செவ்வாய், ஜனவரி 06, 2009

பாலபாரதி

2007ம் ஆண்டு சனவரி மாதம். வலைப்பதிவுகள் எழுத ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அருள் குமாரை சில முறை சந்தித்து எழுத்து, வாழ்க்கை குறித்து பேசியிருந்தேன்.

ஏதோ ஒரு விடுமுறை நாள், ஞாயிற்றுக் கிழமையோ, பொங்கல் நாளோ, அல்லது குடியரசு தினமோ நினைவில்லை. வீட்டில் இணைய இணைப்பு இல்லை, வீட்டுக்கு எதிரில் இருந்த இணையக் கூடத்தில் போய் பின்னூட்டங்களையும் புதிய பதிவுகளையும் மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது அதுதான் வாழ்க்கையின் முக்கிய பிணைப்பாக இருந்தது.

செல்பேசியில் அருள்குமார் அழைத்தார். 'நடேசன் பூங்காவில் சில வலைப்பதிவர்கள் கூடியிருக்கிறோம், நீங்களும் வாங்களேன்' கொஞ்ச நேரத்தில் போக முடிவு செய்து விட்டேன். வீட்டுக்கு வந்து தங்கையிடம் சொல்லி விட்டு இரு சக்கர வண்டியில் கிளம்பி விட்டேன். நடேசன் பூங்காவின் திருப்பதி தேவஸ்தானம் பக்கத்தில் வெளியே வண்டியை விட்டு விட்டு உள்ளே நுழைந்தேன். செல்பேசியில் வழி பெற்றுக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.

பூங்காவுக்கு நடுவே குடை போல அமைத்திருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள், அருள்குமார், அவரது நண்பர் திரைப்படத் துறையின் வீரமணி, பிரியன், ஜெய்சங்கர், செல்லமுத்து குப்புசாமி, கவிஞர் மதுமிதா. உரையாடல் துண்டு துண்டாக தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தது. பாலபாரதியும் வரப் போகிறார் என்று சொன்னார்கள்.

'அதோ வந்து விட்டார்'

தோளில் ஒரு சோல்னா பை. கொஞ்சம் பரந்த உடல், முக அமைப்பு. நடுத்தர உயரம். உள்ளே வந்ததுமே ஏதோ புதிய மின்சாரம் பாய்ந்தது போல கலகலப்பு ஏற்பட்டு விட்டது. அவருக்கே உரிய சிம்மக் குரலில் நலம் விசாரித்து அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். அப்படி நான்கு பேர் நடுவில் இயல்பாக பேச முடிகிறவர்களைப் பார்க்கும் போது ஏற்படும் மெலிதான பொறாமையுடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.

மதுமிதா கொண்டு வந்திருந்த கொய்யாப்பழம் வெட்டிச் சாப்பிட்டோம்.

'முழுநேரமும் கவிஞர்தானா' என்ற கேள்விக்கு 'புத்தகக்கடையில் வேலை செய்கிறேன்' என்று மெலிதான சுய எள்ளலுடன் பதில் சொன்னார் பாலா.

'வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் வளர வேண்டும். அச்சு ஊடகங்களில் எழுத்து வெளியாகும் அளவுக்கு முதிர்ச்சி வேண்டும்' என்ற பொருள் படும்படியாக ஒரு கருத்தை வைத்தார் பாலபாரதி. 'கருத்துக்களை சரிபார்ப்பதில், எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. வள வளவென்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்' என்று கூடுதல் கருத்துக்களை சொன்னார்.

'வலைப்பதிவுகளில் எழுதுவதின் பரிணாம வளர்ச்சி பாரம்பரிய அச்சு ஊடகங்களில் எழுதுவது என்று ஒத்துக் கொள்ள முடியாது. இதன் வடிவம், வெளிப்பாடு தனித்துவம் கொண்டது' என்று எதிர்க் கருத்து சொல்லும் நிறைவுடன் சொன்னேன். இப்படியே பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட முடிவு செய்தோம்.

அப்படியே மகாபலிபுரம் போய் விட்டு வரலாம் என்று ஒரு திட்டம் பற்றிக் கொண்டது. தயங்கியவர்களை எல்லாம் உற்சாகப்படுத்தி ஏழெட்டு பேர் தேறினோம். அருள் போய் நல்ல ஒரு வண்டி எடுத்து வரப் போனார். பூங்காவுக்கு எதிரிலான தேநீர்க்கடையில் தேநீர் குடிக்கலாம் என்று போனோம். இளநீர் குடிக்க ஒரு குழு சேர்ந்தது.

'பாரதியார் இறந்தது மனமுடைந்த தற்கொலையாக கூட இருக்கலாம்' என்று ஏதோ பேச்சில் வந்தது. மிகவும் உற்சாகமாக ஆமோதித்தார் பாலபாரதி.

நான்கு வண்டிகளில் கிளம்பி விட்டோம். நான் ஒரு வண்டி ஓட்டினேன், கூடவே இன்னொரு நண்பர். பாலபாரதி வீரமணி ஓட்டிய வண்டியின் பின்னால் உட்கார்ந்ததாக நினைவு. எல்லோரும் சேர்ந்து ஓட்டிக் கொண்டு போவது நடக்கவில்லை. சிறிது தூரத்தில் தனித்தனியாக அல்லது இரண்டிரண்டு வண்டிகளாக போய்க் கொண்டிருந்தோம்.

பாலபாரதியுடன் பேச வேண்டும் என்று ஒரு ஈர்ப்பு. கிழக்குக் கடற்கரைச் சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் அவர் உட்கார்ந்திருந்த வண்டியுடன் இணையாக ஓட்டியபடியே பேச ஆரம்பித்தேன். அவரும் ஆர்வமாக பதில் சொல்லிக் கொண்டு வந்தார். நான் அடைய வேண்டிய பல குணங்களை அவர் பிரதிபலிப்பதாக எனக்குத் தோன்றியிருக்கலாம். எப்படியாவது இவரைப் புரிந்து கொண்டு விட வேண்டும் என்று ஆசை.

மகாபலிபுரத்துக்குப் போய் சாப்பிட்டு சுற்றிப் பார்த்து விட்டு, 'சென்னைப் பட்டிணம்' என்று ஒரு கூட்டு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டோம். அன்று தொலைபேசி மூலம் கலந்து கொண்ட பொன்சும் அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். திரும்பும் போது பாலாவும் நானும் ஒரே வண்டியில்.

நான் மெலிதான ஒரு சட்டை போட்டுக் கொண்டு போயிருந்தேன். தை மாத மாலையில் இரு சக்கர வண்டியில் ஓட்டுவதற்கு அது போதவே போதாது. மழையும் ஆரம்பித்து நடுங்கிக் கொண்டே ஓட்டிக் கொண்டிருந்தேன். திருவான்மியூர் வந்ததும், பாலாவின் இன்னொரு முத்திரைக் குணமான தேநீர்க்கடையில் தேநீர் குடித்து தம் அடிக்கும் வேலையையும் செய்தார்.

மகாபலிபுரம் பயணம் குறித்து தொடர் பதிவுகள் போடுவது என்று 'உலக தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதல் முறையாக, சுற்றுலா போய் வந்த இடுகைகள்' என்று எல்லோரும் எழுதி  ஒரே நாளில்  வெளியிட்டோம்.

சென்னைப்பட்டணம் கூட்டு வலைப்பதிவு மூலமாக வலைப்பதிவர்களை பெரிய சக்தியாக உருவாக்க வேண்டும் என்று பாலபாரதி தூண்டிக் கொண்டே இருந்தார். நண்பர்கள் சில முறை கூடிப் பேசினோம். அருள் குமாரின் அலுவலகத்தில் நான்கைந்து முறை சந்தித்துக் கொண்டோம். வலைப்பதிவையும் ஆரம்பித்து மாறி மாறி இடுகைகள் போடுவதையும் செய்யலானோம்.

பாலபாரதி மும்பையில் குமுதம் நிருபராக வேலை பார்த்தது, செல்பேசி துணைப் பொருட்கள் விற்கும் தொழில் செய்தது, அந்தத் தொழிலில் மழை வெள்ளம் காரணமாக முழுகிப் போனது, மும்பையின் பெரும் பிரமுகர்களை பேட்டி கண்டது என்று பல கட்டங்களில் பேசித் தெரிந்து கொண்டிருந்தேன். இரு சக்கர வண்டி ஓட்ட மாட்டார்.

நடேசன் பூங்காவில் நண்பர் திரு வருவதை முன்னிட்டு ஒரு வலைப்பதிவர் சந்திப்பு என்று லக்கிலுக் அறிவித்திருந்தார்.

பாலபாரதி அதற்குள் சென்னை பதிவர்கள் மத்தியில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தார். உட்லெண்ட்சு விடுதியில் நடக்கும் போண்டா சந்திப்புகளை விட சிறப்பான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பலர் போட்டி போட்டார்கள். வந்தவர்களின் பெயர்களை எழுதி வாங்கிக் கொள்வது, வட்டமாக உட்கார்ந்து எல்லோரையும் அறிமுகம் செய்து கொள்ள வைப்பது என்று நல்ல வழிகளை வகுத்தார்.

தொடர்ச்சியாக பதிவர் சந்திப்புகள் நாலைந்து நடந்தன. இடையில் சென்னைப்பட்டணம் பதிவர்கள் சார்பாக என்னென்ன செய்யலாம் என்று தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தோம். பானிபூரி, சாட் விற்கும் கடைத்தொடர்களை நடத்தும் தொழில் செய்வது குறித்து கூட ஒரு முறை பேசினோம். 2008 மேயில் அதில் இறங்கி விடலாம் என்று பாலபாரதி திட்டம் போட்டார்.

'சும்மா பேசிப் பேசி கலைந்து விடாமல் தமிழ் வலைப்பதிவுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக வேண்டும். வலைப்பதிவுகளைக் குறித்த விழிப்புணர்வு பரவலாகப் போய்ச் சேர வேண்டும். ஏற்கனவே வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருப்பவர்கள், இன்னும் மேல் நுட்பங்களைக் கையாள ஆரம்பிக்க வேண்டும்' என்பது பாலபாரதியின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

அது குறித்தான பேச்சுக்களின் விளைவாக சென்னை பதிவர் பட்டறை நடத்தலாம் என்று முடிவு செய்தோம். பலர் பேசி, பலவிதமாகத் திட்டமிட்டு, இடம் பார்த்து, குறுந்தகடுக்கு திட்டம் வகுத்து, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வது, விளம்பர உதவி பெறுவது, நிதி திரட்டுவது என்று பல பணிகள் நடக்க ஆரம்பித்தன. தூய்மையான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, அந்த நோக்கத்திலிருந்து திசை திரும்பி விடாமல் செயல்படுத்தும் நேர்மையின் வெற்றியாக அந்த பதிவர் பட்டறை மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

கிட்டத்தட்ட அது ஒரு உச்சம் போல ஆகி விட்டது. அதற்குப் பிறகு ஆண்டுதோறும் பட்டறை நடத்துவது, கல்லூரிகளிலெல்லாம் பட்டறை நடத்துவது, ஊருக்கு ஊர் பட்டறை நடத்துவது, திரட்டி ஒன்று உருவாக்குவது என்று பல முறை பேசி நடைமுறைக்கு பெரிதாக எதுவும் வந்து விடவில்லை.

ஒத்திசைந்த அதிர்வுகளால் கூடிய நண்பர்களின் ஆற்றலால், உழைப்பால் உருவான அமைப்புள், அந்த அதிர்வுகள் மாறி விட ஒத்திசைவு குலைந்து குழுவும் பிரிந்து போனது. ஒருவர் வெளிநாடு, ஒருவர் திருமண வேலைகள், ஒருவர் தொழில் சார்ந்த பணிகள், ஒருவர் வேலை மாற்றம் என்று இறங்கி விட அதன் பிறகு பாலபாரதியை சந்திப்பது கூட குறைந்து போனது.

கடவுளை நம்புபவர்கள் எல்லாம் அவன் செயல் என்பார்கள். பாலபாரதியை அந்தக் கட்டத்தில் சந்தித்தது அப்படிப்பட்ட செயல் என்றுதான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஈரக் களிமண் போல இருந்தேன். ஆட்படும் சக்திகளைப் பொறுத்து வாழ்வின் போக்கு உருவெடுத்திருக்கும். அடிப்படை நேர்மை, ஆகக் கூடிய பரவலான பொதுநலன் இரண்டையும் ஊக்குவிக்கும் தொடர்புகள் அவரைச் சூழ்ந்திருந்த நட்புக் கூட்டம் மூலம் எனக்கும் கிடைத்தன.

குடும்பத்தில் கடைக்குட்டிப் பையனாக பிறந்து வளர்ந்து கொள்கை மாறுபாடுகளால் பலரை பகைத்துக் கொண்டிருக்கிறார். வீட்டுச் சூழல், பாசம், அன்பு போன்றவற்றை தொலைத்து விட்டதாக பலமுறை வருத்தப்பட்டிருக்கிறார்.

பெரியார் மீது ஆழமான பற்று உடையவர். விவாதம் செய்வதற்காக விவாதிப்பது என்பது அவரிடம் இல்லை. தான் சொல்வதற்கு எதிர்ப்பு இல்லாத சூழலில் சொல்ல வேண்டியதைச் சொல்லி அதில் சிறு மாற்றுக் கருத்துக்களை கேட்டுக் கொள்வார். யாராவது வரிந்து கட்டிக் கொண்டு விவாதிக்க வருகிறார்கள் என்றால் அதை திறமையாக தவிர்த்து விடுவார். நான் திமுக அரசையோ, கலைஞரையோ குறை சொல்ல ஆரம்பித்தால் அதை விவாதிக்காமல் விட்டு விடுவார். பெரியார் கொள்கைகளை குறை சொல்பவர்களை விட்டு ஒதுங்கியே விடுவார்.

தனக்கு சரி என்று படுவதற்காக போராடும் இயல்பும் அவருக்கு இருந்தது. 'நிறைய பெண் நண்பர்கள் உண்டு. அவர்களிடம் தொலைபேசி உரையாடிக் கொண்டிருப்பேன்.' நண்பர்கள் கூட்டம்தான் அவருக்கு மூச்சுக் காற்று.

எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமான வேலைதான் அவருக்கு. பேச்சின் மூலம் தனது கருத்துக்களை எடுத்துச் சொல்வதில் இணையில்லாதவர். அவரது குரலின் வசீகரம் கேட்பவரைக் கட்டிப் போட்டு விடும். தான் நினைப்பதை தெளிவாக உறுதியான சொற்களில் எடுத்து சொல்வார். ஏற்கனவே சொன்னது போல, அந்தக் குரலில் இருக்கும் உறுதி அதை நிலைநிறுத்தப் போராடுவதில் இருக்காது.

அவரது கருத்தை அவர் சொல்லும் போது 'இதுதான் இறுதி கருத்து, இதிலிருந்து இம்மியளவும் நகர மாட்டார்' என்று நமக்குத் தோன்றும். ஆனால் அதற்கு மாற்றாக யாராவது ஒரு கருத்தை சொல்லி விட்டால் அதிக சச்சரவு இல்லாமல் உடனேயே ஏற்றுக் கொண்டு விடுவார் அல்லது ஏற்றுக் கொள்ளா விட்டால் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுவார் (தம்மடிக்கப் போய் விடுவார்).

தொடர்ந்து ஒரு இடத்தில் இருப்பது என்பது அவருக்கு ஆகாத ஒன்று. ஒரு மணி நேரக் கூட்டத்தில் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தார் என்பது பார்க்க அரிதானது. கூட்டம் நடந்தால், நான்கு முறை வெளியில் போய் வரும் பணிகளில் இறங்கியிருப்பார். தேநீர் ஏற்பாடு செய்வது, தேநீர் வினியோகிப்பது, நண்பர் ஒருவரை அழைத்து வருவது, ஒன்றும் இல்லா விட்டால் வெளியில் போய் தம் அடித்து விட்டு வருவது என்று 10 நிமிடங்களுக்குள் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

அவரை தொழில் துறையில் இழுத்து விட வேண்டும் என்று பேசிப் பார்த்திருக்கிறேன். தனியாக தொழில் செய்யவும் வழி சொல்லிப் பார்த்திருக்கிறேன். மறுத்துச் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அப்புறம் மழுப்பியிருப்பார். மனதளவில் அவர் ஒரு சமூக ஆர்வலர். பரவலான மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும் ஊடகத் துறைதான் அவருக்குப் பொருந்தி வரும். ஊடகத் துறையிலும் வணிகப் பிரிவிலோ, அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இயக்கும் பணிகளோ அவருக்கு ஒத்து வராது. நான்கு பேரைப் பார்க்க வேண்டும், ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டே இருக்க வேண்டும், நலிந்தவர்கள் நான்கு பேருக்கு தனது பணி மாறுதலை ஏற்படுத்துகிறது என்று தெரிய வேண்டும்.

திருமணம் செய்து கொள்வதிலும் புரட்சி செய்து மனமொத்த வாழ்க்கைத் துணையைக் கைப்பிடித்திருக்கிறார். பகுத்தறிவுத் திருமணம், அதைத் தொடர்ந்து பதிவு, சூழல் கனிந்த பிறகு இல்வாழ்க்கை ஆரம்பம் என்று பொதுவுடமை சமூகத்தில் இயல்பாக நடக்கும் முறையை பின்பற்றியிருக்கிறார்கள்.

பாலபாரதியிடமிருந்து கற்றுக் கொண்டதையும் பெற்றுக் கொண்டதையும் வைத்து வாழ்வில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர் போன்ற நண்பர்களின் பார்வையில் நாம் செய்வது ஒப்புதலைப் பெறுமா என்று கேட்டுக் கொண்டு முடிவெடுத்தாலே சரியான வழியைப் பின்பற்றி விட முடியும்.

8 கருத்துகள்:

தமிழ்நதி சொன்னது…

நீங்கள் சொன்னதை நானும் உணர்கிறேன் சிவகுமார். வலைப்பூ அமைத்து எழுத வந்தது எனக்கும் தற்செயலாக அமைந்தது. நாளடைவில் அது எத்தனை ஆசுவாசமாக அமைந்தது, எத்தனை நண்பர்களைப் பெற்றுத்தந்தது... என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. அநேக கூட்டங்களில் நண்பர் பாலபாரதியைக் காணக்கிடைத்தது. மற்ற ஆண்களைப் போல மனைவியை சமையலறையில் விட்டுவராமல் லஷ்மியைக் கூடவே அழைத்துவந்திருந்தார்:) தார்மீக ஆவேசமுடைய ஒரு மனிதர் அவர். 'ஆவேசம்'என்ற பதம் தான் சரியாக இருக்கும் இல்லையா?

எழுத்து என்பது வாழ்க்கைப்போக்கையே மாற்றியிருக்கிறது. நாம் சரியாக அங்கீகரிக்கப்படுகிறோமோ இல்லையோ 'எமக்கென்றொரு உலகத்தை'உருவாக்கித் தந்ததில் இணையத்தின் சிறப்பாகத் தமிழ்மணத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, தொழில்நுட்பத்தை வழிபடுவோம்:)

வால்பையன் சொன்னது…

நான் ஒரே முறை இவரை சந்திதிருக்கிறேன், உங்களுடய எழுத்து அவரிடம் ஒரு நாள் முழுவதும் பேச வேண்டும் என ஆர்வத்தை தூண்டுகிறது.

KARTHIK சொன்னது…

நம்ம பதிவர்களில் பலராலும் விரும்பப்படுபவர்.

நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் தமிழ்ந்தி

//'எமக்கென்றொரு உலகத்தை'உருவாக்கித் தந்ததில் இணையத்தின் சிறப்பாகத் தமிழ்மணத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது//

மிகவும் உண்மை.

//'ஆவேசம்'என்ற பதம் தான் சரியாக இருக்கும் இல்லையா?//

இப்படித்தான் வாழ வேண்டும் என்று கொள்கைப் பிடிப்பு என்று நான் சொல்வேன்.

வால்பையன்,
//அவரிடம் ஒரு நாள் முழுவதும் பேச வேண்டும் என ஆர்வத்தை தூண்டுகிறது.//
தொலைபேசி எண் வாங்கி பேசி விடுங்கள் :-)

கார்த்திக்,
//நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதுங்கள்//
நேரம் நாம்தான் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும், இல்லையா! தொடர்ந்து எழுதுகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

Boston Bala சொன்னது…

Thank you

முரளிகண்ணன் சொன்னது…

nice one

சிங். செயகுமார். சொன்னது…

' பாலபாரதி வீரமணி ஓட்டிய வண்டியின் பின்னால் உட்கார்ந்ததாக நினைவு'. அப்பிடி இல்லன்னு நான் நினைக்கிறேன்........

மா சிவகுமார் சொன்னது…

நன்றி போஸ்டன் பாலா, செந்தழல் ரவி, முரளி கண்ணன்.

சிங் செயகுமார்,
//அப்பிடி இல்லன்னு நான் நினைக்கிறேன்........//
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :-)

அன்புடன்,
சிவகுமார்