வியாழன், ஆகஸ்ட் 17, 2006

வேலைகளைப் பிரித்துக் கொள்ளுதல் (economics - 4)

ஒரு சின்ன ஊரை எடுத்துக் கொள்வோம். அதில் பத்தே பேர், ஐந்து ஏக்கர் நிலம் - முதலாவது மனித வளம் இரண்டாவது இயற்கை வளம். அவர்களுக்கு இதே கேள்விகளுக்கு விடை தேவை. என்ன செய்வது, எப்படிச் செய்வது, யாருக்குக் கொடுப்பது என்ற மூன்று கேள்விகள்.

என்ன செய்வது என்பதில் சில சிக்கல்கள் எழுகின்றன. இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும்தான் இவர்களுக்குத் தேவை என்று எடுத்துக் கொள்வோம். ஒன்று, ஐந்து ஏக்கரிலும் மாடு மேயும் புல் வளர்த்து பால் உற்பத்தி செய்யலாம், அல்லது நெல் பயிரிட்டு சோறு பொங்கி சாப்பிடலாம்.

ஒன்றை விட்டு மற்றதைப் பிடிக்கலாம்.

எல்லா நிலத்திலும் புல் வளர்த்து, எல்லோருமே மாடு மேய்க்க ஆரம்பித்தால் நிறைய பால் கிடைக்கும். நெல்லே கிடையாது. ஐந்து ஏக்கரில் ஒரு பகுதி புல் வளர ஏதுவாக இருக்கலாம், இன்னொரு பகுதியில் கொஞ்சம் புல் வளர்ச்சிக் குறைவு. மாடு மேய்ப்பவர்களிலும் ஓரிருவருக்கு நல்ல உற்சாகம், மீதிப் பேருக்கு அரை மனதுதான். எல்லாமாகச் சேர்ந்து நூறு லிட்டர் பால் கறக்கிறது தினமும்.

தினசரி பால் குடித்துத் திகட்டுகிறது கொஞ்சம் நெல் பயிரிடலாம் என்று ஆரம்பிப்போம். இப்போது புல் வளர தோதுவாக இல்லாது நிலம், மாடு மேய்ப்பதில் சுணக்கம் காட்டும் ஆட்களைத்தான் முதலில் நெல் பயிரிட பயன்படுத்துகிறோம். இதனால் அவர்கள் உற்சாகமாக வேலைப் பார்க்க ஆரம்பிக்க, நிலமும் நல்ல விளைச்சல் கொடுக்கிறது. பால் உற்பத்திக்கு இப்போது மூன்று பேர் ஐந்து ஏக்கரில் வேலை பார்த்தாலும் கிடைக்கும் பால் அளவு பாதியாகக் குறைந்து விடாது.

அது எழுபத்தைந்து லிட்டராக குறைகிறது என்று வைத்துக் கொள்வோம். முதலில் சராசரி ஏக்கருக்கு பத்து லிட்டர், ஆளுக்கு இருபது லிட்டர் என்று இருந்த உற்பத்தி இப்போது ஏக்கருக்கு பதினைந்து லிட்டர், ஆளுக்கு இருபத்தைந்து லிட்டர் என்று அதிகரித்து விட்டது. ஏனென்றால் இந்த வேலையைச் செய்ய பொருத்தமில்லாதவற்றை வேறு வேலையில் ஈடுபடுத்தி விட்டதால் நல்ல வேலை செய்பவர்களின் சராசரி அதிகமாகிறது.

இரண்டு பேர் ஐந்து ஏக்கரில் வேலை பார்த்து விளைச்சலுக்கு நான்கு மூட்டை கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னும் இரண்டு பேரை நெல் விளைச்சலுக்கு மாற்றி, நிலத்தையும் ஒன்பது ஏக்கராக உயர்த்தினால் நான்கு மூட்டை இரட்டிப்பாகி விட முடியாது. ஏனென்றால், இப்போது வந்து சேரும் பொருட்கள் நெல் விளைச்சலுக்கு திறமை குறைந்தவை, பால் உற்பத்தியில்தான் அவர்களது திறன்.

இப்படி ஒரு மூட்டை அரிசி வேண்டும் என்றால் பல லிட்டர் பாலை விட்டுக் கொடுக்க வேண்டும். எவ்வளவு நெல், எவ்வளவு பால் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது இரண்டிற்கும் மிகப் பொருத்தமான காரணிகளைப் பயன்படுத்தி இரண்டிலும் மிக அதிகமான விளைச்சல் கிடைக்கும் படி அமைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது மூலதனம்.

இப்போது ஒரு காட்டில் வாழும் ஒற்றை மனிதனிடம் போவோம். ராபின்சன் குருசோ என்பவர் தனித் தீவில் பல ஆண்டுகள் வாழ வேண்டியிருந்தது. அந்தத் தீவு முழுவதும் அவருக்குக் கிடைத்த இயற்கை வளம், ஒற்றை ஆளான அவரது வேலை செய்யும் நேரம்தான் மனித வளம். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஓடியாடி வேட்டையாடினால் சாப்பாட்டுக்குத் தேவையானதைத் தேடிக் கொள்ளலாம். ஆரம்பத்தில் இடங்களைப் புரிந்து கொள்ளவே நேரம் பிடித்தது. நாள் போகப் போக எங்கு நல்ல பழங்கள் கிடைக்கும், எங்கு போனால் தேன் கிடைக்கும் , எங்கு நின்றால் முயல் பிடிக்கலாம் என்று தெளிந்த பிறகு எட்டு மணி நேரம் இல்லாமல் ஓரிரு மணி நேரத்திலேயே சாப்பாட்டுக்குத் தேவையானவை கிடைத்து விட்டன.

மீதி இருக்கும் நேரத்தில் இன்னும் முயல் பிடித்தால் வீணாகித்தான் போகும். அவர் உட்கார்ந்து ஒரு மரக்கிளையை வெட்டி மீன் தூண்டில் செய்ய ஆரம்பிக்கிறார். அதற்கு மொத்தம் எட்டு மணி நேர வேலை இருக்கிறது. இரண்டு நாளில் முடித்து விடலாம். இந்த வேலையில் இன்றைக்கு எந்தப் பலனும் இல்லை. ஆனால், மூன்றாவது நாளிலிருந்து மீன் பிடிக்க ஆரம்பிக்கலாம். கூடுதலாக ஒரு உணவுப் பொருளும் கிடைத்து விட்டது, அலைந்து திரிய வேண்டிய தேவையும் குறைந்து விட்டது.

எட்டு மணி நேரம் உடனடித் தேவைக்காக இல்லாமல் எதிர் காலத்துக்காக தனது நேரத்தைச் செலவளித்தது அவரது முதலீடு. அதன் பயனாக இரண்டு நாட்கள் கழித்து உற்பத்தி பெருகி விட்டது. இங்கும் அதே கதைதான் இன்றைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் எதிர் காலத்தில் பலன் அளிக்கக் கூடிய முதலீடு செய்ய முடியாது. எல்லா நேரத்தையும் முதலீட்டில் செலவிட்டால் இன்றைக்குப் பட்டினிதான். ஒன்று செய்தால் ஒன்று இல்லை.

நம்ம கிராமத்துக்குத் திரும்பி வருவோம். எல்லாரும் நிலத்தில் வேலை பார்ப்பதை விட்டு ஒரு ஆள், நிலத்தை உழுவதற்கு புதிய கலப்பையை செய்ய நேரம் செலவளிப்போம். அவருக்குச் சாப்பாடு அடுத்தவர் உழைப்பில் கொடுப்போம். ஆனால் அவர் கலப்பை செய்த பிறகு நிலத்தில் உழ அதைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கலாம்.

இப்படி வேலைகளைப் பிரித்துக் கொள்வதால், பால் கிடைப்பதைக் குறைக்காமலேயே, நெல் விளைச்சலை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் அதற்கு முதலீடு தேவை. இதுவும் நம்ம தொலைக்காட்சி மெகா தொடர், விளையாட்டுப் போட்டி கதைதான். இரண்டுமே குறையக் கூடாது என்றால் புதிய முதலீடு தேவை.

8 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

பத்துப் பேர் & ஐந்து ஏக்கர்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நம்ம கிராமங்களிலே உண்மை நிலை என்ன?
வெறும் அஞ்சு ஏக்கர் & 100 ஆட்கள்.

இப்படித்தான் நான் சமீபத்துலே புரிஞ்சுக்கிட்டு இருக்கேன்.(-:

மா சிவகுமார் சொன்னது…

அது ஒரு பெரிய கதை அக்கா. குறைந்து கொண்டே போகும் விளைச்சல் என்று அதற்கும் ஒரு பேர் கொடுத்து அலசி கொள்கிறார்கள். ஆள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஒருவருக்குக் கிடைக்கும் விளைச்சல் குறைந்து கொண்டே போகும்.

அன்புடன்,

மா சிவகுமார்

கார்திக்வேலு சொன்னது…

point of diminshing returns

மா சிவகுமார் சொன்னது…

கார்த்திக், அதுதான் பயன்படுத்தப்படும் கலைச்சொல். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

வேலைப் பகுப்பு முறை...division of labour பொருளியலின் தந்தை என்று கருதப்படும் ஆடம் ஸ்மித் குறிப்பிட்டது

குறைந்துசெல் இறுதிநிலை விளைவு
விதிlaw of diminishing marginal returns..இடுமானம் அதிகரிக்கப்படும்பொழுது அதிகரிக்கப்
படும் ஒவ்வொரு அலகு இடுமானத்தில்
இருந்தும் பெறப்படும் விளைவு குறைன்ஹு செல்லும். இது பொருளியலில் ஓர் அடிப்படை விதிbasic law

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சிவஞானம்ஜி,

மிக கலைச் சொற்களாகப் பயன்படுத்திதான் பாடப்புத்தகங்களிலிருந்து நம்மை ஓட வைத்து விட்டார்கள் என்று சரியான பாடப் புத்தகக் கலைச் சொற்களைத் தேடாமல், வழக்கு மொழியை பயன்படுத்தலாம் என்று நினைத்தேன்.

தமிழில் என்ன சொற்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவும் தெரியாது. படித்தது எல்லாம் ஆங்கிலத்தில்தான்.

இது போல கலைச் சொற்களைக் கொடுத்தால் வசதியாகத்தான் இருக்கும். நேரம் கிடைக்கும் போது இந்த உதவியைச் செய்யுங்கள்.

மார்ஜினல் என்ற கோட்பாடு மிக அருமையானது இல்லை!, அதற்கு புழங்கும் சொல்லாக ஒன்று தாருங்களேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

நன்றி திரு சிவகுமார்
அரசால்/பல்கலைக் கழ்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட கலைச்சொற்களைப்
பயன்படுத்துவதில் பல நன்மைகள் உண்டு.இந்தத் தலைமுறை மாணவர்கள் அச்சொற்களுக்குப் பழகிவிட்டனர்.ஆயினும் மொழி ஒரு கருவிதான் என்பதில் எனக்கு உடன்பாடே.
marginal[ Tx-Tx_1 ]இறுதிநிலை எனும் சொல்லை வகுப்பறைகளிலும்
பாடநூற்களிலும் பயன்படுத்துகின்றோம்
"விளிம்புநிலை" என்பதும் இதே பொருள் தருவதுதான்.
ஆனால் marginal farmers என்பதைக்குறிக்க "குறு விவசாயிகள்"
எனும் சொல்லை அரசு பயன்படுத்துகின்றது;ஆனால் பொருளியலில் பயன்படுத்தக்கூடாது.
விடுங்கள். "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்" தமிழுக்கு வரும்பொழுது
இத்தகைய இக்கட்டுகள் ஏற்படும். அவற்றைத் தவிடுபொடியாக்கத்தானே
சிவகுமார்கள் இருக்கின்றனர்?

மா சிவகுமார் சொன்னது…

எனக்கென்னவோ முறையாக பொருளாதாரம் படித்தவர்கள் படித்ததை உள்வாங்கி நம் ஊர் நடப்புகளுக்கு ஏற்ப பலன் கொடுக்கத் தவறி விடுவதாக எண்ணம். அப்படி ஒரு உள்ளூர் பொருளாதாரச் சிந்தனை இயக்கம் தோன்றியிருந்தால் இன்றைக்கு அமெரிக்க சார்பு சந்தைப் பொருளாதார அமைப்பை நம்பி இருக்க மாட்டோம்.

//"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்" தமிழுக்கு வரும்பொழுது இத்தகைய இக்கட்டுகள் ஏற்படும். அவற்றைத் தவிடுபொடியாக்கத்தானே சிவகுமார்கள் இருக்கின்றனர்?

ஒரு அடி மேலே மிதப்பது போல ஆகி விட்டது, உங்களது இந்த வாக்கியம். இதை எழுத புதிய தூண்டுதல் கிடைத்து விட்டது.

அன்புடன்,