ஞாயிறு, ஜனவரி 13, 2008

இந்து மதம்

தனிமனிதருக்கு அளவற்ற தன்னிச்சை கொடுக்கும் ஒரு அமைப்புதான் இந்து மதம். தம்மை வழிநடத்திக் கொள்ள பிடித்தமான வழிமுறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
  • கோயில்கள் கட்டி
  • அல்லது மூதாதையரின் நினைவுச் சின்னங்களை போற்றி
  • அல்லது பெரியவர் என்று மதிக்கும் மதத் தலைவர்களைப் பின்பற்றி
  • அல்லது தனியாக ஆராய்ந்து
  • அல்லது கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசி
வாழ்க்கை நடத்திக் கொள்ளலாம். இப்படி இருந்தால்தான் ஒருவர் இந்து என்று வரையறை கிடையாது.

சாதி அமைப்பு என்பது இந்து மதத்தைப் பிடித்த சொறிப் புண். உடலெங்கும் புண்ணாகி, குருதியெல்லாம் கிருமிகளாக 'இந்து மதமே அழிந்தால்தான் சாதி ஒழியும' என்று வெறுத்துக் கூறும் அளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது.

'நாங்கெல்லாம் சாதி பார்ப்பதில்லை' என்று முற்போக்கு பேசும் மேல்தட்டு மக்கள் கூட தம் வீட்டுத் திருமணத்துக்கு இணை பார்க்கும் போது தமது சாதியையே தேடுகிறார்கள்.

'சாதியினால் விளைந்த அநீதிகளை சாதி மூலம் அணி திரள்வதன் மூலம்தான் சரி செய்ய முடியும்' என்று அதற்கான எதிர்வினைகள்.

நோய்க்கு மருந்து நோய்க்கிருமிகளிடமே இல்லை. இன்றைக்கும் சாதிக் கட்சிகள், திருமண விளம்பரங்களில் சாதி உட்பிரிவு உட்படக் குறிப்பிட்டு தேடுவதன் அடிப்படைக் காரணம், இந்து சமூகத்தின் கருத்து உருவாக்கிகள், தமது சாதி ஆதாயத்தை விட்டுக் கொடுக்க விரும்பாததுதான்.

இப்படி தமது சாதிதான் பெரிது என்று பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தால் இந்து மதம் என்ற ஒன்று இல்லாமல் அழிந்து போகும். சடங்குகளும், ஏற்றத் தாழ்வுகளும், மொழி உயர்வு தாழ்வுகளும் இந்து மதம் இல்லை. அந்தப் புற அடையாளங்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் அப்புறம் அந்த அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள மதம் இல்லாமல் போய் விடும்.
  • 'மறுமுறை பிறந்தவர்கள், கடவுளின் தலையிலிருந்து பிறந்தவர்கள்' என்று சொல்லும் சாத்திரங்களை முற்றிலும் ஒதுக்கித் தள்ளி, 'நானும் எல்லோரையும் போன்ற மனிதன்தான். நான் யாரை விடவும் குறைந்தவன் இல்லை, வேறு யாரும் என்னை விடக் குறைந்தவர்கள் இல்லை' என்ற பொதுமறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • மக்கள் பேசும் மொழியில் புழங்காத மதத்தை எத்தனை சூலாயுதம் தாங்கிய கட்சி, வன்முறை அமைப்புகள் வந்தாலும் தூக்கி நிறுத்த முடியாது.
  • ஒவ்வொரு இந்துவும் சம உரிமையுடன் புழங்கும்படி மதம் சீர்திருந்த வேண்டும். கோயில்களில் யார் வேண்டுமானாலும் பூசாரி ஆகலாம், கடவுளுக்கு வழிபாடு தமிழ் மொழியிலேயே நடைபெறலாம் என்ற நடை முறை வர வேண்டும்.
  • சாதி அடையாளங்களைக் காட்டும் புறச் சின்னங்களை அவமானமாக ஒதுக்க வேண்டும்.
  • அனைவராலும் செய்ய முடியாத, செய்யத் தேவையற்ற சடங்குகளை மதத்தின் பெயரால் ஒரு சாதியினர் மட்டும் செய்யக் கூடாது.

20 கருத்துகள்:

TBCD சொன்னது…

மாசி ஐயா,

உங்கள் பதிவில் பின்னாடி இருப்பதற்கும் முதல் வாக்கியத்திற்கும் பொருந்தவில்லை.

பல நம்பிக்கைகளை தன்னுள்ளேக் கொண்டது என்று வேண்டுமானால் கூறலாம்.

நாட்டார் தெய்வங்களை தன்னுள் கொண்டது போல் வேசம் கட்டி ஆடுகிறது இந்து மதம்.

தன்னிச்சையாக சாதி மாற முடியும்மா..?

//தனிமனிதருக்கு அளவற்ற தன்னிச்சை கொடுக்கும் ஒரு அமைப்புதான் இந்து மதம். தம்மை வழிநடத்திக் கொள்ள பிடித்தமான வழிமுறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்//

கோவை சிபி சொன்னது…

சாதீய கட்டுமானமும் இந்து மதமும் ஒன்றோடொன்று பின்னி பினைந்தது.எதை முதலில் களைவது என்பதன் குழப்பம் தான் சித்தர்கள் முதல் வள்ளலார் வரையிலான எல்லா முயற்சிகளும் வீணாகிப்போனது.இந்த வரலாற்றை உணர்ந்துதான் பெரியார் இறை மறுப்பு,சாதி ஒழிப்பு என போராடினார்.

பெயரில்லா சொன்னது…

//
தன்னிச்சையாக சாதி மாற முடியும்மா..?
//

நாடார் கிரிஸ்டியன், தேவர் கிரிஸ்டியன், SC கிரிஸ்டியன் எல்லாம் தன்னிச்சையாக சாதி மாறும் போது, இவர்கள் மாறிக் கொள்வார்கள்.


//

சாதீய கட்டுமானமும் இந்து மதமும் ஒன்றோடொன்று பின்னி பினைந்தது.எதை முதலில் களைவது என்பதன் குழப்பம் தான் சித்தர்கள் முதல் வள்ளலார் வரையிலான எல்லா முயற்சிகளும் வீணாகிப்போனது.

//


பொய்.


சாதீயக் கட்டுமானத்தை அழிக்கும் எந்த சக்தியும் இந்தியாவில் ஜெயித்ததில்லை என்பதே உண்மை.


இந்து மதம் அதை ஜெயிக்கவில்லை. அதை அங்கீகரித்து வாழ்ந்துவருகிறது. அவ்வளவே.


சாதியும் மதமும் வெவ்வேறு. ஒன்று அல்ல.



சாதீயக் கட்டுமானத்தை அழிக்க முயன்ற கிருத்துவம், கம்யூனிசம், இஸ்லாம் எல்லாம் என்ன ஆனது ?


அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் ஏன் கீழ் சாதி கிருத்தவர்கள், இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்கள் ? அதில் முக்கியமாக மத நம்பிக்கை இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள் ஏன் போராடுகிறார்கள் ?


//

நாட்டார் தெய்வங்களை தன்னுள் கொண்டது போல் வேசம் கட்டி ஆடுகிறது இந்து மதம்.

//


நாட்டார் தெய்வங்கள் வழிபடும் மக்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் பிரச்சனையே தவிர, மத்திய கிழக்கு மனித விரோதக் கொள்கைகளை மதம் என நினைத்து ஏமாந்தவர்கள் அதைப் பற்றிப் பேசத் தேவையில்லை.

Unknown சொன்னது…

சிவா,
இந்து மதம் என்பதற்கு என்ன வரையறை?

ஒருவன் எப்படி இந்து ஆவான்?

என்ன செய்தால் இந்துவாக அறியப்படுவான்?

அப்படி "இன்னது செய்தால் தான் இந்து " என்றால், அதைச் செய்யும் கிறித்துவன் இந்துவா? அல்லது இந்துக்-கிறித்துவனா?

// சாதி அடையாளங்களைக் காட்டும் புறச் சின்னங்களை அவமானமாக ஒதுக்க வேண்டும்.//

மத அடையாளங்களைக் காட்டுவது என்ன புனிதமா?

**

இந்து மதம் என்பது சனாதன வர்ணாசிரம பார்ப்பனீய மதமே.(அல்லது பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் உள்ளது என்றும் சொல்லலாம்)பெரும்பாலான இந்துக் கோவில் சிலைகளில் உள்ள பூணூலே இதற்கு சாட்சி.

அப்படி பூணூல் உடன் இருக்கும் சிலைகளை வழிபடமாட்டேன் என்று புறக்கணித்து, பார்ப்பனீயத்தை துரத்த முடியுமா?

**
இந்து மதம் என்று அறியப்படும் மதத்திற்கு எந்த வரைமுறையும் இல்லாததால் அவரவர் அவர் இஸ்டத்திற்கு இதுதான் இந்துமதம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

Hinduism's correct name is Sanatana Dharma என்று இந்தக் கூட்டங்கள் சொல்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

http://www.hvk.org/articles/0205/65.html

http://veda.wikidot.com/dharma

சனாதன தருமத்திற்கும் , இந்து மதம் என்று நீங்கள் சொல்லும் மதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

Sanatana Dharma is is the original name of what is now popularly called Hinduism. The terms Hindu and Hinduism are said to be a more recent development, while the more accurate term is Sanatana Dharma.

http://veda.wikidot.com/sanatana-dharma

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் tbcd,

//நாட்டார் தெய்வங்களை தன்னுள் கொண்டது போல் வேசம் கட்டி ஆடுகிறது இந்து மதம்.//

வேசம் கட்டி ஆடுவது எது? நாட்டார் தெய்வங்களை வழிபடும் மக்கள், இந்து மதத்தை வரையறை செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்?

//தன்னிச்சையாக சாதி மாற முடியும்மா..?//

சாதியே ஒழியணும். சாதிக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சாதி என்பது ஒரு நோய், அந்த நோயை ஒழிக்க வேண்டுமே தவிர அதற்காக நோய் பீடித்த மனிதரையே அழிக்க வேண்டுமா?

//சாதீய கட்டுமானமும் இந்து மதமும் ஒன்றோடொன்று பின்னி பினைந்தது.//

அப்படி இன்றைக்கு இருப்பது உண்மைதான் கோவை சிபி. ஆனால், இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம் இருந்தாலும் கடந்த 50 ஆண்டுகளில் சாதி ஒழிப்பில் கணிசமான தூரம் கடந்திருக்கிறோம்.

பெரும்பான்மை மக்களுக்களின் மன நிறைவுக்குத் தேவைப்படும் இறை நம்பிக்கைக்கான அடிப்படையை முற்றிலும் ஒதுக்கி விட்டால் மாற்று என்ன?

கணேஷ் (மனிதர்),

//இந்து மதம் அதை ஜெயிக்கவில்லை. அதை அங்கீகரித்து வாழ்ந்துவருகிறது. அவ்வளவே.//

அதுதான் இந்துமதத்தின் குளறுபடி. சிரங்கு பிடித்தால் அதற்கு பரிகாரம் காண வழி தேடாமல், சொரிந்து சொரிந்து இன்புறுவதா முன்னேறுவதற்கு வழி!

பிற மதங்களுக்கு மாறியவர்கள் முதல் தலைமுறைகளில் சாதி பழக்கங்களைப் பின்பற்றினாலும், ஒரு சில தலைமுறைகளில் அவர்களும் பொது நீரோட்டத்தில் கலந்து விடுகிறார்கள்.

வாங்க கல்வெட்டு,

//இந்து மதம் என்பதற்கு என்ன வரையறை? ஒருவன் எப்படி இந்து ஆவான்?//

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளை பகுத்தறிந்து தனக்கேற்ற வழிபாட்டு முறையில் தன்னை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொள்ள முயலும் யாரும் தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ளலாம்.

//அப்படி "இன்னது செய்தால் தான் இந்து " என்றால், அதைச் செய்யும் கிறித்துவன் இந்துவா? அல்லது இந்துக்-கிறித்துவனா?//

அது அதைச் செய்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது. கிறித்துவ மதத்தில் அப்படி ஒரு வழி இருந்தால் அவர் கிறித்துவராகவே இருந்து வருவார்.

நாத்திக மதத்தில் (!) அப்படி இருந்தால் அவர் தன்னை நாத்திகர் என்றே குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

//மத அடையாளங்களைக் காட்டுவது என்ன புனிதமா? //

மதம் என்பது வீட்டுக்குள், நான்கு சுவர்களுக்குள், வழிபாட்டுத் தலங்களுக்குள் இருக்க வேண்டியது. அதை சட்டையில் சின்னமாக அணிந்து கொண்டு வருவது நிச்சயம் புனிதம் இல்லை.

//அப்படி பூணூல் உடன் இருக்கும் சிலைகளை வழிபடமாட்டேன் என்று புறக்கணித்து, பார்ப்பனீயத்தை துரத்த முடியுமா?//

முடியும்.

//Hinduism's correct name is Sanatana Dharma என்று இந்தக் கூட்டங்கள் சொல்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?//

நான் சொல்வது

'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளை பகுத்தறிந்து தனக்கேற்ற வழிபாட்டு முறையில் தன்னை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொள்ள முயலும் யாரும் தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ளலாம்.'

வேறு எந்த தனிமனிதனின் உரிமைகள் பாதிக்கப்படாமல் தனது நம்பிக்கைகளைப் பின்பற்றும் யாருக்கும் அப்படிப் பின்பற்ற உரிமை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

//The terms Hindu and Hinduism are said to be a more recent development, while the more accurate term is Sanatana Dharma.//
இப்படிப்பட்டவர்களுக்கு இடம் விட்டு சீர்திருத்தவாதிகள் (சோஷலிஸ்டுகள், திராவிட இயக்கத்தினர், தலித் இயக்கங்கள்) ஒதுங்கி விட போட்டி இல்லாமல் சமூகத்தை பின்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்துத்துவா பயங்கரவாதிகள்.

அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோரும்

1. கடவுளை மறுத்து நாத்திகர் ஆக வேண்டும்
2. அல்லது இந்துத்துவா கும்பலுடன் சேர்ந்து விட வேண்டும்

என்று இரண்டு வழிகள்தானா? இடைப்பட்ட வழி இல்லையா?

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

சிவா,
// அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோரும்

1. கடவுளை மறுத்து நாத்திகர் ஆக வேண்டும்
2. அல்லது இந்துத்துவா கும்பலுடன் சேர்ந்து விட வேண்டும்

என்று இரண்டு வழிகள்தானா? இடைப்பட்ட வழி இல்லையா? //


கடவுளுக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

கடவுள் (ஏதோ ஒரு தெரியாத சக்தி ) இருப்பதாக நம்ப வேண்டும் என்றால் எதாவது ஒரு மதத்திற்குள் அவசியம் இருக்க வேண்டுமா?

கடவுள் நம்பிக்கை உண்டு. எந்த மதமும் (நீங்கள் சொல்லும் இந்து உட்பட) தேவை இல்லை என்றால் அவர்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பீர்கள். ஆன்மீகம் ? நாத்திகம் ?

தி.மு.க இல்லையென்றால் அ.தி.மு.க தானா?

சுயேட்சையும் அதே அரசியலில் இருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். :-)

**

//'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளை பகுத்தறிந்து தனக்கேற்ற வழிபாட்டு முறையில் தன்னை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொள்ள முயலும் யாரும் தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ளலாம்.'
//



எதற்காக வலிந்து இந்து என்று எதற்கு அடையாளப்படுத்த வேண்டும்? அதை ஏன் "மனிதம்" என்று சொல்லக்கூடாது?

இந்து என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் இந்துத்துவாக்களுக்கு தெரியாமல் பலியாக வாய்ப்பு உள்ளது.

***

நீங்கள் சொல்லும் இந்து என்ற சட்டையைப் போடாமலேயே,நீங்கள் சொல்லும் அதே நல்வழிகளைப் பின்பற்றலாம்.

***

மா சிவகுமார் சொன்னது…

//கடவுள் (ஏதோ ஒரு தெரியாத சக்தி ) இருப்பதாக நம்ப வேண்டும் என்றால் எதாவது ஒரு மதத்திற்குள் அவசியம் இருக்க வேண்டுமா?

கடவுள் நம்பிக்கை உண்டு. எந்த மதமும் (நீங்கள் சொல்லும் இந்து உட்பட) தேவை இல்லை என்றால் அவர்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பீர்கள். ஆன்மீகம் ? நாத்திகம் ?//

ஏதாவது ஒரு கூட்டத்தில் சேர்ந்து கொள்ளும் தேவை இல்லாதவர்கள் மிகச் சிலர்தான். பெரும்பாலான மக்களுக்கு கேள்விகளால் குழப்பிக் கொள்ளாமல், ஒரு நம்பிக்கை, பிறருடன் அடையாளம் கண்டு கொள்வது என்ற சமூகத் தேவைகள் இருக்கின்றன.

//எதற்காக வலிந்து இந்து என்று எதற்கு அடையாளப்படுத்த வேண்டும்? அதை ஏன் "மனிதம்" என்று சொல்லக்கூடாது? //

ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக நிலைபெற்று விட்ட பெயரை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

//இந்து என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் இந்துத்துவாக்களுக்கு தெரியாமல் பலியாக வாய்ப்பு உள்ளது.//
நன்கு விழிப்புடன், அவர்களுக்கு வேட்டு வைக்க வேண்டும். இல்லை என்றால் அந்த உணர்வு பூர்வமான சொல்லைப் பயன்படுத்தித் தமது பயங்கரவாதத்தை வளர்க்க முயலும் இந்துத்துவாக்களுக்கு வழி விடுவதாகத்தான் முடியும்.

//நீங்கள் சொல்லும் இந்து என்ற சட்டையைப் போடாமலேயே,நீங்கள் சொல்லும் அதே நல்வழிகளைப் பின்பற்றலாம்.//

எல்லோராலும் அது முடியாது. அடையாளங்கள் தேவைப்படத்தான் செய்கின்றன.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

பொருளாதாரம், மார்க்கெட்டிங், கலைஞர், இஸ்ரேல் மற்றும் இந்து மதம் என்று நீங்கள் உலகிலுள்ள அனைத்தைப்பற்றியும் எழுதுகிறிர்கள். தலைப்பிலுள்ள அர்த்தம் கட்டுரைகளில் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். உ.ம். இந்த கட்டுரையின் தலைப்பு "இந்து மதம்", ஏதோ இந்து மதத்தைப்பற்றி சொல்லி இருப்பீர்கள் என்று பார்த்தால் எல்லோரும் பிடித்து தொங்கி கிழித்து துவைத்து பிழிந்து காயப்போட்டிருக்கும் அதே பழைய சாதியினைப்ப்பற்றி எழுதி இருக்கிறீர்கள். பின்னூட்ட கேள்விகளுக்கும் உங்கள் பதில்களுக்கும் கூட பெரிய சம்பந்தம் இல்லை. இது என் கருத்து மட்டுமே. இப்படி எல்லாவற்றைப்பற்றியும் நுனிப்புல் மேயாமல் உங்களுக்கு நன்றாகத்தெரிந்த சப்ஜெக்டுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் ஒரு சிறந்த பதிவராக தொடரலாம்.

நன்றி

பெயரில்லா சொன்னது…

////
//மத அடையாளங்களைக் காட்டுவது என்ன புனிதமா? //

மதம் என்பது வீட்டுக்குள், நான்கு சுவர்களுக்குள், வழிபாட்டுத் தலங்களுக்குள் இருக்க வேண்டியது. அதை சட்டையில் சின்னமாக அணிந்து கொண்டு வருவது நிச்சயம் புனிதம் இல்லை.
////

இது வீடு, நான்கு சுவர், வழிபாட்டுத் தலங்கள் தாண்டி வெளியே வரும் விபூதி, குங்குமங்கள், கிறித்தவ கவுன்கள், பெண்களின் பர்தா, இஸ்லாமியத் தொப்பி, குறுந்தாடி, சிங் வைக்கும் குடுமி முதல் எல்லாவித மத அடையாளங்களுக்கும் தானே? இந்துத்துவ சட்டைக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பூணூலுக்கு மட்டும்தானா?

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்துத்துவ சட்டைக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பூணூலுக்கு மட்டும்தானா?//

பூனூல் அடையாளம் இந்து அடையாளம் இல்லை குறிப்பிட்ட சாதி அடையாளம், எனவே அந்த சாதி அடையாளத்தை அணிந்திருக்கும் (சாதி ?) சிலையை புறக்கணிப்பதில் என்ன தவறு ?

பெயரில்லா சொன்னது…

நூறு, இருநூறு வருஷத்துக்கு முந்தி எல்லோரும் பூணூல் போட்டிருந்தார்கள். எல்லோரும் குடுமி தான் வைத்திருந்தார்கள். அதனால் அந்த காலத்தில் உருவாக்கிய சாமி சிலையிலும் குடுமியும் பூணூலும் இருக்கிறது.அந்த பராம்பரியம் இன்னமும் தொடர்கிறது.

Unknown சொன்னது…

இந்து என்ற பெயரைவிடச் சொன்னால் .."ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக நிலைபெற்று விட்ட பெயரை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? " என்று கேட்கும் நீங்கள், அதே பல நூற்றாண்டுகளாக இருக்கும் சாதீய/பார்ப்பனீய/பூணூல் இத்யாதிகளை மற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்.

*
//சாதி அடையாளங்களைக் காட்டும் புறச் சின்னங்களை அவமானமாக ஒதுக்க வேண்டும்.// என்று சொல்லும் நீங்கள் மத அடையாளங்களை மட்டும் //மதம் என்பது வீட்டுக்குள், நான்கு சுவர்களுக்குள், வழிபாட்டுத் தலங்களுக்குள் இருக்க வேண்டியது. // என்று சொல்கிறீர்கள்.

ஏன் சாதியும் அப்படியே நீங்கள் சொல்லும் அதே அளவுகோலில் , வீடு,நான்கு சுவர்களுக்குள், சாதிச் சங்கங்களுக்குள் மட்டும் இருக்கலாம் என்றும் சொல்லலாமே?

*
நீங்கள் சொல்லும் இந்து என்ற சட்டையைப் போடாமலேயே,நீங்கள் சொல்லும் அதே நல்வழிகளைப் பின்பற்றலாம் என்றால் //
எல்லோராலும் அது முடியாது. அடையாளங்கள் தேவைப்படத்தான் செய்கின்றன.
// என்று சொல்கிறீர்கள்.

பூணூல் அடையாளமும்,சாதி அடையாளமும் சிலருக்கு தேவைப்படலாம் இல்லையா?

****

மேற்சொன்ன முரண்களை நீங்கள் விளக்காதவரை ..நீங்கள் சொன்ன அதே எப்பொருள் ..யார் யார் வாய் ...என்ற வகையில் இந்தப் பொருளில் உங்களிடம் இதில் இதற்குமேல் ஒன்றும் பேச முடியாது என்றே நினைக்கிறேன். :-))

மா சிவகுமார் சொன்னது…

//பின்னூட்ட கேள்விகளுக்கும் உங்கள் பதில்களுக்கும் கூட பெரிய சம்பந்தம் இல்லை. இது என் கருத்து மட்டுமே.//

கருத்துக்கு நன்றி அனானி. என்னை பாதித்த பின்னூட்டம் உங்களுடையது. என்னுடைய நோக்கங்களையும் எழுத்துக்களையும் மறுபார்வை செய்யத் தூண்டியது.

'சிறந்த பதிவராக வேண்டும்' என்று நினைப்பது தேவையில்லை என்று நினைக்கிறேன். எனக்குப் புரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பதிவுகள். என்னைப் பொறுத்தவரை என்னைப் பாதித்த நான் நன்கு புரிந்து கொண்ட பொருட்களை மட்டுமே எழுதுகிறேன்.

//எல்லாவித மத அடையாளங்களுக்கும் தானே? இந்துத்துவ சட்டைக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பூணூலுக்கு மட்டும்தானா?//

சக மனிதனை தாழ்த்திக் காட்டும் நோக்கிலான எல்லா அடையாளங்களும் ஒழிய வேண்டும் என்று ஒத்துக் கொள்வீர்கள்தானே அனானி?

//அந்த பராம்பரியம் இன்னமும் தொடர்கிறது.//
காலத்துக்கு ஏற்ப மாறிக் கொள்வதும் தவறில்லைதானே!

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

//இந்து என்ற பெயரைவிடச் சொன்னால் .."ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக நிலைபெற்று விட்ட பெயரை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? " என்று கேட்கும் நீங்கள், அதே பல நூற்றாண்டுகளாக இருக்கும் சாதீய/பார்ப்பனீய/பூணூல் இத்யாதிகளை மற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்.//

நினைத்தேன், இப்படி பிடிப்பீர்கள் என்று :-)

//ஏன் சாதியும் அப்படியே நீங்கள் சொல்லும் அதே அளவுகோலில் , வீடு,நான்கு சுவர்களுக்குள், சாதிச் சங்கங்களுக்குள் மட்டும் இருக்கலாம் என்றும் சொல்லலாமே?//
//பூணூல் அடையாளமும்,சாதி அடையாளமும் சிலருக்கு தேவைப்படலாம் இல்லையா? //

'உலகில் எந்த நாட்டிலும் எல்லா ஊர்களிலும் நாத்திகர்கள் சிறு எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள், கடவுளை நம்புபவர்கள்தான் பெரும்பான்மையினர்' என்று நீங்கள் சொன்னதை நானும் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

சீனாவில் தாவோ கோயில்கள்/சர்ச்சுகள் முடக்கி வைக்கப்பட்ட காலங்களில் மங்கியிருந்த ஆன்மீக உணர்வு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் முழு மூச்சில் வெளி வந்ததையும் கவனித்திருக்கிறேன்.

அப்படி கடவுள் நம்பிக்கை (ஆன்மீகம்) -- மதம் என்ற சொல்லைத் தவிர்த்து விடுவோம் -- ஏதோ காரணத்துக்காக நமக்குத் தேவையாக இருக்கிறது. அதன் மூலம் கிடைக்கும் அடையாளங்களும் கிருத்துவர், முஸ்லீம், சீக்கியர், யூதர் என்று தேவைப்படுகிறது.

சாதி என்பது அப்படியா? இந்தியாவுக்கு வெளியே மற்ற சமூகங்களில் உட்பிரிவுகள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. சாதி அமைப்பு போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்திய நிறப்பிரிகைகள், அடிமை முறைகள் மறைந்து வருகின்றன. அவற்றுக்கு இணையான, அவற்றை விட மோசமான சாதி முறை ஒழியத்தான் வேண்டும்.

அப்படிப்பட்ட சாதி அமைப்பு இல்லாமலேயே பிற சமூகங்களில் பல கோடி மக்கள் சேர்ந்து வாழ முடியும் போது நாமும் சாதியை துறப்பது சாத்தியம்தான்.

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

சிவா,
எந்த மதத்தை ஏற்பதாக இருந்தாலும், அதில் அதற்கான உட்பிரிவுகள் ஒன்றைத்தான் ஏற்க முடியும்.
மதம் என்பதை ஆன்மீகமாகக் கொண்டால் அதன் உட்பிரிவுகள் அதன் அரசியலைக் குறிக்கிறது.

மதத்தை ஏற்பதாக இருந்தால், எந்த ஒரு மதத்தையும் அதன் அரசியலை ஏற்காமல் (உட் பிரிவுகளை) வரித்துக் கொள்ள முடியாது.

இஸ்லாமே அல்லது கிறித்துவமோ தனி மதமாக இல்லை. அவைகள் அதற்கான அரசியல் பிரிவுகளிலேயே அடையாளப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மதத்திற்கும் அதன் மத-அரசியலுக்கான காரணம் வேறுபடும். நீங்கள் சொல்லும் இந்து மதத்தில் அது வர்ணாசிரம-பார்ப்பனீய சாதி அடுக்கு.

சாதியில் என்ற உள்வட்டத்தில் இல்லாமல் ,நீங்கள் இந்து என்ற பெருவட்டத்தில் அங்கம் வகிக்க முடியாது.

உங்கள் வசதிக்காக சிலது இருக்கலாம் சிலது வேண்டாம் என்று நீங்கள் சொல்வது போல , பல காரணிகளைக்காட்டி மற்றவர்களும் அவர்களுக்குத் தேவையானது வேண்டும் என்றும் சொல்லலாம். :-))

இது முடிவில்லாதது.

மா சிவகுமார் சொன்னது…

கல்வெட்டு,

//உங்கள் வசதிக்காக சிலது இருக்கலாம் சிலது வேண்டாம் என்று நீங்கள் சொல்வது போல , பல காரணிகளைக்காட்டி மற்றவர்களும் அவர்களுக்குத் தேவையானது வேண்டும் என்றும் சொல்லலாம். :-))
இது முடிவில்லாதது.//

எது? சாதியை முடித்து விடலாம். இறை உணர்வு முடிவில்லாதது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் :-)

Sivaprakasam Rajappan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Sivaprakasam Rajappan சொன்னது…

////அப்படி பூணூல் உடன் இருக்கும் சிலைகளை வழிபடமாட்டேன் என்று புறக்கணித்து, பார்ப்பனீயத்தை துரத்த முடியுமா?//

முடியும்.//

எனது கருத்து (எழுத்துப்பிழைகள் இருப்பின் மண்ணிக்கவும்):

நன்பர்களே,
சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிட்டுக்கொண்டே, அதனை ஊக்குவிப்பது நமது வழக்கமகிவிட்டது. போகும் போக்கில் பர்த்தால், கையில் அறிவாள் வைதிருப்பது திருநெல்வேலி சாமி, மாதுரைக்காரன் அந்த சாமியை கும்பிட்டால் திருநெல்வேலி சாதியை/சாமியை வளர்ததாக ஆகிவிடும் என்று வணங்க மாட்டீர்களோ?!!!
கடவுள் விருப்பு வெருப்பு, நிரம், வடிவம், கணம், பரிமானம் அற்ற ஒரு கற்பனை உருவம். நம் மணிதர்கள், ஆதலால் மணித உருவம் கொண்டு வணங்குகிறோம்.

பல ஆயிரம் வருடஙளாக வளர்ந்த இந்து மததில், ஒவ்வொரு காலகட்டதிலும், இடத்திலும், மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப பல மாற்றங்கள் வாழ்கை முறையிலும், வழிபட்டு முறையிலும் ஏற்ப்பட்டு வந்துள்ளது.


இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், கூடி வாழ கற்றுக்கொள்ள்வோம்.
சாதி, மதம், இனம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியேறி, சக மணிதணுக்கும், அவனது உணவுர்களுக்கும் மதிப்பளித்து உதவுவதன் மூலமாகவே, நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டிகொள்ள வேண்டும்/முடியும் என்பது எனது நம்பிக்கை.

மு.இரா சொன்னது…

வணக்கம், இது 21 ஆம் நூற்றாண்டு இன்னும் நாம் ஏன்? கடவுள் என்ற கொள்கையை பிடித்து கொண்டு தொங்க வேண்டும், நீங்கள் கடவுளை நம்பும் பட்சந்தில் தான் இந்த மத கோட்பாடுகளும், சாதி வெறியும் நம்மை சூழ்கின்றன... கடவுளை மற மனிதனை நினை... என்று பெரியார் வழி சென்றால் இங்கு அனைவரும் நலம் பெறலாம். சிந்தனை செய்யுங்கள். நன்றி
www.tamilpadai.blogspot.com