வியாழன், ஆகஸ்ட் 31, 2006

கடைசி அலகு (economics 14)

ஒருவரது தனிப்பட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஒரு பொருளுக்கான அவரது தேவை மாறுபடுகிறது, இப்படி எல்லோரது விருப்பங்களையும் பார்த்தால் ஒட்டு மொத்த தேவை அளவு உருவாகி, சந்தை விலையைத் தீர்மானிக்கின்றது என்று பார்த்தோம்.

ஒருவரது விருப்பத்தைத் தீர்மானிப்பது எது? ஒரு பொருளை வாங்கினால் கிடைக்கு பலனைப் பொறுத்து அதன் மீதான விருப்பம் இருக்கும். பலன் அதிகமான பொருளின் மீது விருப்பம் அதிகம், இல்லாமலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற பொருட்களின் மீது விருப்பம் குறைவாக இருக்க வேண்டும். இதனால் அவற்றின் விலையும் பலனை ஒட்டிதான் அமைய வேண்டும்.

ஆனால் நடைமுறையில் இந்தப் பருப்பு வேகுவதில்லை.
  • நம் உயிர் வாழ இன்றியமையாத தண்ணீரின் விலை லிட்டருக்கு சில பைசாக்கள்தாம்.
  • காற்றுக்கோ விலையே இல்லாமல் இலவசமாகக் கிடைக்கிறது.
  • இன்னொரு பக்கம் போதை ஏற்றிக் கொள்ள உதவும் விஸ்கி அரை லிட்டருக்கு எழுபது எண்பது ரூபாய்
  • ஹெராயின் கிராமுக்கு இரண்டு மூன்றாயிரம் ரூபாய் என்றும் விற்கிறது.
தண்ணீரை விட விஸ்கி பலன் அதிகமானது என்று யாரும் சொல்ல முடியாது. அப்புறம் ஏன் விலை இப்படி இருக்கிறது?

இதற்கு விடை சுலபமானது. தண்ணீர் கிடைக்கும் அளவு ஏராளமாக இருப்பதால் விலை குறைவாகவும், விஸ்கியின் விற்பனை அளவு குறைவாகவே இருப்பதால் விலை அதிகமாகவும் இருக்கின்றன. சொல்லப் போனால் ஒரு பொருளின் சந்தை விலை வாங்குபவருக்குக் கிடைக்கும் பலனுக்குச் சமமாக இருக்காது.

  • வாங்கும் முதல் லிட்டர் தன்ணீருக்கு ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராக இருப்போம்.
    குடிப்பதற்கு அது இல்லாவிட்டால் உயிரே போய் விடும்.

  • ஆனால் கிடைக்கும் அளவு கூடக் கூட நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் விலையும் குறைந்து கொண்டே போகிறது.

  • தோட்டத்துக்கு நீர் பாய்ச்சத் தேவைப்படும் நீருக்கும் லிட்டருக்கு பத்து பைசா கூட கொடுக்கத் தயாராக இல்லை. அவ்வளவு தண்ணீர் இருப்பதால் விற்பவரும் பத்து பைசாவுக்கு விற்க முன் வருகிறார்.
இங்குதான் ஒரு அருமையான விஷயம் மூக்கை நுழைக்கிறது.

பொருளின் விலை இப்படி சந்தையில் கிடைக்கும் கடைசி அளவுக்கு வாங்குபவர்கள் கொடுக்கத் தயாராக இருப்பதாகத்தான் இருக்கும். முதல் லிட்டர் தண்ணீரும் அதே விலையில் கிடைத்து விடுகிறது.

நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் விலை, பொருளை இன்னும் ஒரு கிலோ அல்லது லிட்டர் வாங்கினால் என்ன பலன் கிடைக்குமே அந்த நிலையில் அமைந்து விடுகிறது. அப்படிக் கடைசிப் பயன்பாட்டைப் பொறுத்து நமது விருப்பங்களை மாற்றிக் கொள்கிறோம்.

பத்து ரூபாய் கொடுத்து ஆனந்த விகடன் வாங்குவதனால், எட்டு ரூபாய்க்கு விற்கும் மாம்பழம் வேண்டாம் என்று சொல்லி விடவில்லை. ஏற்கனவே மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டு விட்ட பிறகு பத்து ரூபாய் கொடுத்து இன்னும் ஒரு கிலோ வாங்குவதால் கிடைக்கும் நிறைவு ஆனந்த விகடன் கொடுக்கும் நிறைவை விடக் குறைவு. ஆனால் மொத்தமாகப் பார்த்தால் மாம்பழம் கொடுக்கும் பலன் ஆனந்த விகடனின் பலனை விட அதிகம்தான். இந்தப் பத்து ரூபாய்க்கு மாம்பழம் கொடுக்கும் கடைசி மதிப்புக் குறைவு.

இந்தக் கடைசி அலகு அணுகுமுறை பொருளாதாரவியலின் ஒரு அருமையான விஷயம். இதைப் பயன்படுத்தி பல நடைமுறைகளை விளக்கி விடுவார்கள்.

இன்னும் தைரியமாகச் சொல்லப் போனால் இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு முழம் பூ ஒரு அம்மா வாங்குகிறார்கள் என்றால், அவருக்குத் தெரிந்த மற்ற எல்லாப் பொருட்களின் கடைசிப் பயன்பாடு இந்த ஒரு முழம் பூவின் பலனை விடக் குறைவு என்று சொல்லலாம். ஒவ்வொரு ரூபாய் செலவளிப்பதிலும் இப்படி கடைசி அலகு கொடுக்கும் நிறைவு எல்லாப் பொருட்களுக்கும் சமமாக அமையும் வண்ணம் பார்த்துக் கொள்கிறோம்.

இதை எல்லாம் கணக்குப் போட நாம் ஒரு பெரிய கணினியைத் தூக்கி கொண்டு அலைய வேண்டியதில்லை. நம்முடைய மனமே அந்த வேலையைச் செய்து விடுகிறது. பல்லாயிரக் கணக்கான பொருட்களின் கடைசி அலகுப் பலனை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு முடிவிலும் நமக்கு அந்த உணர்வு சரியான வழி காட்டுகிறது.

அதுதான் ஒரு பொருளின் மீதான் விருப்பத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதைக் கவனமாகப் படித்துச் சரிவரப் புரிந்து கொண்டவர்களுக்கு இன்னொரு உண்மை புரியும். அது என்ன?

10 கருத்துகள்:

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

கடைசி அலகு= இறுதிநிலை அலகு
marginal unit

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஐயா,

அன்புடன்,

மா சிவகுமார்

பத்மா அர்விந்த் சொன்னது…

சிவகுமார்
சில சமயம் பொருளின் மதிப்பு நமக்கு கிடைக்ககூடிய அல்லது கிடைப்பதாக கருதக்கூடிய பலனகளியும் விடுத்து அரசு சார் கொள்கைகள், நமது சமுதாய அங்கீகாரம் என புலப்படாத காரணிகளாலும் விலை நிர்ணயிக்கப்படும்.சில சமயங்களில் தேவைகளின் முக்கியத்துவமும் பொருளின் விலையை (அதை கொடுக்க நம் தயார் நிலை) நிர்னயிக்கும்.இந்த பதிவு அந்த தயார் நிலையை சொல்கிறது

மா சிவகுமார் சொன்னது…

வாங்க தேன் துளி,

நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் விலையை விட மிகக் குறைந்த விலையிலேயே நமக்கு பொருட்கள் கிடைத்து விடுவதுதான் சமூக வாழ்வின் மிகப் பெரிய பலன்களில் ஒன்று. அதை கெட்டிக்காரத்தனமாக திரித்து தமக்கு சாதகமாகத் திருப்பிக் கொள்ளும் வியாபாரங்கள் சமூகத்துக்குக் கேடு விளைவிக்கின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்

பத்மா அர்விந்த் சொன்னது…

Business understand the buyer's opportunity cost or try to understand their buyer's surplus. Thats also a reason for excessive margin set during the early adoption period and during prohibition or famine

மா சிவகுமார் சொன்னது…

Yes, Exactly.

Businesses are all about exploiting their staying power against workers, consumers and suppliers. It is might is right situation.

If we look at it objectively, businesses are artificial entities created based on government (social) laws. They have no right to exist without social/governmental approval. The approval is available only when business activities are beneficial to the society.

The society, government have all the right to cancel/restrict business rights when a business harms social interests.

But in the so called modern liberal society, any attempt to regualte businesses is regarded as anti social, communist and backward.

I am just trying to understand these issues. Waiting to make sense of what really happens!

anbudan,

Ma Sivakumar

பத்மா அர்விந்த் சொன்னது…

அன்புள்ள சிவகுமார்
உங்கள் ஆதங்கம் புரிகிறது. உண்மியில் விற்பனி நிறுவனங்கள் (அமெரிக்காவில் மருந்து நிறுவங்கள்) தேர்தலின் போது நிறைய பொருளை (soft money) தருவதன் மூலம் அரசியல் கட்சிகளை பிடித்து விடுகின்றனர். மக்களிடையே தங்கள் இலாபத்தில் 1 சதவிகிதம்(goodwill) பொது நலத்திற்காக செலவிட்டு அவர்ளை மாயையில் ஆட்கொள்கின்றனர். காங்கிரஸில் தொடர்ந்த லாபியின் மூலம் தங்களுக்கு சாதகமாக செயலாற்ற வைக்கின்றனர். இது ஒரு க்சப்பான உண்மை. உங்கள் கட்டுரைகளை நான் விரும்பி படிக்கிறேன். நன்று

கைப்புள்ள சொன்னது…

//இன்னும் தைரியமாகச் சொல்லப் போனால் இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு முழம் பூ ஒரு அம்மா வாங்குகிறார்கள் என்றால், அவருக்குத் தெரிந்த மற்ற எல்லாப் பொருட்களின் கடைசிப் பயன்பாடு இந்த ஒரு முழம் பூவின் பலனை விடக் குறைவு என்று சொல்லலாம். ஒவ்வொரு ரூபாய் செலவளிப்பதிலும் இப்படி கடைசி அலகு கொடுக்கும் நிறைவு எல்லாப் பொருட்களுக்கும் சமமாக அமையும் வண்ணம் பார்த்துக் கொள்கிறோம்.

இதை எல்லாம் கணக்குப் போட நாம் ஒரு பெரிய கணினியைத் தூக்கி கொண்டு அலைய வேண்டியதில்லை. நம்முடைய மனமே அந்த வேலையைச் செய்து விடுகிறது. பல்லாயிரக் கணக்கான பொருட்களின் கடைசி அலகுப் பலனை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு முடிவிலும் நமக்கு அந்த உணர்வு சரியான வழி காட்டுகிறது.//

அழகாக விளக்கியுள்ளீர்கள். இந்த பொருளியல் தத்துவத்தின் அடிப்படையில் தான் மார்கெட்டிங்கின்(Marketing) ஆதாரமும் உள்ளது. நான் இந்கு சொல்ல வருவது மேற்குறிப்பிடப்பட்டுள்ள தத்துவத்தின் நடைமுறை உதாரணம்(Practical application). சற்றே வேறு விதமாகக் கூற வேண்டுமானால், ஒரு பொருளை ஒருவர் ஏன் வாங்குகிறார் என்று பார்ப்போமாயின் அவருக்கு அந்நேரத்தில் அப்பொருளுக்கானத் தேவை(need) இருக்கும். தேவை இல்லாத போதும் அதை உருவாக்கி, பின்னர் அத்தேவையை நிரைவேற்ற முடியும் என்பதும் ஒரு சாராரின் கூற்று. அதை பற்றி நாம் இங்கு ஆய வேண்டாம். ஒருவரின் தேவயைச் சரி வர புரிந்து கொண்ட இன்னொருவரால், அத்தேவையை நாடுவோரின் எதிர்ப்பார்ப்புகளை எளிதாகப் பூர்த்தி செய்து ஒரு கைதேர்ந்த விற்பனையாளர்(seller) ஆக முடியும்.

உதாரணமாக வயிறார உணவு உண்டவனிடத்தில் ஐந்து ரூபாய்க்கு ஒரு பிரியாணி பொட்டலத்தையும் ஒரு பான் பீடாவையும் கொடுத்து இரண்டில் ஒன்றைத் தேர்ந்து எடுக்கச் சொல்வோம் ஆயின், அநேகமாக அவன் பீடாவைத் தான் தேர்ந்தெடுப்பான். ஐந்து ரூபாய்க்கு பிரியாணி பொட்டலம் எங்குமே கிடைக்காது போனாலும், வயிறார உண்ட ஒருவனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து பீடா வாங்குவது அவன் உண்ட உணவு செறிமானம் ஆக வழிவகுக்கும் ஆதலால், அந்நேரத்தில் பீடாவிலேயே அவன் அதிகப் பயன்பாட்டைக் காண்பான். அதே நேரம் கொலை பட்டினியாக இருக்கும் ஒருவனிடத்தில் ஐந்து ரூபாய்க்கு பிரியாணி பொட்டலம் என்று அறிவித்தால், ஒரு வேளை ஒன்றுக்கும் மேற்பட்டப் பொட்டலங்களை அவனிடம் ஒரு விற்பனையாளரால் விற்க முடியலாம். அவனுக்குப் பான் பீடாவின் பயன்பாடு அந்நேரம் குறைவாகத் தோன்றும். இந்த முடிவினை எடுக்க உதவுவது எது? அப்பொருளுக்கானத் தேவையும் பயன்பாடும்(பொருளியல் கோட்பாடுகளின் படி 'கடைசி அலகுப் பயன்') அத்தேவையை அறியச் செய்யும் அவன் மனதும்.

மா சிவகுமார் சொன்னது…

தேன்துளி,

விளக்கமான கருத்துக்கு நன்றி.

அரசாங்கம் == மக்களின்/ சமூகத்தின் பிரதிநி
வணிக நிறுவனம் == சமூக நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட/அனுமதிக்கப்பட்ட ஒரு அமைப்பு

இதுதானே அவற்றின் ஆரம்ப நியாயங்கள். இன்றைக்கு அரசுகளும், வணிக நிறுவனங்களும் சமூகம் இருப்பதே தமக்கு ஆதாயம் கிடைக்கத்தான் என்ற போக்கு ஆரம்பித்து விட்டது.

இது மாற வேண்டும். இன்றைக்கும் சமூக விழிப்புணர்வுடன் செயலாற்றும் வணிக நிறுவனங்களும் உள்ளன.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

கைப்புள்ள,

இயற்கையாகவே நாம் அப்படி கடைசி அலகுப் பலன் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கிறோம். உங்கள் பிரியாணி, பீடா எடுத்துக் காட்டில் பிச்சைக்காரனுக்கு பிரியாணியில் கிடைக்கும் மதிப்பும், பீடாவில் கிடைக்கும் மதிப்பும் யாராலும் மூளைச் சலவை செய்து வந்தது இல்லை. அதுவரை இருக்கும்வரை எந்தச் சிக்கலும் இல்லை.

அதை புத்திசாலித்தனமாக கையாண்டு பெரும்பாலனவரை மொட்டை அடித்துதான் ஒரு நிறுவனம் பிழைக்க வேண்டும் என்று இருப்பதுதான் இன்றைய அவலம்.

அன்புடன்,

மா சிவகுமார்