செவ்வாய், ஏப்ரல் 05, 2011

தமிழ் இளைஞர்களின் கோபம் - #defeatcongress

'மே 2009க்குப் பிறகு பல மாதங்கள் சோர்வடைந்த மன நிலை இருந்தது. தமது உரிமைகளுக்காக போராடிய, ஒழுக்கமான ஒரு மக்கள் கூட்டம் இப்படி கவனிப்பாரில்லாமல் அழிக்கப்படும் இந்த உலகில் நேர்மை, ஒழுக்கம் என்று நாம் வாழ்ந்து என்ன பலன்? நாளைக்கே ஆதிக்க சக்திகள், நம்மை அடித்துத் தெருவில் நாய் போல இழுத்துக் கொண்டு போனாலும் கேட்பதற்கு நாதி இருக்காது. நமது நம்பிக்கைகள், எண்ணங்கள் அனைத்துமே தவறா என்ற சோர்வு'

'அதிலிருந்து எழுந்து வெளிவர பல மாதங்கள் ஏற்பட்டன. வெளியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், மனதில் ஊக்கமும் முயற்சிக்கும் வன்மையும் தளர்ந்து விட்டிருந்தன. பல அனுபவங்களுக்குப் பிறகு ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சிறிது சிறிதாக செயல் முனைப்புகளை ஆரம்பிக்க முடிந்தது.'

'எல்லாமேதான் முடிஞ்சாச்சு, இனிமேல் இவனுங்க என்ன செய்யப் போகிறானுங்க என்று கேட்கிறார்கள்'

'நாளைக்கு நமது குழந்தைகளும் சந்ததியினரும் 21ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இலங்கையின் வட பகுதியில் சீரிய அரசு நடத்திய ஒரு இயக்கத்தையும், அந்த இயக்கம் அழிக்கப்பட்ட வரலாற்றையும், மக்கள் படுகொலைகளையும் பற்றிப் பேசும் போது, 'அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் வசித்தவர்கள் என்ன செய்தார்கள், புழுக்களாக தின்று செரித்து கள்ளுண்டு மயங்கிக் கிடந்தார்களா' என்று ஏசும் போது, அந்தப் புழுக்களின் நடுவில் ஒரு சில புழுக்கள் சிறிது துடிக்கவாவது செய்தன' என்ற அளவிலாவது பேசப்பட வேண்டும்.

'தமிழ்நாட்டில் பல லட்சம் பேரிடம் ஈழ நிகழ்வுகள் தொடர்பாக கோபம், ஆத்திரம், வெறுப்பு இருக்கிறது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமது மனச்சிறைகளுக்குள் வருந்திக் கொண்டிருக்கிறோம். ஒத்தக் கருத்துடையவர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படக் கூட வாய்ப்பில்லாமல் இருக்கிறது'

இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைப்பதற்கு வைகோவும் நெடுமாறனும் வந்திருந்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்திருக்கிறார்கள்

'சார், நான் கன்னியாகுமரிக்குப் போறேன். மத்தியானம் கிளாசில் இருக்க மாட்டேன்' என்று சொல்லிட்டு ஓடிட்டான் என்று ஒரு கல்லூரி ஆசிரியர் சொன்னார். 'நீங்க வரலையா' என்று என்னையும் கேட்கிறான்'.

'நான் எதனால் தூண்டப்பட்டு அங்கே போனேன் என்று தெரியவில்லை. ஆனால், தகவல் அறிந்த உடன் அங்கு போய் நின்று விட்டேன்' என்று இன்னொரு நண்பர்.

கவிஞர் காசி ஆனந்தன் பேசியதை தனது செல்பேசியில் பதிவு செய்திருந்தார்.

இப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்று தொலைக்காட்சிகளோ, நாளிதழ்களோ செய்தி வெளியிடக் கூடச் செய்யவில்லை. தமிழனுக்கு கிரிக்கெட்டையும், திரைப்படங்களையும் காட்டி விட்டால் அவன் மெய் மறந்து இருந்து விடுவான் என்ற ஊடகச் சதியில் ஆளும் வர்க்கத்தின் கைப்பிடியில் இருக்கும் சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகளும், தினகரன், தினத்தந்தி, தினமலர், தினமணி நாளிதழ்களும் இன உணர்வுகள் பரவி விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன.

'அவன் எங்க ஊர்க்காரன்ங்க, நான் சாப்பிட்ட சாப்பாடு சாப்பிடுபவன், நான் வாழும் முறையில் வாழ்பவன், நான் பேசும் மொழியில் பேசுபவன், எங்க ஊர் பெண்கள் போலவே அந்த ஊர் பெண்கள் பொட்டு வைத்துக் கொள்கிறவர்கள்'

கோபத்திலும் ஆத்திரத்திலும் சொற்கள் பீறிட்டன. ஈழத்துப் படுகொலைகளைப் பற்றிப் பேசும் போது கண்கள் நிரம்பி விடுகின்றன.

'ஆமாய்யா, நாங்கதான் கொன்னோம். அதுக்காக என்ன செய்யப் போறீங்க'. ராஜீவ் காந்தியின் படுகொலையைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இலங்கையில் நடந்து கொண்டிருந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து எதுவும் செய்யக் கூடாது என்று வாதிட்டவர்களிடம் இப்படிப் பேசினாராம்.

2009ல் கட்சி பிரிவுகளைத் தாண்டி 75000 மக்களை திரட்டி ஊர்வலமும் கூட்டமும் நடத்தினார்களாம். அந்தக் கூட்டத்தில் நிகழ்ந்தது இது. அவர் பேசியவுடன் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தார்களாம்.

பிரின்ஸ் என்பவர் இப்படிப் பேசியவரைக் கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டாராம். அந்த பிரின்ஸ்தான் இப்போது குளச்சல் தொகுதியின் காங்கிரசு வேட்பாளர்.

அவரை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். மீனவர்களின் பிரதிநிதி ஒருவராவது சட்டசபைக்குப் போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. லூர்தம்மாள் சைமன், அதன் பிறகு என்ற இன்னொருவர் தவிர்த்து மீனவர் யாரும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

'மக்களிடையே ஈழம் குறித்த விழிப்புணர்வும், கோபமும் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் மத்திய அரசு செய்தது என்றுதான் சொல்லி வந்திருக்கிறோம். அதைக் காங்கிரசு என்று உணர்த்தும் பணியைச் செய்ய வேண்டியிருக்கிறது'

'சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காணொளி ஒன்று அடங்கிய குறுந்தகடை வினியோகித்தோம். காட்சிகளைக் காட்டும் போது பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் காங்கிரசு பெயர் வந்ததும், "நீங்க ஓட்டு கேட்கத்தானே வந்திருக்கீங்க" என்று சொல்லி விட்டார்கள்'

'இப்போதும் துண்டு பிரசுரங்களை விட காணொளிகளை குறுந்தகட்டில் வினியோகிப்பது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% எழுத்தறிவு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடலோரக் கிராமங்களில் 50% மட்டுமே படித்தவர்கள் இருக்கிறாரகள். அதிலும் பெரும்பான்மை இளைய தலைமுறையினர். அதனால் வாசிக்கும் பழக்கம் குறைவு. ஆனால் எல்லோருக்கும் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இருக்கிறது. '

'அதனால் குறுந்தகடுகளாக வினியோகித்தால், ஊர் இளைஞர்களே நகல் எடுத்து எல்லோரும் பார்க்கும்படி செய்து விடுவார்கள்'.

'தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் தமிழ் உணர்வாளர்களின் பிரச்சாரத் தாக்கம் தேர்தலில் இருந்தது என்று வெளிவந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைச் செய்ய வேண்டும்.'

'காங்கிரசை தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டு விடும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தோல்விக்கான காரணம் தமிழர்களுக்கு எதிரான செயல்கள் என்பது உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பிரச்சாரம் செய்ய வேண்டும்'

'இணையத்திலும் டுவிட்டர், ஃபேஸ்புக் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் மூலம் கருத்துக்களைப் பரப்ப வேண்டும்.'

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணி புரிந்த இன்னொரு நண்பர் கொஞ்சம் விரக்தியாகத்தான் பேசினார். 'நாம் என்ன செய்து என்ன? மக்களிடம் போய்ச் சேர்க்க முடியாது. ஊடக பலமும் பண பலமும் இருக்கும் இடத்தில் நமது முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போகின்றன'

'அதற்காக வாளாவிருந்து விடாமல், நம்மால் முடிந்த துரும்பை நகர்த்திப் போடுவது கடமை'

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஈழத்தமிழர்களே ! எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. நான் எக்கட்சியும் சாராத ஒரு சராசரி தமிழன்.1983 இனப் படுகொலைகளை கண்டித்து தமிழகத்தில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை தி.மு.கழகத்தின் தலைவருக்கே சேரும்.ஆனால் 1989‍‍ ‍‍முதல் 1991 மே 21 ஆம் தேதி வரை நடந்த நிகழ்வுகளை எண்ணீப் பாருங்கள். தமிழ்மண்ணில் தேர்தல் சமயத்தில் நேரு குடும்பத்தின் மீது மிக்க அன்பும் பாசமும் கொண்ட தமிழ்மக்கள் முன் ராஜீவ் படுகொலையை நிகழ்த்தியது யார்? அதனால் தீராப்பழியை சுமந்து கட்சியின் எதிர் காலமும், தனது அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனமாகும் நிலைக்கு த்ள்ளப்பட்டவர் யார்? அந்த முட்டாள்தனமான படுகொலையால் உங்கள் தலைவரும் நீங்களும் சாதித்தது என்ன? உங்களால் ஆட்சியை ப்றிகொடுத்து பழியை சுமந்து ஒரு தமிழினத்தலைவன் கல்லடியும் சொல்லடியும் பட்டு நடுத்தெருவில் நின்றாரே, அதற்க்கு என்ன பரிகாரம் செய்தீர்கள்? ஒரு ஆரியப்பிசாசு ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்து கொடுத்து தமிழகத்தை பாழ் படுத்தினீரே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்? அந்த் தலைவன் உங்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசினாலும் தூக்கில் பொடும் அளவுக்கு அவருக்கு எதிராக ஆதிக்க சக்திகள் பேயாட்டம் போட்டன.

மா சிவகுமார் சொன்னது…

பெயரில்லா,

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு நிகழ்வைக் காரணமாக வைத்து ஒரு இனத்தையே அழிப்பதற்குக் காரணமாக இருப்பது என்ன நியாயம்?

ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வழக்கு தொடர்ந்து தண்டனை அளித்தாகி விட்டது.

இப்போது ஈழத்தில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் உயிர்களுக்கு எப்படி நியாயம் வழங்கப் போகிறீர்கள்?

பக்கத்து வீட்டில் சண்டை நடந்தால், ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது, சண்டையை நிறுத்தச் சொல்லி சமாதானம் பேசப் போவது நியாயம். கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்று போட்ட சிங்கள பேரினவாத அரசின் செயல்களுக்கு அரணாக நின்று காப்பாற்றியது எந்த விதத்தில் நியாயம்?

இன்று உள்நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு என்ன தீர்வு?

நாட்டை விட்டு அகதிகளாக வெளிநாடுகளுக்குப் போய் தாய்மண்ணைத் தொலைத்து விட்டிருக்கும் மக்களுக்கு என்ன தீர்வு?

ராஜீவ் காந்தியின் உயிருக்கு இன்னும் எத்தனை உயிர்களைக் குடித்தால் தாகம் அடங்கும்?

பெயரில்லா சொன்னது…

ஏன் ஒரு உண்மையை எல்லோரும் மறந்து பேசுகிறீர்? ராஜிவ் படுகொலையின் உண்மை குற்றவாளிகள் என்று யாருமே பிடிபடவில்லை.தண்டிக்கப்பட்டவர் எல்லோரும் அப்பாவிகள்.உண்மை குற்றவாளிகள் யார் என்று உலகுக்கே தெரியும். முள்ளிவாய்க்கால் கொடூரங்களை நான் நியாயப்படுத்தவில்லை.தி.மு.கழகத் தலைவர் ஒரு இரங்கல்பா வெளியிட்டதற்கு , இப்பொழுது ஈழத்தமிழர்க்கு முத்லை கண்ணீர் வடிக்கும் தினமணி நாளேட்டில் பொடப்பட்ட வாசகர் கருத்துக்கணிப்பை மறந்திருக்க மாட்டீர். ஈழத்தாய் என உங்களால் இப்பொழுது கொண்டாடப்படும் ஜெயாவின் உண்மை முகம் என்ன என்று மனசாட்சி உள்ள தமிழர்க்குத் தெரியும்.

மா சிவகுமார் சொன்னது…

//ஏன் ஒரு உண்மையை எல்லோரும் மறந்து பேசுகிறீர்? ராஜிவ் படுகொலையின் உண்மை குற்றவாளிகள் என்று யாருமே பிடிபடவில்லை.தண்டிக்கப்பட்டவர் எல்லோரும் அப்பாவிகள்.உண்மை குற்றவாளிகள் யார் என்று உலகுக்கே தெரியும்.//

1. மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. உண்மை குற்றவாளிகள் யார் யார் பிடிபட்டார்கள்?

உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்ற பெயரில், கோட்சே சேர்ந்திருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர்கள் அனைவரையும், கூடவே சில லட்சம் இந்துக்களையும் கொன்று விடவா செய்தோம்?

2. இந்திரா காந்தியைக் கொன்ற காவலர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. உண்மைக் குற்றவாளிகள் யார் யார் பிடிபட்டார்கள்?

உண்மைக் குற்றவாளிகளைக் தண்டிக்கிறோம் என்ற பெயரில், அவர்கள் சார்ந்திருந்த அகாலி இயக்கங்களையும், கூடவே சில லட்சம் சீக்கிய மக்களையும் கொன்று விடவே செய்தோம்! (டில்லியில் அதைச் செய்தது காங்கிரசு கட்சி!).

இப்படி பழி வாங்கும் வெறியில் பொது மக்கள் மீது வன்முறையை அவிழ்த்து விடத் துணை போகும் கொலைகார, பயங்கரவாத காங்கிரசுக் கட்சியைத் தமிழ்நாட்டிலிருந்தும், தொடர்ந்து அகில இந்தியாவிலும் விரட்டி அடிக்க வேண்டும்.

திமுக/அதிமுகவின் முதுகில் சவாரி செய்து பிழைக்கும் காங்கிரசுக் கட்சி இருப்பதற்கு என்ன தேவை?

காங்கிரசு இல்லாத தமிழக அரசியலில் தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகள் தமிழர் நலன்களுக்காக செயல்பட முடியும்.