சனி, ஜனவரி 05, 2008

கட்சிகளும் கடவுளரும்

'இப்படி இரண்டு பிள்ளைகளுக்கு அப்படி ஒரு அப்பா!' கடவுள் மறுப்பு சொல்லிக் கொண்டிருந்தாராம் எங்க தாத்தா. அவரது மகன்களான அப்பாவும் சரி, சித்தப்பாவும் சரி பெரிய பக்திமான்கள்.

'ஊரெல்லாம் எரிஞ்சுதாம், சீதை மட்டும் எரியலையாம் என்ன கதை!' என்று அவரது வசனம் ஒன்றும் நினைவிருக்கிறது. மற்றபடி எனக்கு விபரம் தெரிந்து அவருடன் பேச, விவாதிக்க முடியும் முன் அவர் போய்ச் சேர்ந்து விட்டார். 'தாத்தா திக காரர்' என்று அவ்வப்போது கேட்டதுண்டு.

அதன் எதிர்வினையோ என்னவோ அப்பா ஆன்மீகத்தில் முழு மூச்சாக ஆழ்ந்தவர். இதைத் தொட்டு அதைத் தொட்டு, ரமணர் முதல், ஓஷோ வரை, காந்தி முதல் அரவிந்தர் வரை எல்லோரையும் படித்துக் கொண்டிருப்பார். அந்த வழியில் தவிர்க்க முடியாத இந்துத்துவா நண்பர்களும் நிறைய உண்டு. அதன் தாக்கம் எங்கள் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

எனக்கு நினைவு தெரிந்து தேர்தல் பற்றிய பேச்சு, வீட்டில் ஒரு நாள் மாலை வேளை. 'இனிமேல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யாருன்னு கேட்டா என்னடே எழுதுவ' அப்பா அண்ணனை இப்படிக் கேட்க, 'எம்ஜிஆர்னு எழுதிடாதே, எதாவது சினிமாக் காரன் என்று ஆயிடும். எம்ஜிராமச்சந்திரன் என்று எழுத வேண்டும்.' எம்ஜிஆர் என்றால் சினிமாக்காரர், எம் ஜி ராமச்சந்திரன் என்றால் முதலமைச்சர்.

அந்தத் தேர்தல் பிரச்சாரக் காலங்களில் ஊரில் தாத்தா வீட்டில் நின்றதாக நினைவு. தினமும் மாலையில் தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு பையன்கள் ஊர்வலமாக வருவார்கள் 'போடுங்கம்மா ஓட்டை, ரெட்டை எலையப் பார்த்தே!' என்று முழக்கம். அந்த ''விசிலடிச்சான் குஞ்சுகள்' 'சினிமா மயக்கத்தில்' கடுமையாக உழைத்திருக்கிறார்கள். 'அக்கா இரட்டை எலைக்குப் போட்டுடுங்க, அத்தே இரட்டை எலைக்கு போட்டுடுங்க' என்று பேசிக் கொண்டே துண்டு பிரசுரங்களைக் கையில் திணிப்பார்கள்.

'ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ள வேலையை விட்டுட்டுல்லா நிக்காராம்'. 'மக்கள் தொண்டாற்ற நான்கு இலக்கச் சம்பளத்தைத் துறந்து விட்டுத் தேர்தலுக்கு நிற்கும் அண்ணன் முத்து கிருஷ்ணனை மறந்து விடாதீர்கள்' என்று அதிமுக வேட்பாளரைப் பற்றிப் பேச்சு. இது 1980 தேர்தல் என்று நினைக்கிறேன். அவரை எதிர்த்து காங்கிரசின் சங்கரலிங்கம். பெரிய கல்லூரியின் தாளாளர். ஊரில் யாருக்கும் தலை வணங்கத் தேவை இல்லாத மனிதர். கடைசியில் இரட்டை இலைதான் வெற்றி பெற்றது.

நாகர்கோவில் தொகுதியில் அதிமுக திமுகவுக்கு இடையிலான போட்டியில் திமுகவின் ரத்தினராஜ் வெற்றி பெற்றார். அவர் அம்மாவின் கூடப் படித்தவர் என்ற அபிமானத்தில் அவருக்கு ஓட்டு போட்டதாக அம்மா சொல்லிக் கொள்வார்கள்.

தமிழாசிரியரான அம்மாவுக்குக் கலைஞர் மீது தனி அபிமானம். 'எங்களை எல்லாம் ஏத்தி வச்சது அவர்தான். தமிழாசிரியர்களின் சம்பள விகிதங்களை உயர்த்திக் கொடுத்தது அவர்தானாம். ஆனால் அவரது கடவுள் மறுப்பு அரசியல் மீது அம்மாவுக்கும் வெறுப்பு உண்டு. அப்பாவின் சித்தி மகன்களில் ஒருவர் திக கடவுள் மறுப்பு புத்தகங்களைக் கொடுப்பார், இன்னொருவர் இந்துத்துவா அரசியலில் ஈடுபடுவார். இரண்டின் மீதும் சம அளவு வெறுப்பு அம்மாவுக்கு. எப்படியாவது பிள்ளைகளை அந்தத் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று நிறையத் திட்டு விழும்.

மஞ்ஞை வசந்தன் என்பவர் எழுதிய 'அர்த்தமற்ற இந்துமதம்' என்ற புத்தகத்தைப் படித்துதான் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று புத்தகம் எழுதியிருக்கிறார் என்றே தெரியும். இந்துமதத்தை பொதுவாகவும், கண்ணதாசனின் கருத்துக்களை குறிப்பாகவும் மறுத்து எழுதப்பட்ட நூல் அது. இன்றைக்கு எந்தப் புத்தகக் கடையிலும் பார்க்க முடிவதில்லை. கண்ணதாசன் பதிப்பகத்தின் மூலம் அர்த்தமுள்ள இந்து மதம் இன்றும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

அப்பாவுக்கு கலைஞர் மீது பயங்கர வெறுப்பு. 'பஞ்ச காலத்துல அரிசிய எல்லாம் கேரளாவுக்குக் கடத்திட்டான்க' என்று சாடை மாடையாகக் குறிப்பிடுவார். எம்ஜிஆரின் அரசியல் மீதும் பிடிப்பு கிடையாது. 'கோமாளி, நிலையான புத்தி கிடையாது' என்று கடுப்பு.

6 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

என்ன மாசி?
தொடருமா? தொடராதா என்று போடாமல் முடித்துவிட்டீர்கள்!!

இரண்டாம் சாணக்கியன் சொன்னது…

கதை பாதியோடு நிற்பதால் சுவாரஸ்யம் கெட்டு விடுகிறது மாசி ஸார்.. தொடரும் என்று போட்டிருக்கலாம்..

மா சிவகுமார் சொன்னது…

வாங்க வடுவூர் குமார், இரண்டாம் சாணக்கியன்,

இந்தக் கதை முடியாத ஒன்றுதானே! பல வாரங்களுக்கு முன் எழுதியது, நீங்கள் ஊக்குவிப்பதால் இதைத் தொடர்ந்து எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது :-)

நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

Happy birthday MaSi

Anbudan
Athiyaman

பெயரில்லா சொன்னது…

கடவுள் மறுப்பு தி.க கொள்கைக்கும், இந்துத்வா கொள்கைக்கும் எதேனும் ஒற்றுமை இருக்கா ?

மா சிவகுமார் சொன்னது…

நன்றி அதியமான்,

அனானி,

//கடவுள் மறுப்பு தி.க கொள்கைக்கும், இந்துத்வா கொள்கைக்கும் எதேனும் ஒற்றுமை இருக்கா ?//
இல்லை. முன்னது சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற ஒரு கருவியாக உருவானது. பின்னது அந்த ஏற்றத்தாழ்வுகளை கட்டிக் காக்கும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது.

அன்புடன்,
மா சிவகுமார்