வெள்ளி, ஜூலை 13, 2007

அடிப்படை உரிமைகள்

ஒரு பின்னிரவில் எழும்பூர் போவதற்காக பயணம். பத்து மணி வாக்கில் வளசரவாக்கத்தில் பேருந்து பிடித்து ஜெமினியில் இறங்கினேன். கடற்கரை நோக்கிப் போகும் அந்தப் பேருந்தில் அண்ணா சாலையில் வலது புறம் திரும்பி ராயப்பேட்டை போகும் சாலையில் இறக்கி விட்டார்கள். புதுக் கல்லூரிக்கு அருகில்.

அங்கிருந்து திரும்பி அண்ணா சாலைக்கு வந்து எழும்பூர் போகும் பேருந்து ஏதாவது பிடிக்கலாம் என்று எண்ணம். கல்லூரியில் படிக்கும் போது பெசன்ட் நகரிலிருந்து அயனாவரம் வரை போகும் 23C பழக்கமான பேருந்து. அது அண்ணா சாலை வழியாகத்தான் போகும். அந்த நினைவில் நடந்தேன்.

நடைபாதையில் மனிதர்கள் தூங்க ஆரம்பித்திருந்த நேரம். முதலில் இரண்டு வயதான பெண்கள் மூடிக் கொண்டு நடக்கும் வழியிலேயே. கடை ஒன்றின் பக்கவாட்டு வாசல் படியில் உயரத்தில் இன்னொரு அம்மா, அவருக்கு என்று பதிவான இடம் என்று நினைத்துக் கொண்டேன். ஓரிரு அடிகள் வந்ததும் தலை வரை மூடிய இளைஞன் ஒருவன் பக்கவாட்டில் படுத்து காலை எதன் மீதோ தூக்கித் போட்டிருந்தான். அடுத்த கணம் அந்த எதன் மீதோ என்று நினைத்தது என்ன என்று புரிந்தது.

கடந்து சென்ற சில கணங்களில் ஆண் அத்து மீற முயற்சிப்பதும் பெண் செல்லமாக முரண்டுவதும் புலப்பட்டது.

வழக்கமாகத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த நேரத்தில் மனமும் ஏதோ கனவுலகில் இருப்பது போல ஓடியது. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை ஒன்றில் நடைபாதை வாசிகள் நீண்ட நாட்கள் காதலித்து பெண்ணின் உறுதியால் தாலியும் கட்டிய பிறகு முதலிரவு கொண்டாட புதர் மறைவுக்குப் போகிறார்கள். இரவுக் காவலர் ஒருவர் வந்து அவர்கள் விபச்சாரம் செய்வதாக அழைத்துச் செல்கிறார்.

சென்னை நகரின் பரபரப்பான பகுதியில், சில அடிகள் தொலைவில் வாகனங்கள் போய்க் கொண்டிருக்கக் குடும்பம் நடத்தும் அவலம். உண்ண உணவு, உடுக்க உடை, தலைக்கு மேல் கூரை, ஆரம்பக் கல்வி இவை அடிப்படை உரிமைகளாக இருக்க வேண்டும். எத்தனை பெற்றுக் கொள்வது என்று சரியான முடிவெடுக்கச் சொல்லித் தரத் தவறும் சமூகம் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமைகள் உத்தரவாதம் வழங்க வேண்டும்.

சொத்துரிமை, தொழில் செய்யும் உரிமை இருப்பது போல, அந்த உரிமைகள் மீறப்படும் போது அரசாங்கத்தின் எல்லாக் கரங்களும் பதறிக் கொண்டுச் செயல்பட்டு விடுவது போல
தனி ஒருவனுக்கு உணவு இல்லா விட்டால் காவல் துறையும், நிர்வாகத் துறையும், நீதித் துறையும் உசுப்பப்பட வேண்டும். ஊடகங்களில் தலைப்புச் செய்தி வர வேண்டும்.

10 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

மா.சி,
இரவு 10 க்கு மேல் பேருந்துகள் அண்ணாசாலையில் கிடைப்பது அறிது , பேருந்து கிடைத்தத, நீங்கள் 25G இல் சென்று இருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்து இருக்குமே 17 வரிசை பேருந்துகள் சில எழும்பூர் செல்லும் நேரடியாக. இல்லை எனில் கோயெம்பேடு சென்று அங்கு இருந்து 27B இல் செல்வது தன் நல்லது ,இரவு நேர சிறப்பு பேருந்தும் உண்டு!

நடைபாதை வசிப்பவர்களின் வாழ்கையை நீங்கள் பார்த்தது ரொம்ப கொஞ்சம் , இரவு நேரங்களில் வரும் போது சில சமயம் அவர்கள் தாம்பத்யம் செய்வதும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, யாரைப்பற்றிம் கவலை இன்றி செயல்படுகிறார்கள். பார்ப்பவர்கள் தான் கண்ணை மூடிக்கொள்ளவேண்டும்.

நீங்கள் நடந்து வந்தப்பகுதியில் அண்ணா சாலைக்கு அருகே ,ஆனந்த் தியேட்டர் எதிர்புறம் விளம்பர தட்டிகளால் சூழப்பட்ட ஒரு பழைய மாநகராட்சி பூங்கா இருக்கும் அதனுல் ஒரு 500 பேர் திறந்த வெளியில் வசிக்கிறார்கள்.ஒரு நாள் அவ்வழியே வரும் போது இயாற்கை உபாதை வரவே எங்கே இடம் கிடைக்கும் என ஒதுங்கினால் அந்னுல் ஒரு ஊரே இருக்கிறது!



இதற்கு என்ன தீர்வு என்று தான் தெரியவில்லை. சாலைஓரம் வசிப்பவர்களில் பலர் சராசரியாக ஒரு நாளைக்கு 200- 300 சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள் ஆனாலும் இப்படி சாலை ஓரம் , கூவம் கரையில் என விரும்பியே வசிக்கிறார்கள்.

நகரப்பகுதிகளில் தேவையான அளவு கழிப்பறை கூட இல்லாத ஒரு நகரம் தான் சென்னை. அவசர ஆத்திரத்துக்கு எங்கே போவது?

Thekkikattan|தெகா சொன்னது…

இதற்கு என்னதான் தீர்வு. பிள்ளைகள் எங்கிருந்து தோன்றுகின்றன. வானத்திலிருந்து தொபுக்கடீர் என்று வீழவா செய்கிறது. தானே மிக்கத் துயரித்தின் பேரில் வாழ்வை ஓட்டும் பொழுது, ஏன் இத்தனை பிள்ளைகளை ஈன்றெடுக்க வேண்டும். அது மட்டுமே மற்ற துயரங்களை மறக்கடிப்பதற்கு ஓர் மருத்தாக அவர்களுக்கு தோன்றுகிறதோ, புரியவில்லை.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வெள்ளைத் தாத்தா சுமாருக்கு 80 வயதுக்கும் மேல் இருக்கும் அங்கு கொண்டு வந்திருந்தேன். முதல் முறையாக அமெரிக்காவை விட்டு வெளியே வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்மூரில் வந்து இறங்கி நீங்க சொன்ன வழியாக வர நேர்ந்தது, ஆங்காங்கே சிறு, சிறு மூடைகளாக மக்கள் ரோடோரங்களில் சுருட்டிக் கொண்டுப் படுத்திருந்தார்கள். நமது ஓட்டுனரும் மிகவும் திறமையாக அப்படியும், இப்படியுமாக வளைத்து, வளைத்து ஓட்டியதனைப் பார்த்துவிட்டு, தாத்தா புரியாமல் அந்த bagகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். சொன்னதும், மலைத்துப் போய் இதில் மக்களா இருக்கிறார்கள் என்று கேட்டு பிறகு எதுவுமே பேசமால் வந்து கொண்டிருந்தார்.

என்ன நினைத்திருப்பார். நானும் கேட்டுக் கொள்ளவில்லை. அவ்வாறு வாழும் மக்களின் நிலையில் நினைத்துப் பார்ப்பதற்கே மிக்க வருத்தமாக இருக்கிறது. அந்த கொசுக்கடி, சாக்கடை, வாகனச் சத்தம்... மற்றொரு பக்கம் அதற்கு எதிர்மாறாக இந்தியா ஒளிர்கிறது என்ற கோசத்தில் நாம்... :-(

தமிழ் குரல் சொன்னது…

சாலையோரங்களில் வாழ்பவரின் நிலை மிகவும் பரிதாபமானது... அதுவும் மழை காலம் என்றால் அவரகள் தூங்குவது பேருந்து நிலையம் போன்ற இடங்களில்தான்...

இவர்களில் சிலருக்கு குடிசை மாற்று வாரியத்தில் மூலம் வீடு கொடுத்தாலும் விற்று விட்டு... சாலையோரத்தில் வந்து விடுகிறார்கள் என்ற குற்ற சாட்டும் இவர்கள் மீது உண்டு...

சாலையோரங்களில் வாழ்பவர்களின் குழந்தைகள்தான் நிலை மிக மிக மோசம்... இவர்களுக்கே விழிப்புணர்வு வர வேண்டும்...

ராஜ நடராஜன் சொன்னது…

சிவா,

எந்த வருசத்து பதிவு இது.நான் 70 வதுகளின் இறுதியோ,எனது கல்லுரிக் கால ஜெயகாந்தனின் புத்தகப் பக்கத்தின் துண்டோ என்று நினைத்தேன்.மனம் வலிக்கிறது.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வவ்வால்,

ஆற்காடு சாலை பேருந்து தடம் எல்லாம் சொல்கிறீங்க, நெருக்கமாகத்தான் வசிக்கிறீங்களா? :-)

//இதற்கு என்ன தீர்வு என்று தான் தெரியவில்லை.//
கண்டு பிடிக்க வேண்டும் வவ்வால். நகரங்கள் நம்மால் உருவாக்கப்பட்டவைதானே! சின்னச் சின்ன விஷயங்களுக்கு அவ்வளவு திட்டமிடலும் விவாதங்களும் (குடியரசுத் தலைவர் தேர்தல், சிவாஜி படம், பட்டறை விவாதங்கள்) செய்யும் நம் அமைப்பில் இதைச் சரி செய்யவும் வழி கிடைக்கத்தான் செய்யும்.

தெகா,

//ஏன் இத்தனை பிள்ளைகளை ஈன்றெடுக்க வேண்டும். அது மட்டுமே மற்ற துயரங்களை மறக்கடிப்பதற்கு ஓர் மருத்தாக அவர்களுக்கு தோன்றுகிறதோ, புரியவில்லை.//

சமூகமாகச் சேர்ந்து அரசமைத்து வாழும் நாம் இதற்கும் வழி செய்யத்தான் வேண்டும். நாகரீகமில்லா அமைப்பில் வேண்டுமானால் நமக்குப் புரியவில்லை என்று ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால், நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இந்த அவலங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகிறோம் என்று எனக்குப் படுகிறது.

//அந்த கொசுக்கடி, சாக்கடை, வாகனச் சத்தம்... மற்றொரு பக்கம் அதற்கு எதிர்மாறாக இந்தியா ஒளிர்கிறது என்ற கோசத்தில் நாம்... :-(//

இதுதான் அவலம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு போதை தரும் முழக்கங்கள். பார்க்க விருப்பமில்லாததைத் தவிர்த்துக் கொள்ளும் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது.

தமிழ்க் குரல்,

//இவர்களுக்கே விழிப்புணர்வு வர வேண்டும்...//
அது ஒரு புறம் இருக்க, அப்படிச் சொல்லி நமது பொறுப்பை முடித்துக் கொள்ள முடியாது. சமூகத்தின் ஒவ்வொருவரும் இது போன்ற அவலங்களுக்கு விடை காண முயல வேண்டும் என்று நினைக்கிறேன்.

நட்டு,

இது நடந்தது போன மாதம் ஒரு நாள். என் நாள்குறிப்பிலிருந்து எடுத்தேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

Jazeela சொன்னது…

//தனி ஒருவனுக்கு உணவு இல்லா விட்டால் காவல் துறையும், நிர்வாகத் துறையும், நீதித் துறையும் உசுப்பப்பட வேண்டும். ஊடகங்களில் தலைப்புச் செய்தி வர வேண்டும்.// இவர்களையெல்லாம் உசுப்பி என்ன செய்ய? தனி ஒருவனுக்கா ஒரு கூட்டத்திற்கே உணவில்லை வீடில்லை. இருப்பவர்கள் முடிந்த அளவு பகிர்ந்து தந்தாலும் வவ்வால் சொன்னது போல //சாலைஓரம் வசிப்பவர்களில் பலர் சராசரியாக ஒரு நாளைக்கு 200- 300 சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள் ஆனாலும் இப்படி சாலை ஓரம் , கூவம் கரையில் என விரும்பியே வசிக்கிறார்கள்.// இப்படி விரும்பி வசிப்பவர்களை என்ன செய்வது? :-(

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ஜெஸிலா,

//இவர்களையெல்லாம் உசுப்பி என்ன செய்ய? தனி ஒருவனுக்கா ஒரு கூட்டத்திற்கே உணவில்லை வீடில்லை.//

ஒரு வீட்டில் திருட்டு நடந்தால், ஒருவன் விடுதியில் சாப்பிட்டு விட்டுக் காசு கொடுக்க முடியா விட்டால், உசுப்பப்படும் சட்டங்கள் என்ன செய்கின்றன?

முதல் அமைச்சர், தலைவர்கள் பயணம் போகும் போது உசுப்பப்படும் அமைப்புகள் பாதுகாப்பு அளிக்கவில்லையா?

அது போல அடிப்படைத் தேவைகள் அடிப்படை உரிமைகளாக இருக்க வேண்டாமா? சமூகமாக சட்ட திட்டங்கள் வகுத்திருக்கும் போது, சொத்துரிமைக்குக் கொடுக்கப்படும் சட்டப் பாதுகாப்பு, உணவு, உறைவிடம், கல்வி, அடிப்படை மருத்துவத்துக்கு ஏன் இல்லை?

இதற்கு தீர்வு சோவியத் கம்யூனிசம் இல்லைதான். ஆனால் இப்போது இருக்கும் முறை முற்றிலும் சரி கிடையாது. மாற வேண்டியது நிறைய இருக்கிறது

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

மா.சி,

//சமூகமாக சட்ட திட்டங்கள் வகுத்திருக்கும் போது, சொத்துரிமைக்குக் கொடுக்கப்படும் சட்டப் பாதுகாப்பு, உணவு, உறைவிடம், கல்வி, அடிப்படை மருத்துவத்துக்கு ஏன் இல்லை?//

இந்த கேள்விக்கு மட்டும் விடையும் , அதனை செயல்படுத்தும் திறனும் கிடைத்து விட்டால் கண்டிப்பாக இந்தியா வல்லரசு தான், அதுவும் இந்த 60 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் கிடைக்கப்பெற்றால் இந்தியா சுதந்திரம் கிடைக்கப்பெற்றதன் நோக்கம் உண்மைலேயே நிறைவேறி விடும்!

வவ்வால் சொன்னது…

ஜெசிலாவிற்காக இது!,
விளிம்பு நிலை மனிதர்கள் எல்லோரும் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என சொல்ல வரவில்லை நான் , எனது அனுபவத்தில் அல்லது அறிந்த வறையில் சொன்னேன்.

எனது 2 சக்கர வாகனம் சிறிய விபத்துகுள்ளாகி ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது அதனை அருகாமையில் இருக்கும் எவரிடமும் பழுது பார்க்க கொடுக்க முடியாத நிலை(பக்கத்தில் வேறு மெக்கானிக் யாரும் இல்லை) எனவே எப்படி எடுத்து செல்வது என யோசித்து மீன் பாடி வண்டி என இங்கே ஒன்று இருக்கிறது அதில் எடுது வர பேரம் பேசி 200 ரூபாய் கொடுத்தேன்(கேட்டது 300).

அவர்கள் இது போல நடைபாதையில் வசிப்பவர்கள் தான். ஒரு அரை மணி நேரத்தில் 200 ருபாய் சம்பாதித்தார். இதே போல அப்படி வசிப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பொருள் ஈட்டியே வருகிறார்கள்.

அதே போல எங்கள் கம்பெனியின் விளம்பர நோட்டிஸ்கள் ஒட்ட இப்படி பட்டவர்களுடன் பேசிய அனுபவம் இருக்கிறது ஒரு A4 விளம்பரம் ஒட்ட 50 காசு என பேசி முடித்தேன் , கிட்ட தட்ட 5000 சிறு நோட்டிஸ்கள் (50 காசு என்பது ரொம்ப குறைவு வழக்கமாக 1 ரூபாய் என சொன்னர்கள்,நான் அதே பகுதி என்பதால் ஒத்துகொண்டார்களாம்), ஒரே இரவில் ஒட்டிவிட்டு காசு வாங்கி கொண்டார்கள்.எத்தனை பேர் ஒட்டினார்கள் என்றெல்லாம் தெரியாது ஆனாலும் ஒரு நாளுக்கு சராசரியாக 200- 300 சம்பாதிக்கிறார்கள் என்பது மட்டும் எனது அனுமானம்.

இப்படி சம்பாதிக்கும் திறன் இருந்தும் அவர்கள் நடைபாதை, கூவம் கரையிலேயே வசிக்கிறார்கள் , என்ன காரணம்! இப்படி எல்லாரும் சம்பாதிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது ஆனாலும் ஒரு 50 சதவீதம் பேராவது வருமானம் ஈட்டுக்கிறார்கள். அப்படி இருந்தும் விளிம்பு நிலை வாழ்கை வாழ்கிறார்கள்!

இப்படி பட்டவர்களுக்கு என்ன வகையில் தீர்வு காண்பது?

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

//இந்த கேள்விக்கு மட்டும் விடையும் , அதனை செயல்படுத்தும் திறனும் கிடைத்து விட்டால் கண்டிப்பாக இந்தியா வல்லரசு தான், அதுவும் இந்த 60 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் கிடைக்கப்பெற்றால் இந்தியா சுதந்திரம் கிடைக்கப்பெற்றதன் நோக்கம் உண்மைலேயே நிறைவேறி விடும்!//

இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் இந்தக் கேள்விக்கான விடை தேவைதானே.

அரை மணி நேரத்தில் 200 ரூபாய், 8 மணி நேரத்தில் 1600 ரூபாய், மாதத்துக்கு 30,000 ரூபாய் என்று கணக்கிட்டு விடவும் முடியாது. பணத்துக்கு மேல் இன்னும் பல நடைமுறைச் சிக்கல்களும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்