புதன், ஏப்ரல் 19, 2006

வஞ்சகர்களின் ஏமாற்று வேலைகள்

சென்னையில் தாஜ் ஓட்டலுக்கு எதிர் வரிசையில் காதர் நவாஸ்கான் சாலை என்று ஒரு சாலை உள்ளது. அந்த சாலையின் தொடக்கத்தில் இடது பக்கத்தில் ஒரு தள்ளு வண்டியில் சாப்பாடு விற்கும் கடை. வலது பக்கத்தில் குப்பைகள் குவிக்கப்படும் இடம். சற்றே நடந்த பிறகு சாப்பாட்டுக் கடையிலிருந்து ஏப்பம் விட்டால் கேட்டு விடும் தூரத்தில் உள்ளது ஒரு புடவைக்கடை.

அந்தச் சாப்பாட்டுக் கடையில் சாப்பாட்டு விலை 10 ரூபாய்க்கு மேலே இருக்காது. புடவைக்கடையில் புடவைகள் பத்தாயிரம் ரூபாய்களுக்குக் குறைந்து கிடைக்காது. புடவைக்கடைக்குள் நுழையும் பணம் காய்த்த மாந்தருக்கு, அந்த சுகாதாரமற்ற சூழலில் பசியாறி விடப்படும் ஏப்பங்களோ மற்ற எந்த வாயு ஓசைகளோ கேட்டு விடாது.

இருபாதாயிரத்துக்கு சேலை செய்ய பயன்பட்ட முதலீட்டையும், முயற்சிகளையும், தரமான உணவு சாலையோரம் சாப்பிட வந்த மனிதருக்கு கிடக்குமாறு செலவிட முடியாதா?

இந்தியா ஒளிர்கிறது, பங்குச் சந்தைகள் பத்தாயிரத்தை தாண்டி விட்டன என்ற கூக்குரல்களுக்கிடையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு வாங்கித் தொலைக்க வேண்டுமே என்ற சலிப்போடு இல்லாமல் உண்மையான கரிசனத்தோடு தரம் குறைந்த உணவை உண்ணும் குடிமக்களின் நலனைப் பேண விழையும் தலைவன் எங்கே?

குளிர்ச்சியூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு, நுனி நாக்கு ஆங்கிலத்தில் உண்ட உணவு செரிக்கும் முன் மேன்மேலும் வளங்களை வாரி உண்டு கொண்டிருக்கும் - இந்த அழுகிய காய்கறியில், புழுத்த அரிசியில் சமைத்த உணவு எப்படி இருக்கும் என்று கனவிலும் கண்டிராத - தலைவர்களா இந்த குடிமகன்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யப் போகிறார்கள்?

தேர்தல் பிரச்சாரம் செய்யப்போகும் போது கூட, குளிரூட்டப்பட ஊர்தியை விட்டு வெளியே வந்து மக்கள் வாழும் சூட்டை உணர முன் வந்து விடாத எந்த தலைவன் இந்த உழைப்பாளிகளின் வாழ்க்கையை உயர்த்தி விடப் போகிறான்!

ஆட்சிக்கு வந்தால் இரண்டு ரூபாய்க்கு அரிசி, பத்து கிலோ வாங்கினால் 10 கிலோ இலவசம், 15 கிலோ நேரடியாக இலவசம் என்றெல்லாம் உறுதியளிக்கும் தலைவர்களின் வீட்டில் அந்த நியாய விலைக் கடை அரிசியில்தான் சமையல் நடக்கும் என்று உறுதியை எப்போது அளிப்பார்கள்?

இருபத்தைந்து கோடி சொத்துக்களை ஆண்டு வரும் தலைவனா, இருபத்தைந்து ரூபாயில் குடும்பம் நடத்தும் குடிமக்களின் தேவைகளை உணர்ந்து விடப்போகிறான்!

'ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிடச் சொல்லுங்கள்' என்று சொல்லும் விதமாக, முல்லை பெரியார் அணையிலிருந்து வரும் தண்ணீர் பற்றவில்லையென்றால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி தருகிறோம், எமது குடும்பத் தொலைகாட்சி அலை வரிசையின் நிகழ்ச்சிகளை கண்டு களித்து பசி ஆறுங்கள் என்று வாக்குறுதி அளிக்கும் மாட்சி என்னே மாட்சி.

குழந்தைகள் படிக்கத் தரமான பள்ளிக்கூடங்கள் இல்லை என்று கவலைப்பட வேண்டாம், அப்பாமார்களுக்கும் எதிர்காலத்தில் வளர்ந்தவுடன், இந்தக் குழந்தைகளுக்கும், எமது தோழியின் தொழிற்சாலையில் தயாராகும் மதுவை அரசு வினியோகக் கடைகளில் வசதியாக குடித்து மகிழ வசதி செய்துள்ளோமே என்று மார் தட்டும் பரிவு என்ன?

தமிழ் நாட்டில் குடிநீர் வசதி இல்லாத கிராமங்களும் நகரங்களும் ஒழிக்கப்பட்டு விட்டன. வெள்ளை டப்பாக்களில் அடைத்து 25 ரூபாய்க்கு 20 லிட்டர் என்று விற்கப்படும் தண்ணீரை வாங்க முடியாத ஏழை குடிமகனுக்கு பொது வினியோகத்தில் தூய நீர் வழங்க ஏற்பாடு செய்தாயிற்று என்றுதானே இந்த தலைவர்கள் வண்ணத் தொலைக்காட்சியைப் பற்றியும், மது விற்பனையில் வரும் வருவாய் பற்றியும் பீற்றிக் கொள்கிறார்கள்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது, இங்கு மாந்தர் தம்மை எத்திப் பிழைக்கும் வீணர்களை வீழ்த்தும் நாள் ஒன்று வருகுது. நாய்கள் குரைத்து விடாமல் இருக்க அவ்வப்போது பொறை பிசுகோத்துகளை வீசி எறிந்து விட்டு தமது குடும்ப நலனை மட்டும் வளர்த்துக் கொள்ளும் பாதகர்கள் எல்லாம் பதில் சொல்லும் நாள் ஒன்று வருகுது.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Unfortunately this is the pathetic state of our state (country). Only around 50% of the people vote. Most of them who vote are economically backward. So the politicians show them some carrot and reap the votes.

This has to change - but I doubt it.

My wish, our honourable president Dr. Abdul Kalam should govern the country for the next 10 years with the help of Armed Forces. All the corrupt politicians and officials has to be put behind bars (I know that we have to create huge prison complexes to accomodate them!!!)

பெயரில்லா சொன்னது…

Good Writing. I can understand your writing and feel the same pain.

சுதேசன் சொன்னது…

ம்,ம் பார்த்தப்பு எதிர்கட்சி அளுங்களோட திட்டமிட்ட சதி இவ் வலைப்பூ என மாறிமாறி குலைக்கப்போறாங்க.

கவிதா | Kavitha சொன்னது…

புலம்பிக்கொண்டுதான் இருக்க முடிகிறது..என்றைக்கு முடிவு வர போகிறதோ?!!

மா சிவகுமார் சொன்னது…

நாமெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், அந்த சிந்தனையை செயல்படுத்த ஆரம்பித்து விட்டால் விடிவு நிச்சயம் வரும்.

Unknown சொன்னது…

நண்பர் சிவகுமார் அவர்களே!
நம் நாட்டில் முதன் முதலில் திருத்தபடவேண்டியது சட்டம் மட்டுமே. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். ஒரே வாரத்திற்குள் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும். இது நடந்தால் 90 % பிரச்சனைகள் ஆட்டோமாடிக் ஆக சரி ஆகி விடும்.
நூறு பேர் உள்ள கிராமத்தில் ஒரு பணக்காரன் இருந்துகொண்டு மற்ற 99 பேரையும் அடிமை படுத்துவான் & கஷ்டபடுத்துவான். அவன் என்ன தப்பு செய்தாலும், பணத்தால் வழக்கை வென்றுவிடுவான். மற்ற ஏழைகள் கோர்ட் வாசல் படியே ஏற முடியாது.
இதே நிலவரம் தான் நகரத்திலும். நகரத்தில் பணக்காரர்களுக்கு பதிலாக, அரசியல்வாதிகள் ஆளுகிறார்கள்.
இந்தியாவின் கடைசி ஏழை குடிமகனும், நாட்டின் முதல் முதல்வரை எதித்து வழக்கு போடும் நிலைமை வர வேண்டும்.
இப்போது உள்ள நிலைமையில் யாராவது முதல்வரையோ, MLA வையோ எதிர்த்து கேஸ் போட்டால், அன்று இரவே நம் வீட்டை தீயில் கொளுத்தி விடுவார்கள். கோர்ட்டில் தெரியாமல் நடந்த விபத்து என்று கூறிவிடுவார்கள்.
(உதாரணமாக கூறினால், அமெரிக்காவின் முன்னால் அதிபர் கிளிண்டனுக்கு எதிராக ஒரு பாலியல் வழக்கு ரொம்ப நாளாக நடைபெற்றது.) கொஞ்சம் யோசித்து பாருங்கள் நண்பரே, இதே விஷயம் இந்தியாவில் நடந்து இருந்தால், என்ன ஆகி இருக்கும் அந்த பாதிக்க பட்ட பெண்ணிற்கு. ஒரே இரவில் அவள் கதையை முடித்து இருப்பார்கள். நண்பர்களே, உங்கள் கருத்தை கூறவும்.