வியாழன், ஏப்ரல் 07, 2011

சோனியாவின் வேதனை!

'மீனவர்கள் சிலர் கொல்லப்பட்டது வேதனை அளித்தது, இனிமேல் யாரும் கொல்லப்படாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளிக்கிறோம்' என்கிறார் சோனியா காந்தி (சென்னை கடற்கரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது).
  • ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் வேதனை அளித்தது. 
  • உடனடியாக புலனாய்வுக் குழு அமைத்து கொலை செய்தவர்களைத் தேடிப் பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினோம். 
  • விசாரணையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. 
  • எமது இனத்தைச் சார்ந்த இயக்கம் என்று பார்க்காமல், அவர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொண்டோம்.

மீனவர் கொலைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்ன விசாரணை செய்தீர்கள்? அதற்குப் பின்னால் இருந்த, அதற்கான உத்தரவைப் பிறப்பித்த இலங்கை தலைவர்கள் மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை?

இந்தியாவின், தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாமலேயே தமது வீரத்தாலும் போராட்டத்தாலும் தமக்கென்று ஒரு தாயகத்தை உருவாக்கிக் கொண்டார்கள் ஈழத் தமிழர்கள். இலங்கை அரசின் தயவில்லாமல், தமது பகுதிகளில் நிர்வாகத்தை நடத்தினார்கள்.

ராஜீவ் காந்தியின் கொலையை காரணம் காட்டி, அதற்குப் பழி வாங்குவதாக அதை எல்லாம் அழித்து, 2 லட்சம் மக்களைக் கொன்றொழித்து, 3 லட்சம் மக்களை முள்வேலி முகாம்களில் அடைக்க இலங்கை அரசுக்கு உதவி செய்தது என்ன நியாயம்? இந்தக் கொலைகளுக்கு, இந்த இன ஒழிப்புக்கு என்ன தண்டனை உங்களுக்குக் கிடைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகளை யாரும் அந்தப் பொதுக்கூட்டத்தில் கேட்கவில்லை. வந்தவர்களை கௌரவமாக நடத்த வேண்டும் என்ற பண்பாட்டில் கேட்காமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் மனதில் இந்தக் கேள்விகள் குமுறிக் கொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை: