திங்கள், மே 01, 2006

தொழில் நிறுவனங்களின் தர்மச் செலவுகள்

பில் கேட்ஸ் எய்ட்சு நோயாளிகளின் நலனுக்காக இத்தனை பில்லியன் டாலர் கொடுத்தார். இன்ஃபோசிஸ் சார்ந்த ஒரு அமைப்பு, பள்ளிக்கூடங்களுக்கு, மருத்துவமனைகளுக்கு தானம் செய்கிறது. இவை எல்லாம் வர்த்தக நோக்கில் ஓடும் இந்த உலகில் நல்ல உள்ளங்களும் உள்ளன என்பதைக் காட்டும் சில செயல்கள்.

கொஞ்சம் பொறுங்கள். இவை உண்மையிலேயே சமூகத்துக்கு நல்ல பணிகள்தானா? இந்தப் பணம் வேறு எங்காவது இன்னும் நல்லவிதத்தில் பயன்படுமா?

ஒர் வணிக/தொழில் நிறுவனத்துக்கு லாபம் எங்கிருந்து வருகிறது? செலவுகள் எல்லாம் போக, விற்ற விலையின் மீதம் தான் லாபம். இந்த லாபத்தை எடுத்துதான், இப்படி செலவு செய்கிறார்கள், தர்மத்தை வளர்க்கிறார்கள்.

ஆனால், பொருளாதார விதிகளின் படி சரியாக இயங்கும் ஒரு சந்தைப் பொருளாதரத்தில் அதிகப்படியான லாபமே இருக்க முடியாது. அதாவது, பொருட்களை வாங்கும் போதும் விற்கும்போதும், சமமாகப் போட்டியை ஒரு நிறுவனம் சந்தித்தால் வரும் பணம் செலவுகள் எல்லாம் போக எதுவும் மிஞ்சாது.

பணம் வரும் வழி ஒரே வழி - வாடிக்கையாளர்கள் பொருட்களுக்கு கொடுக்கும் விலை.
பணம் போகும் வழிகள் - சம்பளம்/கூலி, மூலப் பொருட்களுக்கான விலை, தொழிற்கூட வாடகை, மின்சாரம், வங்கி அல்லது பிற கடன்களுக்கான வட்டி, முதலாளி முதலீடு செய்த பணத்துக்கான வருமானம் (இன்னும் சில).

இந்த இரண்டு வகைகளையும் கழித்தால் எதுவும் மிஞ்சக் கூடாது. ஒரு நிறுவனத்துக்கு தானம் தருமம் செய்யுமளவு பணம் மிஞ்சுகிறது என்றால் அந்தப் பணம் செலவுக் கணக்கில் சரியான விலை கொடுக்காததாலோ, வரவுக் கணக்கில் அதிகமான விலை பெற்றதாலோ வந்திருக்கலாம்.

ஒரு ஊழியரை வேலையில் வைப்பதால் நிறுவனத்தின் வருவாய் எவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவையும் சம்பளமாகக் கொடுப்பது பொருளாதார விதி. வேலைக்கு எடுக்கும் போது, ஊழியர் எவ்வளவு காசுக்கு ஒத்துக் கொள்கிறாரோ அந்த சம்பளத்தைக் கொடுத்து மீதியை சேமித்துக் கொள்வது இன்றைய பொருளாதார நடப்பின் விதி. ஊழியர் ஏன் குறைந்த ஊதியத்தை ஒத்துக் கொள்ள வேண்டும் ? இல்லையென்றால் வீட்டில் அடுப்பெரியாது. வரிசையில் நிற்கும் அடுத்தவன் இந்த வேலையில் அமர்ந்து கொள்வான்.

இதே மாதிரி, மூலப் பொருள் வாங்கும் போது, விவசாயிக்கு காசு தேவை என்று புரிந்து கொண்டு, என்ன விலைக்கு வாங்க முடியுமோ அந்த விலையில் விளை பொருளை வாங்கிக் கொள்வது நிறுவனத்தின் "லாபம்" அதிகரிக்க இன்னொரு வழி.

சந்தையில் ஏகபோக ஆதிக்கத்தினால், நுகர்வோருக்கு கொடுக்க வேண்டிய விலையை விட ஏற்றி விற்பது இன்னும் ஒரு வழி.

இது எல்லாம் முடிந்து, அரசுக்கு வரி செலுத்தும் நேரம் வரும்போது கணக்குகளை மாற்றியமைத்து வரி அளவைக் குறைத்துக் கொள்வது இன்னும் ஒரு வழி.

இப்படி எல்லாம் சேர்ந்த லாபப் பணத்தைத்தான், மைக்ரோசாப்டுகளும், இன்ஃபோசிஸ்சுகளும், டாடாக்களும் பொதுநலத் தொண்டாக செலவளிக்கின்றன. அப்படிச் செலவளிப்பதைப் பாராட்ட வேண்டியதுதானே!

வணிக நிறுவனம் ஏற்படுத்தியதின் நோக்கம், தொழில் செய்வது. அதற்குத் திறமையுள்ளவர்கள் அங்கு வேலை செய்கிறார்கள். சமூகத்துக்கு என்ன தேவை என்று அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும்?

அப்படி முடிவு செய்யத்தான் அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் உள்ளனர். நிறுவனத்தில் அதிகப்படியாக வரும் லாபத்துக்கு மூடி மறைக்காமல் முழுவதாக வரி செலுத்துவது, மிஞ்சி இருப்பதை பங்கு தாரர்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களும் தம்முடைய வருமான வரியைச் சரியாகச் செலுத்துவதும்தான் இவர்கள் செய்யும் மிகப் பெரிய சமூகத் தொண்டாக இருக்கும்.

அப்படியும் வரும் லாபம் மிக அதிகம் என்று கருதினால், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, வாடிக்கையாளருக்கு குறைந்த விலை அல்லது அதிகமான தரம் அல்லது மூலப் பொருள் தருபவர்களுக்கு கொஞ்சம் அதிக விலை என்று ஆரம்பிக்கலாம்.

4 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

"அப்படி முடிவு செய்யத்தான் அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் உள்ளனர். நிறுவனத்தில் அதிகப்படியாக வரும் லாபத்துக்கு மூடி மறைக்காமல் முழுவதாக வரி செலுத்துவது, மிஞ்சி இருப்பதை பங்கு தாரர்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களும் தம்முடைய வருமான வரியைச் சரியாகச் செலுத்துவதும்தான் இவர்கள் செய்யும் மிகப் பெரிய சமூகத் தொண்டாக இருக்கும்."

அரசாங்கத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அப்பணத்தைக் கொடுத்தால் என்னவாகும் என நினைக்கிறீர்கள்? அப்ப்டியே சம்பந்தப் பட்ட மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் சின்ன வீடுகளுக்கும்தான் பணம் போகும். அதற்கு சம்பந்தப் பட்ட நிறுவனமே செய்வது மேல். கொடுக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கெல்லாம் கொடுக்கும் அரசு என்ன முட்டாளா? அந்த விதிமுறைகளை சரியானபடி உபயோகித்து, வரிகளைக் குறைத்துக் கொள்வதும் அரசால் அனுமதிக்கப் பட்ட ஒரு நிலைதானே.

"ஆனால், பொருளாதார விதிகளின் படி சரியாக இயங்கும் ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் அதிகப்படியான லாபமே இருக்க முடியாது. அதாவது, பொருட்களை வாங்கும் போதும் விற்கும்போதும், சமமாகப் போட்டியை ஒரு நிறுவனம் சந்தித்தால் வரும் பணம் செலவுகள் எல்லாம் போக எதுவும் மிஞ்சாது."
ஆகா, என்ன பொருளாதார சிந்தனை சார் உங்களுக்கு? எதுவும் மிஞ்சாமல் அப்படியே வாயில் விரலை வைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதானா?

நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பது தேச விரோதம், இந்தியா அயல் நாட்டுக் கொள்கையில் தன் சுயநலனைப் பார்க்காமல் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும், (எனது மற்றும் சங்கர நாராயணன் அவர்கள் இட்ட இஸ்ரேல் பதிவுகளில் நீங்கள் எழுதியது) அடாடா என்ன சிந்தனைகள். நல்ல வேளையாக முடிவு எடுக்கும் இடங்களில் நீங்கள் இல்லை. இருந்திருந்தால் நாடே கப்பரையை ஏந்தி பிச்சை எடுக்கப் போயிருக்கும்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை உங்களுடைய பின்னூட்டம் வந்துள்ள என்னுடைய இந்த இஸ்ரேல் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/2_29.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் சொன்னது…

நீங்கள் பொருளாதாரம் படித்திருக்கிறீர்களா, டோண்டு சார். போய்ப் படித்து விட்டு பின்னர் வாதிட வாருங்கள்.

என்னுடைய பதிவில், நிறுவனத்தின் செலவுக் கணக்கில், முதலீட்டாளருக்கு கொடுக்க வேண்டிய லாபத்தையும் சேர்த்துள்ளேன். பொருளாதாரவியலின்படி, சரியாக இயங்கும் சந்தைப் பொருளாதாரத்தில் நான் குறிப்பிட்டதிற்கு மேல் லாபம் என்பதே கிடையாது.

அரசியல்வாதிகள் சரியில்லை என்று எல்லோரும் தமது வேலையை விட்டு விட்டு, அரசாங்கத்தில் பணிகளைச் செய்ய ஆரம்பித்து விடக் கூடாது. காவல் துறை சரியில்லை என்று குற்றவாளிகளுக்கு நீங்களே தண்டனை கொடுக்க ஆரம்பித்து விடும் தமிழ் திரைப்படங்கள் போன்றது அது.

நான் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை என்று நீங்கள் மகிழ்ச்சி அடைவது சரிதான்.

dondu(#11168674346665545885) சொன்னது…

"பொருளாதாரவியலின்படி, சரியாக இயங்கும் சந்தைப் பொருளாதாரத்தில் நான் குறிப்பிட்டதிற்கு மேல் லாபம் என்பதே கிடையாது."

பிரச்சினையே அதுதானே. There is no perfect market or perfect competition என்பதுதானே பொருளாதாரத்தில் நீங்கள் படித்திருக்க வேண்டிய முதல் பாடம். உண்மையைக் கூறப்போனால் பொருளாதார மனிதன் என்னும் கான்சப்டை வைத்து பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள். அதனால் ஒரு நிறுவனம் கூடுதல் லாபம் ஈட்டுதல் சந்தை சரியாகச் செயல்படாததால்தான் இல்லையா! அந்த லாபத்தை வரியாக அன் அரசு உறிந்து சமூகத்துக்கு அளிக்க முயல்வது நேருவியன் சோஷலிசம், அதை தனியாருக்கு விட்டு விடாமல் அரசே தொழில் நடத்துவது சோவியத் கம்யூனிசம், தனியார் நிறுவனமே கொழுக்கட்டும் என்று விட்டு விடுவது அமெரிக்க முதலாளித்துவம். அது எதுவுமே போட்டி சரியாக இல்லாததால் குவியும் லாபத்தை முறைப்படுத்த முடியவில்லைதானே.

இதற்கு ஒவ்வொரு நிறுவனமும் தன்னிச்சையாக தனது நடத்தைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றிதான் இதை எழுதினேன். இந்த ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்து பொருளாதாரம் பற்றிய என்னுடைய புரிதல்களைப் பதிக்க எண்ணம். அதில் இன்னும் விளக்கம் தாருங்களேன் .

அன்புடன்,

மா சிவகுமார்