ஞாயிறு, ஜூலை 02, 2006

நம்மைப் பீடித்துள்ள புற்று நோய்கள்

நம் சமூகத்தைப் பீடித்துள்ள பெரிய நோய்கள் லஞ்ச ஊழல்களும், சாதி வேறுபாடுகளும். ஒவ்வொரு தனி மனிதனின் ஆன்மாவை கரையான் போல அரித்து வரும் இந்தப் பிணிகள் நாட்டின் வறுமைக்கும், வன்முறைகளுக்கும், துன்பங்களுக்கும், தனி மனித சீர்கேடுகளுக்கும் காரணம்.

காவல் துறை, பத்திரப் பதிவுத் துறை, வாகன உரிமம் வழங்கும் துறை, பொது விநியோகத் துறை, மாசுக்கட்டுப்பாடு துறை, தொழிலாளர் நலத்துறை, வருவாய் துறை என்று பொதுமக்களிடம் தொடர்பு உள்ள எல்லா பொதுத் துறைகளும் கையூட்டில் ஊறித் திளைக்கின்றன. உயர்ந்த நிலைகளிலிருந்து கடைநிலை ஊழியர் வரை தன்னால் முடிந்ததை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்போக்கும் அதில் குற்றவுணர்வு, கூச்சமின்மையும் தளைத்து விட்டன.

நீதித் துறை, சட்டமன்றங்கள், அமைச்சர்கள் கூட இந்த சாபத்திலிருந்து தப்பி விடவில்லை. நாம் எவ்வளவோ முன்னேறி விட்டதாக நம்பினாலும் நேர்மையின்மையை ஒழிக்காவிட்டால் நாம் மூன்றாம்தர குடிமக்களின் நாடாகவே இருப்போம். நம்முடைய மனதில் மகிழ்ச்சியும், வாழ்வில் நிறைவும் என்றைக்கும் கிடைக்காது.

இன்னொரு தளத்தில் சாதி வேறுபாடுகள் நம்மை இழுத்துப் பிடித்து வருகின்றன.

சாதியை தன்னளவில் நிராகரித்து வாழ்ந்து வரும் பலரை நமக்குத் தெரியும். ஆனால் பெரும்பாலான மக்கள், அடிப்படையில் தமது சாதியை மறந்து விடாமலேயே உள்ளனர். திருமண உறவுகள் மட்டுமில்லாமல் தொழிலிலும், சமூக நட்புகளிலும், சாதியையே அடிப்படையாகக் கொண்டு நடப்பதுதான் வழக்கமாக உள்ளது.

நெருங்கிய சொந்தத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தைகள் மரபு முறை கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது என்று அதை கைவிட்டு விட்டோம். சாதிக்குள்ளேயே திருமணம செய்து கொள்வது இந்த சாத்தியத்துக்கு இன்னும் கொஞ்சம் பெரிய வட்டம்தானே. ஆயிரம் ஆண்டுகளாக இப்படி திருமண உறவுகளை குறுகிய வட்டத்துக்குள் நிறுத்தி நம்முடைய மரபணுப் பண்புகளை பலவீனமாக அடித்து வந்துள்ளோம்.

சென்னையில் வாழும் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு லஞ்ச சந்தர்ப்பம், சாலைகளில் போக்கு வரத்துக் காவலர்கள் வாங்கும் கையூட்டு. ஒரு வண்டியை நிறுத்தி விட்டால் ஏதாவது குறை கண்டு பிடித்து வழக்குப் போடுவோம் என்று மிரட்டிப் பணம் வாங்கி விடுவார்கள்.

வரும் வண்டிகள் எல்லாவற்றையும் நிறுத்தி சோதனை செய்யும் சில நேரங்கள் தவிர, வேகமாக போனது, போக்கு வரத்து விதிகளை மீறியது என்று நிறுத்தப்படும் வண்டிகளைக் கூட எல்லா விதமான சோதனைகளுக்கும் உட்படுத்தி பயமுறுத்தி லஞ்சம் கொடுக்கச் செய்கிறார்கள்.

இதை ஒழிக்க மும்முனைகளில் செயல்பட வேண்டும்.
1. அரசு மோட்டார் வாகனச் சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். சாதாரணமாக கடைப்பிடிக்க முடியாத விதிகளை நீக்கி, சட்டத்துக்குட்பட்டு நடக்கு விரும்பும் குடிமக்களுக்கு வசதியாக சட்டம் மாற்றப்பட வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் வண்டிகளுக்கு ஆண்டு தோறும் சாலை வரி கட்டி ஒரு வில்லையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த வில்லை இல்லையென்றாலோ, அல்லது காலவதி ஆகியிருந்தாலோ வண்டி ஓட்டுபவர் சட்டத்தை மீறியவராகிறார். இனிமேல் வண்டி வாங்கும் போதே ஆயுட்கால வரி கட்டி விட வேண்டும் என்று கொண்டு வந்த பிறகு அந்த சட்ட மீறல் மறைந்து விட்டது.

இன்றைக்கு பெரும்பாலான சட்ட மீறல்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமை, வண்டிக்கான பதிவுச் சான்றிதழ் இல்லாமை, ஆண்டு தோறும் புதிப்பிக்கப்பட வேண்டிய காப்பீடு இல்லாமை அல்லது காலாவதி ஆகியிருத்தல்.

இதில் சாலையில் ஓட்டும் ஒரு சாதாரண குடிமகனுக்கு வசதியில்லாத விதிகளை நீக்க வேண்டும் அல்லது மாற்றி அமைக்க வேண்டும். வாகனப் பதிவு சான்றிதழ் விபரங்களை நாடு முழுவதும் கணினி மயமாக்கி வண்டியின் எண்ணை உள்ளிட்டு அதன் உரிமையாளர் பற்றிய விபரங்களைதெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நகர அளவில் செய்து விட்டால் கூட பெருமளவு தொந்தரவு குறைந்து விடும். வண்டி ஓட்டுபவர் எந்த ஆவணத்தையும் வைத்திருக்கா விட்டாலும், பாதுகாப்பு, குற்றத் தடுப்புக்காக நிறுத்தப்படும் வண்டி எண்ணைக் கொண்டே அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வகை செய்து விட்டால், கடைநிலை காவலரின் அதிகாரத்துக்கு வரம்பு ஏற்பட்டு விடும்.

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தின் பேரில் தண்டம் விதித்து, அதை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். சாலையில் வண்டி ஓட்டுபவர் மிகப் பெரிய குற்றம் செய்திருந்தால் ஒழிய நீதி மன்றத்துக்கோ, அல்லது தெருவோர நடமாடும் நீதி மன்றத்துக்கோ போய் பணம் கட்டும் முறை முற்றிலும் ஒழிக்க்ப்பட்டு விட்டால், யாரையும் மிரட்டி நாலு காசு பார்க்கலாம் என்ற வாய்ப்பு குறைந்து விடும்.

2. நாம் கொடுத்தால்தானே அவர்கள் வாங்குவார்கள் என்று உயிரே போனாலும் லஞ்சம் கொடுக்க மாட்டேன், தவறு செய்திருந்தால் தண்டனையை சட்டப்படி அனுபவித்துக் கொள்வேன் என்ற உறுதி கொள்பவர்கள் வேண்டும்.

3. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார்கள். காவல் துறையில் நேர்மையையும், சேவை உணர்ச்சியையும் வளர்க்கும் வண்ணம் பயிற்சிகள் அழிக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் செயல்பாட்டு மதிப்பீடுகளில் அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்களின் சேவை உணர்வின் அளவுக்கு பெரும்பங்கு அளிக்க வேண்டும்.

17 கருத்துகள்:

VSK சொன்னது…

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன், மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி, வேதாளத்தை வெட்டி வீழ்த்தினான் எனச் சிறுவயதில் அம்புலிமாமாவில் படித்திருக்கிறேன்.
நீங்களும் அதேபோல, சற்றும் மனந்தளராமல், விடாது எழுதி வருகிறீர்கள்!
உங்களைப் போன்றோரின் முயற்சிகள் வீண் போவதே இல்லை!

சொல்லுக சொல்லிற் பயனுடைய, சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். [200]

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் எஸ்கே ஐயா,

நாம் எழுதுவதால் பெரிய மாறுதல்கள் நடந்து விடும் என்று எழுதவில்லை. இந்த எழுத்துக் கூத்து எனக்கே பிரச்சனைகளை விளக்கிக் கொள்ளும் முகமாகத்தான்.

ஆயிரம் எழுதினாலும், பேசினாலும் நடைமுறையில் செய்ய ஆரம்பிக்காதது வரை மாற்றம் நிகழாது. அதைச் செய்ய ஒருவர் ஆரம்பித்தால் போதும். காடு வெந்து தணிய அக்கினிக் குஞ்சு ஒன்றுதானே வேண்டும். அந்த அக்கினிக் குஞ்சு ஒன்று உருவெடுக்கும் நம் வாழ் நாளில் என்று நம்பிக்கை.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

சிவகுமார்,

ஒரே மாதிரி யோசிக்கிறீங்களே...மாற்று விதமான சிந்தனைகளை சற்று யோசித்துப் பாருங்கள்.

//
காவல் துறை, பத்திரப் பதிவுத் துறை, வாகன உரிமம் வழங்கும் துறை, பொது விநியோகத் துறை, மாசுக்கட்டுப்பாடு துறை, தொழிலாளர் நலத்துறை, வருவாய் துறை என்று பொதுமக்களிடம் தொடர்பு உள்ள எல்லா பொதுத் துறைகளும் கையூட்டில் ஊறித் திளைக்கின்றன. உயர்ந்த நிலைகளிலிருந்து கடைநிலை ஊழியர் வரை தன்னால் முடிந்ததை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்போக்கும் அதில் குற்றவுணர்வு, கூச்சமின்மையும் தளைத்து விட்டன.
//

இப்படி அரசு ஊழியர்கள் செய்வதை தடுக்கவேண்டும். அதுக்கு அரசு சட்டம் ஏற்றுவது வழி அல்ல.

வேலை செய்யவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பவேண்டும். அதாவது No permanant employment.

permanent என்றால் தானே இப்படி சற்றும் வெட்கமில்லாமல் வாங்கும் சம்பளத்துக்கு (உண்டவீட்டிற்கு) ரெண்டகம் செய்கிறார்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ஷங்கர்,

"வேலை செய்யவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பவேண்டும். அதாவது No permanant employment."

அப்படிச் சட்டம் இருந்தால் ஊழல் குறைய ஒரு வழி கண்டிப்பாக திறக்கும். ஆனால் சட்டம் மட்டும் போதாது. மன மாற்றமும் வேண்டும்.

சட்டங்கள் சமூக மாற்றத்தைத் தொடர வேண்டும். பெரும்பகுதி மக்கள் ஒன்றை சகித்துக் கொள்ளும்போது சட்டம் போட்டு என்ன செய்து விட முடியும்?

எனது வழக்கமான உதாரணம். பிக்பாக்கெட்டும், வரதட்சிணையும். இரண்டுமே சட்ட விரோதம்தான். எது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது? பெரும்பகுதி மக்கள் வரதட்சணையை ஏற்றுக் கொண்டுள்ளதால் கொடுத்தலும், வாங்குதலும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

Hariharan # 03985177737685368452 சொன்னது…

எனக்குத் தெரிந்து இரண்டு காரணங்கள்:

1. நேர்மை, ஒழுக்கம் இவைகள் சொல்லப்படும் நமது இந்து மதக் கோட்பாடுகளை எக்காளமிடுவதை மட்டுமே கொள்கைகளாகக் கொண்ட திராவிடக் கட்சிகள், அதன் தனி மனித ஒழுக்கம் குன்றிய தலைவர்களால் தொடர்ந்து 40ஆண்டுகள் ஆட்சி செய்துவருவது.

முறையான தெய்வ நம்பிக்கை, தனி மனித ஒழுக்கம் மேம்பட உதவும். சமூகம் என்பதே தனிமனிதர்கள் கூட்டுத்தொகை தானே? தனி நபர், நாயகர்கள் வழிபாடு அதிகமுள்ள தமிழ்நாட்டில் தலைவனின் தனி மனித ஒழுக்கம் மிக மிக முக்கியம்.


2. தொகுதியில் வேட்பாளர் வெற்றி எவர் அதிக ஓட்டு எண்ணிக்கை பெறுகிறார் என்றிருக்கும் முறை.

பதிவான ஒட்டுமொத்த ஓட்டுக் கூட்டுத்தொகையில் அதிக சதவீதம் பெற்றவரே வென்றவர் எனும் முறை நமது தேர்தல் முறையானால் மாற்றம் வரும்.

ramachandranusha(உஷா) சொன்னது…

சிவகுமார், உங்கள் பதிவைப் படித்ததும் எனக்கு நினைவில் வந்த சம்பவம் என் பதிவில் போட்டு இருக்கிறேன். லஞ்சம் பற்றிய
கருத்துகள் விரைவில் எழுதுகிறேன்.

மஞ்சூர் ராசா சொன்னது…

சிவா நீங்கள் சொல்லும் வழிகளில் நாம் அனைவரும் சிந்திக்க ஆரம்பித்தால் ஓரளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் அச்சந்தர்ப்பங்கள் நமக்கு ஏற்படும் போது நாமும் அதிலிருந்து தப்பிக்கத்தான் நினைக்கிறோம். அதனால் நாமும் தவறு என்று தெரிந்தே தவறு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இந்த நிலைமையில் நம்மை நினைத்து, இயலாமையை நினைத்து நாமே வெட்கி தலைகுனிகிறோம்.

பத்மா அர்விந்த் சொன்னது…

சிவகுமார்,
இதற்கும் மேலாக (அடிப்படை)காவல்துறையினருக்கு ஊதியம், அதிக நேரம் உழைக்குமவர்களுக்கு தகுந்த மரியாதை போன்றவை இருந்தால், நிலை கொஞ்சம் மாறும். தேவைகளை தீர்த்து வைத்தால், ஆசைகள் குறையும்தானே.

கவிதா | Kavitha சொன்னது…

//வேலை செய்யவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பவேண்டும். அதாவது No permanant employment."

அப்படிச் சட்டம் இருந்தால் ஊழல் குறைய ஒரு வழி கண்டிப்பாக திறக்கும். ஆனால் சட்டம் மட்டும் போதாது. மன மாற்றமும் வேண்டும்.

சட்டங்கள் சமூக மாற்றத்தைத் தொடர வேண்டும். பெரும்பகுதி மக்கள் ஒன்றை சகித்துக் கொள்ளும்போது சட்டம் போட்டு என்ன செய்து விட முடியும்?

எனது வழக்கமான உதாரணம். பிக்பாக்கெட்டும், வரதட்சிணையும். இரண்டுமே சட்ட விரோதம்தான். எது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது? பெரும்பகுதி மக்கள் வரதட்சணையை ஏற்றுக் கொண்டுள்ளதால் கொடுத்தலும், வாங்குதலும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. //
மிக அருமையான கருத்துக்குள் சிவகுமார்ஜி..நான் உங்களின் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன்.

Unknown சொன்னது…

// 1. நேர்மை, ஒழுக்கம் இவைகள் சொல்லப்படும் நமது இந்து மதக் கோட்பாடுகளை எக்காளமிடுவதை மட்டுமே கொள்கைகளாகக் கொண்ட திராவிடக் கட்சிகள், அதன் தனி மனித ஒழுக்கம் குன்றிய தலைவர்களால் தொடர்ந்து 40ஆண்டுகள் ஆட்சி செய்துவருவது.

முறையான தெய்வ நம்பிக்கை, தனி மனித ஒழுக்கம் மேம்பட உதவும். சமூகம் என்பதே தனிமனிதர்கள் கூட்டுத்தொகை தானே? தனி நபர், நாயகர்கள் வழிபாடு அதிகமுள்ள தமிழ்நாட்டில் தலைவனின் தனி மனித ஒழுக்கம் மிக மிக முக்கியம்.//

அப்போ திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இல்லாத இடங்கள் எல்லாம் ஊழல் இல்லாதா புன்னியபூமியாக இருக்கிறதா?

மா சிவகுமார் சொன்னது…

ஹரிஹரன்்,

நீங்கள் சொல்வதில் ஓரளவுக்கே உண்மை உண்டு.

kvr சொல்வது போல கழக ஆட்சிகளுக்கு முற்பட்ட காங்கிரசு அரசுகளிலும், இன்றும் பிற மாநிலங்களிலும், ஊழல் நிலைமை மோசமாகத்தானே உள்ளது.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி உஷா அவர்களே,

லஞ்சம் பற்றி நிறைய எழுதுங்கள். குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்காவது ஒரு நல்ல சமூகத்தை விட்டுச் செல்வோம்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

மஞ்சூர் ராசா,

அந்த உறுதிதான் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். இது புரையோடிப் போய் விட்ட ஒரு நோய். பேண்ட் எய்டு போடுவதால் போய் விடப் போவதில்லை. தனிமனித உறுதியும் முனைப்புகளும் வேண்டும். பார்க்கலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

தேன் துளி,

அப்படியா நினைக்கிறீர்கள்?

ஆசைக்கு அளவேயில்லை. தன்னுடைய பணியை நேசித்து கடமையை உயிராகக் கொண்டு மக்கள் தொண்டை கடவுள் தொண்டாகச் செய்பவர்களாக அரசு/பொது ஊழியர்கள் மாறும் வரை எவ்வளவு சம்பளம் சலுகைகள் கொடுத்தாலும் நிலைமை மாறப் போவதில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி கவிதா,

தவறான பழக்கங்களை எதிர்க்க நினைக்கும் தனி மனிதர்களுக்கு பலம் சேர்க்கும் என்ற வகையில் சட்டங்களும் உதவலாம். வேறு புரட்சி எதையும் ஏற்படுத்தி விடாவிட்டாலும் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் வரதட்சணைக் கொடுக்கக் கூடாது என்று உறுதியாக இருக்கும் ஒரு பெண்ணின் கைக்கு பலம் சேர்க்கத்தானே செய்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…

லஞ்சமே குடுக்க மாட்டோம் என்ற கொள்கை வைத்திருந்த ஒரு மிகச்சிறந்த கட்டுமான கம்பெனி தன் தொழிலை நிறுத்திக்கொண்டு விட்டது. இதனால் யாருக்கு நஷ்டம்? பொதுமக்களுக்குத்தான். தி ரா ச

மா சிவகுமார் சொன்னது…

அது எந்த கட்டுமான கம்பெனி ஐயா?

அன்புடன்,

மா சிவகுமார்