புதன், ஆகஸ்ட் 30, 2006

வரிகளும் சாவும் (economics 13)

வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை வரிகளும் சாவும்தான் என்று ஒரு ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. அரசாங்கம் வரி விதிப்பதற்கு இரண்டு நோக்கங்கள்,
  • செலவுக்குத் தேவையான வருமானத்தைப் பெறுவது ஒன்று.
  • மற்றொன்று, குறிப்பிட்ட செய்கையை செய்யாமல் குறைக்க நினைப்பது.
பெட்ரோல் மீது வரியே இல்லா விட்டால் விலை லிட்டருக்கு இருபது ரூபாய் என்று விற்க முடியுமாம். சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி என்று பல நிலைகளில் பல்வேறு முனைகளில் விதிக்கப்படும் வரி அரசுக்கு வருவாயைக் கொடுக்கிறது. வரி விதிப்பதின் விளைவுகளைப் புரிந்து கொள்வதற்கும் தேவை/வழங்கல் தொடர்பான பொருளாதாரப் புரிதல்கள் பயன்படுகின்றன.

முதலில் வருமான நெகிழ்ச்சி. 90களில் பொருளாதாரச் சீர்திருத்தம் நடந்து கொண்டிருந்த போது பல பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டன. வரி வீதம் குறைந்தாலும், அதனால் பொருட்களின் விற்பனை அளவு அதிகமாவதால் அரசுக்கு வருமானம் அதிகமாகும் என்று கணித்து பெரும்பாலான பொருட்களுக்கு அது சரியாகவே இருந்தது.

  1. இருபதாயிரம் செலவில் சந்தைக்கு வரும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனை மீது 90 சதவீதம் வரி போட்டால், விற்கும் விலை முப்பத்தெட்டாயிரத்தை எட்டி விடும்.
  2. இருபதாயிரத்துக்கு வாங்கியிருக்கக் கூடிய பலர் தொலைக்காட்சிப் பெட்டியே வாங்காமல் விட்டு விடுவார்கள். இப்போது மாதம் பத்தாயிரம் பெட்டிகள் விற்று அரசுக்கு 18 கோடி ரூபாய் (ஒரு பெட்டிக்கு பதினெட்டாயிரம்) வருமானம் கிடைக்கிறது.
  3. வரியை இருபது சதவீதமாகக் குறைக்கும் போது விற்கும் விலை இருபத்தைந்தாயிரத்துக்கு சரிந்து விடும். இப்போது பல குடும்பங்கள், குறைந்த விலையில் வாங்க முன் வருகிறார்கள். அந்த எண்ணிக்கை ஒரு லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பெட்டிக்கு ஐந்தாயிரம் வீதம் ஒரு லட்சம் பெட்டிக்கு ஐம்பது கோடி ரூபாய் வருமானம் கிடைகிறது.

இப்படி தேவை வழங்கல் விதியின் மீது பயணம் செய்து அரசு வருமானம் அதிகரித்து விடலாம்.

இரண்டாவது புதிய வரி ஒன்றைக் கட்டுவது யார் என்ற கேள்வி.

ஒரு பொருளின் தேவை நெகிழ்ச்சி குறைவாக இருக்கும் போது விலை அதிகமானால் வாங்கும் அளவு குறைவது இல்லை. அதனால் வரிச் சுமையை வியாபாரி விலையில் முற்றிலும் ஏற்றி விடுவார். நுகர்வோருக்கு அதை வாங்கியே தீர வேண்டிய தேவை இருப்பதால் அதிகமான விலை கொடுத்து வாங்கி கொள்வார்கள். அரிசி விற்பனையில் வரி விதித்தால் வரி முழுவதும் வாங்குபவர்களின் கையைக் கடிக்கும்.

இதுவே தேவை நெகிழ்ச்சி அதிகமான ஆடம்பரப் பொருட்கள் அல்லது மாற்றுப் பொருட்கள் உள்ளவற்றின் மீதான வரியை ஒட்டி விலையை ஏற்றினால் வாங்கும் அளவு குறைந்து பொருள் தேங்க ஆரம்பித்து விடும். அந்த நிலையில் விற்பனையாளர்கள், தமது லாபத்தைச் சுருக்கிக் கொண்டு வரியின் ஒரு பகுதியை தாமே ஏற்றுக் கொள்ளலாம்.

உப்பு வரி கொடுக்க மாட்டோம் என்று காந்தி போராடியதையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அத்தியாவசியப் பொருளான உப்பின் மீது விதிக்கப்படும் வரி ஏழைகளின் மீது முற்றிலுமாகப் போய் விடுகிறது. அதன் தேவை நெகிழ்ச்சி மிகக் குறைவு. எனவே அதன் மூலம் வருமானம் ஈட்டுவது அரசுக்குத் தகாது என்பதுதான் அந்தப் போராட்டத்தின் அடிப்படை வலிமை.

மூன்றாவதாக வருமானத்துக்காக மட்டுமின்றி வரி விதிப்பின் மூலம் நுகர்வைக் கட்டுப்படுத்துதல். தொண்ணூறுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி பெட்டிகள் முதலானவற்றின் மீது உயர்ந்த வரி விதிக்கப்பட்டதை, அத்தகைய ஆடம்பரப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நியாயப்படுத்தினார்கள். இன்றும் சிகரெட், மது பானம் மீது விதிக்கப்படும் வரிகள் ஆண்டு தோறும் ஏறிக் கொண்டே போகின்றன. யாரும் அதை எதிர்ப்பதில்லை. இந்தப் பொருட்களின் விலை, வரி விதிப்பின் மூலம் ஏறினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு தடையாக மாறும் என்ற சமூகத்தின் நம்பிக்கைதான் அது.

இது போல நல்லொழுக்கக் காரணங்களுக்கான வரி வருமானத்தை கணக்கில் எடுத்து ஒரு அரசு செயல்படும்போது பல கேள்விகள் எழுகின்றன. மது விற்பனையில் வருமானம் வருகிறது என்று அரசே அதைக் கையில் எடுத்து, விற்பனை பெருக எல்லா நடவடிக்கை எடுப்பது, மதுவின் மீதான வரியின் நோக்கத்தையே பாழ் படுத்தி விடுகிறது கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கும் மூடரைப் போல, உடனடி வருமானத்துக்காக தம் மக்களின் வருங்கால நலனைப் பணயம் வைக்கின்றன அரசுகள்.

  • வரிகளுக்கு நேர் எதிரானவை மானியங்கள். குறிப்பிட்ட பொருளின் விலையைக் குறைக்க மானியம் அளிப்பதும் பரவலாக நடக்கிறது. நியாய விலைக்கடையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை போன்றவை குறிப்பிடத் தக்கவை.
  • இன்னொரு முறை விலைக் கட்டுப்பாடு. அரிசி கிலோ பதினைந்து ரூபாய்க்கு மேல் யாரும் விற்கக் கூடாது என்று விலைக் கட்டுப்பாடு கொண்டு வருவதும் நடக்கின்றன.

    அப்போது என்ன நடக்கும்? சந்தை விலையான இருபது ரூபாய்க்கு வாங்குவதை விட பதினைந்து ரூபாய்க்கு வாங்குபவர்களின் எண்ணிக்கை பெருகி விடும். ஆனால் விற்பவர்களின் வழங்கல் அளவு அந்தக் குறைந்த விலையில் குறைந்து விடும். இரண்டுக்கும் நடுவிலான வேறுபாட்டினால் பலருக்கு அரிசி கிடைக்காது. முதலில் வந்தவர்கள் இருப்பதை வாங்கிச் சென்று விட தாமதமாக வருபவர்களுக்கு வெறுங்கைதான்.

    இதைச் சமாளிக்க செயற்கையான சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை கொடுத்து நபருக்கு இத்தனை கிலோதான் என்று முதலில் வருபவர் நூறு கிலோ வாங்கத் தயாராக இருந்தாலும் (விலை குறைவாச்சே), ஐம்பது கிலோ மட்டுமே கொடுத்து மிச்சப்படுத்திக் கொண்டால், கடைசி வரை வருபவர்களுக்கு அவர்கள் பங்கைக் கொடுத்து விடலாம். இதிலும் பல சிக்கல்கள். எத்தனை கிலோவில் மட்டுப் படுத்த வேண்டும் என்று கணக்குப் போடுவது எளிதான வேலை இல்லை.

    கையில் பசை அதிகமாக உள்ளவர்கள் மற்றவர்கள் கண்ணில் படாமல் கடைக்காரரிடம் பின் வாசலில் பேரம் பேச ஒரு கள்ளச் சந்தை உருவாகி நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக காசு கொடுத்து அவருக்குப் பொருள் கிடைத்து விடுகிறது. இதில் எல்லாம் ஒவ்வொருவருக்கும் நேரச் செலவும் மன உளைச்சலும் ஏராளம்.

14 கருத்துகள்:

SP.VR. SUBBIAH சொன்னது…

சாவும் வரியும் எப்படி ஒன்றாகும் நண்பரே?
சாவு ஒரு முறைதான் வரும் - அதுவும் நம் சாவிற்கு நாம் எதுவும் செலுத்த வேண்டாம்!

வரி அப்படியா?

பஞ்சாயத்து, நகராட்சி, மாநில அரசு, மத்திய அரசு என்று எத்தனை வரி வசூலிப்பாளர்கள் - அதுவும் வருடந்தோறும் - நம் ஆயுள் முழுவதும்!

இப்போது சொல்லுங்கள் சாவும் வரியும் ஒன்றாகிவிடுமா?

ஆனால் வரிகள் நம்மைத் தினமும் சாகடிப்பதென்னவோ உண்மைதான்!

ஜயராமன் சொன்னது…

சிவகுமார் ஐயா,

அழகாக எழுதுகிறீர்கள். தமிழில் பொருளாதாரம் படிப்பது மிகவும் சுவையாக ஆனால் வினோதமாக இருக்கிறது. ஆங்கில பதங்களுக்கு (நெகிழ்ச்சி - elasticity ) தமிழை காணும் போது, பரிச்சயமில்லாத்தால் கொஞ்சம் யோசித்து புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

மற்றபடி எளிதாக ஆனால் அழகாக இருக்கிறது.

மேலும் எதிர்பார்க்கிறேன்.

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

Sp.vr.subbiah said...
/சாவும் வரியும் எப்படி ஒன்றாகும்..//

மனிதனுக்கு சாவு நிச்சயம்;
மனிதன் வரி கொடுப்பதும் நிச்சயம்.

இரண்டையும் மனிதரால் தவிர்க்கவே முடியாது

இவையிரண்டை மட்டும்தான் மனிதரால் தவிர்க்கவே முடியாது

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

வேடிக்கையாகச் சொல்வார்கள்:
சம்பாதித்தால் வருமான வரி;
மிச்சம் பிடித்து சொத்து வாங்கினால்
சொத்து வரி;
'சொத்து வாங்கவேண்டாம்;செலவு செய்து தீர்ப்போம்' என்றால் செலவு வரி;
'சொத்தும் வேண்டாம்;செலவிடவும் வேண்டாம்;உறவுகளுக்கும் நட்புகளுக்கும் பரிசாகக் கொடுத்து விடுவோம்' என்றால் பரிசு வரி;
'இந்தப் பிரச்சினைகளே வேண்டாம்;
செத்துத் தொலைப்போம் என்றால் மரணத்தீர்வை!death duty]

வரிவிதிப்பிற்கு உட்படுத்தப் படாதவர்கள் இரு பிரிவினர்தாம்--
இதுவரை பிறக்காதவர்களும் இறந்துவிட்டவர்களும் [stillborn and
the dead]

SP.VR. SUBBIAH சொன்னது…

வரியை ஏய்த்துக்கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்
நண்பரே ( Tax Evaders)

ஆனால் சாவை ஏய்த்தவர் என்று ஒருவதாவது உண்டா?

அதனால்தான் சொன்னேன் Take it in the right sense - It is not for any type of argument Hi.,hi..[:}}}}}}}}}}}}}}}}

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

SP.VR.SUBBISH said........
//வரியை ஏய்த்துக்கொண்டிருப்பவர்கள்
இருக்கின்றார்கள் நண்பரே//

வரிஏய்ப்பு சட்டத்திற்குப் புறம்பான தண்டனைக்கு உரிய குற்ற நடவடிக்கை
அல்லவா?

நானும் வாதத்திற்காக சொல்லவில்லை;பல தரபட்டார்களஉம்
படிப்பதால்தான் குறிப்பிட்டேன்

i took it in the right sense...o.k?

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

முந்தைய பின்னூட்டத்தில் "பலதரப் பட்டவர்களும்...."என்று படிக்கவும்

வரிஏய்ப்போரும் மறைமுகவரி கொடுக்கின்றனர் அல்லவா?

மா சிவகுமார் சொன்னது…

சுப்பையா ஐயா,

வரிகள் குறித்து மிக நொந்து போயிருக்கிறீர்கள் போலிருக்கிறது. சிவஞானம்ஜி சொன்னது போல நம் கையில் இல்லாத நம்மால் தவிர்க்க முடியாதவை வரிகளும், சாவும் என்பதுதான் அந்தப் பழமொழியின் பொருள் என்று புரிந்து கொண்டிருக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

///இந்தப் பிரச்சினைகளே வேண்டாம்; செத்துத் தொலைப்போம் என்றால் மரணத்தீர்வை!death duty]

அருமையான குறிப்பு, நன்றி ஐயா.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ஜெயராமன்,

பொருளாதாரம் பற்றிய உங்கள் அனுபவங்களை விளக்கமாக எழுதினால் எல்லோருக்கும் பலனளிக்கும். கொஞ்சம் முயற்சியுங்களேன் பிளீஸ்.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//'இந்தப் பிரச்சினைகளே வேண்டாம்;
செத்துத் தொலைப்போம் என்றால் மரணத்தீர்வை!death duty]

வரிவிதிப்பிற்கு உட்படுத்தப் படாதவர்கள் இரு பிரிவினர்தாம்--
இதுவரை பிறக்காதவர்களும் இறந்துவிட்டவர்களும் //
நல்ல வரிகள் சிவஞானம்ஜி.. இதை ஆங்கிலத்தில் எங்கோ படித்திருக்கிறேன்..

சிவகுமார், சிவஞானம்ஜி,
இந்த மரணத் தீர்வை நம் நாட்டிலும் இருக்கிறதா என்ன?
அத்துடன், நம் நாட்டைப் பொறுத்தவரை இந்த வரி என்பது பிறக்கப் போகிறவர்கள், இறக்கப் போகிறவர்கள் என்பதைத் தவிர, சம்பாதிக்கப் போகிறவர்கள் /வருமானம் அற்றவர்கள் என்ற வகுப்பினரால் கட்டப்படாததாகவே உள்ளது இல்லையா? வருமானம் இல்லாதவர்கள் வரி ஏன் கட்டப் போகிறார்கள்? உதாரணத்துக்கு மாணவர்கள், குழந்தைகள்.. 1 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் இப்படி?

நம் நாட்டில் பல பேர் பான் கார்டே எடுக்க வில்லையாமே!

மா சிவகுமார் சொன்னது…

எனக்குத் தெரிந்து இந்தியாவில் வாரிசுரிமை வரி இல்லை பொன்ஸ், அமெரிக்காவில் இந்த வரியை எதிர்ப்பவர்கள் கொடுத்த பெயர்தான் மரணத்தீர்வை என்பது. செத்தாலும் வரி கட்ட வேண்டும் என்று அரசை குறை கூறும் சொல் அது. :-)

ஒரு சுட்டி.

//நம் நாட்டைப் பொறுத்தவரை இந்த வரி என்பது பிறக்கப் போகிறவர்கள், இறக்கப் போகிறவர்கள் என்பதைத் தவிர, சம்பாதிக்கப் போகிறவர்கள் /வருமானம் அற்றவர்கள் என்ற வகுப்பினரால் கட்டப்படாததாகவே உள்ளது இல்லையா?//


எல்லா நாட்டிலுமே வருமானம் குறிப்பிட்ட அளவுக்குக் கீழே இருப்பவர்கள் வருமான வரி கட்ட வேண்டியதில்லைதான். இந்தியாவில் பிரச்சனை வருமானம் வரம்பிற்கு அதிகமாக இருப்பவர்களும் எப்படியாவது வரியை ஏய்க்க முனைவதுதான். அதனால்தான் அரசின் வருமானத்தில் பெரும்பகுதி மறைமுக வரிகளான, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி மூலம் வருகின்றது.

நேர்முக வரிகள் பணக்காரர்களிடம் அதிகமாகவும் ஏழைகளிடம் குறைவாகவும் வசூலிக்கப்படுகின்றன. மறைமுக வரிகள் எல்லோரிடமும் ஒரே வீதத்தில் வசூலிக்கப்படுவதால் ஏழைகள் மீதான சுமை வருமானத்தின் வீதமாகப் பார்க்கும் போது பெருஞ்சுமையாக இருக்கின்றன. எனவே நேர்மையான முன்னேறிய சமூகங்கள் நேர்முக வரிகளைத்தான் நம்பியிருக்க வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//எல்லா நாட்டிலுமே வருமானம் குறிப்பிட்ட அளவுக்குக் கீழே இருப்பவர்கள் வருமான வரி கட்ட வேண்டியதில்லைதான். //
அமெரிக்கா, பிரிட்டீஷ் போன்ற நாடுகளைப் பொறுத்தவரை மிகக் குறைந்த அளவு சம்பாதிப்பவர்களும் வரி கட்டவேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உறுதியாகத் தெரியாது. அப்படி இல்லையா?

//அதனால்தான் அரசின் வருமானத்தில் பெரும்பகுதி மறைமுக வரிகளான, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி மூலம் வருகின்றது.
//
அப்படியானால், இந்த வரிகள் மற்ற வரி ஏய்க்காத நாடுகளில் இல்லை என்கிறீர்களா? அல்லது இந்த வரிகள் மற்ற நாடுகளில் ஒப்பீட்டில் குறைவா?

//எனவே நேர்மையான முன்னேறிய சமூகங்கள் நேர்முக வரிகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். //
இது போல் நேர்முக வரிகளை மட்டுமே நம்பி இருக்கும் நாட்டுக்கு இப்போதைய உலகில் உதாரணம் ஏதும் இருக்கிறதா?

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

//மிகக் குறைந்த அளவு சம்பாதிப்பவர்களும் வரி கட்டவேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.//

அப்படி இல்லை வருமான வரியின் நோக்கமே அதிகமாக வருமானம் உள்ளவர்களிடமிருந்து அதிகமாக வரி பிரிப்பதுதான்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த வரம்பு வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அமெரிக்காவில் $5000 வரை வரி இல்லை. அதற்கு மேல் 10% என்று ஆரம்பித்து சதவீதம் வருமானத்துக்கு ஏற்ப அதிகமாகிக் கொண்டே போகிறது.

பார்க்க சுட்டி.

//இந்த வரிகள் மற்ற நாடுகளில் ஒப்பீட்டில் குறைவா?//

ஆமாம்.

முற்றிலும் நேர்முக வரிகளையே நம்பி இருக்கும் நாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

முன்னேறிய நாடுகளில் நேர்முக வரிகளின் பங்கு மறைமுக வரிகளின் பங்கை விட அதிகமாக இருக்கிறது. பொதுவாக மக்கள் பொறுப்புணர்ச்சியும், நேர்மையாகவும் இருக்கும் நாடுகளில்தான் இது சாத்தியம்.

இந்த படத்தைப் பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்