வியாழன், ஆகஸ்ட் 24, 2006

என்ன விலைக்கு விற்பது? (economics 10)

ஒரு பொருளை விளைவித்து/தயாரித்து சந்தைக்குக் கொண்டு வர செலவுகள் செய்ய வேண்டும். அந்தச் செலவுகளை விட அதிகமான விலை கிடைத்தால்தான் யாரும் அந்த வியாபரத்தில் இறங்குவார்கள்.

ஒரு பொருள் சந்தைக்கு வருவதற்கு அதற்கான நிலம், உழைப்பு, மூலதனச் செலவுகள் விலையை தீர்மானிக்கின்றன. மூன்றையும் பயன்படுத்தி விளைவிக்கும் முறைகளும் விலையைத் தீர்மானிக்கின்றன.

  • ஒருவரிடம் நல்ல செழிப்பான நிலம் இருந்து, மாங்கன்றுகள் நன்கு வளருமானால், அவருக்கு செலவு குறைவு. விளைச்சலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் மொத்த விலைக்கு விற்கவும் அவர் தயார்.

    அடுத்த ஊர் தோட்டத்துக் காரர் அவ்வளவு கொடுத்து வைத்தவர் அல்ல. நிலத்தில் ஏதேதோ போட்டு கெட்டுப் போயிருக்கிறது. பூச்சித் தொல்லையும் அதிகம். ஆண்டு பூராவும் செலவளித்துக் கொண்டே இருந்தால்தான் நல்ல விளைச்சல் பார்க்கலாம். அவருக்கு கிலோவுக்கு பத்து ரூபாய் கிடைத்தால்தான் கட்டுப்படியாகும். மாம்பழ விலை அந்த அளவுக்கு இல்லை என்றால் அவர் மாமரங்களை எடுத்து விட்டு வேறு பயிரிட ஆரம்பித்து விடுவார்.

  • திடீரென்று இந்த ஆண்டு ஒரு புதிய உரத்தை, சாகுபடி முறையைக் கண்டு பிடித்து விட்டார்கள். அதே செலவில் மகசூல் ஒன்றரை மடங்காகி விடுமாம். அதே விலையில் சந்தைக்கு வரும் மாம்பழங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விடும்.

  • கிராமத்தில் இந்த ஆண்டு முதல் ஒரு பெரிய தொழிற்சாலை செயல்பட ஆரம்பிக்கிறது. நிறைய பேர் அங்கு வேலை பார்க்கப் போகிறார்கள், நல்ல சம்பளத்தில். மாந்தோட்டத்து விவசாயிக்கு வேலைக்கு ஆள் கிடைப்பது குறைந்து விடுகிறது. அதிக சம்பளம் கொடுத்தால்தான் யாரும் வேலைக்கே வருவார்கள். அவரது செலவு அதிகமாகி அவர் விற்கத் தயாராக இருக்கும் மாம்பழ விலையும் உயர்ந்து விடும்.

  • வெளி நாடுகளிலிருந்து மாம்பழ இறக்குமதி அனுமதிக்கப்படும் என்று அரசு அனுமதிக்க ஆரம்பித்தால் குறிப்பிட்ட விலையில் கிடைக்கும் மாம்பழங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விடும்.
  1. ஒவ்வொரு விலையிலும், வாங்கக் கூடியவர்கள் வாங்கும் அளவும் விற்கக் கூடியவர்கள் விற்கும் அளவும் வேறு வேறு.
  2. வாங்கும் அளவு விலை குறையக் குறைய அதிகமாகும், விற்கும் அளவு விலை குறையக் குறையக் குறைந்து கொண்டே போகும்.
  3. இந்த இரண்டும் ஒரே அளவில் இருப்பதுதான் சீரான விலை.
  4. இந்த விலைக்குக் குறைவான நிலையில் வாங்குபவர்களின் தேவை விற்பவர்களின் கொடுக்கும் அளவை விட அதிகமாக இருக்கும், அதனால் வாங்குபவர்கள் போட்டுப் போட்டுக் கொண்டு அதிக விலை ஏற்றி விடுவார்கள்.
  5. சீரான விலைக்கு அதிகமான நிலையில் விற்பவர்கள் நிறையக் கொண்டு குவிக்க, வாங்குபவர்கள் இழுத்துப் பிடிப்பார்கள். விற்பவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு விலைத் தள்ளுபடி செய்து சரக்கை தீர்க்க முயல விலை குறைந்து விடும்.
  6. சீரான விலையில் வியாபாரிகள் விற்கக் கொண்டு வரும் அளவு, வாடிக்கையாளர்கள் வாங்கும் அளவுக்கு சரியாகப் போக யாருக்கும் விலையை ஏற்றவோ குறைக்கவோ தேவை இருக்காது.
இந்த சீர் விலை நிலையில் வேறு ஏதாவது மாறினால், மீண்டும் மேலும் கீழுமாக ஊசலாட்டம் ஆரம்பித்து விடும். ஐந்து ரூபாய்க்கு ஐந்து டன் தக்காளி விற்க வியாபாரிகளும், வாங்கும் நுகர்வோர்களும் சரியாக இருக்க, திடீரென்று கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரி கவிழ்ந்து ஒரு டன் தக்காளி நாசமாகி விட்டால் அன்றைக்கு விலை ஏறி விடும். அது நிலை பெறுவதற்கு முன்பு மேலும் கீழுமாக முயற்சிகள் தேவை.

இது எல்லாம் ஏட்டுச் சுரைக்காய். பத்ரியும் டண்டண்டக்காவும் சொல்வது போல நடைமுறையில் பல சிக்கல்கள்.

மேல் சொன்னவை இன்றைய பொருளாதார உலகில் பெரிதும் பொருந்துவதில்லை. திரைப்பட அரங்கில் இருக்கைக் கட்டணமும், குளோபஸ் கடையில் ஆடை விலையும் இந்த அடிப்படையிலா தீர்மானிக்கப்படுகின்றன?

8 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

இந்த தக்காளி விலை ஒரு சமயம் கிலோ ரூ30/20 என்றும், இன்னொரு சமயம் வாங்க யாருமின்றி கிலோ 1ரூபாய்க்கும் குறைவாக இருப்பதற்கும்
காரணம் என்ன?

அது மாதிரி விலை அதிகமாக இருக்கும்போது கறாறாக விற்கும் வியாபிரிகள் விலை குறையும்போது மட்டும் கவலைப்படுவது ஏன்?

கொள்முதல் செய்வோருக்கு கொடுக்கும் விலையை விட குறைந்த விலைக்குத்தானே அந்த வியாபாரி வாங்கி வந்திருப்பார். அப்படியிருக்கு குறைந்த விலையில் விற்பதில் அவருக்கு என்ன கஷ்டம்?

சிறில் அலெக்ஸ் சொன்னது…

டிமாண்ட் அண்ட் சப்ளை நிச்சயம் விலையை நிர்ணயிக்கும் மூலக்கூறுகள்தான். தேவை பொருளின் (வர்த்தக) இருப்பைவிட அதிகரிக்கும்போது விலை அதிகரிக்கின்றது. இப்போ பருப்பு விலை (அமெரிக்காவில்) அதிகமாகிவிட்டது காரணம் பருப்பு இந்தியாவிலிருந்து ஏற்றுமதொ ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்ப ஏன் பருப்பு விலை கிலோ 1000 அல்லது 2000 எனப் போகவில்லை? இருப்பு குறையகுறைய விலை அதிகரிக்கணுமே? ஏன்னா.. பருப்பு விலை ஓரளவு அதிகரித்ததுமே அதற்கு மாற்று தேடிக்கொள்கின்றனர் மக்கள். அதனால் பருப்பு உட்கொள்வது குறைகிறது, இருப்பு அதிகரிக்கிறது.. மீண்டும் விலை குறைகிறது..

திரைப்பட அரங்கில் இருக்கைவிலைகள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் பட்டிருக்கின்றன. எப்படிவேண்டுமென்றாலும் விலை நிர்ணயிக்கலாம் என வைத்தூக்கொண்டால் நிச்சயம் டிமாண்ட் அண்ட் சப்ளையின் விளைவுகளாகத்தான் விலை இருக்கும்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சிபி,

//இந்த தக்காளி விலை ஒரு சமயம் கிலோ ரூ30/20 என்றும், ......

இந்தத் தேவை வழங்கல் ஊசலாட்டம் உடனடியாக நடந்து விடுவதில்லை. தக்காளி இன்றைக்கு நல்ல விலைக்கு விற்கிறது என்று தெரிந்து பல பேர் தக்காளி பயிரிட ஆரம்பித்தால் அது சந்தைக்கு வந்து சேர இரண்டு மாதம் பிடித்து விடலாம். இன்றைய முப்பது ரூபாய் விலையைப் பார்த்து நூற்றுக் கணக்கான விவசாயிகள் தன்னிச்சையாகப் பயிரிட்டதால் இரண்டு மாதம் கழித்து அனைத்தும் சந்தைக்கு வந்து சேரும் போது, அளவு தேவைக்கு மிக அதிகமாகிப் போய் அந்த அளவை விற்றுத் தீரும் வண்ணம் விலை குறைந்து போகிறது.

இதைத் தவிர, ஏதாவது பூச்சித் தாக்குதல் வந்து பயிர் அழிந்து விட்டால், தப்பிப் பிழைத்த காய்களுக்கு அளவு குறைந்த சந்தையில் விலை எகிறி விடுகிறது.

ஒரு விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து நின்று பார்க்க மற்ற எல்லோரும் உட்கார்ந்திருந்தால் எழுந்தவருக்கு நல்ல காட்சி தெரியும், அவருக்கு லாபம். அதே சமயம் எல்லாரும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டால், யாருக்கும் ஆதாயம் இல்லாமல் போய் கால் வலிதான் மிஞ்சும்.

இதே கதைதான் விவசாயப் பொருட்களில் விளைச்சலும், காவிரியில் தண்ணீர் வந்து எல்லோரும் அமோக விளைச்சல் கண்டால் விலை சரிந்து போகும். எல்லோருக்கும் அடிதான். அதைத் தவிர்க்கத்தான் அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை, ஏகபோக கொள்முதல் என்று சந்தை விலையை நெறிப்படுத்த உதவுகிறது.

//இருக்கும்போது கறாறாக விற்கும

ஒரு வேளை 'நேரம் போகப் போக விலை இன்னும் ஏறலாம் இப்போது விற்காவிட்டால் பின்னால் அதிக காசு கிடைக்கலாம்' என்ற எண்ணத்தில் கறாராக இருக்கிறார்களோ? யாராவது வியாபர அன்பர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

//அப்படியிருக்கு குறைந்த விலையில் விற்பதில் அவருக்கு என்ன கஷ்டம்?

சில சமயம் கொள்முதல் விலைக்கும் கீழே கூட விற்க வேண்டியிருக்கும். விலை குறைவு என்று நிறைய வாங்கிப் போட்ட சரக்கு நேரத்துக்குள் விற்றுப் போகா விட்டால், விற்காத பொருள் முழுமையும் இழப்புதானே. அதை விட கிடைத்த விலைக்கு விற்று இழப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் கவலை முகங்கள். கூடவே இன்னும் விலை எப்போது சரியப் போகிறதோ என்ற துடிப்பும். பக்கத்து கடைக்காரன் விற்பனையைப் பெருக்க விலையைக் குறைக்க ஆரம்பித்தால் நாமும் குறைக்க வேண்டியிருக்கு, நஷ்டம் இன்னும் அதிகமாகும் என்ற பதைப்பும் இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ஆமா சிறில்.

தொடர்புடைய பொருட்களின், மாற்றாகப் பயன்படக் கூடிய பொருட்களின் கிடைத்தலும் ஒரு பொருளின் விலை சார்ந்த தேவை அளவு மாற்றம் மாறுபடும். நீங்கள் சொல்வது போல பருப்பு விலை மிக அதிகமாகி விட்டால், அதற்கு மாற்றாக மொச்சைக் கொட்டை பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம். இதை தேவை நெகிழ்ச்சி என்று சொல்கிறார்கள். ஆப்பிள் விலை இன்றைக்கு சந்தையில் மிக அதிகமாகி விட்டால், மாற்றாக ஆரஞ்சுகளை வாங்கிச் செல்ல ஆரம்பித்து விடலாம். கூடுதல் விலையிலும் ஆப்பிள் வாங்குபவர்களும் இருப்பார்கள்.

திரைப்பட இருக்கைக்கு விலை மிக அதிகமாகி விட்டால் வீட்டிலேயே தொலைகாட்சியின் முன் உட்கார்ந்து விடுவார்கள் சிலர், கடற்கரைக்குக் காற்று வாங்கப் போய் விடுவார்கள் இன்னும் சிலர், அப்படி கேட்கப்படும் அளவு குறைந்து விடும். அந்தக் கூடிய விலை கொடுத்தும் படம் பார்க்கும் பிரம்மங்களும் இருக்கத்தான் செய்வார்கள் :-)

நுகர்வோருக்குக் கிடைக்கும் கொசுறு மதிப்பு என்று ஒரு அருமையான தத்துவமும் இருக்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

நேரம் போகப்போக விலைஏறும் அப்புறம் விக்கலாமுன்னு
இருக்க இதெல்லாம் தங்கமா என்ன?

தக்காளி, மாம்பழம் போல அழுகும் பொருள்கள்களை
அக்கம்பக்கத்து விலைக்கோ, இல்லேன்னா அதைவிட
ஒரு ரூபாய் கம்மியாவோ வித்தா சரக்கும் வித்து தீரும்.
இல்லேன்னா அதுகள் அழுகாமல் இருக்க கட்டிக் காப்பாத்தணுமே
குளுர்பதனவசதி அது இதுன்னு செலவு இன்னும் கூடிறாதா?

மா சிவகுமார் சொன்னது…

மிகச் சரி துளசி அக்கா.

அவர் கேட்ட கேள்வி சரக்குக் குறைவாக இருந்து விலை அதிகமாக இருக்கும் நாளில் ஏன் கறாராக இருக்கிறார்கள் என்று. அன்றைக்கு மீந்து போகும் என்ற பயம் குறைவாக இருப்பதால் கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம் என்று நினைப்பார்களோ?

மற்றபடி இத்தகைய சூழலில் வியாபரம் செய்பவர் ஒருவரிடம் கேட்டால் நல்ல பதில் கிடைக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

அழியும் பொருள்களை [PERISHABLES] தேவை குறையும் பொழுது வந்தவிலைக்கு விற்பார்கள். [மலர்.காய்கனி,இறைச்சி,மீன்,பால்]


நெடுவாழ்வுப்பண்டங்களை[DURABLES],தேவை குறையும்பொழுது, இருப்பில் வைத்திருந்து, தேவை அதிகரிக்கும்பொழுது விற்பார்கள்
குளிர்பதனவசதி, சேமிப்புக்கிடங்கு[godown &warehousing fecilities]
வசதிகள் வந்தாலும்கூட அடிப்படை நியதி மாறாது

மா சிவகுமார் சொன்னது…

சிவஞானம்ஜி ஐயா!

இருப்பு குறைவாக இருந்து தேவை அதிகமாக இருக்கும் போது என்ன நிலை? எப்படியும் அன்றைக்குள் விற்றுத் தீர்ந்து விடும் என்று தெரிந்ததால் கொஞ்சம் இழுத்துப் பிடிப்பது இயற்கைதானே!

அன்புடன்,

மா சிவகுமார்