சனி, ஏப்ரல் 22, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 3

முசுலீம்கள், தலித்துகள், இந்துக்கள், பொதுவுடமைக் கட்சியினர் ஏன் காங்கிரசு கட்சியினர் கூட காந்தியை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்தனர். இந்தியாவுக்கு மக்களாட்சி முறையின் விதையை ஊன்றி அந்தப் பண்பாட்டை அரசியல் கலாச்சாரத்தில் வளர்த்த பெருமை காந்தியையே சேரும்.

அவருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்குக்கு தன் மனதுக்குப்பட்டவற்றை பிற தலைவர்களின் மீது வலுக்கட்டாயமாகத் திணித்திருக்க முடியும். சாதி சம்பந்தமாக அம்பேத்கார் எழுதிய ஒரு மடலில், சாதி ஒழிந்தால்தான் அதன் பேரில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஒழியும் என்று உறுதிபட குறிப்பிடுகிறார். அதற்கான பதிலில், தான் அம்பேத்காரின் கருத்தைப் புரிந்து கொள்வதாகவும், அவர் ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதின் நியாயத்தை ஒத்துக் கொள்வதாகவும், ஆனால் அதனுடன் மாறுபடுவதாகவும் காந்தி எழுதுகிறார். சாதியை ஒழிக்க முனையாமல், அந்த முறையில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை அழித்து விட போராட வேண்டும் என்று, அந்த ஏற்றத் தாழ்வுகள் அழிந்த பிறகு, சாதிமுறை நமக்கு குறைபட்டதாகத் தெரிந்தால் அதையும் ஒழிப்பதைப் பற்றி சிந்த்திக்கலாம் என்பதுதான் தனது கொள்கை என்று எழுதுகிறார்.

இதற்கு தொடர்புடைய ஒரு செய்தி. போரூரில் ஒரு தட்டி வைத்துள்ளார்கள், அதில் அம்பேத்காரின் ஒரு மேற்கோள் எழுதப்பட்டுள்ளது.

"சாதிதான் சமூகம் என்றால், காற்றில் விஷ விதைகள் பரவட்டும்"

இது காந்தியின் கொள்கைக்கு அம்பேத்காரின் பதிலடியாக இருக்குமோ?

2 கருத்துகள்:

KaruppuSwamy Thangaraj சொன்னது…

சிவகுமார்,

மிக நன்றாக எழுதுகிறீர்கள்... பாராட்டுக்கள்! காந்திய சிந்தனைகள் இந்த நூற்றாண்டுக்கு ஒத்துவராது என்று பேசுவதே நாகரிகம் என்று கருதும் தலைமுறையில் வாழும் நமக்கு, உங்களின் இந்த கட்டுரைத் தொடர் நிச்சயம் தேவை. "நள்ளிரவில் சுதந்தரம்" என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா? அப்புத்தகம் தொடர்பான என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு பயன்படலாம்.

http://booksread.wordpress.com/2004/11/12

மா சிவகுமார் சொன்னது…

வாங்க கருப்புசாமி,

உங்கள் பதிவைப் படித்தேன். நன்கு எழுதியுள்ளீர்கள். நான் ஆங்கில மூல நூலை பல ஆண்டுகளுக்கு முன்பு படிக்க ஆரம்பித்து, விட்டு விட்டேன். நீங்கள் எழுதியுள்ளதைப் படித்த பிறகு ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்க ஆவல் தோன்றுகிறது. முதல் வாய்ப்பில் வாங்கிப் படிக்க வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்