சனி, ஏப்ரல் 29, 2006

டாடாவில் ஆறு ஆண்டுகள் - 1

தோல் தொழில் நுட்பம் படிக்க சேர்ந்தது முதல் வேலை கிடைக்குமா, எதிர்காலம் என்ன ஆகும் என்று கடுப்பேத்திக் கொண்டிருந்தவர் சுனில் என்ற ஒரு வருட மூத்த மாணவர். கடைசி வருடம் வரும் போது டாடா நிறுவனத்தின் தோல் பிரிவில் எப்படியாவது வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். டாடா நிறுவனத்தின் வளாக நேர்முக அறிவிப்பு வந்ததும் தவறாமல் என் பெயரைக் கொடுத்து விட்டேன்.

நேர்முக நாளும் வந்தது. என்னுடைய வழக்கமான ரப்பர் செருப்பு, பேன்டில் சொருகப்படாத அரைக்கைச் சட்டையுடன் நானும் மற்ற மாணவர்களுடன் காத்திருக்க ஆரம்பித்தேன். சரக்கு மூளையில் இருகிறது, உடையில் மிடுக்கு காட்டுவது எல்லாம் எதற்கு என்பது நம்ம எண்ணம்.

முதலில் ஒரு பலியாடு வந்தது.

"என்னடா, என்ன ஆச்சு, என்ன கேட்டாங்க,"

"போடா புக் எல்லாம் வச்சுக்கிட்டு கெமிஸ்ட்ரி கேள்வியா கேக்கிறார்டா!" என்று கடுப்பாக சொன்னான்.

அடுத்து போய் விட்டு வந்தது இன்னும் கொஞ்சம் தெம்பான பார்ட்டி. முகம் இருண்டு கிடந்தது.

"டேய், எக்ஸாம்ல் சாய்ஸ்ல விட்டத எல்லாம கேக்கறாங்கடா, யாரையும் எடுக்கப் போறதில்ல போல" என்று இறுக்கமாகச் சொல்லி விட்டு போய் விட்டான்.

'இந்த பசங்க எல்லாம் அலட்டிக்கிறானுங்க, ஒழுங்கா படிக்கிறது கிடையாது, நம்ம போய் ஒரு கலக்கு கலக்கிடலாம்' என்று நினைத்துக் கொண்டு நிமிர்த்திக் கொண்டு கான்ஃபரன்சு ரூமுக்குள் நுழைந்தேன். செக்கச் செவேல் என்று ஹீரோ மாதிரி ஒருவர்
நடு இருக்கையில் அமர்ந்திருக்க அவருக்கு இடது புறம் சாதுல்லா, எங்கள் துறைத் தலைவர் இருந்தார்.

"கம் சிவகுமார், திஸ் இஸ் மிஸ்டர் ஓ கே கௌல் டாடா வைஸ் பிரசிடன்டு, ஹி இஸ் அல்சோ அவர் காலேஜ் அலும்னி." இது சாதுல்லா.

ஒகே மிஸ்டர் சிவகுமார் என்று ஆரம்பித்தார் கௌல் . அப்புறம் ஆரம்பித்தது அந்த சீனத் தண்ணீர் சித்தரவதை. மனுசன் கையில் ஒரு கத்தை காகிதங்கள் வைத்துக் கொண்டு அதில் எழுதியிருக்கும் கேள்விகள் எல்லாம் கேட்கிறார். கொலஜனில் உள்ள அமினோ ஆசிட்டுகள் என்ன? போன மாத அமெரிகன் தோல் வேதியாளர் ஆய்வுப் பத்திரிகையில் முக்கியக் கட்டுரையின் தலைப்பு என்ன? செட்டிங் இயந்திரத்துக்கும், ஷேவிங் இயந்திரத்துக்கும் என்ன வேறுபாடு என்று கேள்விகள் வந்து விழ தலை கால் தெரியவில்லை. தட்டுத் தடுமாறி சில பதில்கள் வாயிலிருந்து தப்பின. ஆங்கிலத்திலேயே பேச வேண்டிய தடுமாற்றம் வேறு.

"என்ன இதெல்லாம், நீங்க எல்லாம் படிப்பதே இல்லையா! இவ்வளவு நல்ல லைப்ரரி இருக்கிறது. இனி மீதமிருக்கும் மூன்று மாதங்களிலாவது ஒழுங்காக வசதிகளைப் பயன்படுத்தப் பாரு" என்று அறிவுரை வேறு. எல்லாமே ஆங்கிலத்தில்தான். இதற்கிடையில் கொஞ்சம் சினிமா நகைச்சுவை நடிகர் போல இருந்த ஒருவர் கௌலின் வலது புற இருக்கையில் இருந்து கொண்டார். அவர்தான் மனித வளப் பிரிவுத் தலைவர் டி கே ஸ்ரீவஸ்தவா என்று பின்னர் தெரிந்தது.

அந்த மனிதர் வேறு இடைஇடையிடையே நானும் இருக்கிறேன் என்று நோண்டி வெறுப்பேற்றினார். கௌல் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஒரு வழியாக நேர்முகம் முடிந்து உடைந்த மனதுடன் வெளியே வந்தேன். என்னுடைய ஜோல்னா பை (என்னுடைய இன்னொரு முத்திரை), மாட்டிக் கொண்டு யாருடனும் பேசாமல் வெளியே வந்து விட்டேன்.

"டேய் சிவா என்னடா செய்யப் போற, உனக்கு கிடைச்சுடுமா" என்று அனுதாப நண்பர்கள் ஒவ்வொருவராக மரத்தடிக்கு வந்து விட்டனர். நேர்முகத்தில் கலந்து கொண்ட எல்லோரும் கோபமாக இருந்தோம். "டேய் இவங்க யாரையும் எடுக்கப் போவதில்லை. சும்மா கண் துடைப்புக்கு இண்டர்வியூ வச்சிருக்காங்க அதான் இப்படி நோகடிச்சிருக்காங்க" என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி விட்டு மனதை ஆற்றிக் கொண்டு கிளம்பினோம்.

தாம்பரத்துக்கு போகும் பேருந்தில் கண்டதெல்லாம் இருண்டதாகத் தெரிந்தது. டாடாவில் சேரா விட்டால் என்ன என்பதை நினைத்துக் கூடப் பார்க்காததால் ஏமாற்றம் மிகப் பாரமாக மனதில் அழுத்தியிருந்தது. வீட்டுக்கு வந்து அக்காவிடம் நடந்ததை எல்லாம் சொன்னேன். "கவலப்படாத, இது இல்லைன்னா நிறைய கம்பெனி, இவங்க கூட ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ மாதிரி பண்ணியிருக்கலாம். உன்னை எடுத்தாலும் எடுத்து விடுவார்கள்" சொன்னாள்.

அடுத்த வாரம், டாடா தேர்ந்தெடுத்த பட்டியல் வந்தே விட்டது. அக்கா சொன்னது நடந்தே விட்டது. சிவகுமார், வேதநாரயணன், சுந்தர், அருண்குமார் என்று நான்கு பெயர்கள் அறிவுப்பு பலகையில் மிளிர்ந்தன. சுந்தரும், அருண்குமாரும் குண்டு பார்ட்டிகள், நானும் வேதநாரயணனும் ஒல்லிப் பிச்சான்கள். சுந்தரும், வேதநாரயணனும் சென்னை வாழ் மாநகர மாணவர்கள். நான் நாகர்கோவில் சிவகுமார், அருண்குமார் கடலூர் காரன். எல்லோருக்கும் பொதுவானது எல்லாருமே பழங்கள். கல்லூரியில் அப்பாவியாக கடவுளுக்குப் பயந்து நல்ல வாழ்க்கை வாழும் பசங்களுக்குச் செல்ல பெயர் பழம். கௌல் ஒரே மாதிரியாத்தான் பிடித்திருக்கிறார்.

ஜனவரியில் இது நடந்து மே வரை வேறு எந்த தகவலும் இல்லை. நாங்களே முடிவு செய்து ஜூன் மாதக் கடைசி வாரம் சேர்வதாக தேவாஸ் முகவரிக்கு தந்தி அடித்து விட்டோம். அதற்கும் எந்தவிதமான பதில் இல்லை. நமக்கு வேலை உண்டா அல்லது நம்மை எல்லாம் மறந்தே போய் விட்டார்களா என்று ஒரே பயம். பயத்தை ஒருவொருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளாமலேயே, அகில்யாநகரி எக்ஸ்பிரஸ் என்ற கொச்சின் - இந்தூர் ரயிலில் சென்னை சென்ட்ரலில் இருந்து முன் பதிவு செய்து கொண்டோம்.

ஊருக்கெல்லாம் போய்ச் சொந்தக்காரர்களுக்கெல்லாம் டாடா போகிறேன் என்று தகவல் சொல்லி விட்டு சென்னை வந்தாச்சு. கொச்சியிலிருந்து வந்து இரவு பதினொன்று நாற்பத்தைந்துக்கு கிளம்பிய ரயிலில் கிளம்பி விட்டோம்.

கருத்துகள் இல்லை: