிப்பாக வரும்.
அன்புடன்,
மா சிவகுமார்
துர்கா,
"எப்படி இருந்தாலும் என் கேள்விகளுக்கு ஏதவாது பதில் வைத்திருப்பீர்கள் என்று தெரியும்."
:-) . அப்படியில்லை, நானும் உங்களைப் போலத்தான் விடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்குப் படுவதை வெளியே பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கேள்விகள் இன்னும் தெளிவை நோக்கிச் செலுத்துகின்றன. நன்றி.
குடும்பம் பற்றி நீங்கள் கேட்ட கேள்விகள் மிகப் பொருத்தமானவை. என் மனைவியைப் பொறுத்த வரை நான் பட்டுப் புடவையோ, நகைகளோ வாங்கித் தரவில்லை என்று இருந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளவே செய்தாள். ஆனாலும் அவர் தன்னைப் பொறுத்தவரை நான் ஆடம்பரம் என்று கருதுபவற்றை அத்தியாவசியம் என்றே கருதி வருகிறார். குழந்தைகளுக்கு அப்படி "ஆடம்பர" செலவுகளை எப்பாடு பட்டாவது செய்வதில் அவர் முனைப்பாக இருந்தார். நானும் பல நேரங்களில் விட்டுக் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் அதற்கும் பங்கம் வந்தது.
சுருக்கமாக, குடும்பத்தில் எல்லோரும் ஒத்த மனமுடையவர்களாக இல்லா விட்டால் சிக்கல்தான். எங்கள் அலுவலகத்தில் பகுதி நேர பணி புரியும் ஒருவர், அவரது துணவியார் இருவருமே, பணக்கார பின்னணி இருந்தும் விரும்பி எளிய வாழ்க்கை ஆடம்பரம் தவிர்த்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அது மாதிரி துணை கிடைத்து விட்டால் நமது நல் ஊழ்.
பொது நலம் பேசினால் கஷ்டப்படுவோம் என்று தோன்றினால் கண்டிப்பாக நம்மால் எதுவும் செய்ய முடியாது. பொது நலம் கருதி எளிமையாக வாழ்வது கண்டிப்பாக மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. அதை முயன்று கூடப் பார்க்காமல் நாம் அடுத்த வீட்டினருடன் எலிப் போட்டி (Rat Race) நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கடந்த எட்டு மாதங்களாக என்னுடைய மனச் சிக்கல்கள் தீர்ந்து, எளிய வாழ்க்கை மேற்கொண்ட பிறகு மனமும் உடலும் இறகு போல ஆகி விட்டன. மகிழ்ச்சி தரும் என்று பொதுவாகக் கருதப்படும் உணவுப் பொருட்கள் கேளிக்கைகள் போன்றவற்றை தவிர்த்து விட்டேன். மனதுக்கு மிகத் துன்பத்தைத் தரும் பிரிவுகளும் வதைக்கின்றன. இருந்தும், பார்ப்பவர்கள் கூட என்ன திடீரென்று புது களை தெரிகிறது என்று கேட்கிறார்கள்.
மனதில் தன்னலம் குறையக் குறைய பாரம் குறைந்து நாம் மிக மகிழ்ச்சியான மக்களாக மாறி விடுவோம். அடுத்தவர்கள் செய்கிறார்களே என்று நாமும,் நமக்கே தவறு என்று படுவதை செய்யாமல் இருந்து விட வேண்டும்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக