வெள்ளி, ஆகஸ்ட் 25, 2006

நடைமுறைக்கு உதவுமா? (economics 11)

பலர் பின்னூட்டங்களில் சொன்னது போல நடைமுறையில் இது வரை பேசிய எதுவுமே மிகச் சில நேரங்களில்தான் நடக்கின்றன. ஆனால், அடிப்படைக் கோட்பாடுகள் மாறாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அடிப்படைக் கொள்கைகளைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

எந்தச் சந்தையிலுமே மிகச் சரியான போட்டி என்று இருப்பது இல்லை. வாங்குபவர்களில் சிலரோ, விற்பவர்களில் சிலரோ விலையை தமது விருப்பப்படி அமைத்துக் கொள்ளும் நிலை இருந்தால் அது சரியான போட்டி இருக்கும் சந்தை ஆகாது.

  1. பெரும்பாலும் காய்கறி விற்பனை இந்தப் போட்டி நிலையை அடைந்து விடுகிறது. காய்கனி விளைவிப்பவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில். வாங்குபவர்களும் எண்ணிக்கையில் லட்சக்கணக்கில்.
    பொருள் சீக்கிரம் கெட்டுப் போய் விடும் சாத்தியங்கள் இருப்பதால் யாரும் பதுக்கி வைக்கவோ, மொத்தமாக வாங்கி சந்தையில் விளையாடவோ வாய்ப்புகள் குறைவு.

  2. நாகர்கோவிலில் தேங்காய் விவசாயிகள் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட விலைக்குக் கீழ் யாரும் தேங்காய் விற்க மாட்டோம் என்று செயற்கையாக விலையை அதிகமாக்க முயன்றார்கள்.

    வாங்குபவர்களின் தேவைக்கு உகந்ததாக விற்பனைக்கு வரும் அளவு அனைத்தையும் வாங்கித் தீர்த்து விடும் விலையை விட அதிக விலைக்கு ஒரு பொருள் விற்க ஆரம்பித்தால், வாங்கும் அளவு குறைந்து விடும்.

    அதிக விலை கிடைப்பதால் சந்தைக்கு வந்து சேரும் அளவு அதிகமாகி விடும்.

    கடைசியில் என்ன நடக்கும் என்றால் கூடுதல் விலையில் விற்றுப் போகாமல் தேங்காய்கள் தேங்க ஆரம்பித்து விடும். வந்தது லாபம் என்று ஒரு சிலர் கட்டுப்பாட்டை மீறி விலையைக் குறைத்துத் தமது விளைபொருளை தள்ளி விட ஆரம்பிப்பார்கள்.

  3. நான் சின்ன வயதில் (இருபது ஆண்டுகளுக்கு முன்), கடைக்கு முடி வெட்டப் போனால் ஒருவருக்கு முக்கால் ரூபாய், ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய் என்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். நாகர்கோவிலில் கொஞ்சம் பெரிய கடைக்குப் போனால் மூன்று ரூபாய் வாங்கியிருக்கலாம். ஒரு நாள் தினமலரில் ஒரு செய்தி, தமிழக நாவிதர்கள் சங்கம் இனிமேல் ஒரு முடிவெட்டுக்கு பத்து ரூபாய் என்று கட்டணம் தீர்மானித்து இருப்பதாகவும், தமிழகமெங்கும் இந்தக் கட்டணத்தில்தான் முடி வெட்டிக் கொள்ள முடியும் என்றும் வெளியிட்டிருந்தார்கள்.

    அடுத்த முறை நாங்கள் வழக்கமாகப் போகும் விஜயன் அண்ணன் கடைக்குப் போனால் ஒரு அறிவிப்புத் தொங்குகிறது. பத்து ரூபாய்க்குக் குறைந்து முடி வெட்டப்பட மாட்டாது என்று. ஓரிரு மாதங்கள் முணுமுணுத்துக் கொண்டு எல்லோருமே அந்த விலை கொடுத்து முடி வெட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

    இங்கு விலை அதிகமானதால், முடி வெட்ட மாட்டேன் என்றோ, மாதத்துக்கு ஒரு முறை வெட்டுவதை ஆறு மாதத்துக்கு ஒரு முறை என்று வைத்துக் கொள்வேன் என்றோ சொல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

  4. கோலா பானங்களின் விற்பனைக்கான சந்தையில் ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே இருப்பதால் அங்கு ஆதம் ஸ்மித்தின் கோட்பாடுகள் படி விலை அமைவதில்லை. நீண்ட கால நோக்கில் அங்கும் இந்தத் தேவை, வழங்கல் இழுவையில்தான் விலை அமைகிறது. விளம்பரங்கள் எல்லாம் நுகர்வோரின் தேவை உணர்வை அதிகப்படுத்தும் முயற்சிகள்தாம். பூச்சிக் கொல்லி விவாதம் கிளம்பும்போது அதற்கு எதிர்மறை விளைவு ஏற்படுகிறது.
இப்படி, விலை ஏறும் போது தேவைப்படும் அளவு எவ்வளவு குறையும் என்பதும் முக்கியமானது. ஒரு ரூபாய் ஏறினால் எவ்வளவு அளவு குறையும். மறு பக்கத்தில், விலை ஏறும் போது அளிக்கப்படும் அளவு எவ்வளவு அதிகமாகும் என்பதும் முக்கியமானது. ஒரு ரூபாய் ஏறினால் எவ்வளவு அளவு அதிகமாகும்?

இப்படி விலை ஏற்றத்துக்கு ஏற்ப வாங்கும் / விற்கும் அளவு மாறுவதைக் கணக்கிடுவதற்கு தேவை நெகிழ்ச்சி மற்றும் கொடுத்தல் நெகிழ்ச்சி என்றவற்றைப் பயன்படுத்தலாம்.

வெவ்வேறு பொருள்களின் தேவை நெகிழ்ச்சி மாறுபடும்.

சிவஞானம்ஜி ஐயாவின் வல்லுனர் கருத்துக்கள் :

"தேவையும் அளிப்பும் விலையை ந்ர்ணயிக்கின்றன. எனில் இவை இரண்டில் எது முக்கியம்? அது காலத்தைப் (time element)பொறுத்தது என்று ஆல்fரெட் மார்ஷல் விளக்குகின்றார்.கால அம்சத்தின் அடிப்படையில் சந்தையை 4 வகைகளாக அவர் பிரிக்கின்றார்:

  1. மிகக்குறுங்காலம் அல்லது சந்தைக்காலம் very short period or market period அளிப்பை மாற்றவே முடியாது.
    தேவைதான் விலையை நிர்ணயிக்கும்.

  2. குறுங்காலம் short period {உற்பத்திக்காரணிகளின் அளவை மாற்றாமல்} இருப்பதைக் கொண்டு அளிப்பை ஓரளவு அதிகரிக்கமுடியும்.
    ஆகவே இங்கு அளிப்பை ஓரளவு அதிகரிக்கமுடியும் எனினும் தேவைக்குதான் முக்கிய இடம்.

  3. நெடுங்காலம் long period தேவை தொடர்ந்து அதிகரிக்குமெனில் உற்பத்தி காரணிகளை அதிகரித்து உற்பத்தியைப் பெருக்கமுடியும். அளிப்பை அதிகரிக்கமுடியும்.
    எனவேதேவையும் அளிப்பும் சம முக்கியத்துவம் பெறுகின்றன.

  4. பன்னெடுங்காலம் very long period இது தொடுவானம் போல. "தொடுவானம் வெகு தூரமில்லை. ஆனால் தொட்டவர் யருமில்லை" அல்லவா?
    இங்கு யாவுமே மாறிக்கொண்டிருக்கின்றன

உதாரணங்கள்:

ஓரு சாலைஒர இட்லிகடை

  1. இட்லி சுட்டு விற்பனைக்கு வந்துஅடுக்கி ஆகிவிட்டது. எதிர்பாராமல் இரண்டு பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்கி இட்லி கேட்டால் அவித்து வைக்கப்பட்டுள்ள இட்லிகளின் எண்ணிக்கயை அதிகரிக்கமுடியாது. ஆனால் இட்லி விலை மேலே பறக்கும்.

  2. சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பது சிறிது முன்கூட்டியே தெரிந்திருந்தால் இட்லிமாவின் அளவை அதிகரிக்க முடியாது எனினும் இட்லியின் பருமனை(சைஸ்)க்குறைத்து இட்லி அளிப்பை அதிகரிக்க முடியும்.

  3. நிரந்தரமாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் எனின் இட்லி அடுப்பு, இட்லிபானை, ஊறப்போடும் அரிசி போன்றவற்றை அதிகரித்து இட்லி அளிப்பு அதிகரிக்கும்.

  4. இதுவே ஹைவே ரோடாக மாறிவிட்டால் ஒரு மோட்டலே கட்டிவிடுவார்கள்.
இங்கு காலம் என்பது மணி நாள் மாதக் கணக்கில் அல்ல. அளிப்பை மாற்ற தேவைப்படும் கால அடிப்படயில்தான். நெல் உற்பத்தியை அதிகரிக்க குறைந்தபட்சம் 90 நாட்கள் வேண்டும. தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்க 18 ஆண்டுகள் வேண்டும்.

சரி! தேவையா? அளிப்பா? எது முக்கியம்? புகழ்பெற்ற கத்தறிக்கோல் உதாரணம் மூலம் scissors analogy மார்ஷல் விளக்குகின்றார்.க.கோல் கொண்டு ஒரு தாளை வெட்டும் பொழுது கீழே உள்ள கத்தி blade ஆடாமல் அசங்காமல் உள்ளது. ஆயினும் அது இல்லாமல் வெட்ட முடியுமா?

5 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

பொருளாதாரத்துக்கு இவ்வளவு முகங்களா??
இந்த பக்கமே போகாததால் படிக்கப்படிக்க ஆச்சரியமாக உள்ளது ஆனால் ஓரிடத்தில் ஒரு வியாபாரம் ஆரம்பிக்கும் போது கடை முதலாளிக்கு இதெல்லாம் தெரிந்திருக்க ஞாயமில்லை(பலருக்கு).பத்தில் இருவர் ஜெயிக்கும் போது இப்படிப்பட்ட கணக்குகள் இல்லாமல் அவர்களால் எப்படி ஜெயிக்கமுடிகிறது?
இது தான் நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசமா?

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

இல்லிங்க குமார். அறிந்தோ அறியாமலோ--படித்தோ, படிக்காமலோ-- நாம் சில பொருளாதார நியதிகளுக்கு(விதிகளுக்கு)உட்பட்டுதான் நடக்கின்றோம்

கோவில் அருகே பூச்சரம் விற்கும்
பெண்மணி தன்வசம் உள்ள பூ முழுவதையும் சரமாகத் தொடுத்துக்கொண்டு கடைக்கு வருவதில்லை.கொஞ்சம் பூச்சரத்தை வீட்டிலேயே தொடுத்து கடையில் வைத்துக்கொண்டு மீதப்பூக்களை அவ்வப்பொழுது தொடுத்துக்கொண்டே வியாபாரம் செய்வார்.
பூச்சரம் வாங்க வருவோரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக,
அவர் தொடுத்துக் கொண்டிருக்கும் சரத்தில் பூக்களிடையிலான இடைவெளி
அதிகரிக்கும்;சரத்தின் நீளம்(supply)
அதிகரிக்கும்
இந்தப் பொருளாதார உத்தியை அந்த அம்மையார் எந்தக் கலூரியில் படித்தார்?
"Economics is commonsense made more difficult"

துளசி கோபால் சொன்னது…

சிஜி,

அப்படிப்போடு அருவாளைன்னானாம்.

எப்படிங்க எளிதா ஒரு உதாரணம் காமிச்சீங்க?

'சரக்கு இருக்கு':-)))))0

வடுவூர் குமார் சொன்னது…

ஆஹா!சிவஞானம்ஜி
சூப்பரோ சூப்பர் உதாரணம்.
இது தான் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள இடைவெளி.
நன்றி நன்றி.
வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத உதாரணம்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க குமார்,

சிவஞானம்ஜி களத்தில் இறங்கி விட்டார்கள், அருமையான உதாரணம்.

வாழ்க்கையில் நடப்பதைப் படிப்பதுதான் பொருளாதாரம். மனிதர்களின் சுயநலம் சார்ந்த செய்கைகள் சந்தைப் பரிமாற்றத்தில் சரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உனர்ந்து சொன்னதுதான் ஆதம் ஸ்மித்தின் பங்களிப்பு.

நியூட்டன் கண்டு பிடிப்பதற்கு முன்பே புவியீர்ப்பு விசை இருந்தது, இயற்பியல் கல்லூரி போய்ப் படிக்காதவர்களும் மாடியில் இருந்து விழுந்தால் புவியீர்ப்பு விசையால் கை கால் உடையும் என்பதை உணர்ந்து செயல்படுகிறோம்.

ஆனால் அறிவியல் அடிப்படையில் படிப்பதன் பலன், இந்த ஒரு அடிப்படை உண்மையை உணர்ந்து கொள்வதன் மூலம் தொடர்புள்ள பிற நடவடிக்கைகளில் நம்மால் உணரமுடியாதவற்றைப் புரிந்து கொண்டு பலன் பெறலாம். புவியீர்ப்பு விசையைப் புரிந்து கொண்டால், மேல் இருந்து கீழே விழ நேர்ந்தால் தேவை என்று ஒரு பாராசூட் செய்யும் அறிவு அத்தகைய கற்றலில்தான் கிடைக்கிறது, இல்லையா!

அன்புடன்,

மா சிவகுமார்