சனி, அக்டோபர் 14, 2006

நிலஉரிமை நியாயமா? (economics 32)

ஒருவருக்கு வருமானம் வரும் வழியில் முக்கியமானது அவருக்குச் சொந்தமான நிலத்துக்குக் கிடைக்கும் குத்தகை அல்லது நிலத்தை விற்கும் போது கிடைக்கும் ஆதாயம்.
  • அமெரிக்காவில் ஐரோப்பியர் இறங்கிய முதல் நூறு ஆண்டுகளுக்கு மேற்கு எல்லை என்று முன்னேறிச் சென்று பூர்வகுடிகளை ஒழித்துக் கட்டி இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். யார் முதலில் போய் இடத்தைப் பிடித்தார்களோ அவருக்கு நிலம் சொந்தம். தானே பயன்படுத்தியோ குத்தகைக்கு விட்டோ, நிலத்தைப் பயன்படுத்தி வரும் வருமானத்தை அவர் தன்னுடைய முதல் முயற்சிகளுக்கு ஆதாயமாக பெறுகிறார்.

  • ஒருவர் பொட்டல் காட்டில் கரடுமுரடான, பாறை நிரம்பிய நிலத்தை வாங்கி அதில் உழைத்துப் பணம் போட்டு நிலத்தைப் பண்படுத்தி மேம்படுத்துகிறார். இன்னொருவர் நிலத்தை வாங்கி கட்டிடம் கட்டுகிறார். இதற்கும் செய்த முதலீட்டுக்கான ஆதாயம் வாடகையாக கூடிய விற்பனை விலையாக வருகிறது.
ஆனால் 'நிலம் என்பது ஒருவரது உரிமை இல்லை, அதன் பலன்கள் சமூகத்துக்கு உரிமையாக இருக்க வேண்டும்' என்று ஆரம்பம் முதலே குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. நிலத்தின் மதிப்புக்கு வரி விதிப்பு (Land Value Taxation ), நிலம் விற்கும் போது ஆதாயத்துக்கு உயர் வரி வீதம் (Stamp Duty) என்று அரசுகள் நிலத்தில் வரும் ஆதாயங்களை எடுக்க முயற்சி செய்து கொண்டே இருக்கின்றன.
  • 'நிலத்தின் மதிப்பு உயர்வது நில உரிமையாளரின் உழைப்பினால் இல்லை. சுற்றிலும் நடக்கும் முன்னேற்றங்கள், புதிய அரசு திட்டங்கள் எல்லாம் நிலத்தின் விலையை ஏற்றி விடுகின்றன. எனவே, நிலத்தின் சந்தை மதிப்பில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும் என்று சொல்வது LVT. எல்லோருக்கும் உரிமையாக இருக்க வேண்டிய நிலத்துக்கு வாடகையாகத்தான் இந்த வரி என்றும் சொல்லலாம்.

  • ஆனால் நிலத்தின் மீதான இந்த வரி மிகச் சில நாடுகளிலேயே விதிக்கப்படுகிறது. தாய்வான், சிங்கப்பூர், ஆங்காங் போன்ற சிறிய நாடுகளில் இந்த வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. இந்த நாடுகளில் எல்லாமே நிலம் பற்றாக்குறையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
பெரிய நாடுகளிலும் எல்லா மக்களும் நிலத்துக்கு உரிமை கொண்டாடும் வகையில் நிலச் சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாகவோ, இணையாகவோ இத்தகைய வரி விதிக்கப்படலாம். இதனால் கிடைக்கும் பலன்கள்:
  1. நிலத்தின் மீதான வரி வருமான வரி, ஆதாய வரி போல உழைப்பையோ தொழில் முனைவையோ குறைக்காது என்பதால் இதன் மீதான வரி அரசுக்கு வருமானம் தரும் அதே நேரம், பொருளாதார வளர்ச்சியையும் தடுக்காது.

  2. நகர மையத்தில் இருக்கும் நிலத்திற்கு வரி அதிகமாகவும் பொட்டல் காட்டு நிலத்தின் மீது வரி குறைவாகவும் இருப்பதால் புதிய திட்டங்கள் பொருளாதார நடவடிக்கைகள் பரவலாக நடைபெற இந்த வரி உதவி செய்யும்.

  3. சும்மா வைத்திருந்தாலும் வரி கட்ட வேண்டும் என்று இருப்பதால் நில உரிமையாளர்கள் நிலத்தை பயன்படுத்த முயற்சி எடுப்பார்கள். வாங்கி வைத்திருந்து விலை ஏறியதும் விற்று விடலாம் என்ற சூதாட்டம் குறைந்து விடும்.

  4. நிலத்தை பதுக்கி வைத்து வரி ஏய்ப்பது என்பது சாத்தியமில்லாததால் இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் குறைவு.

1 கருத்து:

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஜெய்,

சொத்துரிமை என்பது வேறு, நில உரிமை என்பது வேறு. நில வரி என்பது நிலத்தின் மதிப்பை மட்டும் கணக்கு போட்டு கட்டிடம் போன்ற சொத்துக்களின் மதிப்பை சேர்க்காமல் விதிக்கப்படுகிறது.

வேறு எத்தனை வரிகள் இருந்தாலும், நிலவரி என்பது பொருளாதரவியல் அடிப்படையில் அரசுக்கு வருமானம் தரும் அதே நேரத்தில் வணிக நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும் தன்மை கொண்ட ஒரே வரி என்பது மறுக்க முடியாதது.

அன்புடன்,

மா சிவகுமார்