புதன், அக்டோபர் 18, 2006

சீனப் பொம்மை் இந்திய மென்பொருள்் (economics 33)

ஒரு ஊரில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் வசிக்கிறார். மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை செய்வதில் மிகக் கைராசியும் அனுபவமும் வாய்ந்தவர்.

பத்தாம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது தட்டச்சுக் கற்றுக் கொண்டு நிமிடத்துக்கு எண்பது சொற்கள் தட்டச்சும் திறனும் பெற்றிருக்கிறார். அதாவது தட்டச்சு செய்வதிலும் அவரை மிஞ்ச யாரும் இல்லை.

அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் தட்டச்சு வல்லுனர் நிமிடத்துக்கு அறுபது சொற்கள் அடிக்கக் கூடியவர். தனது ஆவணங்களைத் தயாரிக்க அந்த உதவியாளரை வேலைக்கு வைத்துக் கொள்வாரா அல்லது தானே செய்து கொள்வாரா?

பொழுது போக்கு, சொந்த வேலைகள், மனவளக் கலைகள் சார்ந்த பணிகள் போக தினமும் தொழிலுக்கு செலவிடக் கிடைக்கும் நேரம் ஐந்து மணி நேரம் என்று வைத்துக் கொள்வோம். தன்னுடைய ஆவணங்களையும் தானே தட்டச்சு செய்து கொண்டால் அவர் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சைகளும் ஒரு மணி நேரம் தட்டச்சு வேலையும் செய்ய வேண்டியிருக்கும்.

நான்கு மணி நேர அறுவை சிகிச்சைப் பணிகளுக்குக் கிடைக்கும் மதிப்பு = ரூபாய் 4 லட்சம்.

ஒரு மணி நேர தட்டச்சு வேலையைச் செய்ய உதவியாளர் ஒருவரை வைத்துக் கொண்டால் அவர் இரண்டு மணி நேரத்தில் முடிக்கிறார். கொடுக்க வேண்டிய சம்பளம், நாளுக்கு ஆயிரம் ரூபாய்.

ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைப் பணிகளுக்குக் கிடைக்கும் மதிப்பு = ரூபாய் 5 லட்சம்
ஒரு மணிநேர தட்டச்சு வேலைக்குச் செலவிடுவது = ரூபாய் ஆயிரம

தானே எல்லா வேலையும் செய்து கொண்டால் கிடைக்கும் மதிப்பு நான்கு லட்சம். இரண்டு வேலையிலுமே தான் வல்லவராக இருந்தும் வர்த்தகத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் மதிப்பு நான்கு லட்சத்து தொண்ணூற்று ஒன்பதாயிரம் ரூபாய்.

இரண்டு வேலையிலுமே அவரே மற்ற எல்லோரையும் விட கைதேர்ந்தவராக இருந்தாலும், எந்த வேலையில் அவரது ஒப்பீட்டுத் திறன் அதிகமாக இருக்கிறதோ அந்த வேலையை மட்டும் செய்து விட்டு இரண்டாவதை தனக்கு அடுத்த நிலையில் இருப்பவரிடம் விட்டு விடுவதுதான் புத்திசாலித்தனம்.

இதே கோட்பாட்டின்படி உலகின் பல்வேறு நாடுகளும், நாடுகளின் பல்வேறு பகுதிகளும் தமது ஒப்பீட்டுத் திறன் எதில் சிறப்பாக இருக்கிறதோ அந்த வேலையைச் செய்து பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து தமக்குத் தேவையான பொருட்களைப் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டும்
  • அமெரிக்காவில் விமானம் செய்யும் தொழில் நுட்பமும் அதி நவீனமானது, கோதுமை பயிரிடுதலும் உலகிலேயே மிகக் குறைந்த செலவில் நடத்தலாம் என்று இருந்தாலும், அமெரிக்கா விமானங்கள் செய்வதில் மட்டும் ஈடுபட்டு எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தனக்குத் தேவையான கோதுமையைப் பிற நாடுகளிலிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

  • இதே வாதத்தின்படி சீனா விளையாட்டுப் பொம்மைகளை உற்பத்தி செய்து உலகெங்கும் விற்கிறது.

  • இந்தியாவின் மென்பொருள் உருவாக்குனர்கள் உலகின் பல பகுதிகளின் தேவைகளுக்கு வேலை செய்கிறார்கள்.

  • உலகில் எந்த நாடுமே பயணிகள் விமானம் வாங்க அமெரிக்காவின் போயிங், அல்லது ஐரோப்பாவின் ஏர்பஸ்ஸை நாடுகின்றன.
இது ஏட்டுச் சுரைக்காய். இதன்படி உலகமயமாக்கம் எல்லோருக்கும் நல்லதைச் செய்யும் ஒரு மந்திரக் கோல். நடைமுறையில் உலகமயமாக்கலுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்?

7 கருத்துகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நடைமுறையில் உலகமயமாக்கல் என்பது நீங்கள் சொல்லி இருக்கும் சர்ஜனின் உதாரணம் போல் மிகச் சுலபமானதாக இல்லையே..
உலகம் முழுவதும் இந்திய மென்பொருளாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், ஒரு பேச்சுக்கு இந்தியாவுக்கு திடீரென்று சீனாவைப் பிடிக்காமல் போய்விடுகிறது. சீனத்தவர் செய்யும் அல்லது செய்ய மறுக்கும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக இந்திய அரசாங்கம் சீனாவைத் தனது எதிரியாகக் கருதுகிறது. அப்படி ஒரு சூழலில், இந்திய மென்பொருளாளர்களைச் சீனாவிலிருந்து அழைத்துக் கொள்வதன் மூலம், இந்தியா மிகச் சுலபமாக சீனாவின் கணினித் துறை சார்ந்த விஷயங்களை ஸ்தம்பிக்கச் செய்ய முடியும்.

இப்படி இன்னுமொரு நாட்டின் பிடியில் தாம் இருப்பதை இன்றைய உலக நாடுகள் விரும்புவதில்லை.

ஒவ்வொரு நாட்டுக்குமிடையிலான நம்பிக்கையின்மை இருக்கும் வரையில் இது போன்ற உலகமயமாக்கல் சாத்தியமே இல்லை..


இத்துடன், இந்தியாவிலும் பொம்மை செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்திய பொம்மைகள் சீன பொம்மையை விட தரத்தில் குறைவு ஆனால், விலையில் அதிகம். இந்தச் சூழ்நிலையில் இந்திய வாடிக்கையாளர்கள், சீன பொம்மைகளைத் தான் வாங்க விரும்புவார்கள். இதன் மூலம் அதே நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் அபாயமும் இருக்கிறது.

Muse (# 01429798200730556938) சொன்னது…

சீன மென்பொருளில் இயங்கும் இந்திய பொம்மைகள் பற்றி $ல்வன் எழுதுகிறார். நீங்கள் இந்திய மென்பொருளில் இயங்கும் சீன பொம்மைகளைப் பற்றி எழுதுகிறீர்கள்.

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

பொன்ஸ் பின்னூட்டத்திற்கு பதில்
உங்கள் பதிவைவிட பெரிதாக இருந்தது. எனவே தனிப்பதிவாகவே
பதிந்து விட்டேன்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//சீன மென்பொருளில் இயங்கும் இந்திய பொம்மைகள் பற்றி $ல்வன் எழுதுகிறார். நீங்கள் இந்திய மென்பொருளில் இயங்கும் சீன பொம்மைகளைப் பற்றி எழுதுகிறீர்கள்.
//
மியூஸ், புரியவில்லை.. நீங்கள் சுட்டும் செல்வன் பதிவுகளின் சுட்டி கொடுக்க முடியுமா?

மா சிவகுமார் சொன்னது…

சரியான கருத்துக்கள் பொன்ஸ், இதையே விரிவுபடுத்தி அடுத்த பதிவிலும் எழுதியிருக்கிறேன். நாட்டு எல்லைகள், பாதுகாப்பு என்ற பிரிவுகள்தாம் சிக்கலை அதிகமாக்குகின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

மியூஸ்,

பொன்ஸைப் போலவே நானும் சுட்டிக்குக் காத்திருக்கிறேன். :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//எனவே தனிப்பதிவாகவே //

நன்றி ஐயா!

அன்புடன்,

மா சிவகுமார்