பாலபாரதியைத் தொடர்ந்து
பாதி வழியிலேயே சாப்பாட்டுக்கு ஏதாவது வழி உண்டா என்று கேட்டால் அருள் ஒரு பிஸ்கட் குளிர்பானம் விற்கும் கடை அருகில் நிறுத்தி 'என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்' என்று சொல்லி விட்டார். அங்கு ஒரு ஸ்லைஸ் பாட்டிலை வாங்கி பியர் குடிப்பது போல எல்லோருக்கும் வினியோகித்துக் கொண்டார் ஜெய்சங்கர். இதற்குள் ஒரு பைக் மிக முன்னாலும், இன்னொன்று மிகப் பின் தங்கியும் ஓடிக் கொண்டிருந்தன.
"சரி, ஒரு வழியாக மாமல்லபுரம் போய்ச் சேர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்று முடிவு செய்து கொண்டோம். வீரமணியின் பைக்குக்கு ஈடு கொடுத்து நானும் அதே வேகத்தில் ஓட்டிக் கொண்டு போய் அந்த வண்டியின் பின் இருக்கையில் வந்த பாலபாரதியுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை நடத்திக் கொண்டு வந்தேன். மாமல்லபுரம் நெருங்கியதும், வீரமணியின் பைக்கு விர்ரென்று பாய்ந்தது. இது வரை இல்லாத வேகம் எல்லாம் காட்டி உணவு கிடைக்கும் இடத்தை நோக்கி புதிய உந்தலுடன் போனது போல இருந்தது.
வரியெல்லாம் செலுத்தி விட்டு (உபயம்: அருள்) ஊருக்குள் நுழைந்து கொஞ்ச தூரம் போனதும் கண்ணில் ஒரு சாப்பாட்டுக் கடை தென்பட்டது. 'உயர்தர சைவ உணவகம்' என்று போட்டு 'ஆனந்த பவன்' அல்லது வேறு ஏதோ பெயரைப் பார்த்ததுமே, "நிறைய கூட்டமாக இருகிறதே" என்று அதை ஒதுக்கி விட்டு முன்னோக்கிப் புறப்பட்டோம். பேருந்து நிலையம் அருகில் ஒரு செட்டிநாடு ஓட்டல் என்று அருகில் நின்றோம். "இவ்வளவு தூரம் பைக்கில் வந்து விட்டு பேருந்தில் வந்த மக்களைப் போல பேருந்து நிலையத்துக்கு அருகில் சாப்பிடுவதா" என்ற தன்மானத்தில் மேலே செல்வோம் என்று போக ஆரம்பித்தோம்.
"ஆளுக்கு ஆள் முடிவு செய்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. ஜெய்சங்கர் எங்கு போய் நிறுத்துகிறாரோ அங்கு சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்று ஏக மனதாக முடிவு செய்து கொண்டு ஓடிய வண்டிகள், கடற்கரைக் கோயிலுக்குப் போகு பாதையில் திரும்பி, நின்ற இடத்தைப் பார்த்தால் பொதுக் கழிவறைதான் இருந்தது. அருகிலேயே போகும் சந்துக்குள் 'கடலில் கிடைக்கும் உணவு கிடைக்கும்' என்று ஒரு பலகை அம்புக்குறி காட்டியது.
"எதுக்கும் ரிஸ்க் எடுக்க வேண்டாம்" என்று நான்கு வண்டிகளையும் யூ அடிக்கச் செய்து அந்தச் சைவ உணவகத்துக்கே போய் விடலாம் என்று அருள் வழி காட்டினார். அந்த அபாய இடத்துக்கு முன்னாலேயே கண்ணாடி எல்லாம் போட்ட சைவ/அசைவ சாப்பாடுகளுக்கு விலை போட்ட சாப்பாட்டு விடுதிக்கு அருகிலேயே வண்டிகள் மேலே போக மறுத்து நின்று விட்டன.
எல்லோரும் போய்க் கதவைத் தள்ளியதுமே, உள்ளே இருந்தவர் "இடம் எல்லாம் இல்லை, வெளியே இருங்க" என்று முறைப்பாகச் சொல்லி விட்டார். ஒரு இடைவெளி விட்டு "கொஞ்ச நேரம் காத்திருந்தா சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்று அன்பாகவும் கேட்டுக் கொள்ளவே அவரது அன்பைத் தட்ட முடியாமல் வெளி முற்றத்திலேயே கிடந்த நாற்காலிகளையும், முக்காலிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு எட்டு பேரும் அமர்ந்தோம்.
காலையில் சாப்பிட்டவர்கள், சாப்பிடாதவர்கள் எல்லோருக்குமே பசியில் கண்கள் பஞ்சடைத்திருந்தன. வழியெங்கும் பார்த்து வந்து இயற்கைக் காட்சிகள் இப்போது கண் முன்னால் வந்து நின்றாலும் தெரியாத படி கண் அடைத்திருந்தன. வேறு யாரும் சாப்பாட்டுக்கு வந்து விடாதபடி கூட்டம் காண்பிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டோம். அதையும் மீறி ஓரிரு குடும்பங்கள் உள்ளே போக, வெளியே காத்திருக்க ஆரம்பித்தன.
சிங் ஜெயகுமார் அவசரமாகப் போய் குங்குமம் பத்திரிகை வாங்கிக் கொண்டு வந்தார். வலைப்பதிவு நண்பர்களின் படைப்புகளைப் பார்க்க ஒவ்வொருவருக்கும் ஆர்வம். அந்த ஆர்வத்தை எல்லாம், எல்லாவற்றுக்கும் மூலகர்த்தாவான பாலபாரதி புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கொற்றம் ஓங்குக.
கதவு திறந்து ஒரு பெரிய கூட்டம் ஒவ்வொன்றாக வெளியேறியது. நம்ம இடம் தயார் என்று உள்ளே போய்ப் பார்த்தால் இன்னும் சாப்பிடா மேசை தூய்மை செய்திருக்கப்படவில்லை. இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று எல்லோரும் ஆளுக்கொரு இருக்கையாக அந்த முழு நீள மேசையை ஆக்கிரமித்தோம். மேசையெங்கும் எலும்புத் துண்டுகள் கிடந்தாலும், நமக்கும் நல்ல காலம் அவரும் என்று பொறுமையோடு காத்திருந்தோம்.
அப்போது அந்த மேசைக்கான பணியாளர் வந்து "இப்படி இருந்து விட்டா எப்படி கிளீன் செய்வது, எழுந்து வெளியே நில்லுங்க, ஒன்றிரண்டு பேர் மட்டும் வேண்ணா இடம் பிடிக்க உள்ளே இருங்க" என்று அர்ச்சிக்க கொஞ்சம் சூடு சுரணை இருந்த நாங்கள் எழுந்து நின்றோம். வெளியே போக மனமில்லாமல் அங்கேயே நகர்ந்து நடந்து சமாளித்துக் கொண்டோம்.
ஒரு வழியாக மேசை தூய்மையாகி உணவு சொல்லும் நேரம் வந்தது. ஆறு பேர் சைவ உணவும், ஒருவர் அசைவ உணவும் சொல்லி விட பால பாரதி தோசைதான் வேண்டும் என்று அடம் பிடித்தார். 'இது டிரைவ் இன் உட்லண்ட்ஸ் இல்லையே', தோசையோ போண்டாவோ இல்லை என்று சொல்லி விட அவரும் சாப்பாட்டுக்கு ஒப்புக் கொண்டார். பலரின் எதிர்கால வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் காப்பாற்ற யார் யார் அசைவம் யார் யார் சைவம் சாப்பிட்டார்கள் என்பதை வெளிப்படுத்தவில்லை.
ஒவ்வொரு தட்டாக சைவ உணவு வர வர கடைசியில் இரண்டு அசைவ உணவுத் தட்டுகளும் வந்து சேர்ந்தன. தொட்டுக் கொள்ள பக்க தாளமாக கோழி இறைச்சி 65 என்று ஒரு தட்டு வந்து அதுவும் ஒரு சுற்று போனது. பால பாரதி தன் தட்டை இழுத்து சாப்பாட்டில் கை வைக்கும் போது மூக்கு வேர்த்து, சென்னையின் காலில் கூடுதல் மிதி மிதிக்க வந்திருந்த பொன்மகளின் தொலை பேசி அழைப்பு.
அதிக சத்தம் காட்டாமல் கிடைத்ததைச் சாப்பிட்டு விட்டு எழுந்து, யாரோ (யார் அந்த யாரோ?) ஒருவர் காசு கொடுத்து விட அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு வெளியே வந்தோம்.
தொடர்ச்சிக்கு சிங். செயகுமாரைப் படியுங்கள்
14 கருத்துகள்:
//சென்னையின் காலில் கூடுதல் மிதி மிதிக்க வந்திருந்த பொன்மகளின் //
சிவகுமார், நீங்களுமா?!! அருளோட சேரும் போதே நினைச்சேன்.. இப்படி ஆரம்பிச்சிட்டீங்களே.. !!! :))
நல்ல ரிலே தொடர். நான் படிச்சவரை ஆறோட நிக்குது.
புகைப்படங்களில் நம்ம ஊரைக் காட்டியதற்குப் பிரத்தியேக நன்றிகள்.
சென்னையிலிருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் புகைப்படங்களுக்கென்று ஒரு கூட்டு வலைப்பதிவு வைத்து, என்னை மாதிரி ஆட்களை அப்பப்ப காதில் புகை வருமாறு செய்யலாமில்லையா? என்ன சொல்றீங்க? நினைச்சா, சென்னைக்கென்றே ஒரு தனிப்பதிவுகூடத் தொடங்கலாம். ;)
புகைப்படங்களில் இருப்பவர்களில் ஓரிருவரை அடையாளம் காண முடிகிறது. கொஞ்சம் பெயர் போட்டிருக்கலாமே.
சுவாரசியமான அனுபவம் - எங்களுக்கும்.
//சென்னையின் காலில் கூடுதல் மிதி மிதிக்க வந்திருந்த பொன்மகளின் //
:))
என் மானம் காத்த அண்ணன் சிவா...
வாழ்க... எல்ல பயல்களும் என்னைய கவுத்தீட்டாய்ங்க...
படங்கள் அருமை
அப்ப பொன்ஸ் பேசுனாங்களா
கூட்டா குங்குமம் வாசிச்சு சந்தோஷப்பட்டீங்களா
//சிவகுமார், நீங்களுமா?!!
நான் அப்பாவிங்க! சொந்தமா எதுவும் வராது. நீங்க சொன்னதைத்தான்திரும்பச் சொன்னேன் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
//நல்ல ரிலே தொடர். நான் படிச்சவரை ஆறோட நிக்குது.
நன்றி மதி,
//நினைச்சா, சென்னைக்கென்றே ஒரு தனிப்பதிவுகூடத் தொடங்கலாம்
அருள் மனம் வைத்தால் அது கூட நடந்து விடும். அரை மனது கால் மனது எல்லாவற்றையும் இழுத்துக் கட்டிக் கூட்டிச் சென்றவர் அவர்தான். மாமல்லபுரத்திலும், எல்லா இடத்திற்கும் கூட்டிச் சென்று வழி நடத்தினார்.
அன்புடன்,
மா சிவகுமார்
பாலா,
எவ்வளவு தலைவன், அண்ணன் போட்டீங்க, அந்த நன்றி மறப்போமா! :-)
அன்புடன்,
மா சிவகுமார்
வாங்க மதுமிதா,
நல்ல அனுபவம் அந்த நாள் முழுவதும். கடைசியில் மழை மட்டும் கொஞ்சம் கவிழ்த்து விட்டது.
அன்புடன்,
மா சிவகுமார்
//நினைச்சா, சென்னைக்கென்றே ஒரு தனிப்பதிவுகூடத் தொடங்கலாம் // உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது சிவகுமார். எல்லோரும் மனது வைத்தால் விரைவில் தொடங்கிவிடலாம்.
எனக்கு ஏனோ சென்னையை மிகப்பிடித்துவிட்டது. சென்னையை அதன் குறைகளுடன் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
வெறும் வேலை விஷயமாக சென்னைக்கு இரண்டு நாட்க்கள் வந்து திரும்பும் நண்பர்கள், 'எப்படிதான் இந்த ஊர்ல இருக்கீங்களோ" என்னும்போது எப்படி இவர்களுக்கு சொல்லிப்புரியவைப்பது என்றிருக்கும். 'வந்தவேலையை மட்டும் பாக்க அலைஞ்சா சென்னை மட்டுமல்ல எல்லா ஊரும் அப்படித்தான் இருக்கும்' என்று மட்டும் சொல்லிவைப்பேன்.
உண்மையான சென்னையை அதன் நிறை குறைகளுடன் பதிவுசெய்ய ஆசை. நீங்களும் உதவுங்கள். ஒரு பதிவு ஆரம்பித்துவிடலாம் :)
//கடைசியில் மழை மட்டும் கொஞ்சம் கவிழ்த்து விட்டது. //
எனக்கு அதுவும் நல்ல அனுபவம் சிவகுமார். ரொம்ப நாளுக்கு அப்புறம் மழையில் நனைந்தபடி பயணித்த அனுபவம் சுகமானது.
வணக்கம் அருள்,
//நீங்களும் உதவுங்கள். ஒரு பதிவு ஆரம்பித்துவிடலாம் :)
என்னுடைய பங்கு எப்போதும் உண்டு, ஆரம்பியுங்கள், என்னையும் சேர்த்து விடுங்கள். சென்னையை நம்முடைய கோணத்தில் உலகுக்குக் காட்ட ஆரம்பிக்கலாம்.
//ரொம்ப நாளுக்கு அப்புறம் மழையில் நனைந்தபடி பயணித்த அனுபவம் சுகமானது.
அதான், சொன்னேனே. வயிறு காஞ்சு உடம்பு நடுங்கலைன்னா நல்லாத்தான் இருக்கும் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
சிவா சார் நல்லா எழுதியிருக்கிங்க.....
வீரமணி
நன்றி வீரமணி,
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக