சந்திப்பின் பின்னணிதிருப்பூருக்கு ஒரு தொழில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரயிலில் போய்க் கொண்டிருந்தோம்.
தமிழ்மணம் குறித்துப் பேசும் போது அதை உருவாக்கிய காசி பற்றிச் சொல்லி இப்போது அவர் கோவையில்தான் தொழில் நடத்துகிறார் என்று சொன்னதும் வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணனுக்கு ஆர்வம் வந்து விட்டது. 'சேவை செய்யும் கருவி உருவாக்கி விற்கிறார்' என்று அவரது உதவியாசிரியரிடம் சொல்லி ஒரு பேட்டி எடுத்து வர திட்டம் போட்டார்.
அப்படியே ஓசை செல்லாவுக்குத் தொலைபேசி காசியின் தொடர்பு எண்ணைக் கேட்டால், சிறிது நேரத்தில் காசியே அழைத்தார். வண்டி ஓட்டத்தில் இணைப்பு அறுந்து விட சரிவர பேச முடியாமல் துண்டித்துப் போனது.
திருப்பூர் வந்ததும் விடுதிக்கு அழைத்துப் போக வண்டிகள் ஏற்பாடு. விடுதியில் வந்து சேரும் போது பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. அங்கிருந்து தொலைபேசி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு கோவையில் காசியை பேட்டி காண ஏற்பாடு செய்து கொண்டோம். வளர்தொழில் உதவி ஆசிரியர் முத்து பாண்டியுடன் நானும் போவதாகத் திட்டம் போட்டுக் கொண்டேன். எங்களது கருத்தரங்கம் மாலை நான்கு மணிக்குத்தான் என்பதால், காலையில் எட்டு மணிக்கெல்லாம் பேருந்து பிடித்து கோவை போய் பேசி விட்டு மதியம் இரண்டு மணிக்குள் திரும்பி விடலாம் என்று திட்டம்.
பத்து மணி கோவையில் இருக்க வேண்டும் என்றால் எட்டரைக்கு பேருந்து ஏற வேண்டும், அதனால் ஏழே முக்கால் வாக்கில் கிளம்பி விடுவோம் என்று திட்டமிட்டிருந்தாலும் முத்துபாண்டியும் என்னைப் போலவே அதிகாலை சேவலாக இருக்க ஏழு மணிக்குப் பேருந்து நிலையம் வந்து விட்டோம். ஒரு தேநீரைக் குடித்து விட்டுப் பேருந்தில் ஏறினால், இழுத்து இழுத்து எட்டே முக்காலுக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது. வழி நெடுக பத்திரிகை நடத்துவதில் இருக்கும் சிரமங்களையும் தடைகளையும் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார் முத்துப்பாண்டி.
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கி அன்னபூர்ணா கவுரிசங்கரில் சாப்பிட்டு விட்டு தொலைபேசினால் காசியும் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். தனது வண்டியிலேயே வந்து எங்களை ஏற்றிக் கொண்டு அவர்களது விற்பனை அறைக்கு அழைத்துப் போனார்.
சந்தவை, சந்தகை என்று கொங்கு பகுதியில் அழைக்கப்படும், பொதுவாக மற்ற இடங்களில் சேவை என்று அறியப்பட்ட, சிலரால் இடியாப்பம், சேமியா என்று சொல்லப்படும் உணவு தயாரிக்கும் கருவி வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறார்.
ஏழு ஆண்டு திட்டமிடல் பொறியியல் துறையில் பட்டயப் படிப்பு படித்து அதற்கு மேல் பட்டம் பெற்று சென்னையில் வேலை பார்த்துக் கொண்டே பட்ட மேல்படிப்பு ஐஐடியில் முடித்து விட்டு கோவையில் ரூட்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து கொண்டிருந்தாராம். இளம் வயதிலேயே ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் என்று பதவி உயர்வு பெற்று இன்று வீடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தரை துடைக்கும் கைப்பிடியுடன் கூடிய mopஐ வடிவமைப்பதில் பெரும்பங்காற்றினாராம்.
தனியாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றி நண்பர்களுடன் விவாதித்து மூன்று நண்பர்களாக திட்டம் போட ஆரம்பித்தார்களாம். காசி, புதிய கண்டுபிடிப்புகள், பொருட்கள் உருவாக்கத்தில் வல்லவர், இன்னொரு நண்பர் திட்டங்கள் வகுத்தல், செயல்படுத்தலில் திறமை வாய்ந்தவர், மூன்றாமவர் நடைமுறைப் படுத்தலில் ஆர்வம் உள்ளவர்.
சேவை மேஜிக் என்ற இப்போது உருவாக்கியுள்ள கருவிக்கான எண்ணம் 1999ல் தோன்றியதாம். 2001ல் முதல் மாதிரியைச் செய்து பார்த்து இது சாத்தியமானதுதான் என்று உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்பை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் முதலீடு வேண்டும் என்பதை உணர்ந்து சில ஆண்டுகள் அதற்கான பணம் சேமிப்பதில் ஈடுபட்டு விட்டு தொழிலில் இறங்கலாம் என்று முடிவு செய்தார்களாம். வீட்டு பயன்பாட்டுப் பொருளாக விற்கப்படவுள்ள இந்த உருவாக்கத்திற்கான காப்புரிமையையும் அதற்குள் பெற்று விடலாம் என்று முடிவு செய்தார்களாம்.
2002ல் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களது வாடிக்கையாளரான ஜெராக்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க ஆராய்ச்சிப் பிரிவில் பொறியியல் சேவைப் பிரிவில் பணி புரிய போயிருக்கிறார் காசி. இரண்டு ஆண்டுகள் பணி புரிந்து விட்டுத் திரும்ப வேண்டும் என்று நினைத்திருந்தாலும், அது நீண்டு நீண்டு நான்கு ஆண்டுகளாக ஆகி விட்டது.
அந்த இடைக்காலத்தில்தான் தமிழ்மணம் உருவாகியிருக்கிறது. தமிழ்மணத்தின் சிறப்பும் வெற்றியும் எப்படி உருவாகின என்பதின் பின்னணியும் காசியுடன் பேசும் போதுதான் புரிந்தது. ஒரு தொழிலை உருவாக்க ஏழு ஆண்டுகளாக திட்டமிட்டுத் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்ட அவரது அதே செய்நேர்த்தியும், சிந்தனை ஆழமும்தான் தமிழ்மணம் என்ற திரட்டியை உருவாக்கியிருக்கிறது.
இப்படியே இருந்தால், அமெரிக்க, பெருநிறுவன சொகுசு வாழ்க்கையில் மூழ்கி நம்முடைய முதன்மை நோக்கத்தைக் கைவிட்டு விடுவோம் என்று விழித்துக் கொண்டு வேலையே விட முடிவு செய்து, 'வெளி நாடு போய் விட்டுத் திரும்புபவர்கள் ஆறு மாதங்கள் இந்தியாவில் பணி புரிய வேண்டும்' என்ற டிசிஎஸ்ஸின் விதிமுறையையும் நிறைவு செய்து விட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூஹோம் (NuHom) என்ற தனியார் பங்கு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
பொருளும் சேவையும் இரண்டு ஆண்டு உழைப்பின், திட்டமிடலின், செயலாக்கத்தின் விளைவு எங்களை வரவேற்றது.
ஒரு பக்கச் சந்தில் சிறிய அலுவலகம். வண்டியை நிறுத்தி விட்டு வெளிக்கதவைத் திறந்து உள்ளே அழைத்தார். ஞாயிற்றுக் கிழமை ஆதலால்் அந்த பார்வை மையத்தில் பணி புரியும் பெண் பத்து மணிக்கு மேல்தான் வருவாராம். முன்னறையில் சமையல் அடுப்பு, சேவை மேஜிக் செய்முறைக்கான ஏற்பாடுகள் ஒரு புறம், பக்க வாட்டுச் சுவரில், செய்முறை குறும்படத்தைக் காட்ட ஒரு காட்சிப் பெட்டி,
உள்ளறையில் பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்க உட்கார்ந்து பணி புரிய மேசை நாற்காலிகளும்.
'நேற்று ஒரு கண்காட்சிக்குப் போய் வந்தோம். எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டும் போனோம். அதான் எல்லாம் தாறுமாறா கிடக்கு' என்று சொல்லப்பட்ட இடத்திலேயே ஒழுங்கும் நேர்த்தியும் தெரியத்தான் செய்தது.
'என்ன காசி பெட்டியில் நிறங்களைக் காணவில்லை' என்று உள்ளே நுழைந்ததும் கண்ணில் பட்ட அட்டைப் பெட்டிகளைப் பார்த்துக் கேட்டேன். இன்னொரு பக்கம் தரையில் வண்ண மயமாக, கடையில் விற்பனைக்கு வைக்கக் கூடிய கவர்ச்சிகரமான பெட்டி வெளிப்புற வடிவமைப்புடன் பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.
எங்கிருந்து எடுத்தார் என்று நாம் கவனிக்கக் கூட தேவையில்லாமல் அவர் மேசை மீது ஒரு மாதிரி முளைத்து விட்டிருந்தது.
கீழ்ப் பாத்திரம் சாதாரண ஆறு லிட்டர் குக்கர்தான். கொஞ்சம் விளிம்பில் மாறுபாடுகள் உண்டு. அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதைக் குறிக்க ஒரு வரி போட்டிருக்கிறார்கள். இதை கீழ்ப் பாத்திரம் என்று அழைக்கிறார்.
அந்தப் பாத்திரத்தின் மூடியில் சிறப்பு வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். இது நடுப் பாத்திரம். மாவை ஊற்றுவதற்கு
ஒட்டாத பூச்சு பூசப்பட்ட உட்பகுதி. வெளிப் பகுதியில் உலோக முடி. உட்பகுதியின் நடுவில் ஒரு தண்டு.
அரைத்த புழுங்கலரிசி மாவை ஊற்றி மூடி அடுப்பில் வைத்து விட்டால் 25 நிமிடங்களில் மாவு வெந்து விடும். அதன் பிறகு மேல் பாத்திரமான
நெகிழியில் (பிளாஸ்டிக்கில்) செய்யப்பட்ட மேல் பாத்திரத்தைப் பொருத்தி குக்கர் வெயிட்டையும் போட்டு விட்டால், நீராவியின் அழுத்தத்திலேயே பிஸ்டன் தண்டு தள்ளப்பட்டு சேவை நடுப்பாத்திரத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரப்பர் அச்சின் வழியாக தள்ளப்பட்டு நெகிழி பாத்திரத்தில் சேர்ந்து விடுகிறது.
இத்தோடு நான்கு பேர் சாப்பிடும் அளவிலான சேவை தயார்.
நம்முடைய பாரம்பரிய உணவான சந்தவையின் செய்முறையை எளிமைப்படுத்தி வேலையைக் குறைத்து பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஆரம்பிக்கப் பட்ட முயற்சி இது.
இந்த உணவின் சிறப்பு இப்போது கொங்கு பகுதிகளில் மட்டும்தான் தெரிகிறது. ஆனால் அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட சேவை நாழிகள் முயற்சித்த எல்லோரையும் கவர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது போல
அதிக நேரம் வீணாகாமல், பிசுபிசுப்பு இல்லாமல், துருப்பிடித்து விடாமல், எந்திர இணைப்புகள் இல்லாமல் கிடைக்கும் கருவி, சேவையை அன்றாடம், வாரத்துக்கு மூன்று நான்கு முறை செய்யப்படும் உணவாக ஆக்கி விடலாம்.
இரண்டு நிமிட நூடுல்ஸின் கெடுதல்கள் என்று குங்குமத்தில் வந்த கட்டுரையை பெரிதாக நகலெடுத்து வைத்திருக்கிறார். குழந்தைகள் தொலைக்காட்சியால் மூளைச் சலவை செய்யப்பட்டும், வேலை குறைவு என்று பெற்றோர்களும் 2 நிமிட மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த அதைப் பார்க்கும் மற்றக் குழந்தைகளும் அதையே கேட்க தினமும் அதையே சாப்பிடும் போக்கு கூட வந்து விட்டது.
அதிலிருந்து ஆரம்பித்து, நமக்குத் தோன்றும் கேள்விகளுக்கு எல்லாம் ஏற்கனவே விடை கண்டிருந்தார். இன்னும் நமக்குத் தோன்றாத நூற்றுக் கணக்கான நுணுக்கங்களையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.
ஏன் சேவை என்று பெயர் வைத்தோம், ஏன் காப்புரிமை கிடைக்கும் வரை காத்திருந்தோம் என்றெல்லாம் ஒவ்வொன்றையும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
மூடியின் மேல், Important:Read Instructions Before Use என்ற பாதுகாப்பு எச்சரிக்கையை 'ஆங்கிலம் தெரியாத நமது இல்லத் தலைவிகள் எப்படி படிக்க முடியும்' என்று,
ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் கொடுத்திருக்கிறார்கள்.கீழ்ப் பாத்திரத்தின் பக்கவாட்டில்
செயல்முறை விளக்கப்பட வரிசை ஒன்றையும் பொறித்திருக்கிறார்கள். ஒரு வேளை மற்ற விளக்கங்களை பார்க்காத, அல்லது மறந்து விட்ட ஒருவருக்கும் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்று.
ஆறு லிட்டர் குக்கர் கடையில் ஆயிரத்து இருநூறு ரூபாய்களுக்குக் கிடைக்கிறதாம். இந்த புதிய கருவியின் விலை இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுதானாம். தேடித் தேடி செலவுகளையும் இழுத்துப் பிடித்து ஆகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்கிறார்கள். இன்னும் உற்பத்தி அளவு அதிகமாகும் போது விலை குறையலாம்.
உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு விற்பனைக்கும் வந்துள்ளது.
சந்தைப்படுத்துதல் - ஆரம்பத்தில் வீடு வீடாகப் போய் விற்கும் முறையைப் பின்பற்றினார்களாம். தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று முயன்று பார்க்கக் கொடுப்பதில் ஆரம்பித்து அவர்களது தொடர்புகளுக்கும் விற்பதை செய்திருக்கிறார்கள்.
- அந்த முறையில் நிறைய உழைப்பும் செலவும் தேவைப்படுவதைப் பார்த்து செயல் விளக்கத் திரைப்படம் ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். அதை குறுவட்டில் பதித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கொடுத்து விடுகிறார்களாம்.
- மல்லிகா பத்ரிநாத்தை அணுகி முப்பது வகை சேவை சமையல் என்று ஒரு கையேடு எழுதித் தரச் சொல்லி அதையும் இலவசமாக வாடிக்கையாளருக்குக் கொடுக்கப் போகிறார்கள்.
- கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான விளக்கக் கையேடும் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தயாரித்திருக்கிறார்கள். அதையும் வடிவமைத்து, எழுதி உருவாக்கியவர் காசிதானாம்.
- பாத்திரக் கடையில் அடுக்கி வைத்திருந்தால் பார்க்க பளிச்சென்று தெரிய வேண்டும் என்று மஞ்சள் நிறத்தில் அட்டைப் பெட்டி வடிவமைப்பு.
- குடும்பப் பாங்கான முகம் வேண்டும் என்று பளபளப்பான நடிகைகளைத் தவிர்த்து பாண்டவர் பூமி படத்தில் நடித்த நடிகையை விளம்பரத்தில் போட்டிருக்கிறார்கள்.
- 2750 ரூபாய்களுக்கு கருவியை வாங்கி விட்டு சேவை செய்ய மட்டும் பயன்படுத்த வேண்டுமா என்று நினைப்பவர்களுக்கு நடு மேல் பாத்திரங்களை பயன்படுத்தாமல் தனியாக விற்கும் இன்னொரு மூடியை (+200) வாங்கிப் பொருத்தி சாதாரண உயர் அழுத்தக் கலனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் ஏற்கனவே இருக்கும் குக்கருடன் இன்னொன்று கூடுதல் வசதிக்காக.
திட்டங்கள் - இப்போது மாதம் 500 எண்ணிக்கை தயாரிக்கும் உற்பத்தித் திறனை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களாம். கூடவே விற்பனைக்கான முகவர்களையும் ஒவ்வொருவராக நியமிக்க வேண்டும்.
- சந்தைப்படுத்தலில் வல்லவராக ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் இன்னும் வேகமாகச் செய்யலாம். இன்னொரு பங்குதாரர் உற்பத்தி சம்பந்தமான பணிகளைப் பார்த்துக் கொள்கிறாராம்.
- அரிசி மாவில் மட்டுமின்றி ராகி, கோதுமை மாவுகளிலும் சேவை செய்யலாம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.
சில ஆலோசனைகள் - இதற்கு இன்னும் சில கூட்டல்கள் வேண்டும். தோசை இட்லி மாவுகளே கடையில் அரைத்துக் கிடைக்கும் இந்தக் காலத்தில் புழுங்கலரிசியை அரைத்து மாவாக்கி சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு மனத்தடை. ஆரம்ப காலத்தில் நியூ ஹோம் நிறுவனமே வேறு யாரிடமாவது இணைந்து அரைத்த புழுங்கலரிசி மாவையும் பொதிந்து விற்கலாம்.
- சேவை செய்த பிறகு பல்வேறு சுவைகளில் அதை தாளிப்பதற்கான கலவைகளும் தயாரிக்கப்பட வேண்டும். எலுமிச்சை சேவை, தேங்காய் சேவை, புளி சேவை, தக்காளி சேவை என்று பல முயற்சித்து பார்க்கலாம். மேகி நூடில்சில் கொடுப்பது போல முன்தயாரிப்பாக இந்த சுவைப் பொதிகளும் தனியாக விற்கப்பட்டால் சேவை செய்து சாப்பிடுவதற்கான இன்னொரு மனத்தடை விலகலாம்.
பரவலாக தீவிரமாக பிரபலப்படுத்தப்பட்டு, உற்பத்தி, வினியோகம், சந்தைப்படுத்துதல் என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி அரிசி உண்ணும் சமூகங்களான தென் சீனா, வியட்நாம், தென்கிழக்காசிய நாடுகள் என்று ஆரம்பித்து இத்தாலிய பிட்சாவும், நூடுல்சும் சாப்பிடும் அகில உலகுக்கும் பரவ வாய்ப்பிருக்கும் ஒரு கண்டுபிடிப்பு இது.
அதற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டி தகுந்த ஆட்களை வேலைக்கு வைத்து, திறம்படச் செயல்பட்டு இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்க நகரங்களிலும், ஆஸ்திரேலிய நகரங்களிலும் சேவை உணவு விடுதிகள் பரவும் நிலை வந்து விடலாம்.