வியாழன், அக்டோபர் 05, 2006

கைதிகளின் குழப்பம் (economics 26)

முழுமையான போட்டி நிலவும் சந்தையில் தனிப்பட்ட விற்பனையாளர் விலையை மாற்ற முடியாது. போட்டியே இல்லாத ஏகபோக சந்தையில் ஒரே நிறுவனம் தனக்குச் சாதகமான விலையை அமைத்துக் கொள்ளும். தன் நிறுவனக் கணக்குகளை மட்டும் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.

ஒரு சந்தையில் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் என்ன நடக்கும்?

டாட்டா ஸ்டீலின் எஃகுப் பொருட்களின் விலை டன்னுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். போட்டியாளர், விசாக் ஸ்டீலும் அதே விலைக்கு விற்கிறது. இரண்டு பொருட்களின் தரம், பண்புகளில் பெரிய வேறுபாடுகள் இல்லை.

டாட்டா ஸ்டீலுக்கு விலையை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா? டாட்டா ஸ்டீல் விலையை 1200 ரூ ஆக ஏற்றி விட்டால், விசாக் ஸ்டீல் விலையை ஏற்றாமல் அதே 1000 ரூ விலையை வைத்துக் கொள்ளலாம். எல்லோரும் விலை அதிகமான டாட்டா ஸ்டீலை விட்டு விட்டு விசாக் பக்கம் வந்து விடுவார்கள். டாடாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

டாட்டா விலையை 900 ரூ ஆகக் குறைத்தால் தன்னுடைய வாடிக்கையாளர்களை இழக்க மனமில்லாமல் விசாகும் விலையைக் குறைத்து விடும். இரண்டு பேரும் குறைந்த விலையில் விற்று ஆதாயம் குறைவதுதான் மிச்சம்.

இந்த நிலையில் என்ன நடக்கும்?

இரண்டு பேர் சேர்ந்து ஒரு கொள்ளை அடித்து விடுகிறார்கள். காவலர்கள் இரண்டு பேரையும் பிடித்து தனித்தனியாக அடைத்து விடுகிறார்கள்.

ஆய்வாளர் முதலாமவர் ஸ்டீபனிடம் வருகிறார். "நீ மட்டும் குற்றத்தை ஒப்புக் கொண்டால் உன்னை அரசுத் தரப்பு சாட்சியாக ஏற்றுக் கொண்டு ஆறு மாத ஜெயிலோடு விட்டு விடுவோம். உன்னுடைய கூட்டாளி கோபாலனுக்கு இருபது ஆண்டுக்கு குறையாமல் கிடைக்கும்.

நீ ஒப்புக் கொள்ளாமல் அவன் ஒப்புக் கொண்டால் அவனுக்கு ஆறு மாதங்கள், உனக்கு இருபது ஆண்டுகள்."

"சரி, இரண்டு பேருமே ஒப்புக் கொள்ளவில்லை என்றால்? ..."

"ஆளுக்கு இரண்டு ஆண்டுகள் கிடைக்கும். ஆனால் நல்லா பார்த்துக்கோ, நீ வாயை மூடி இருந்து உன் கூட்டாளி உன்னைப் போட்டுக் கொடுத்து விட்டால், உனக்கு இருபது ஆண்டுகளுக்கு ஜெயில் களிதான், அவன் ஆறு மாதங்களில் ஓடி விடுவான்."

"அந்தப் பயல நம்ப முடியாதுதான், சரி, நான் ஒப்புக் கொண்டு அவனும் ஒப்புக் கொண்டால் என்ன ஆகும்"

"இரண்டு பேருக்குமே ஆளுக்கு ஐந்து வருஷம் கிடைக்கும்."

கோபாலனிடமும் இதே மாதிரி இன்னொரு ஆய்வாளர் பேசிக் கொண்டிருக்கிறார் என்றம் ஸ்டீபனுக்குத் தெரிகிறது.

இப்போது ஸ்டீபன் என்ன முடிவெடுப்பான்?

13 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

கூட்டாளி ஒத்துக்கறானோ இல்லையோ நாம ஒத்துக்குவோம்ணுதான் முடிவு எடுப்பான்.

VSK சொன்னது…

இது மாதிரி திருடர்களிடம் ஒரு எழுதாத ஒப்பந்தம் இருக்கும் எனப் படித்திருக்கிறேன்.

இருவரும் பலநாள் கூட்டாளிகள் என்றால் காட்டிக் கொடுப்பது நடக்காது.
தொழிலுக்கு யாரேனும் ஒருவர் புதுசுன்னாலும், ஆபத்துதான்.... அடுத்தவனுக்கு!

கூடவே இதையும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்!
குறிப்பாக குறள் 17 !


http://aaththigam.blogspot.com/2006/10/blog-post.html

பொன்ஸ்~~Poorna சொன்னது…

1. ஸ்டிபனுக்கும் அவனது கூட்டாளிக்கும் இடையிலான நட்பு பல நாள் நட்பாக இருந்தால், நம்பகத் தன்மை இருப்பின், ஸ்டீபன் குற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டான்.

2. சக நம்பிக்கை இல்லாத போதும், ஸ்டீபனுக்கு அந்தக் கூட்டாளியிடம் பேச்சு வார்த்தை நடப்பது தெரியும். அதே போல் அந்தக் கூட்டாளிக்கும் இவ்விதமான பேச்சுவார்த்தை ஸ்டீபனுடன் நடப்பது தெரியவருமா என்பது ஸ்டிபனுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறு அவனுக்கும் தெரிந்திருக்கும் என்று தெரிந்தாலும் ஸ்டீபன் குற்றத்தை ஒப்புக் கொள்ளமாட்டான்.

3. கூட்டாளியின் மீது நம்பிக்கை இல்லாத பட்சத்தில், அத்துடன் கூட்டாளிக்கு ஸ்டீபனுடனான பேச்சுவார்த்தை தெரிய வாய்ப்பில்லை என்று ஸ்டீபன் நம்பும் போதில், குற்றத்தை ஒப்புக் கொண்டுவிடுவான்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

சிவா, இது எவ்விதத்தில் இந்த duopoly நிலைக்குத் தொடர்புடையது?

மா சிவகுமார் சொன்னது…

நாமக்கல் சிபி,

காரணங்களையும் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க எஸ்கே ஐயா,

Game theory என்று ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அலசும் துறையில் வரும் உதாரணம் இது. நீங்கள் சொல்வது போல் ஏற்கனவே இருக்கும் புரிதலைப் பொறுத்து நடத்தை மாறுபடும்.

இன்றைக்கு வான்சிறப்பு அதிகாரத்தில் என் பெயரையும் குறிப்பிட்டு சிறப்பித்ததற்கு நன்றி. இந்த அதிகாரத்தையும் படிக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

நல்ல அலசல்.

பெரும்பாலும் இரண்டு பேரும் புதுக் கூட்டாளிகளாக இருந்தால் nash சமநிலை என்ற இரண்டு பேருமே ஒத்துக் கொள்ளும் நிலைதான் வரும். இல்லையென்றால் வெவ்வேறு ஆரம்ப நிலைகளைப் பொறுத்து முடிவு வேறுபடும்.

//இது எவ்விதத்தில் இந்த duopoly நிலைக்குத் தொடர்புடையது?//

Game theory என்று ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அலசும் துறையில் வரும் உதாரணம் இது. நீங்கள் சொல்வது போல் ஏற்கனவே இருக்கும் புரிதலைப் பொறுத்து நடத்தை மாறுபடும்.

இதே அடிப்படையில் duopoly சூழலில் இருக்கும் நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அடுத்த பதிவில் இன்னும் விபரங்கள். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

பரஸ்பரம் சர்ந்திருத்தலும்
குரல்வளையை நெறிக்கும் போட்டியும்
(mutual inter-dependence &
cutthroat competition) நிலவுவதையே இவ்வாறு விளக்குகின்றார்
உதாரணத்தை விடுங்க;உட்கருத்தை
(உள்குத்து அல்ல) வைத்து வாதிடுங்க

பத்மா அர்விந்த் சொன்னது…

பரஸ்பரம் சார்ந்திருக்கும் நிலையில் இருவரும் சொல்லி வைத்துக்கொண்டு ஒருவிலையை வைத்து பொருளை விற்றுவிட முடியும். அது தெரியாமல் வாடிக்கையாளார்கள்: என் விலையைவிட கீழான விலை யாரேனும் சொன்னால் நான் குறைத்து தருகிரேன்" போன்ற விளம்பரங்களை கண்டு நம்பி ஏஎமாந்து போகின்றனர். இன்னும் சில சமயம் இருவர் மட்டுமே இருக்கும் தொழிலில் வாடிக்கையாளர்களை தம் பக்கம் இழுக்க இருவருமே போட்டி இட்டு கடைசியில் விலையை குறைத்து price war இல் இறங்கவும் முடியும்.
தொலைபேசி போன்ற நிறுவனங்களில் வாடிக்கையாளரை தம் பக்கம் இழுக்க ஆரம்பத்தில் சில ஊக்க பரிசுகல் க்ஒடுத்து அவர்கள் இரண்டு வருடம் மாற முடியாமல் ஒரு ஒப்ப்ந்தத்தில் கையொப்பம் பெற்று பிறகு இலாபம் சம்பாதிப்பது என்பதும் நடக்கும். இது அனைத்தும் எந்த துறை 9industry) என்பதை பொறூத்தும் அரசின் சட்டங்களை பொறுத்தும் நடக்கும். சாதாரணமாக நாஷ் சொன்ன படி இருவருமே தங்களுக்கு ஆதாயம் இருக்கும் கட்டத்தில் (win win) முடிவெடுக்கவே விரும்புவார்கள்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

இந்த game theory விளக்கம் நன்றாக இருக்கிறது சிவகுமார்.. இது போலவே தொடருங்களேன் ஒவ்வொரு விளக்கத்துக்கும்...

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சிவஞானம்ஜி ஐயா.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பத்மா,

இது போல போட்டி நிலவும் சந்தைகளில் பொதுவாக நிலவும் நிலைகளை விளக்கியதற்கு நன்றி (price war, customer lock-in, lowest price guarantee, nash சமநிலை).

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

//இந்த game theory விளக்கம் நன்றாக இருக்கிறது//

வாசிப்பவர்கள் கருத்து சொன்னால்தானே மாற்றிக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் உங்களுக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்