சின்ன வயதில் விளையாட்டுக் களத்தில் இது நடக்கும். கொஞ்சம் ஆளுமை நிறைந்த ஒரு பையன் வந்து விட்டால் கூட்டத்தின் பிரதான விளையாட்டே மாறி விடும். அவன் குறிப்பிட்ட விளையாட்டில் தேர்ச்சி இல்லாதவனாக இருந்தால் "இதெல்லாம் என்ன விளையாட்டு" என்று ஒதுக்கி விடலாம், அல்லது விளையாட்டு விதிகளை தனக்குப் பொருந்துமாறு மாற்றிக் கொள்வான். ஆக்கிப் பந்தயங்களில் முடிசூடா மன்னர்களாக விளங்கிய இந்திய பாகிஸ்தானிய அணிகளை செயற்கைத் தரை ஆடுகளம் அமைத்து நெதர்லாந்தும், ஜெர்மனியும் தண்ணி காட்டுகிறார்கள்.
இரு தரப்பும் ஒரே முறையில் போரிட்டால் கடைசியில் அழிவுதான் மிஞ்சும்.
- பாரத தர்ம யுத்தத்திற்குப் பிறகு இரண்டு பக்கத்திலும் கை விரல்களில் எண்ணக் கூடிய எண்ணிக்கையைத்் தவிர்த்து எல்லோருமே கொல்லப்பட்டு விடுகிறார்கள்.
- அமெரிக்கா அணு ஆயுதத்தைப் பயன்படுத்திய பிறகுதான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
- மரபு முறை படைகளை எதிர்க்கப் பயன்படுத்தப்படும் கரில்லப் போர் முறை, இந்த மறைந்து நின்று தாக்கும் போர் முறையிலேயே இலங்கை ராணுவத்தை மண்டியிட வைத்து தனது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்ட தமிழ் போராளிகள், அமெரிக்கர்களை வியட்நாமிலிருந்து விரட்டி விட்ட வியட்காங்
ஆங்கிலேய ஆட்சியாளரை எதிர்க்க காந்தி பயன்படுத்திய சத்தியாக்கிரகம், நெப்போலியனின் மாஸ்கோ முற்றுகைக்கு முன்னரே, தத்தமது வீடுகளை விட்டு வேறு ஊர்களுக்குப் போய் விட்ட மக்கள் என்று பல நேரங்களில் இந்த ஆட்ட விதிகளை மாற்றி தாம் தோல்வி அடையக் கூடிய சூழ்நிலையை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். நீ என்னை ஆள நான் அனுமதித்தால்தானே நீ என்னை ஆள முடியும், நீ கொடுக்கும் பட்டங்களை துறக்கிறேன், நீ விதிக்கும் வரிகளை மறுக்கிறேன், அரசுப் பணியை விடுகிறேன் என்று ஆரம்பித்தால் ஆட்சியாளர் என்ன செய்ய முடியும். தடியெடுத்து துப்பாக்கியெடுத்து உடலை மிரட்டலாம், உள்ளே இருக்கும் மன உறுதியை யாரும் தொட முடியாது, நம்மைத் தவிர.
அமெரிக்க அடிமை முறையின் உழன்ற அங்கிள் டாம் என்பவரைப் பற்றிய கதையை சுருக்கிய வடிவில் படித்தேன். நல்ல ஆண்டையிடமும், கொடிய ஆண்டையிடமும் தனது உள்மனதை சுதந்திரமாக வைத்துக் கொள்கிறார் அந்தக் கருப்பர். வெள்ளையரின் வெறுப்பு தன் மனதை நச்சடையச் செய்து விடப் போவதில்லை என்று துன்பங்களுக்கிடையில் தன்னைக் கொடுமைப் படுத்துபவர்களையும் நேசிக்கிறார் அவர். அவரைப் போல சில மனிதர்கள் முன் அடிமை முறை தோற்றுப் போயிற்று.
டோண்டு சார், முரட்டு வைத்தியம் என்று சொல்லும் உத்திகளும் இது போலத்தான். "நீ எனக்கு பொறுப்புகளைக் கொடுக்கவில்லையா, என்னை ஒப்புக்கு ஒரு பதவி கொடுத்து ஓரத்தில் உட்கார வைக்கிறாயா, அதை எதிர்த்து உன்னிடம் வந்து அழுது கொண்டிருக்காமல் என் சொந்த வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று தன்னைத் தண்டிக்க முயன்றவர்களுக்கு ஆப்பு வைத்து விட்டார். அதே முறையில்தான் பணி குறிக்கப்படாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தனி டம்ளர் முறையில் துன்புறுத்தபடும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அறிவுரை கூறி எழுதியிருந்தார்.
ஆனால், இப்படி ஆட்ட விதிகளை மாற்றும் போது சத்தியத்தின், பொது நலனின் அடிப்படையில் புதிய விதிகளை உருவாக்குவது வெற்றி பெறும். இருக்கும் விதிகளை இன்னும் மோசமாகச் செய்யும் போக்கு எல்லோரையும் பின்னுக்கு இழுத்துப் போட்டு விடும்.
ஆஸ்கர் விருது கிடைத்தால்தான் சிறந்த சினிமா, ஃபார்ச்சூன் 500ல் வந்தால்தான் சிறந்த நிறுவனம் என்று அமெரிக்க விதிகளின்படி ஆடிக் கொண்டே இருந்தால் அமெரிக்காதான் எப்போதும் வெற்றி பெறும். அந்த எலிப் பந்தயத்தைப் போலத்தான் நாடுகளின் தனி நபர் வருமானத்தை டாலரில் மாற்றிக் குறிப்பிடுவதும். அந்த ஆட்டத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் சபை, வாங்கும் சக்தியின் அடிப்படையில் தனி நபர் வருமானம் கணக்கிட ஆரம்பித்தது. இன்னும் சில பொருளியலாளர், தேசிய மன நிறைவு குறியீடு என்றும் ஆரம்பிக்கிறார்கள்.
சராசரி இந்தியனிடம் இருக்கும் அசையும் அசையாச் சொத்துகள் சராசரி அமெரிக்கனை விட குறைவாக இருந்தாலும் அவற்றைக் கொண்டு அவனுக்குக் கிடைக்கும் மனநிறைவு கூடுதலாக இருக்கலாம் அல்லது குறைவாக இருக்கலாம். அதை அளந்து விட்டால் மக்களின் டாலர் வருமானத்தைக் கூட்டுவது மட்டுமே நாட்டுக்கு வளம் என்றில்லாமல் பெரும்பான்மை மக்களின் மன நிறைவை எப்படி அதிகரிக்கலாம் என்று அரசும் சமூகமும் திட்டமிட ஆரம்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக