அப்பா, அம்மா, இளைஞனான மகன் கொண்ட குடும்பத்துக்கு வீட்டு உதவியாக வைத்திருந்த ஒரு சிறு பெண் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டதைப் பற்றிய கல்பனா சர்மாவின் கட்டுரை இந்து ஞாயிறு பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அந்தப் பெண் உதட்டுச் சாயம் ஒன்றை யாரும் இல்லாத நேரத்தில் பயன்படுத்த முயன்றதை அங்கே வந்த அந்தக் குடும்பத்தின் இன்னொரு உறுப்பினர் பார்த்து விட்டாராம். "வேலை பார்க்க வந்த நாய்"க்கு உதட்டுச் சாயத்தைத் தொட என்ன துணிவு என்ற கோபத்தில் அடித்துக் கட்டிப் போட்டதில் குழந்தை இறந்து விடவே, உடலை கட்டித் தூக்கி விட்டு அம்மாவும் அப்பாவும் காவலரை அழைத்தார்களாம்.
சுட்டி இங்கே
கடமை உணர்ச்சியுள்ள காவலர்கள், தம் வேலையை செய்து துருவி விசாரித்து மேற்சொன்ன விவரங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வளவுதான் நடந்தது, இதை விட மோசமாக எதுவும் நடந்து விடவில்லை. :-(
மும்பை குண்டு வெடிப்பில் இருநூறு பேர் இறந்ததற்கு உலகம் முழுவதும் கண்டனம். இந்த பிஞ்சுக் குழந்தையின் உயிர் எந்த வகையில் குறைந்தது. இவளைப் போல எத்தனை ஆயிரம் குழந்தைகள் வதை படுகிறார்கள். இதற்கு சிறப்புப் பிரிவு ஏன் அமைக்கப்படுவதில்லை? பிரதம மந்திரி ஏன் நாட்டுக்கு உரை ஆற்றவில்லை? நாகரீகம் அடைந்தவர்கள் என்று தம்மையே அழைத்துக் கொள்ளும் இந்த சமூகத்திற்கே குண்டு வைத்து தகர்த்தால்தான் என்ன?
ஒரு உறவினர் சென்னையைச் சுற்றிப் பார்க்க வருகிறோம், உங்கள் வீட்டில் தங்கிக் கொள்கிறோம் என்று குடும்பத்தோடு வந்தார்கள். கணவன், மனைவி, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, கைக்குழந்தை ஒன்று. கூடவே கண்களில் கனவு கூட மிஞ்சாத ஒரு சிறு பெண். கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளவாம். பத்து வயது கூட இருக்காது. அவர்கள் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. குழந்தை அழும் போது ஓடிப் போய் அதற்கான தேவைகளைப் பார்ப்பது, பையனுக்கு சாப்பாடு ஊட்டுவது, இவர்கள் வெளியே போகும் போது கூடை தூக்கிக் கொண்டே போவது என்று அந்தப் பெண் பேசாமல் பல வேலைகளைச் செய்தது.
அந்த ஆள் ஒரு பெரிய அரசுத் துறை நிறுவனத்தில் பொறியாளர். மனைவி சோகை பிடித்து எட்டிய பொருளை எடுக்கக் கூட முடியாது சோம்பியிருந்தாள்.
கணவன் மனைவி இருவருமே, தமது/குழந்தைகளின் வேலைகளைத் தாமே பார்த்துக் கொள்ளும் வயதுடையவர்கள்தாம். தவறான வாழ்க்கை முறையால், அந்தப் பெண் தன் உடலை வீணடித்துக் கொண்டிருந்தாள். அப்படியே முடியாமல் இருந்தால் வீட்டில் தங்கி சிகிச்சை பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே தவிர ஒரு குழந்தையின் வாழ்க்கையையும் இழுத்துக் கொண்டு மகிழ்வு உலா என்ன வேண்டிக் கிடக்கிறது!
தமிழகத்தில் வீட்டு வேலை செய்பவர்களின் நிலைமை அவ்வளவு மோசமில்லை. அவர்களும் நன்கு பேசி, தம்மை யாரும் இழிவாக நடத்தி விட அனுமதித்து விடுவதில்லை. ஆனால் வட மாநிலங்களில் நிலைமை மிக மோசம். எனக்கு தெரிந்த சில அவலங்கள்.
திருமணங்களிலும், ஆடம்பரப் பொருட்களிலும் பல ஆயிரங்களை இறைக்கும் இந்த மனிதர்கள், வேலைக்காரர்கள் என்று வரும் போது கணக்கு பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். சில நூறு ரூபாய் கொடுத்து வேலைக்கு வைத்து விட்ட ஒருவர் ஓரிரு நிமிடங்கள் ஓய்வாக உட்கார்ந்து விடக் கூடாது, அவ்வளவுதான் புதிதாக ஒரு பணியைச் சுமத்தி விடுவார்கள். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதற்கும் தனிக் கணக்கு உண்டு.
மனிதனை மனிதனாக மதிக்காத இந்தப் பழக்கங்கள் அழிவில்தான் கொண்டு விடும். குழந்தைகளை வேலைக்கு வைப்பது பெருங்குற்றம். நம்முடைய வேலைகளை நாமே செய்ய முடியாமல், நல்ல உடல் திறனுடைய வயது வந்த ஒருவரை வேலைக்கு அமர்த்தி கொண்டாலும் காசு கொடுப்பதாலேயே அவர்களை நமது அடிமைகளாக நம்மை விடக் குறைந்தவர்களாக நினைக்காமல், நம்மால் முடியாத நம்முடைய சொந்த வேலையை செய்ய முன் வந்துள்ள அத்தகையவர்களை கடவுளாக பாவிக்க வேண்டும்.
"இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறி விடுவார்கள்" என்று அவர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் போல ஒரு சில சகோதரிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். "வைக்கிற இடத்துலதான் வச்சிக்கணும்" என்று இட ஒதுக்கீடு வேறு.
மனிதன் மனிதனை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்்.
12 கருத்துகள்:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். [1071]
கீழ்மக்கள் தோற்றத்தினால் மனிதரைப் போல இருப்பர்.; குணங்களால் மனிதராகார்.
இவ்வகையான ஒற்றுமையை நாம் வேறெங்கும் கண்டதில்லை.
கத்தியின்றி ரத்தமின்றி இந்த மாக்கள் மக்களாக மாறி விடுவார்களா என்ன என்று சலிப்பு உண்டாகிறது எஸ்கே ஐயா!
மா சிவகுமார்
நான் பார்த்த சில வீடுகளில், பாத்திரங்களையெல்லாம் வறவற என்று சாப்பாட்டு மிச்சங்களோடு
அப்படியே வச்சிருந்தாங்க. அதை ஒரு பெரிய 'ப்ளாஸ்டிக் டப்'லே போட்டு ஊறவச்சால் என்னவாம்?
வீட்டு வேலைக்கு உதவ வருகிறவர்களுக்கு சுலபமாச் சுத்தம் பண்ண முடியும் இல்லையா?
நான் வீட்டு எஜமானிங்களுக்குச் சொல்லிட்டுத்தான் வந்தேன்.
மனுசனை மனுசனா மதிக்கத் தெரிஞ்சா உலகமா அழிஞ்சுரும்?
உண்மைதான் அக்கா.
இந்துவின் கட்டுரையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்த வீட்டு உதவி செய்பவர்கள் எவ்வளவு வரப்பிரசாதமாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு இரண்டாவது தாய் ஆகி விடுகிறார்கள் என்று கல்பனா சர்மா சொல்வது எவ்வளவு உண்மை!
ஆங்காங்கில் வீட்டு வேலை செய்பவர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் (மாதம் HK$ 2200 - ரூபாய்க் கணக்கில் சுமார் 15000), வாரம் ஒரு நாள் ஓய்வு, ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்குப் போய் வர விமானச் செலவு என்று அரசு சட்டமே உண்டு. (பெரும்பாலான பெண்கள் ஃபிலிப்பைன்ஸில் இருந்து வருபவர்கள்)
மனிதனை ஒதுக்காத மிதிக்காத சமூகங்கள்தான் முன்னேற முடியும்.
மா சிவகுமார்
ஒரு மனித உயிரின் விலை உதட்டுச் சாயத்தினின்றும் மலிவானதா? படித்ததும் கண் கலங்கியது. புது தில்லியில் இருந்த போது, இது போன்ற பல நிகழ்வுகளை நாளிதழ்களில் படித்திருக்கிறேன்.
இது ஒரு புறமென்றால், தங்களை வேலைக்கு அமர்த்தியுள்ள வயது முதிர்ந்த எஜமானர்களைக் கொன்று பணம் பொருளைக் கொள்ளையடித்துத் தப்பியோடும் வேலையாட்களும் உண்டு.
உங்கள் வலைப்பூ வேண்டுவது போன்ற எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய உடோபிய சிந்தனை உண்மையாகும் நாளே இது போன்ற நிகழ்வுகள் நிற்கும் நாள்.
வாங்க கைப்புள்ள,
மனிதரை மாடுகளை விடக் கேவலமாக நடத்தும் நம்மில் பலரின் மனங்கள் மாற வேண்டும். உடோபியா என்பது ஒரு கற்பனை என்று இருந்து விடாமல் நம்மால் முடிந்த வரை பொதுவுடமை சிந்தனைகளை தனி நபர்களிடம் வளர்க்க முயற்சிப்போம்.
அன்புடன்,
மா சிவகுமார்
ஒரு சாதாரண உதட்டு சாயத்திற்கு ஒரு உயிர் போவது பற்றி நினைத்தால்....உயிரின் விலை இவ்வளவுதானா என்று நினைக்க தோன்றுகின்றது.சிலர் சக மனிதர்களை மனிதர்களா நடத்துவது இல்லை.எதோ மிருகத்தை விட கேவலமாக தான் நடத்துகின்றார்கள்.மிருகங்களைக் காப்பாற்ற சங்கங்கள் இருகின்றது.ஆனால்.சக மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டும் கணாமல் இருப்பவர்களை என்ன சொல்வது.இப்படி பட்ட சம்பவங்களைப் பார்த்து மனம் மரத்துப் போய் விட்டதா?
நீங்கள் சொல்வது போல, வெறும் உதட்டுச் சாய விவகாரம் இல்லை இது துர்கா. சிறு வயதிலிருந்தே வர்க்கப் பாகுபாடுகளை ஊட்டி வளர்த்த குடும்பமும் சமூகமும் பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது. இந்தக் கொடூரத்தைச் செய்தவர்களுக்கு எங்கிருந்து இத்தகைய மனம் வந்தது? அதை உருவாக்கியதில் நமக்கெல்லாம் மறைமுகமாகவாவது பங்கில்லையா?
மா சிவகுமார்
கண் முன் நடக்கும் அநியாயங்களைப் பார்த்து வாய் மூடி நிற்பது தான் நம்மில் பலர் செய்யும் மறைமுகமான குற்றம்.ஆனால் எப்படி இவர்களுக்கு எல்லாம் இப்படி செய்ய மனம் வருகின்றது?மனிதநேயம் என்பது எல்லாம் வெறும் பேச்சு தானா?
by the way nice picture bro.finally i got to see the face behind all these great posting
"கண் முன் நடக்கும் அநியாயங்களைப் பார்த்து வாய் மூடி நிற்பது தான் நம்மில் பலர் செய்யும் மறைமுகமான குற்றம்."
அவ்வளவு மட்டும் இல்லை துர்கா,
ஒவ்வொரு முறை சக மனிதனை அவமதிக்கும் போதும், இன்னொரு நபரைக் குறைவாக மதிப்பிடும் போதும் நாம் ஒவ்வொருவரும் இத்தகைய இழிவுக்கு அடித்தளம் வகுத்துக் கொடுக்கிறோம். மனதில் எழும் எண்ணங்களில் பிரதிபலிப்பே இந்த சமூகம். நாம் என்ன செய்ய முடியும் என்று இருந்து விட முடியாது. செய்ய நிறைய இருக்கிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
Thanks for the compliment Thurgah :-)
anbudan,
Ma Sivakumar
கருத்துரையிடுக