ஞாயிறு, ஜூலை 16, 2006

நூறு அடித்த பிறகு ...

கடந்த மூன்று மாதங்கள் எழுதியதில் நூறு பதிவுகள் ஆகி விட்டன. அவற்றை வகை பிரித்து இங்கே அட்டவணைப்படுத்தியுள்ளேன்.

இன்னும் செய்ய வேண்டியவை:
  1. ஒவ்வொரு பதிவிலும் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்துவது.
  2. ஒவ்வொரு பதிவிலும் பொருத்தமான இடங்களில் சுட்டிகளை ஏற்படுத்துவது.
  3. ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு சிறு குறிப்பு கொடுத்து இன்னொரு அட்டவணை செய்வது.
  4. இந்த அட்டவணைக்கான சுட்டியை வடிவப் பலகையில் சேர்ப்பது. (ஆகி விட்டது)
இதை எல்லாம் முடித்த பிறகுதான் அடுத்த பதிவுகள் எழுத வேண்டும். நாம் என்ன எழுதினோம் என்று நமக்காவது தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு உதவியாக இருந்த அன்னியன் வெங்கட்ரமணியின் காப்பக தேடிக்கு நன்றிகள்.

வெள்ளி, ஜூலை 14, 2006

மாந்தர் தம்மை இழிவு செய்யும் ....

அப்பா, அம்மா, இளைஞனான மகன் கொண்ட குடும்பத்துக்கு வீட்டு உதவியாக வைத்திருந்த ஒரு சிறு பெண் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டதைப் பற்றிய கல்பனா சர்மாவின் கட்டுரை இந்து ஞாயிறு பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அந்தப் பெண் உதட்டுச் சாயம் ஒன்றை யாரும் இல்லாத நேரத்தில் பயன்படுத்த முயன்றதை அங்கே வந்த அந்தக் குடும்பத்தின் இன்னொரு உறுப்பினர் பார்த்து விட்டாராம். "வேலை பார்க்க வந்த நாய்"க்கு உதட்டுச் சாயத்தைத் தொட என்ன துணிவு என்ற கோபத்தில் அடித்துக் கட்டிப் போட்டதில் குழந்தை இறந்து விடவே, உடலை கட்டித் தூக்கி விட்டு அம்மாவும் அப்பாவும் காவலரை அழைத்தார்களாம்.

சுட்டி இங்கே

கடமை உணர்ச்சியுள்ள காவலர்கள், தம் வேலையை செய்து துருவி விசாரித்து மேற்சொன்ன விவரங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வளவுதான் நடந்தது, இதை விட மோசமாக எதுவும் நடந்து விடவில்லை. :-(

மும்பை குண்டு வெடிப்பில் இருநூறு பேர் இறந்ததற்கு உலகம் முழுவதும் கண்டனம். இந்த பிஞ்சுக் குழந்தையின் உயிர் எந்த வகையில் குறைந்தது. இவளைப் போல எத்தனை ஆயிரம் குழந்தைகள் வதை படுகிறார்கள். இதற்கு சிறப்புப் பிரிவு ஏன் அமைக்கப்படுவதில்லை? பிரதம மந்திரி ஏன் நாட்டுக்கு உரை ஆற்றவில்லை? நாகரீகம் அடைந்தவர்கள் என்று தம்மையே அழைத்துக் கொள்ளும் இந்த சமூகத்திற்கே குண்டு வைத்து தகர்த்தால்தான் என்ன?

ஒரு உறவினர் சென்னையைச் சுற்றிப் பார்க்க வருகிறோம், உங்கள் வீட்டில் தங்கிக் கொள்கிறோம் என்று குடும்பத்தோடு வந்தார்கள். கணவன், மனைவி, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, கைக்குழந்தை ஒன்று. கூடவே கண்களில் கனவு கூட மிஞ்சாத ஒரு சிறு பெண். கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளவாம். பத்து வயது கூட இருக்காது. அவர்கள் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. குழந்தை அழும் போது ஓடிப் போய் அதற்கான தேவைகளைப் பார்ப்பது, பையனுக்கு சாப்பாடு ஊட்டுவது, இவர்கள் வெளியே போகும் போது கூடை தூக்கிக் கொண்டே போவது என்று அந்தப் பெண் பேசாமல் பல வேலைகளைச் செய்தது.

அந்த ஆள் ஒரு பெரிய அரசுத் துறை நிறுவனத்தில் பொறியாளர். மனைவி சோகை பிடித்து எட்டிய பொருளை எடுக்கக் கூட முடியாது சோம்பியிருந்தாள்.

கணவன் மனைவி இருவருமே, தமது/குழந்தைகளின் வேலைகளைத் தாமே பார்த்துக் கொள்ளும் வயதுடையவர்கள்தாம். தவறான வாழ்க்கை முறையால், அந்தப் பெண் தன் உடலை வீணடித்துக் கொண்டிருந்தாள். அப்படியே முடியாமல் இருந்தால் வீட்டில் தங்கி சிகிச்சை பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே தவிர ஒரு குழந்தையின் வாழ்க்கையையும் இழுத்துக் கொண்டு மகிழ்வு உலா என்ன வேண்டிக் கிடக்கிறது!

தமிழகத்தில் வீட்டு வேலை செய்பவர்களின் நிலைமை அவ்வளவு மோசமில்லை. அவர்களும் நன்கு பேசி, தம்மை யாரும் இழிவாக நடத்தி விட அனுமதித்து விடுவதில்லை. ஆனால் வட மாநிலங்களில் நிலைமை மிக மோசம். எனக்கு தெரிந்த சில அவலங்கள்.

திருமணங்களிலும், ஆடம்பரப் பொருட்களிலும் பல ஆயிரங்களை இறைக்கும் இந்த மனிதர்கள், வேலைக்காரர்கள் என்று வரும் போது கணக்கு பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். சில நூறு ரூபாய் கொடுத்து வேலைக்கு வைத்து விட்ட ஒருவர் ஓரிரு நிமிடங்கள் ஓய்வாக உட்கார்ந்து விடக் கூடாது, அவ்வளவுதான் புதிதாக ஒரு பணியைச் சுமத்தி விடுவார்கள். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதற்கும் தனிக் கணக்கு உண்டு.

மனிதனை மனிதனாக மதிக்காத இந்தப் பழக்கங்கள் அழிவில்தான் கொண்டு விடும். குழந்தைகளை வேலைக்கு வைப்பது பெருங்குற்றம். நம்முடைய வேலைகளை நாமே செய்ய முடியாமல், நல்ல உடல் திறனுடைய வயது வந்த ஒருவரை வேலைக்கு அமர்த்தி கொண்டாலும் காசு கொடுப்பதாலேயே அவர்களை நமது அடிமைகளாக நம்மை விடக் குறைந்தவர்களாக நினைக்காமல், நம்மால் முடியாத நம்முடைய சொந்த வேலையை செய்ய முன் வந்துள்ள அத்தகையவர்களை கடவுளாக பாவிக்க வேண்டும்.

"இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறி விடுவார்கள்" என்று அவர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் போல ஒரு சில சகோதரிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். "வைக்கிற இடத்துலதான் வச்சிக்கணும்" என்று இட ஒதுக்கீடு வேறு.

மனிதன் மனிதனை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்்.

வியாழன், ஜூலை 13, 2006

தமிழ்ப் பண்பாடு - 2

நான் தான் மாறி வருகிறேனா அல்லது சமூகமே மாறி விட்டதா என்று தெரியவில்லை. ஆனால் கடந்து பதினைந்து ஆண்டுகளில் தமிழ் சமூகத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. பல நல்ல மாற்றங்கள், சில தேவையற்ற தீங்குகள்.

நல்லவற்றின் வரிசையில், வெளிநாடுகளில் பணி புரிந்து வந்துள்ள இளைஞர்கள், வெளி நாட்டாருடன் உறவாடும் பணியில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது. தமிழ் டாட் நெட் மடற்குழுவில் நடந்த விவாதங்களில் பெரும்பகுதி புலம் பெயர்ந்த தமிழரும், மலேசிய சிங்கப்பூர் தமிழர்களுமே இருந்தார்கள். வலைப்பதிவுகளில் சென்னையில் வசிப்போரின் எண்ணிக்கைதான் அதிகம்.

சமூகப் பொறுப்புணர்ச்சி அதிகரித்துள்ளது. நம் பண்பாட்டின் அடக்கமும், கரிசனமும் பதிவுகளில் வெளிப்படுகின்றன. அதே நேரம், யாராவது பாராட்டப்படும் போது, எதிர்வினையாக போலி அடக்கத்தைக் காட்டும் பதில்கள் பெரிதும் குறைந்து போய் விட்டன. பாராட்டு உண்மையாக இருந்தால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவிப்பதும், தகுதியில்லாத பாராட்டு என்று பட்டால் அதை அப்படியே சொல்வதும் அழகான மாறுதல்கள்.

சமூகப் பிரச்சினைகளை விவாதிக்க முனையும் வலைப்பதிவுகளும் அதிகரிக்கின்றன. இடையினமான திருமங்கை ஒருவரின் பதிவைப் படித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடபெறுகின்றன. அதே நேரம் பெண் வலைப் பதிவர் ஒருவர், மட்டுறுத்தல் மட்டும் இல்லை என்றால் தம்மால் வலையில் பதியவே முடியாது என்று சொன்னார். பின்னூட்டமாக வரும் வக்கிரங்களை அவர் வடிகட்டி விட்டாலும் அவரளவில் அது ஒரு பெரும் தொந்தரவு தான்.

குறுஞ்செய்திகளில் தொல்லை கொடுக்கும், மின்னஞ்சலில் செய்தி கொடுக்கும் அதே மனங்கள், வலைப் பதிவு வரை வந்து சேர்ந்து விடுகின்றன. தமிழ் டாட் நெட் குழுவில் சென்னையைச் சேர்ந்த ஒரு சகோதரி ஒரு மடல் போட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே வளைகுடாவிலிருந்து "நான் பேச்சுத் துணை இல்லாமல் இருக்கிறேன். அன்பே, எனக்கு தனி மடலில் அடிக்கடி செய்தி அனுப்புகிறாயா, நாம் இருவரும் அன்பர்களாகி விடுவோம்" என்று ஒரு பதில் குழுவுக்கே வந்து விட்டது. அவரது தனி முகவரிக்கு அனுப்ப நினைத்து தவறுதலாக குழுவுக்கு அனுப்பி விட்டார்.

இது ஒன்றில் இந்தத் தவறு நடந்தது. மற்ற நூற்றுக் கணக்கான நேரங்களில் பெண்கள் வெளியில் தெரியாமல் சகித்துக் கொள்கிறார்கள். மேற்சொன்ன நிகழ்ச்சியைத் தொடர்ந்து குழுவில் எந்த விதமான விவாதமோ, கண்டனமோ ஏற்படவில்லை. அதுதான் பெண்களின் பயமாக இருக்க வேண்டும். இவற்றை வெளியில் சொல்லிப் பெரிது படுத்தினாலும் பெரும்பான்மையினர் கண்டு கொள்ளப் போவதில்லை. டோண்டு போலி டோண்டுவை எதிர் கொள்ள துணிந்தது போன்ற உறுதி நமக்கு இருக்கிறதா என்று மடித்து விடுகிறார்கள்.

கவிதா எஸ் எம் எஸ் பற்றிய பதிவில் வந்த பின்னூட்டங்களில் சொல்வது போல, நம் பெயரை நாமே ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும், கேட்பவர்கள் நீ என்ன செய்தாய் அவன் இப்படி எழுதுவதற்கு என்று கேட்டு விடுவார்களோ என்ற அச்சங்கள் பெண்களை இவற்றை வெளிப்படையாக எதிர்த்துப் போராட முடியாமல் செய்து விடுகின்றன.

இந்த ஆரோக்கியமான சூழலை வளர்த்து கவைக்குதவாத வாதங்களை தவிர்த்தால் நல்லது நடக்கும்.

டோண்டுவுக்கு ஒரு போலி டோண்டு அந்தப் போலி டோண்டுவுக்கு ஒரு போலி வலைப்பதிவு என்று ஆபாசக் களஞ்சியங்களை மாறி மாறி உருவாக்க இந்த தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தும் நமக்கெல்லாம் என்றுதான் விடிவு?

e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு

e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு
மதி கந்தசாமியின் பதிவு

அதிர்ச்சியான செய்தி, இணையத்தில் தமிழ் பயன்படுத்தப்படுவதற்கு வகை செய்து தந்தவர்களில் உமரின் பங்கு முக்கியமான ஒன்றாகும். ஆரம்ப காலத்திலிருந்தே தனது அறிவையும் உழைப்பையும் ஈந்து அதற்கு எந்த விதமான அங்கீகாரமும் தேடாமல் பணி செய்த உமரின் மறைவு மிகவும் வருத்தத்தை தருகிறது.

உமரின் மறைவுக்கு என் அஞ்சலி.

மா சிவகுமார்

புதன், ஜூலை 12, 2006

ஆட்ட விதிகளை மாற்றுவோம்

விளையாட்டில் வெற்றி பெற முடியாது என்று தோன்றினால் விளையாட்டு விதிகளையே மாற்றி விட வேண்டும். வல்லவன் வகுத்த விதிகளின்படி விளையாடி வெற்றி பெற முனைந்தால் என்றைக்கும் அந்த வல்லவன் தான் வெற்றி பெறுவான். வெற்றி பெற்ற மனிதன், தான் வெல்லும் வண்ணம் ஆட்ட விதிகளை அமைப்பதில் வல்லவனே ஒழிய, ஆட்டத்தை எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்கு விளையாடுபவன் என்று சொல்ல முடியாது..

சின்ன வயதில் விளையாட்டுக் களத்தில் இது நடக்கும். கொஞ்சம் ஆளுமை நிறைந்த ஒரு பையன் வந்து விட்டால் கூட்டத்தின் பிரதான விளையாட்டே மாறி விடும். அவன் குறிப்பிட்ட விளையாட்டில் தேர்ச்சி இல்லாதவனாக இருந்தால் "இதெல்லாம் என்ன விளையாட்டு" என்று ஒதுக்கி விடலாம், அல்லது விளையாட்டு விதிகளை தனக்குப் பொருந்துமாறு மாற்றிக் கொள்வான். ஆக்கிப் பந்தயங்களில் முடிசூடா மன்னர்களாக விளங்கிய இந்திய பாகிஸ்தானிய அணிகளை செயற்கைத் தரை ஆடுகளம் அமைத்து நெதர்லாந்தும், ஜெர்மனியும் தண்ணி காட்டுகிறார்கள்.

இரு தரப்பும் ஒரே முறையில் போரிட்டால் கடைசியில் அழிவுதான் மிஞ்சும்.
  • பாரத தர்ம யுத்தத்திற்குப் பிறகு இரண்டு பக்கத்திலும் கை விரல்களில் எண்ணக் கூடிய எண்ணிக்கையைத்் தவிர்த்து எல்லோருமே கொல்லப்பட்டு விடுகிறார்கள்.
  • அமெரிக்கா அணு ஆயுதத்தைப் பயன்படுத்திய பிறகுதான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
  • மரபு முறை படைகளை எதிர்க்கப் பயன்படுத்தப்படும் கரில்லப் போர் முறை, இந்த மறைந்து நின்று தாக்கும் போர் முறையிலேயே இலங்கை ராணுவத்தை மண்டியிட வைத்து தனது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்ட தமிழ் போராளிகள், அமெரிக்கர்களை வியட்நாமிலிருந்து விரட்டி விட்ட வியட்காங்
என்று இருக்கும் விதிகள்் தமக்கு சாதகமாக இல்லை என்று போராட்ட முறையையே மாற்றி தமது வெற்றியைத் தேடிக் கொண்டவர்களின் பட்டியல் பெரிதாக நீளும்.

ஆங்கிலேய ஆட்சியாளரை எதிர்க்க காந்தி பயன்படுத்திய சத்தியாக்கிரகம், நெப்போலியனின் மாஸ்கோ முற்றுகைக்கு முன்னரே, தத்தமது வீடுகளை விட்டு வேறு ஊர்களுக்குப் போய் விட்ட மக்கள் என்று பல நேரங்களில் இந்த ஆட்ட விதிகளை மாற்றி தாம் தோல்வி அடையக் கூடிய சூழ்நிலையை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். நீ என்னை ஆள நான் அனுமதித்தால்தானே நீ என்னை ஆள முடியும், நீ கொடுக்கும் பட்டங்களை துறக்கிறேன், நீ விதிக்கும் வரிகளை மறுக்கிறேன், அரசுப் பணியை விடுகிறேன் என்று ஆரம்பித்தால் ஆட்சியாளர் என்ன செய்ய முடியும். தடியெடுத்து துப்பாக்கியெடுத்து உடலை மிரட்டலாம், உள்ளே இருக்கும் மன உறுதியை யாரும் தொட முடியாது, நம்மைத் தவிர.

அமெரிக்க அடிமை முறையின் உழன்ற அங்கிள் டாம் என்பவரைப் பற்றிய கதையை சுருக்கிய வடிவில் படித்தேன். நல்ல ஆண்டையிடமும், கொடிய ஆண்டையிடமும் தனது உள்மனதை சுதந்திரமாக வைத்துக் கொள்கிறார் அந்தக் கருப்பர். வெள்ளையரின் வெறுப்பு தன் மனதை நச்சடையச் செய்து விடப் போவதில்லை என்று துன்பங்களுக்கிடையில் தன்னைக் கொடுமைப் படுத்துபவர்களையும் நேசிக்கிறார் அவர். அவரைப் போல சில மனிதர்கள் முன் அடிமை முறை தோற்றுப் போயிற்று.

டோண்டு சார், முரட்டு வைத்தியம் என்று சொல்லும் உத்திகளும் இது போலத்தான். "நீ எனக்கு பொறுப்புகளைக் கொடுக்கவில்லையா, என்னை ஒப்புக்கு ஒரு பதவி கொடுத்து ஓரத்தில் உட்கார வைக்கிறாயா, அதை எதிர்த்து உன்னிடம் வந்து அழுது கொண்டிருக்காமல் என் சொந்த வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று தன்னைத் தண்டிக்க முயன்றவர்களுக்கு ஆப்பு வைத்து விட்டார். அதே முறையில்தான் பணி குறிக்கப்படாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தனி டம்ளர் முறையில் துன்புறுத்தபடும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அறிவுரை கூறி எழுதியிருந்தார்.

ஆனால், இப்படி ஆட்ட விதிகளை மாற்றும் போது சத்தியத்தின், பொது நலனின் அடிப்படையில் புதிய விதிகளை உருவாக்குவது வெற்றி பெறும். இருக்கும் விதிகளை இன்னும் மோசமாகச் செய்யும் போக்கு எல்லோரையும் பின்னுக்கு இழுத்துப் போட்டு விடும்.

ஆஸ்கர் விருது கிடைத்தால்தான் சிறந்த சினிமா, ஃபார்ச்சூன் 500ல் வந்தால்தான் சிறந்த நிறுவனம் என்று அமெரிக்க விதிகளின்படி ஆடிக் கொண்டே இருந்தால் அமெரிக்காதான் எப்போதும் வெற்றி பெறும். அந்த எலிப் பந்தயத்தைப் போலத்தான் நாடுகளின் தனி நபர் வருமானத்தை டாலரில் மாற்றிக் குறிப்பிடுவதும். அந்த ஆட்டத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் சபை, வாங்கும் சக்தியின் அடிப்படையில் தனி நபர் வருமானம் கணக்கிட ஆரம்பித்தது. இன்னும் சில பொருளியலாளர், தேசிய மன நிறைவு குறியீடு என்றும் ஆரம்பிக்கிறார்கள்.

சராசரி இந்தியனிடம் இருக்கும் அசையும் அசையாச் சொத்துகள் சராசரி அமெரிக்கனை விட குறைவாக இருந்தாலும் அவற்றைக் கொண்டு அவனுக்குக் கிடைக்கும் மனநிறைவு கூடுதலாக இருக்கலாம் அல்லது குறைவாக இருக்கலாம். அதை அளந்து விட்டால் மக்களின் டாலர் வருமானத்தைக் கூட்டுவது மட்டுமே நாட்டுக்கு வளம் என்றில்லாமல் பெரும்பான்மை மக்களின் மன நிறைவை எப்படி அதிகரிக்கலாம் என்று அரசும் சமூகமும் திட்டமிட ஆரம்பிக்கலாம்.

அதில் எவ்வளவு என் பணம்?

ஒருவர் உழைத்துச் சம்பாதித்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதை ஆற்றில் எறியவோ, அல்லது அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பதற்கோ பயன்படுத்துவது அவரது விருப்பம், உரிமை. அதைப் பற்றிய விவாதமே இல்லை.

இல்லையா, என்ன?

என் குழந்தைக்கு 250 ரூபாய் கொடுத்து பொம்மை வாங்கினால் அதில் என்ன தவறு? இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

எதுவும் செய்ய முடியாதா, என்ன?

கொஞ்சம் யோசிப்போம்.

நான் இன்று மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன் என்றால் அதில் பிறரின் பங்களிப்பு எதுவுமேயில்லையா? "நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து" என்று பாடா விட்டாலும், அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

பெற்று வளர்த்த தாய் தந்தை, கைப்பிடித்து வந்த தாரம், பெற்ற மக்கள் என்று தெளிவாகத் தெரியும் பொறுப்புகள் ஒரு புறம். இன்னும்
  • படிக்கப் பள்ளிக்குப் போக மாணவர் சலுகைக் கட்டணம் என்று குறைந்த விலை பேருந்து அட்டை கொடுத்த அரசு
  • மலிவு விலையில் பாடப்புத்தகங்களை அச்சடித்துக் கொடுத்த பாட நூல் நிறுவனம்
  • பள்ளியைக் கட்டிய பள்ளி நிறுவனர்
  • கூடுதல் அக்கறை எடுத்து சிறப்புப் பயிற்சி கொடுத்த இயற்பியல் ஆசிரியர்

  • இலவசமாக நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளித்த ரோட்டரி சங்கம்
  • மானியத்துடன் சில நூறு ரூபாய் கட்டணத்துடன் பட்டம் தந்த பல்கலைக் கழகம்
  • முதல் ஒரு ஆண்டு பயிற்சி அளித்து தவறுகளால் ஏற்பட்ட இழப்புகளை சகித்துக் கொண்ட நிறுவனம்

  • வெளி நாடுகளுக்கு அனுப்பிப் பையன் அனுபவம் பெறட்டும் என்று செலவு செய்த நிறுவனம் .
  • சீனாவில் வேலை கொடுத்த ஆங்கில நிறுவனம்.
  • தொழில் தொடங்க உதவி செய்த உறவினர்கள், நண்பர்கள்.
  • எந்த நேரமும் தொலைபேசினால் சலிக்காமல் எனது புலம்பல்களை கேட்டு விட்டு அறிவுரைகள் கூறும் நண்பர்கள்.
  • துயரங்கள் வரும் போது தாங்கிப் பிடித்த நண்பர்கள.்

  • மானிய விலையில் அரசிடமிருந்து கிடைக்கும் காஸ் சிலிண்டர், பேருந்து பயணம், ரயில் பயணம
  • ஏன், வலைப்பதிவுகளில் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு புதிய புரிதல்களை வழங்கிய வலைப் பதிவர்கள்
இப்படியே ஒரு முழுமையான ஒரு பட்டியல் போட்டால் அது பல நூறு பக்கங்களுக்கு வளர்ந்து விடும். நம்மை உருவாக்குவதில் நம்முடைய உழைப்பும் உற்றத்தாரின் உதவியும் தவிர சமூக அமைப்பின் பங்கு மிகப் பெரியது. இவர்கள் எல்லோருக்கும் கணக்குப் போட்டு மாதா மாதம் ஒரு காசோலை அனுப்பி விட்டால் கடன் தீர்ந்து விடுமா?

என்றோ இவர்கள் எனக்காக விதைத்த விதைகளைப் போல நானும் பிறருக்கு விதைக்கிறேன் என்று அந்த அன்பை பரப்பினால்தானே கடன் தீரும்?

எல்லோரும் அவரவர் நலத்தைப் பார்த்துக் கொண்டு போய் விட்டால் உலகத்தில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடுமே என்று பள்ளியில் படிக்கும் போது என் அப்பாவிடம் கேட்டேன். அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்பா ஓரிரு நிமிடங்களுக்கு ஏதும் சொல்லவில்லை. பிறகு, இப்போது எழுந்து போய் உன்னுடைய ஆகாரம், படிப்பு, வீடு எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறாயா என்று ஒரு எதிர் கேள்வி போட்டார்கள்.

அப்போது எனக்கு அழுகையாக வந்தது. என்ன இது ஒரு கேள்வி கேட்டால் இப்படி அடிமடியிலேயே கை வைக்கிறார், சொன்ன கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று ஆத்திரம் வந்தது.

ஒவ்வொரு தந்தையும் தாயும், தான் சம்பாதித்த பணத்தை தான் எப்படி வேண்டுமானாலும் செலவளித்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்தால் என்ன ஆகும்? எங்க அம்மாவுக்கு ஊர்களையெல்லாம் சுற்றிப் பார்க்க ஆசை. அதுதான் முக்கியம் என்று குழந்தைகள் படிப்பை பள்ளி இறுதியோடு நிறுத்திக் கொள்வோம், நாம் சம்பாதிக்கும் காசை ஏன் நம் விருப்பத்துக்கு செலவிடக்கூடாது என்று ஏன் நினைக்கவில்லை?

குழந்தைகள் எல்லோரும் படித்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு தனது ஆசைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். இதே பொறுப்பு சமூகத்துக்கு செய்ய வேண்டியதில் இல்லையா? இந்தியா போன்ற நாட்டில் ஏழைகள் இருக்கத்தான் செய்வார்கள் (குழந்தைகள் என்று இருந்தால் பசி பட்டினி இருக்கத்தான் செய்யும்) என்று சமாதானப் படுத்திக் கொண்டு நாம் சம்பாதித்தப் பணத்தை நம் விருப்பப்படி எதில் வேண்டுமானாலும் செலவளித்துக் கொள்ளலாமா?

உன் கையில் இருப்பது உன் கைக்கு வருவது எல்லாவற்றையும் உன் விருப்பப்படி அழிக்க உனக்கு உரிமை இல்லை. அதை வெளியிலிருந்து யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால் ஒரு பொறுப்புள்ள சமூக உறுப்பினராக, சமூகத்துக்கு நலன் பயக்கும் படி அதைச் செலவளிப்பது உனக்கும் பெருமை, சமூகத்துக்கும் மேன்மை. சமூக மேன்மை என்பதில் உன் சொந்த நலன்களும், உன் மனைவி மக்களின் நலன்களும் அடங்கியுள்ளது. சொந்த செலவுகளை, பிறருக்குக் கொடுப்பது போல விழிப்போடு நடத்தினால் எப்படி இருக்கும்?

அவ்வளவுதான் கேட்கிறது பொதுவுடமை சமூகம்.

  • ஏழை ஒருவன் வந்து வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கக் கடன் கேட்டால் கொடுப்போமா?
  • குழந்தைகளை இன்பச் சுற்றுலாவுக்குக் கூட்டிப் போக?
  • ஐந்து நட்சத்திர விடுதியில் போய்ச் சாப்பிட?
  • குழந்தைக்கு 250 ரூபாயில் ஒரு பொம்மை வாங்கிட?
  • புதிய தொழில் ஒன்றில் முதலீடு செய்ய?
  • கள்ளிக்காட்டு இதிகாசம் வாங்க வேண்டும், ஒரு நூறு ரூபாய் கடன் அல்லது உதவி கொடு என்று ஒரு நண்பர் கேட்டால் கொடுப்போமா? ஒரு புதியவர் கேட்டால்? ஒரு பிச்சைக்காரன் கேட்டால்?
  • இணையத்தில் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய கருத்துக்களை எழுதி அடுத்தவர்களுடன் விவாதிக்க வேண்டும் அதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் என்று ஒரு முன்பின் தெரியாத ஏழை மாணவன் கேட்டால் பணம் கொடுப்போமோ?
  • மனைவி மக்களுடன் வெளியே போய் வெகு நாளாகி விட்டது. இன்றைக்குப் போய் பிட்சா ஹட்டில் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்களேன் என்று பேருந்து நிலையத்தில் ஒருவர் கேட்டால் என்ன விடை சொல்லுவோம்?
  • குழந்தைக்குப் படிக்கப் புத்தகம் வாங்க வேண்டும், பள்ளிக்குப் போக சைக்கிள் வாங்க வேண்டும் என்று கேட்டால்?்.
  • என் மகனுக்கு கல்லூரிக்குப் போக இரண்டு சக்கர வண்டி வாங்க வேண்டும் என்றால்? எனது தொழிலுக்கு சுற்றி அலைய இரண்டு சக்கர வண்டி வாங்க உதவி செய்யுங்கள் என்று கேட்டால்?

இதற்கு எல்லாம் வேறு யாரிடமாவது பணம் கேட்கப் போனால் அவர்கள் இப்படி யோசிப்பார்கள், நம்மிடம் யாராவது உதவி கேட்டு வந்தால் நாம் அலசிப் பார்ப்போம்.

எந்தெந்த கேள்விக்கு நாம் பிறருக்குக் கொடுக்க முன் வருவோம் என்று பதில் சொல்வோமோ அந்தந்த செலவுகளை நமக்காகவும் செய்து கொள்ளலாம். அவன் குழந்தையை விட நம் குழந்தை எந்த விதத்தில் உசத்தி? நம் வயிற்றில் பிறந்து விட்டதாலா? எல்லா மனிதரும் சமம்தானே? நாம், சமூக அமைப்பின் சரியான பக்கத்தில் பிறந்து சமூக வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. உதவி கேட்டு வரும் நண்பர் அவரது தவறு எதுவும் இல்லாமல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கலாம்.

அடுத்தவருக்கு என்று வரும்போது என்னென்ன கட்டுப்பாடுகள், என்னென்ன விவாதங்களை அலசி பணம் செலவளிக்க முன் வருகிறோமோ அது நமக்கும் பொருந்தாதா?

இப்படி அடுத்தவருக்கு என்று பார்க்கும் போது நம் பணத்தை எப்படி எப்படி செலவு செய்ய அனுமதிப்போம் அதே விதத்தில் நம்முடைய செலவுகளையும் பார்த்தால் எப்படி இருக்கும்? பணம் நம் கையில் இருந்தாலும் அதன் உரிமை முழுவதும் நமக்குக் கிடையாது. அதைப் பயன்படுத்துவதில் ஒழுக்கம் இருந்தால் ஆடம்பரம் ஒழிந்து விடாது?

  • வார இறுதியில் மாயாஜாலுக்குப் போய் விளையாடி வந்தால்தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருமா? கட்டுச் சோறு கட்டிக் கொண்டு கிழக்குக் கடற்கரையில் ஒரு இடத்தில் பாய் விரித்து நாளை செலவழித்தால் குடும்பம் குதிக்காதா?
  • ஐந்து நட்சத்திர விடுதியில் சாப்பிட்டு விட்டு வந்தால்தான் எல்லோருக்கும் திருப்தி வருமா? வீட்டிலேயே புதிதாக ஒன்றை சமைப்போம், அம்மாவுக்கு ஓய்வு கொடுத்துப் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஒன்றை செய்வோம் என்று எல்லோரும் இறங்கி வேலை செய்து அதை எடுத்துக் கொண்டு மெரீனா பீச்சிற்குப் போய அல்லது எழும்பூர் மியூசியத்துக்குப் போய் சாப்பிட்டு வருவது திருப்தியைத் தந்து விடாதா?
நாம் கோடிக்கணக்கான பணத்தில் புரளவில்லையென்றாலும், நம்மிடம் இருக்கும் செல்வத்தை எப்படிச் செலவளிக்கிறோம்? சமூகம் நம்மிடம் சேர்த்து விட்ட வளங்களைப் பொறுப்புடன் கையாளுவோம் என்று ஒவ்வொருவருக்கும் உணர்வு வர வேண்டும். தினக் கூலியாக இருந்தாலும், தினமும் பல கோடிப் பணம் சேர்ந்தாலும் செலவளிக்கும் ஒவ்வொரு செல்வமும், ஒவ்வொரு மணித்துளியும் பொறுப்புடன்் செலவளிக்கப்பட வேண்டும்.

  • தில்லி மாநகரின் வீதிகளில் பளபளக்கும் கார்களில் பெண்கள் கல்லூரி வாசல்களில் நிற்கும் இளைஞர்களுக்கு பணம் கொடுப்பது யார்?
  • சின்ன அளவில், என் மகன் கல்லூரியில் படிக்கிறான் என்று வயிற்றைக் கட்டி அவன் பகட்டுக்குப் பணம் கொடுக்கும் ஏழைத் தாய்கள் இல்லையா?
  • என் மகனை பெரிய பள்ளியில் சேர்த்து விட்டேன், அங்கு பிற குழந்தைகளுக்கு நிகராக இவனுக்கும் செலவுகள் செய்ய வேண்டும் என்று வாதிட்ட தாய்க்கு என்ன பதில்?
    பிறரைப் பார்த்து இவனுக்குக் கொடுப்பதை விட இவனைப் பார்த்து பிறர் கற்றுக் கொள்ளும், நடத்தையை ஏன் கொடுக்க முடியவில்லை.?

நம் சக மனிதர்கள் வளர்ந்து வளப்படும் வரை நம்முடைய ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வோம், அதன் பிறகு எல்லோருடனும் சேர்ந்து அவற்றை நிறைவேற்றிக் கொள்வோம் என்று ஏன் நம்மால் நினைக்க முடியவில்லை? மனித் குலமே ஒரு பெரிய குடும்பம்தானே, என் கூடப் பிறந்தது என் வயிற்றில் பிறந்தது மட்டும்தான் எனது பொறுப்பா?

குரானோ, பைபிளோ, கீதையோ ஒருவன் தனது செல்வத்தை எப்படி வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்றோ, அப்படிச் சேர்ந்த செல்வத்தை எப்படி வேண்டுமானாலும் செலவளித்துக் கொள்ளலாம் என்று கூறுவதில்லை. குரானின் வட்டி வாங்கக் கூடாது என்ற தடையை, "ஆகாகா, என்ன முட்டாள்தனம், வங்கிகள் இல்லாமல் நம்முடைய நவீன பொருளாதாரமே மூழ்கி விடாதா" என்று ஆரம்பிக்காமல் கொஞ்சம் பெட்டிக்கு வெளியே சிந்திக்கலாம்..

கிருத்துவம் போதிக்கும் சேவை வாழ்க்கையை பாருங்கள். கீதையும் தருமகர்த்தா முறையை ஏன் மறந்து விட்டோம்? தர்மகர்த்தா முறையில் பொறுப்பாகச் செல்வந்தர்கள் நடக்க வேண்டும் என்ற காந்தியின் திட்டத்தை நடைமுறைக்கு உதவிடாத ஒன்று என்று கட்டபொம்மன் சொல்லியிருந்தார். அது காந்தியின் தவறா, நமது தவறா?

அந்த மதங்களின் பேரால், அந்தக் கடவுளின் பேரால்தான் வீணடிப்புகளும் அதன் நியாயப்படுத்தல்களும் நடக்கின்றன. உலகில் ஒரு குழந்தை பசியோடு இருந்தாலும், கோயிலில் செய்யப்படும் பாலாபிஷேகம் கடவுளைப் போய்ச் சேராது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இதற்குத் தொடர்புடைய என்னுடைய முந்தைய பதிவு இங்கே..

செவ்வாய், ஜூலை 11, 2006

சுகாதாரம்

பொது இடங்களில் அசுத்தம் செய்வது பற்றி காந்தி 1910, 1920 களில் எழுதியவை இன்றும் நமக்குப் பொருந்துகிறது. நாமெல்லாம் வீட்டுக்குள் மிகச் சுத்தமானவர்கள். உடலை தினமும் இரண்டு முறை குளித்து தூய்மையாக வைத்துக் கொள்வோம். ஆனால் வீட்டில் பெருக்கும் குப்பையை அழுகும் பொருட்களை வீட்டு மதிலுக்கு வெளியே தெருவில் கொட்டி விடத் தயங்க மாட்டோம்.

வலைப்பதிவில் இதைப் பற்றி எழுதுவதில் அதிகம் பொருளில்லை. வலைப்பதிவு எழுதும் வண்ணம் படித்துள்ள சிந்திக்கும் மக்கள் குப்பைகளை கண்ட இடத்தில் போடக் கூடாது, வாய்க்கு வந்த இடத்தில் எச்சில் துப்பும் வேலைகளைச் செய்வதில்லை என்று பார்த்திருக்கிறேன். ஆனால் இது மிகச் சிறிய ஒரு கூட்டம். பெரும்பான்மை மக்கள் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் சமூகக் கடமையை உணராமலிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தக் கடமைகளைப் புரிய வைக்க பிரச்சாரம் செய்வதால் நடந்து விடாது.

தனிமனித நடத்தையால் முன் மாதிரிகளை உருவாக்க வேண்டும். என்னளவில் சரியாக இருந்து கொள்வேன் என்று போய் விட்டால், குவியும் குப்பைகளுக்கிடையில் பெருகும் ஒழுக்கக் கேடுகளுக்கிடையே நம்முடைய ் நடத்தை் பயனற்றுப் போய் விடும்.

நகர சபை, அல்லது பஞ்சாயத்துதான் பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், என்று பரவலாக ஒரு எண்ணம் இருக்கிறது. டாடா நிறுவனத்தில் சுற்றுப் புறங்களையும் தொழிற்சாலையையும் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு ஒரு மேலாளர், அவருக்குக் கீழ் வேலை செய்ய பத்துப் பதினைந்து வேலையாட்கள் இருந்தார்கள். அவர் சொல்வது போல "ஆயிரம் பேர் போடும் குப்பை போட்டுக் கொண்டே இருக்க பதினைந்து பேர் அதைப் பொறுக்கிக் கொண்டு இருந்தால் நம் நிறுவனம் எப்போதுமே அழுக்காகத்தான் இருக்கும்".

சமூகத்தின் ஒவ்வொரு குடிமகனும் தன்னளவில் ஒரு துப்புரவுப் பணியாளராக இருக்க வேண்டும். குப்பைகளையும், கழிவுகளையும் திரட்டிச் சென்று அதைப் பதப்படுத்துவது மட்டுமே உள்ளூர் அரசுகளின் பணியாக இருக்க முடியும்.

வீட்டுக் குப்பைகளை இன வாரியாகப் பிரித்தல், குப்பை எடுத்துச் செல்லும் வண்டி வரும் வரை குப்பையை சிதறி விடாமல் வைக்க ஒரு குப்பைத் தொட்டி அல்லது வகைக்கு ஒன்றாக தொட்டிகள் இவை இரண்டுமே தனி நபர்களின், வீடுகளின் குடியிருப்புகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஒரு குப்பைத் தொட்டிக் கட்ட நகராட்சி திட்டம் போட்டு அதற்கு டெண்டர் விட்டு பணம் செலவளிக்கும் நிலை இருக்கக் கூடாது.

நமக்கு நேரடியாகப் பயன்படும் ஒன்றை நாம் எல்லோரும் சேர்ந்து ஏன் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. உண்மையான மக்களாட்சி உண்மையான தனிமனித சுதந்திரம் வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தன் கைக்கு எட்டிய வேலைகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது பொது இடங்களில் துப்புவது. காரிலிருந்து துப்புகிறார்கள், நடப்பவர்களும் துப்பிக் கொள்கிறார்கள். பேருந்துக்குக் காத்திருப்பவர்களும் தாம் நிற்கும் இடத்திலேயே துப்பி விட்டு அதே இடத்தில் இன்னும் பத்து நிமிடங்களை செலவளிக்கிறார்கள். காலில் செருப்பில்லாமல் ஒரு குழந்தையைக் கூட்டிக் கொண்டு கடைக்குப் போகும் ஒரு தாயும் நின்று தரையில் துப்பிக் கொள்கிறார். தன் குழந்தையின் பாதங்களில் இது போல பலர் துப்பிய எச்சில் படுகிறது என்ற உணர்வு இருந்தால் அந்தத் தாய் கண்டிப்பாகத் துப்ப மாட்டார்.

மாடிப்படிகளில் சுவரில் வெற்றிலை உமிழல்கள். இந்த நிலை மாற மிகப் பெரிய மன மாற்றம் தண்ட சட்டங்கள் வர வேண்டும்.

மூன்றாவதாகக் கழிவு நீரை சாலைகளில் விடும் சிறு உணவகங்கள். பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும், கடைத்தெருக்களில் இருக்கும் சாப்பாட்டுக் கடைகளில் சரியான சாக்கடை வசதி இல்லாமல் கழிவு நீரை வாளிகளில் சேகரித்து அவ்வபோது கடைக்கு எதிரிலியே சாலையில் கொட்டி விடுகிறார்கள். கல்லூரியில் படிக்கும் போது தாம்பரம் பேருந்து நிலையத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது வளசரவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் முருகன் கடையிலும், போரூரில் இருக்கும் கணபதி ஸ்வீட்சும். கணபதி ஸ்வீட்சில் ஓடை அமைத்து கழிவு நீரை பேருந்துக்குக் காத்திருக்கும் இடத்தில் விட்டிருக்கிறார்கள். இது மிகப் பெரியக் கடை.

இந்தப் பிரச்சினைக்கு காவல் துறையும் சுகாதார துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் மீதி. பொது மக்களின் ஆதரவும் சட்டத்தின் பின்னணியும் ஏற்கனவே இருக்கின்றன. கையில் பணம் வாங்கிக் கொண்டு இத்தகைய அடாவடித்தனங்களைத் திருத்தாமல் இருக்கும் காவல் துறையும், சுகாதாரத் துறையும் கண்டிப்புக்குரியவை.

இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவின் வாழ்க்கைத் தரத்தை அடைந்து விட வேண்டுமானால் பூமியின் சுற்றுச்சூழல் எப்படி அதன் மீது போடப்படும் சுமையைத் தாங்கும். சுற்றுச் சூழல் என்ற போர்வையில் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள் என்ற வாதத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, எவ்வளவு அமெரிக்கப் பாணி முன்னேற்றம் என்ன விலையில் வர வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

திங்கள், ஜூலை 10, 2006

இந்துவைப் போல் இனிதாவது ....

1. தினமலர்
நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டில் வாங்குவது தினமலர் நாளிதழ்தான். பக்கத்து வீடுகளில் எல்லாம் ஆங்கிலப் பத்திரிகை இந்து வாங்கினாலும் அம்மாவுக்கு தினமலர் படித்த திருப்தி வராது. அதில் நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளூர் செய்திகள் நிறைய வரும். யாராவது கொஞ்சம் வசதியுள்ளவர்கள் இறந்து விட்டால், விளம்பரங்கள் வெளியிடுவார்கள். என்னவோ அம்மாவுக்கு இன்று வரை தினமலரும் கூட வரும் இணைப்புகளும் பிடித்தம்.

தினமலரும் அதன் இணைப்புகளும் ஆரம்பம் முதலே தமது எண்ணத்தை திணிக்கும் பாணியிலேயே இருக்கின்றன. ஆரம்ப கால வாரமலர் பற்றி நினைக்கும் போது எப்படி அதைப் படித்தோம் என்று தோன்றுகிறது. எதையும் முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை படித்து விட வேண்டும் என்ற நமது கொள்கையின் படி வாரமலரையும் கரைத்து குடித்து விடுவது வழக்கம். அதன் அபத்தக் களஞ்சியங்கள் என்னுடைய கருத்துக்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் இருக்கலாம்.


2. தினத்தந்தி
நாங்கள் சின்ன வயதில் தினமலரில் டார்ஜான் என்றப் படக்கதையைப் படிக்க போட்டி போடுவோம். தினத்தந்தியில், கன்னித்தீவு, ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார், சாணக்கியன் சொல் போன்ற துணுக்குப் படங்களும், முதல் பக்கத்தில் ஒரு நடிகையில் புகைப்படம் போட்டு "இவர் இப்படிப் பார்க்கிறாரோ" என்ற குறிப்பும் இருக்கும். முடி வெட்டப் போகும் போது கடையில் மாதம் ஒரு முறை அது படிக்கக் கிடைக்கும். நம்ம வீட்டிலும் இதை வாங்கினால் நல்லா இருக்குமே என்று தோன்றும்.

அப்புறம் தினமலர் ஆட்ட விதிகளை மாற்ற ஆரம்பித்தது. ஞாயிறு தோறும் வாரமலர் என்று பத்திரிகை வடிவில் இணைப்பு ஒன்றைக் கொடுக்க ஆரம்பித்தது. அது அப்படியே வளர்ந்து தினமும் ஒரு இணைப்பு என்று சில ஆண்டுகளிலேயே வளர்ந்து விட்டது. மற்ற எல்லா நாளிதழ்களும் அதைப் பின்பற்ற வேண்டி வந்து விட்டது. இன்றைக்கும் தினத்தந்தியின் இணைப்புகளில் நாளிதழின் எளிமையும், சத்தும் நேர்மையும் உள்ளன. தினத்தந்தியில் முனைந்து திணிக்கப்படும் ஆபாசங்களும், வக்கிரமான கதை கட்டுரைகளும் படித்த அனுபவமே இல்லை.

3. தினகரன்
தினகரன் என்பது திமுக சார்பு பத்திரிகை என்று முத்திரை குத்தப்பட்டிருந்ததால் நூலகங்களில் மட்டுமே அதைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். மிக ஒரு சார்பாகவே செய்திகள் வெளி வரும். இப்போது கலாநிதி மாறனால் வாங்கப்பட்டு தன் விலையைக் குறைத்து மனத் தோற்றங்களை மேம்படுத்த முனைந்துள்ள முயற்சியின் போதுதான் அதைக் காசு கொடுத்து வாங்கும் எண்ணம் வந்தது. ஓரிரு முறைக்குப் பிறகு வாங்கவில்லை.

4. தினமணி
தினமணியின் ஆங்கிலச் சகோதரி இந்தியன் எக்ஸ்பிரஸின் தரத்துடன் ஒப்பிடும்போது ஒரு உயர் தர இடத்தை அடைந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிகமாகப் படிக்காவிட்டாலும், எப்போதாவது பேருந்தில் போகும் போது படிக்க வேண்டும் என்று வாங்கினால் நிறைவான கட்டுரைகளுக்கு வாங்கியிருக்கிறேன். தினமணியும் தனது தினமணிக்கதிரை ஞாயிறு இணைப்பாக மாற்றியிருந்தது.

5. இந்து
இந்து நாளிதழ் வாங்கும் பக்கத்து வீட்டுக் காரர்கள் தினமலரை இரவல் வாங்கிச் செல்வார்கள். காலை பதினொரு மணிக்கு மேல் வீட்டில் தினமலரைப் பார்க்க முடியாது. இரண்டு மூன்று வீடுகள் சுற்றி மாலையில்தான் திரும்பி வரும். அக்கா சென்னைக்குப் படிக்கப் போய் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது அவளுக்காக இந்து போடச் சொல்வார்கள் அப்பா. நான் இந்துவில் விளையாட்டுப் பக்கம் மட்டும்தான் பார்ப்பேன். கிரிக்கெட் படங்கள், நிர்மல் சேகர் எழுதும் டென்னிஸ் கட்டுரைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொள்வேன்.

ஸ்டெபி கிராஃபை மோனிகா செலஸ் முதல் முறை கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டி ஒன்றில் வென்று விட (ஃபிரெஞ்சு ஓப்பன் என்று நினைக்கிறேன்), நிர்மல் சேகர் கவிதையாகப் பொழிந்திருந்தார். இன்று வரை விளையாட்டுப் பற்றியக் கட்டுரைகளில் கட்டிப் போட்டு விடும் மாயாவி அவர்தான்.

6. கல்லூரியில் இந்து

கல்லூரியில் சேர்ந்த பிறகு ஜூனியர் ஹாஸ்டலில் கீழ்த் தளத்தில் இந்து பேப்பர் வரும். மெஸ்ஸுக்கு மேலே தொலைக்காட்சி அறையில் எல்லா நாளிதழ்களும் கிடக்கும்.

"காலங்காத்தால பேப்பர் படிக்க என்றெல்லாம் வந்து நின்னுடக் கூடாது" என்று புதியவர்களை மிரட்டும் இரண்டாம் ஆண்டு மாணவரின் எச்சரிக்கைக்குப் பணிந்து பல மாதங்கள் நாளிதழ் பக்கமே போகவில்லை. அதன் பிறகும் ஒரு சில நிமிடங்களே படிக்கக் கிடைக்கும் அதில் அவ்வளவு ஆர்வம் வளரவில்லை.

கல்லூரி இரண்டாம் ஆண்டில் அப்போது கூடுவாஞ்சேரியில் வேலைக்குச் சேர்ந்து விட்டிருந்த அக்காவுடன் சேர்ந்து தாம்பரத்தில் தங்கி கல்லூரி வரலானேன். தாம்பரத்திலிருந்து மின் தொடர் வண்டியில் கிண்டி அல்லது சைதாப்பேட்டை வந்து இன்னொரு பேருந்து பிடித்து காந்தி மண்டபம் வரலாம். அல்லது 21B பிடித்து நேரடியாக கல்லூரி வாசலில் இறங்கிக் கொள்ளலாம்.

பல விவாதங்கள், முயற்சிகளுக்குப் பிறகு 21Bதான் நம்ம தடம் என்று அமைந்து விட்டது. 7.05, 7.20, 7.50, 8.20 என்று காலையில் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள். பின் இரண்டு வண்டிகளில் தாம்பரத்திலேயே நிறைந்து பல்லாவரம் தாண்டும் போது படிக்கட்டுகளில் தொங்குபவர்கள் பிதுங்கிக் கொண்டிருப்பார்கள். இருக்கை கிடைக்கும் வண்டியில்தான் ஏறுவேன்.

ஏறும் முன் கடையில் இந்து நாளிதழ் வாங்கிக் கொள்வேன். சீட்டுக் கொடுக்க நிறுத்தி சுமையை இழுத்துக் கொண்டு போய்ச் சேர பேருந்து எடுத்துக் கொள்ளும் நேரம் நாற்பது நிமிடங்கள், அதன் பிறகும் மதியம் உணவு இடைவேளை, மாலையில் திரும்பும்போது பேருந்துப் பயணம் என்று இந்து நாளிதழுடனான என்னுடைய காதல் தொடங்கியது. இங்கும் எல்லாவற்றையும் படித்து விட வேண்டும் என்ற வெறிதான்.

ஆரம்ப நாட்களில் ஆங்கிலம் படிப்பதில் பழக்கம் இல்லாததால், முதல் பக்கம், விளையாட்டுப் பக்கம் முடிக்கவே நாள் கழிந்து விடும். நாட்கள் போகப் போக இரண்டாவது முக்கியப் பக்கம், உலகச் செய்திகள் என்று முன்னேறினேன். தலையங்கப் பக்கங்களையும் வணிகப் பக்கங்களையும் தொட்டு விட ஓரிரு ஆண்டுகள் பிடித்தன. இறுதி ஆண்டு படிக்கும் போது குறுக்கெழுத்துப் போடக் கூட ஆரம்பித்து விட்டேன். தமிழ் கதைகளில் 'அவர் இந்து நாளிதழில் வரி விளம்பரங்கள் கூட விடாமல் எல்லா வரிகளையும் படிப்பார்' என்று பாத்திரங்களைப் பற்றி இது மனிதனால் முடிகிற காரியமா என்று நினைத்த நான் அந்த நிலைக்கு வந்து விட்டேன்.

அக்காவுக்குக் கல்யாணம் ஆகி அத்தானும் இந்துப் பிரியராகவே இருந்தார். அந்த ஆண்டுகளில் அக்காதான் பாவம், வீட்டிலேயே இந்து போட ஆரம்பித்த பிறகு கூட நான் கல்லூரிக்குக் கிளம்பும் போது கையில் எடுத்துக் கொண்டு போய் விடுவேன். திரும்ப இரவில்தான் அவளுக்கு அதைப் பார்க்கக் கிடைக்கும். அதை மாற்ற முயன்றதற்காக அவளிடம் கோபித்துக் கொண்டேன்.

8. இந்தூரில் ...

அப்புறம் வேலை கிடைத்து நான்கு ஆண்டுகள் இந்தூரில் வாசம். இந்தூரில் வெளியாகும் ஒரே ஆங்கில நாளிதழ் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற ஒன்று. இந்துப் பத்திரிகையும் அல்லது எக்ஸ்பிரஸ் கூட இல்லாத ஒரு நகரமா என்று துக்கமாக இருந்தது. மும்பையிலிருந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா அல்லது தில்லியிலிருந்து இந்துஸ்தான் டைம்ஸ் மாலையில் கிடைக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியா என்பது ஏதோ கொம்பு முளைத்த நாளிதழ் என்ற எண்னம் அப்போதெல்லாம். மும்பையிலிருந்து வெளி வருகிறது, பெயரும் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது என்று அதை பக்தியுடன் படிப்பேன்.

போகப் போக அந்த பக்திக்கு பங்கம் வந்தது. செய்திகளும், கட்டுரைகளும் இந்துவுடன் ஒப்பிடும்போது மலிவாகத் தோன்றின. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் சொந்தமாக நாளிதழ் போடச் சொன்ன போது எக்னாமிக் டைம்ஸை தேர்ந்தெடுத்தேன். அப்போது எகானிமிக் டைம்ஸ் இந்து போல செறிவான பத்திரிகை. மாலையில்தான் பத்திரிகை போடுவார்கள். அதை அப்படியே எடுத்துக் கொண்டு அதிகாலை தேவாஸ் தொழிற்சாலைக்குப் போகும் பேருந்தில் படிப்பேன். பங்குச் சந்தை, வணிக நிறுவனங்கள், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்று பரபரப்பான அந்த நாட்களில் எகனாமிக் டைம்ஸை கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தேன்.

பிற்பாடு வாடிக்கையாளர் சேவை துறைக்கு உயர் பொறுப்புகளுடன் நான் மாற்றப்பட்ட போது அதுவரை பேசியே இராத ஒரு பொது மேலாளர், "அவனைப் பற்றி எனக்கு வேறு விபரங்கள் தெரியாது. ஆனால் தினமும் காலையில் எகனாமிக் டைம்ஸை கரைத்துக் குடிக்கிறான்" என்று சொன்னபோது நம்மையும் எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று புரிந்தது.

ஆண்டுக்கு ஓரிரு முறை ஊருக்கு வரும் போது போபால் வந்து தில்லியிலிருந்து வரும் ரயில்களிப் பிடிப்போம். அப்போது இந்துஸ்தான் டைம்ஸ் கிடைக்கும். சீனாவுக்குப் புறப்படும் முன் மும்பை, கொல்கத்தா, தில்லி என்று ஒரு சுற்று சுற்றும் போது அங்கு கிடைக்கும் நாளிதழ்களை படித்துப் பார்த்துக் கொண்டேன்.

9 ஆங்காங்கில் தி சௌத் சைனா மானிங் போஸ்ட், ஆங்காங் ஸ்டாண்டர்டு
ஆங்காங்கில் சௌத் சைனா மாணிங் போஸ்ட் என்று ஒரு நாளிதழ் கிடைக்கும். மிகக் கனமாக கருத்து செறிவும் நன்றாக இருக்கும். விலை 7 ஆங்காங் டாலர். அதே நாளிதழ் ஷாங்காயில் விமானம் மூலம் தருவிக்கப்பட்டு 18 யுவானுக்கு (கிட்டத்தட்ட 15 ஆங்காங் டாலர்) கிடைக்கும். ஷாங்காயில் இருக்கும் போது ஆங்காங் போவதின் ஒரு முக்கிய கவர்ச்சி குறைந்த விலையில் வாங்கி விட முடியும் இந்த நாளிதழ். வண்ண மயமாக பிரிடிஷ், சீன தரப்புக் கட்டுரைகளுடன் வெளி வரும்.

ஷாங்காயில் இருக்கும் போது வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டும் வாங்கிப் படித்துக் கொள்வதுண்டு. ஆங்காங்கின் சீனாவுடனான தனி உறவு முறை, அதில் வரும் சிக்கல்கள் அரசியல்கள் என்று விவாதங்கள் போகும்.

10. ஷாங்காயில்
ஷாங்காயில் ஆரம்ப ஆண்டுகளில் சைனா டெயிலி என்று ஒரு நாளிதழ் மட்டுமே கிடைக்கும். அரசால் வெளியிடப்படும் இந்த ஒன்றுதான் ஆங்கிலத்தில் படிக்கக் கிடைப்பது. விலை ஒரு யுவான் தான். கம்யூனிஸ்டு கட்சியின் விசுவாச பேச்சாளனாக செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடும். இதே பதிப்பகத்திலிருந்து சாங்காயைக் குறித்து சாங்காய் ஸ்டார் என்றும் இரண்டு யுவானுக்கு அவ்வப்போது வெளி வரும்.

கொஞ்சம் கட்டுப்பாடுகள் தளர்ந்த காலத்தில் ஷாங்காய் டெயிலி என்று ஒரு போட்டி நாளிதழ் தினசரி வர ஆரம்பித்தது. கொஞ்சம் தைரியமாக சமூகச் சிக்கலகளை அலசவும், ஆங்கிலம் படிக்கும் வெளி நாட்டாருக்கு ரசித்து விடும் வண்ணம் அது அமைந்திருக்கும்.

11. இங்கிலாந்தில் தி டைம்ஸ், கார்டியன், ஸ்பெக்டேடர
அந்த நான்கு ஆண்டுகளும் இணையத் தளங்களில் இந்திய, ஆங்காங், அமெரிக்க செய்தித் தளங்களைப் படித்து திருப்தி பட்டுக் கொண்டதுதான். அதிலும் சிஎன்என், பிபிசி போன்றவற்றை சீன தீச்சுவரால் தடுத்து விட்டிருந்தனர்.

ஆங்கில நிறுவனத்தில் சேர்ந்து இங்கிலாந்தில் கழித்த சில மாதங்களில் டைம்ஸ், கார்டியன் என்ற ஆங்கில நாளிதழ்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்திருக்கக் கூடியவை கையில் கிடைத்தன. வழக்கமான் பிரிடிஷ் குறும்பும் சுயநகைப்பும் ததும்பும் கட்டுரைகள் நன்றாகவே இருந்தன. கூடவே டேப்ளாய்டு வடிவில் நிறைய நாளிதழ்கள். விலைகள் இந்தியக் கணக்கில் தலை சுற்றினாலும், கொடுத்தக் காசுக்கு மதிப்பு கிடைக்கிறது என்ற திருப்தி ஏற்பட்டது.

சீனாவில் உள்நாட்டு, ஆங்காங், தாய்வான், இங்கிலாந்து விமானப் பயணங்களில் பன்னாட்டு நாளிதழ்கள் பார்க்கக் கிடைத்து விடும். ஹெரால்டு டிரிப்யூன் என்பது நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் இரண்டின் கட்டுரைகளை நிரப்பி வெளிவரும். இணையத்தில் நியூயார்க் டைம்ஸின் இணையப் பதிப்பில் கட்டுரைகள் படிப்பதுண்டு்.

12. இந்துவின் மீது வெறுப்பு - ஈழத் தமிழர் விவகாரம்.
ஷாங்காயில் இருக்கும் போது ஈழப் போராட்டத்துககு் எதிரான இந்துவின் அநியாய நிலைப்பாட்டைக் குறித்து மனம் வெம்பி தமிழ் டாட் நெட் மடற்குழுவில் எழுதியிருந்தார் ஒரு நண்பர். உடனே ரத்தம் கொதித்து, "இனிமேல் உங்கள் இணையப் பதிப்பை நான் படிக்கவே மாட்டேன். சென்னை போனாலும் உங்கள் நாளிதழை காசு கொடுத்து வாங்க மாட்டேன்" என்று இந்துவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட்டு அதன் நகலை தமிழ் டாட் நெட் மடற்குழுவுக்கும் அனுப்பினேன். அதற்குப் பதிலாக ஒரே ஒரு நண்பர் தானும் அதையே செய்யப் போவதாக் கூறி பதிலளித்தார்.

இன்றைக்கும் இந்துவின் ஆசிரியரின் கொள்கைகள் கருத்துகள் செய்திப் பக்கங்களுக்கும் வந்து விடுவதைப் பற்றி எனக்கு பெரிய வருத்தும் இருக்கிறது. ஈழப் பிரச்சனையாகட்டும், இந்துத்துவா பற்றிய விவாதங்களாகட்டும், பொருளாதாரக் கொள்கைகளாகட்டும், தான் ஆசிரியர் பக்கங்களில் எடுக்கும் நிலைப்பாட்டை ஒட்டிய கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும், செய்தி அறிக்கைகள் கூட அதற்குத் தகுந்த வாறு மாற்றப்பட்டு விடும் என்ற போக்கு அருவெருப்பாக உள்ளது.

மேற்சொன்ன முடிவு எடுத்த பிறகு பல மாதங்கள் இந்து படிப்பதைத் தவிர்த்து விட்டேன். இந்தியா வந்த பிறகும் பல நாட்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் குரோனிக்கிள் என்று மாற்றுகளை படித்துப் பார்த்து வந்தேன். ஆனால், இடையிடையே இந்துவின் கவர்ச்சி வென்று என் சபதம் தோற்று விட்டது. அலுவலகத்தில் நண்பர் இந்து நாளிதழ் போடச் சொல்லியிருந்தார். அப்படியே டெக்கான் குரோனிக்கிளின் அபத்தமான உள்ளடக்கங்களைக் கண்டு கடுப்பாகி இந்துவுக்கு மீண்டும் அடிமையாகி விட்டேன்.

13. எகனாமிக் டைம்ஸின் புது வடிவமைப்பு
பழைய காதல்களில் மற்றொன்றான எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் தன் பழைய வடிவை மாற்றிக் கொண்டு பரவலான வாசகர்களுக்காக படங்களையும், எள்ளல் ததும்பும் தலைப்புகளையும் போட்டு வரும் மாற்றம் என்னைக் கவரவில்லை. வணிக நிறுவனங்களிடம் ஆதரவு பெற்றுக் கொண்டு அவர்கள் சார்பு செய்தி, அலசல்களை வெளியிடுவது போல ஒரு ஐயமும் தட்ட ஆரம்பித்தது. அவ்வப்போது யாராவது வாங்கி வந்தால் தவிர காசு கொடுத்து எகானாமிக் டைம்ஸ் வாங்குவது அறவே நின்று விட்டது. ஆழமான அலசல்களே அதிலிருந்து மறைந்து போய் விட்டதாக ஒரு உணர்வு.

14. யாமறிந்த நாளிதழ்களிலே இந்துவைப் போல....
மொத்தத்தில் சொல்லப் போனால் நான் படித்த இத்தனை நாளிதழ்களில் இந்து நாளிதழ் போல எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியர் கருத்துகளை ஒட்டிச் செல்லும் செய்திப் போக்கைத் தவிர ஆங்கில மொழித் தரம், வியாபரத்துக்காக மட்டமான விளம்பரம்/கட்டுரைகளை வெளியிடாமை, எழுதுபவர்களின்் தனிப் பாணிகள் என்று பழக்க விருப்பத்தால் இந்துவைப் போல் இனிதாவது எங்கும் காணேன் என்றுதான் நான் சொல்வேன்.

ஞாயிறு, ஜூலை 09, 2006

காவல் நிலையத்தில் நியாயங்கள

நிலையத்தின் எழுத்தர் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த மேசையின் பின்னால் இருந்தார். அவருக்கு இடது பக்கம் நுழை வாசல். வலது பக்கம் அறையின் கோடியில் லாக்கப்.

"அய்யா, நேத்தைக்கு குடிச்சுட்டு வந்து சண்டை போட்டு என் சட்டையெல்லாம் இழுத்துக் கிழிச்சிட்டான்யா, அதான் ஒங்ககிட்ட சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கலாம்னு வந்தோம்யா" கொஞ்சம் குள்ளமான வெள்ளை வேட்டி சட்டையில் சென்னை பேட்டை ஒன்றில் கட்சியின் குட்டித் தொண்டர் போன்ற வடிவில் ஒரு நடுத்தர வயது ஆண்.

"அவன எங்க, கூப்பிடு"

"ரைட்டர் ஐயா கூப்பிடுறாரு" என்றக் கட்டியத்துடன் அவன் உள்ளே வந்தான். மெலிய உறுதியான உடல் வாகு, இறுகிய முகம். குளித்து நெற்றியில் சந்தனம் இட்டிருந்தான்.

"என்ன வேலடா செய்யறா"

"அய்யா கார்பென்டர் வேலக்கு போவேங்க"

"ஏண்டா குடிச்சிட்டு வந்து பொண்டாட்டிய அடிக்கிறயே, நீயெல்லாம் ஆம்பளயா?"

"குடிக்கல்லாம் இல்லையா, அவ அப்பா வீட்டில போய் இருந்துக்கிட்டு வீட்டுக்கு வரவே மாட்டேங்கிறா!"

"அப்படியா ?? ?? "

"இல்லய்யா அவ முழுகாம இருக்கா அதான் கூட்டிட்டு வந்திருக்கோம்" இது அப்பா.

"ஏண்டா பொண்டாட்டி முழுகாம இருக்கும் போது ஓன் வீட்டில இருந்து ஒனக்கு ஆக்கிப் போடவா செய்வா? அவ அப்பா அம்மா வீட்டில இருந்தாத்தான் சரியா பார்த்துப்பாங்க. நீ என்னான்னா சாயங்காலம் ஆனா குடிச்சிட்டு கலாட்டா பண்ணக் கூடிய பய, ஒன்ன நம்பி எப்படி வீட்டில இருப்பா, சரி அவங்களையும் கூப்பிடுங்க" என்றதும் தோளில் ஒரு பெண் குழந்தையுடன் வயதான ஒரு பெண்மணியும், தள்ளிய வயிற்றுடன் ஒரு கர்ப்பிணி பெண்ணும், இன்னொரு இளைஞனும் உள்ளே வந்தனர்.

குழந்தை அப்பா என்று இறங்கி இவன் பக்கம் வந்து நின்றது, மூன்று வயதிருக்கும். "ஏம்மா, இந்தப் பய ஒன்ன அடிப்பானா?"

"ஆமாங்க தெனமும் குடிச்சிட்டு வந்து அடிப்பாருங்க"

"தெனம்லாம் ஒண்ணுமில்லங்க, இவ அப்பா வீட்டுல போய் இருந்துக்கிட்டு வம்பு பண்றதுனாலத்தான் ..."

"ஏண்டா, திரும்பத் திரும்ப அதயே சொல்லிட்டு, அவ புள்ளத்தாச்சின்னுதான அம்மா வீட்டுல இருக்கா"

"கொழந்தயக் கூடக் கடத்திட்டுப் போயிருவேன்னு மிரட்டுராருங்க? ஏற்கனவே அசோக் நகரில கேஸ் பதிஞ்சிருக்கு."

"ஏண்டா?"

"ஐயா கொழந்த கூட வெளயாடக் கூட விட மாட்டேங்கறாங்க, கடைக்குக் கூட்டிப் போய் ஒரு மிட்டாய் வாங்கிக் கொடுக்கலாம்ணா கூட என் கூட விட மாட்டேங்கறாங்க"

"எப்படிறா விடுவாங்க? எதுக்குக் கடைக்குக் கூட்டிட்டுப் போகணும், வீட்டிலயே விளையாட வேண்டியதுதான? ஆமா ஒங்க வீட்டு ஆளுங்கள எல்லாம் கூட்டிட்டு வரச் சொன்னேனே என்னாச்சு?"

"..."

"எவன் வருவான் ஒனக்குத் தொணையா, மொதல்ல பொண்டாட்டிய நல்லா வச்சுக்கப் படி. மீதெயெல்லாம் அப்புறம்தான், புரிஞ்சா?"

"ஐயா நேத்தைக்கு வீட்டுப் பக்கம் தண்ணி போட்டுட்டு வந்து ஒரே கலாட்டா, நான் போய்க் கேட்டா ஏஞ் சட்டயப் புடிச்சி இழுத்து கிழிச்சிட்டான்." அதே கிழிந்த சட்டையைப் போட்டிருந்த வெள்ளை வேட்டி காலரின் ஓரத்தில் ஒரு கிழிசலை இழுத்துக் காட்டினார்.

ரைட்டர் அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல், "ஏண்டா இனிமேல் ஒழுங்கா இருப்பயா, அல்லது, பொண்டாட்டிய கொடும பண்ணினே என்று உள்ள போட்டுருவமா? கோர்ட்டுக்குப் போனா நாலு வருஷம் தீட்டிருவான். ஜெயிலுக்குப் போனே, உள்ள இருப்பவனே ஒன்ன அடிப்பான். கொல கொள்ள செஞ்சவன கூட விட்டுருவானுங்க, பொம்பளய அடிச்சவன்னு உள்ள போனவனுக்கெல்லம் நல்லா பூச போட்டு விடுவாங்க"

"..."

"சரி முடிவா என்னதான் சொல்ற?"

"அவ எங்கூட வர மாட்டன்னு சொல்லட்டும், நான் விட்டுர்றேன்."

"ஏம்மா நீ என்ன சொல்ற?"

ஒரு சில விநாடிகள் தயக்கம்.

"நான் இவர்கூடப் போக மாட்டேங்க!"

"பாருடா, அவளே சொல்லிட்டா, இப்படிப் போட்டு அடிச்சா யாரு ஒங்கூட வருவா?" அவன் முகத்திலிருந்த உணர்ச்சிகளைப் பார்த்தாரோ என்னவோ ரைட்டரின் குரல் மாறியது.

"இப்போ எத்தனாவது மாசம்?"

"ஏழாவது மாசம்ங்க, இப்போ நல்லாப் பாத்துக்கிட்டாத்தான பொறக்கப்போற கொழந்தக்கு நல்லது" அம்மாக்காரி.

"ஏண்டா, கொழந்த பொறந்து மூணு நாலு மாசம் போகட்டும், ஒங்கூட அனுப்பி வக்கச் சொல்றேன். நீ அப்பப்ப போய் பார்த்துட்டிரு. இவன் ஒங்க வீட்டுக்கு வரலாமில்ல?"

"வரலாங்கய்யா, ஆனா சண்ட போடக் கூடாதுன்னு சொல்லிடுங்க"

"அப்பப்ப போ, கொழந்தக்கு எதாவது வெளயாட்டுச் சாமான் வாங்கிட்டுப் போ. பொண்டாட்டிக்கு பூ வாங்கிட்டுப் போ. ஏண்டா வீணா சண்ட போட்டு அழியுற!."

"...."

"ஆமாமா அப்பப்ப போயப் பார்த்துக்கணும். பொண்டாட்டி புள்ளய போய்ப் பார்க்காதவன் என்ன ஆம்பிள, சரி இப்போ எங்க போவே?"

"ஐயா அப்படியே நேரா வேலக்குப் போக வேண்டியதுதான்." வேறு எந்தப் பக்கமும் பார்வை திரும்பி விடாமல் தவிர்ப்பது போல தெரிந்தது. குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. கர்ப்பிணிப் பெண்ணின் கண்கள் இவன் முகத்தைத் துளாவின.

"சரி நீ இப்போ போகலாம், இன்னொரு மொற இத மாதிரி நடந்தது, புடிச்சி உள்ள தள்ளிருவேன். பொண்டாட்டி புள்ளய பார்த்துக்க, நல்ல ஆம்பிளயா இரு. சரி இதில ஒரு கையெழுத்து போட்டுட்டு போயிரு."

வெடுக்கென்று கையெழுத்துப் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வெளியே நடந்தான். குழந்தை "அப்ப்ப்பாஆஆ" என்று ஓட முயன்றது. பெண் வீட்டார் கூட வந்திருந்த இளைஞன் அதை பிடித்துக் கொண்டான்.

========================

"சரி சரி, அந்த எதிர்க் கடயில நான் சொன்னேன்னு சொல்லி டீ சொல்லிட்டு வாங்க. யாருக்கெல்லாம் டீ வேணும்? கேட்டுட்டுப் போய்ச் சொல்லிடுங்க!"

"சரி ஐயா" சட்டைக் காலர் ஓரம் கிழிந்த அந்த அப்பாக்காரர் வெளியே போகிறார். வெளியில் குடும்பமாய் தரையில் வட்டமாக உட்கார்ந்து கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் டீக்கடை குழந்தைப் பையன் கிளாஸ் டீகளுடன் வருகிறான்.

"காசு நானே கொடுத்து விட்டேங்கய்யா" சட்டை காலர் ஓரம் கிழிந்த அப்பாக்காரர்.

வெளியே குடும்பமே டீயை உறிஞ்சுகிறது.

"சரி அப்போ நாங்க போயிட்டு வாரோம், ஒங்க ஒதவிக்கு ரெம்ப நன்றி". ஒரு நூறு ரூபாய் நோட்டு தோன்றுகிறது.

"என்னது இது, நாங்க எத்தன பேரு இருக்கோம்னு பார்க்கீங்க இல்ல?"

"அய்யா, எவ்வளவு வேணும்னு சொன்னீங்கண்ணா...."

"ஒரு நானூறாவது இருந்தாத்தான் ஆளுக்குக் கொஞ்சம் தேறும்".

"அய்யா, இப்போ இருநூத்தம்பதுதான் இருக்கு" இன்னும் ஒரு நூறும் ஐம்பதும் தோன்றுகின்றன.

"சரி சரி, இதுல கையெழுத்துப் போட்டுட்டுப் போங்க".

ஞாயிறு, ஜூலை 02, 2006

நம்மைப் பீடித்துள்ள புற்று நோய்கள்

நம் சமூகத்தைப் பீடித்துள்ள பெரிய நோய்கள் லஞ்ச ஊழல்களும், சாதி வேறுபாடுகளும். ஒவ்வொரு தனி மனிதனின் ஆன்மாவை கரையான் போல அரித்து வரும் இந்தப் பிணிகள் நாட்டின் வறுமைக்கும், வன்முறைகளுக்கும், துன்பங்களுக்கும், தனி மனித சீர்கேடுகளுக்கும் காரணம்.

காவல் துறை, பத்திரப் பதிவுத் துறை, வாகன உரிமம் வழங்கும் துறை, பொது விநியோகத் துறை, மாசுக்கட்டுப்பாடு துறை, தொழிலாளர் நலத்துறை, வருவாய் துறை என்று பொதுமக்களிடம் தொடர்பு உள்ள எல்லா பொதுத் துறைகளும் கையூட்டில் ஊறித் திளைக்கின்றன. உயர்ந்த நிலைகளிலிருந்து கடைநிலை ஊழியர் வரை தன்னால் முடிந்ததை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்போக்கும் அதில் குற்றவுணர்வு, கூச்சமின்மையும் தளைத்து விட்டன.

நீதித் துறை, சட்டமன்றங்கள், அமைச்சர்கள் கூட இந்த சாபத்திலிருந்து தப்பி விடவில்லை. நாம் எவ்வளவோ முன்னேறி விட்டதாக நம்பினாலும் நேர்மையின்மையை ஒழிக்காவிட்டால் நாம் மூன்றாம்தர குடிமக்களின் நாடாகவே இருப்போம். நம்முடைய மனதில் மகிழ்ச்சியும், வாழ்வில் நிறைவும் என்றைக்கும் கிடைக்காது.

இன்னொரு தளத்தில் சாதி வேறுபாடுகள் நம்மை இழுத்துப் பிடித்து வருகின்றன.

சாதியை தன்னளவில் நிராகரித்து வாழ்ந்து வரும் பலரை நமக்குத் தெரியும். ஆனால் பெரும்பாலான மக்கள், அடிப்படையில் தமது சாதியை மறந்து விடாமலேயே உள்ளனர். திருமண உறவுகள் மட்டுமில்லாமல் தொழிலிலும், சமூக நட்புகளிலும், சாதியையே அடிப்படையாகக் கொண்டு நடப்பதுதான் வழக்கமாக உள்ளது.

நெருங்கிய சொந்தத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தைகள் மரபு முறை கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது என்று அதை கைவிட்டு விட்டோம். சாதிக்குள்ளேயே திருமணம செய்து கொள்வது இந்த சாத்தியத்துக்கு இன்னும் கொஞ்சம் பெரிய வட்டம்தானே. ஆயிரம் ஆண்டுகளாக இப்படி திருமண உறவுகளை குறுகிய வட்டத்துக்குள் நிறுத்தி நம்முடைய மரபணுப் பண்புகளை பலவீனமாக அடித்து வந்துள்ளோம்.

சென்னையில் வாழும் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு லஞ்ச சந்தர்ப்பம், சாலைகளில் போக்கு வரத்துக் காவலர்கள் வாங்கும் கையூட்டு. ஒரு வண்டியை நிறுத்தி விட்டால் ஏதாவது குறை கண்டு பிடித்து வழக்குப் போடுவோம் என்று மிரட்டிப் பணம் வாங்கி விடுவார்கள்.

வரும் வண்டிகள் எல்லாவற்றையும் நிறுத்தி சோதனை செய்யும் சில நேரங்கள் தவிர, வேகமாக போனது, போக்கு வரத்து விதிகளை மீறியது என்று நிறுத்தப்படும் வண்டிகளைக் கூட எல்லா விதமான சோதனைகளுக்கும் உட்படுத்தி பயமுறுத்தி லஞ்சம் கொடுக்கச் செய்கிறார்கள்.

இதை ஒழிக்க மும்முனைகளில் செயல்பட வேண்டும்.
1. அரசு மோட்டார் வாகனச் சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். சாதாரணமாக கடைப்பிடிக்க முடியாத விதிகளை நீக்கி, சட்டத்துக்குட்பட்டு நடக்கு விரும்பும் குடிமக்களுக்கு வசதியாக சட்டம் மாற்றப்பட வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் வண்டிகளுக்கு ஆண்டு தோறும் சாலை வரி கட்டி ஒரு வில்லையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த வில்லை இல்லையென்றாலோ, அல்லது காலவதி ஆகியிருந்தாலோ வண்டி ஓட்டுபவர் சட்டத்தை மீறியவராகிறார். இனிமேல் வண்டி வாங்கும் போதே ஆயுட்கால வரி கட்டி விட வேண்டும் என்று கொண்டு வந்த பிறகு அந்த சட்ட மீறல் மறைந்து விட்டது.

இன்றைக்கு பெரும்பாலான சட்ட மீறல்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமை, வண்டிக்கான பதிவுச் சான்றிதழ் இல்லாமை, ஆண்டு தோறும் புதிப்பிக்கப்பட வேண்டிய காப்பீடு இல்லாமை அல்லது காலாவதி ஆகியிருத்தல்.

இதில் சாலையில் ஓட்டும் ஒரு சாதாரண குடிமகனுக்கு வசதியில்லாத விதிகளை நீக்க வேண்டும் அல்லது மாற்றி அமைக்க வேண்டும். வாகனப் பதிவு சான்றிதழ் விபரங்களை நாடு முழுவதும் கணினி மயமாக்கி வண்டியின் எண்ணை உள்ளிட்டு அதன் உரிமையாளர் பற்றிய விபரங்களைதெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நகர அளவில் செய்து விட்டால் கூட பெருமளவு தொந்தரவு குறைந்து விடும். வண்டி ஓட்டுபவர் எந்த ஆவணத்தையும் வைத்திருக்கா விட்டாலும், பாதுகாப்பு, குற்றத் தடுப்புக்காக நிறுத்தப்படும் வண்டி எண்ணைக் கொண்டே அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வகை செய்து விட்டால், கடைநிலை காவலரின் அதிகாரத்துக்கு வரம்பு ஏற்பட்டு விடும்.

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தின் பேரில் தண்டம் விதித்து, அதை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். சாலையில் வண்டி ஓட்டுபவர் மிகப் பெரிய குற்றம் செய்திருந்தால் ஒழிய நீதி மன்றத்துக்கோ, அல்லது தெருவோர நடமாடும் நீதி மன்றத்துக்கோ போய் பணம் கட்டும் முறை முற்றிலும் ஒழிக்க்ப்பட்டு விட்டால், யாரையும் மிரட்டி நாலு காசு பார்க்கலாம் என்ற வாய்ப்பு குறைந்து விடும்.

2. நாம் கொடுத்தால்தானே அவர்கள் வாங்குவார்கள் என்று உயிரே போனாலும் லஞ்சம் கொடுக்க மாட்டேன், தவறு செய்திருந்தால் தண்டனையை சட்டப்படி அனுபவித்துக் கொள்வேன் என்ற உறுதி கொள்பவர்கள் வேண்டும்.

3. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார்கள். காவல் துறையில் நேர்மையையும், சேவை உணர்ச்சியையும் வளர்க்கும் வண்ணம் பயிற்சிகள் அழிக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் செயல்பாட்டு மதிப்பீடுகளில் அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்களின் சேவை உணர்வின் அளவுக்கு பெரும்பங்கு அளிக்க வேண்டும்.

சனி, ஜூலை 01, 2006

இட ஒதுக்கீடு - ஒரு புதிய அணுகுமுறை

சதீஷ் தேஷ்பாண்டே என்ற சமூக அறிவியிலாளரும், யேகேஷ் யாதவ் என்ற புள்ளி விபர வல்லுநரும் தயாரித்துள்ள இட ஒதுக்கீட்டுக்கு மாற்றான அணுகுமுறையைப் படித்தேன்். சாதி என்ற ஒரே காரணியை மற்றும் நம்பாமல், அதற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுத்து கூடவே பெற்றோரின் கல்வி/வேலை பின்னணி, படித்த பள்ளியின் தரம், வாழும் பகுதியின் நிலைமை, ஆணா பெண்ணா என்ற கேள்வி அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மே 22, 23 தேதி இந்து நாளிதழில் இரண்டு பகுதியாக வெளியாகிய இந்தக் கட்டுரை முதலில் பிற்படுத்தப்பட்ட, வாய்ப்புகள் குறைந்த பகுதியினருக்கு உதவி செய்ய வேண்டியதன் தேவையை அலசியது. இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு பின் தங்கச் செய்யும் காரணிக்கும் மதிப்பெண்களைக் கொடுக்கும் முறையை விளக்குகிறார்கள்.

தாழ்த்தப்படோருக்கு ஒதுக்கப்பட்ட 22% தவிர்த்து எஞ்சியிருக்கும் 78% இடங்களுக்குப் போட்டியிடும் மாணவர்கள் அவர்கள் தேர்வில் எடுத்த மதிப்பெண்களோடு (80%), கூடுதல் காரணிகளுக்கான மதிப்பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு இடங்களை ஒதுக்கலாம். அதாவது இப்போது கணக்கு (100), இயற்பியல் (50), வேதியல் (50), நுழைவுத்தேர்வு (50) என்று இருப்பதுடன் சமூகக் காரணிகளுக்கான மதிப்பெண்கள் 50 சேர்த்து 300க்கு தரப்பட்டியல் தயாரிக்கலாம்.

முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெரிய நகரத்தில் வசித்து, ஆங்கில ஊடகப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஒரு மருத்துவர் தந்தை/ஆசிரியர் தாயின் மகனுக்கு சமூகக் காரணி மதிப்பெண்கள் எதுவும் கிடைக்காது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறிய கிராமத்தில் படித்து, அரசு பள்ளியில் இறுதி வகுப்புகளை முடித்த விவசாயக் குடும்பத்தின் மகளுக்கு 50 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு, அவரது தர வரிசையை அவருக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு ஈடு செய்து மாற்றி அமைக்கலாம்.

மற்றவர்களுக்கு எவ்வளவு பின் தங்கும் காரணிகள் உள்ளனவோ, அதற்கேற்றவாறு சமூக மதிப்பெண்கள் கிடைக்கும்.

இதில் என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் வரும். இதை இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவரும், ஆதரிப்பவரும் ஏற்றுக் கொள்வார்களா?

தமிழரும் நாகரீகமும (பொதுவுடமை)

முதலில் வட நாட்டில் வேலைக்கு போன போது, பின்னர் இங்கிலாந்தின் பழக்க வழக்கங்களைப் பார்த்த போது, சீனாவில் வேலை நெறிகளைப் பார்த்த போது தமிழகத்தின் அடக்கம், தன்னை உயர்த்திச் சொல்லாமை, வாழ்க்கையில் அடுத்தவரைப் பின் தள்ளிப் போய் விட வேண்டும் என்ற உந்துதல் இல்லாமை என்பதெல்லாம் அவமானமாகப் பட்டன. தமிழகத்தின் ஒரே குறை தம்முடைய சிறப்புகளை உலகம் அறியச் சொல்லாமல் இருப்பதுதான் என்று இந்தியா டுடே பத்திரிகை நடத்திய ஒரு கருத்தரங்கில் பேச்சாளர்கள் ஒரு மனதாக சொன்னார்கள்.

அடுத்தவர்களைப் பார்த்துக் கொள்வது. அடுத்தவர் மனம் நோகக் கூடாது என்று அவதானம் நமது மிகப் பெரிய சொத்து. அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமா அல்லது இன்றைய அமெரிக்க கலாச்சாரத்திற்கு ஏற்றபடி அதை ஒழித்துக் கட்டி விட வேண்டுமா என்பது நம் கையில் உள்ளது.

தமிழகம் இந்து மதத்தின் பல சிறப்புகளின் தொட்டில். பெரியவர்களுக்கு மரியாதை, அடாவடி இல்லாத பேச்சு, தன்னடக்கம், சுயநலமின்மை என்பவைதான் உயர் குணங்கள் என்று இன்றும் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லீம் ஆட்சியாளர்கள், ஆங்கிலத் தலைவர்களின் கீழ் வட இந்திய தன் இயல்பை விட்டுக் கொடுத்து விட பாதிப்புகளைத் தவிர்த்து நம் கலாச்சாரத்தின் அடிப்படைப் பண்புகளைத் தக்க வைத்துள்ளோம் நாம். வட ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் முஸ்லீம் தோல் தொழிற்ச்சாலைகளில் பணியாளர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை ஒரு சமயப் பணியாகவே செய்கிறார்கள். வந்த விருந்தினருக்கு பானமோ, உணவோ கொடுக்காமல் இருப்பது மேல் அதிகாரிகளின் கடும் கண்டனத்தை வரவழைக்கும் என்று தெரிந்து கொண்டேன்.

வணிக நோக்கில் பார்த்தால் நிறுவனத்திலேயே உணவு சமைத்துக் கொடுப்பதில் உள்ள சிக்கல்கள், ஊழலுக்கான சாத்தியங்கள் இவற்றை முன்னிட்டு ஒவ்வொருவருக்கும் அதற்கான காசை கையில் கொடுத்து உன் பாட்டை நீ பார்த்துக் கொள் என்று சொல்வதுதான் லாபம் தரும். டாடா நிறுவனத்தில் நான் வேலை பார்க்கும் போது அப்படி நடக்கவும் செய்தது.

எல்லாவற்றையும் ரூபாய் கணக்கில் வடித்து விடாமல் நாம் இன்றும் இயங்குகிறோம். அந்த அடிப்படைதான், எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்ட தமிழகத்துக்குத் தகுதியைக் கொடுக்கிறது.

மதுக்கடை திறந்து அதன் விற்பனை வரியில் வருமானம் ஈட்டுவதுதான் அரசாங்கத்தின் பொருளாதாரத் திறமை. அந்த வருமானத்தை இழந்தாலும் பரவாயில்லை உழைப்பாளிகளின் உழைப்பை உறிஞ்சும் ஒரு பழக்கத்தின் மூலம் என் அரசு பணம் சம்பாதிக்கக் கூடாது என்று ஒரு முதலமைச்சர் முன் வந்தால் அது தார்மீக தலைமை.

குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் செலவளிப்பது பொருளாதார முட்டாள்தனம் என்பது சந்தைப் பொருளாதரத்தின் அலசல் முடிவு. பரவாயில்லை, எதிர்கால குடிமக்களுக்கு சத்தான உணவு கொடுப்பதால் நான் கோமாளி என்று ஆனாலும் பரவாயில்லை என்று உயர்ந்தது ஒரு தலைவனின் பெருமை.

வாசலில் வந்து நிற்கும் அதிகாரப் பிச்சைக்காரனை நம்ப முடியவில்லை. ஆந்திராவுக்கு வேலை செய்யப் போனேன். லாரியில் சேலத்துக்கு ஊர் திரும்பும் வழியில் சண்டை வந்து வழியிலேயே இறக்கி விட்டு விட்டான் என்று கதை சொல்லும் குண்டான அழுக்கான முண்டாசு கட்டிய, கிழிந்த சட்டை போட்ட ஆளுக்குக் காசு கொடுப்பது எதில் சேரும்? ஏமாற்றுப் பேர்வழி என்று ஒதுக்கி விட்டுப் போய் விடலாமா? கையில் இருக்கும் சில்லறையைக் கொடுக்க வேண்டுமா?

உங்கள் பொருட்களில் கடந்த ஆறு மாதங்களாக பயன்படுத்தாதவற்றை தானம் செய்து விடுங்கள் என்று எழுதியுள்ளார் குமுதம் சாமியார். எத்தனை அடைசல்கள் வெளியே வரும். நமக்குப் பயன் இல்லாமல் கிடக்கும் பொருட்கள் யாரோ ஒருவரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்து விடலாம்.

நம்முடைய வேர்களை சரிவரப் பராமரித்து வந்தால் மேனாட்டு நாகரீகத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல் இருந்தால் எல்லோரின் வாழ்வும் சிறக்க கண்டிப்பாக வழி உள்ளது.