வியாழன், அக்டோபர் 26, 2006

WTO (economics 36)

வரிகள், வர்த்தகம் பற்றிய பொது உடன்பாடு (GATT) என்ற தலைப்பின் கீழ் பல ஆண்டுகளாக பல சுற்றுகளாக நடந்த பேச்சு வார்த்தைகள் 1995ல் உலக வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு டுங்கல் என்பவர் உருவாக்கிய உடன்பாட்டு வரைவு உதவியது. இன்றைக்கு 135க்கும் மேலான உலக நாடுகள் இந்த அமைப்பில் பங்கேற்கின்றன. உலக வர்த்தகத்தில் 90%க்கு மேல் WTO உறுப்பு நாடுகளுக்கிடையே நடைபெறுகின்றன.

இந்த உடன்படிக்கைகளின் அடிப்படை விதிகள்:

1. நாடுகள் ஏற்றுமதி இறக்குமதிக்கான வரிகளைக் குறைக்க, வரி சாராதத் தடைகளை குறைக்க முன் வர வேண்டும். இந்தியா கடந்த பதினைந்து ஆண்டுகளில் இறக்குமதி வரியின் அதிகபட்ச சதவீதத்தை குறைத்துள்ளது. வர்த்தகமே தடை செய்யப்பட்ட எதிர்மறைப் பட்டியல்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.

2. ஏதாவது ஒரு நாட்டுக்குக் குறிப்பிட்ட சலுகையை அளித்தால் அதே சலுகை மற்ற உறுப்பு நாடுகளுக்கும் கொடுக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் முட்டி மோதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழங்கள் மீதான வரியைக் குறைத்துக் கொண்டால், அதே வரிதான் இந்திய ஏற்றுமதிகளுக்கும் விதிக்கப்படும். ஒரு உறுப்பினரின் பேரம் பேசும் முயற்சி எல்லோருக்கும் பலன் அளிக்கும்.

மேலே சொன்ன பிராந்திய ஒப்பந்தங்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் சலுகைகள் இதில் வராது.

3. ஏதாவது கருத்துவேறுபாடுகள், வர்த்தகப் பூசல்கள் ஏற்பட்டால் அவற்றைப் பேச்சு வார்த்தை மூலம், ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மேலும் பேச்சு வார்த்தைகளின் மூலம் இன்னும் வர்த்தகத் தடைகளை தளர்த்தி எல்லோருக்கும் பலன் அளிக்கும் வகையில் உலக வர்த்தகம் நடக்க வழிகள் உருவாக்கப்படுகின்றன. போன இரண்டு சுற்றுகளில் முரசொலி மாறன், கமல்நாத் என்ற இந்திய அமைச்சர்களின் தலைமையில் வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளின் சுயநலத் திட்டங்களை வெற்றிகரமாகத் தடுத்தி நிறுத்தியதும் பரவலாக விவாதிக்கப்பட்டது.

இந்த அமைப்பில் புதிதாக ஒரு நாடு சேர வேண்டும் என்றால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் அதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். 2005ல் சீனா இதில் சேருவதற்கு முன்பு ஒவ்வொரு உறுப்பு நாட்டுடனும் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காண வேண்டியிருந்தது. அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை பல ஆண்டுகளாக நீடித்தது. அதன் பிறகு ஒரே ஆண்டில் மீதி உறுப்பினர்கள் தத்தமக்குத் தேவையான விஷயங்களில் சீனாவுடன் உடன்பாடு செய்து கொண்டனர்.

இந்தியா இந்த அமைப்பின் உருவாக்கிய உறுப்பினர். இதை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்று உரத்த குரல்கள் அவ்வப்போது கேட்கின்றன.
  • உள்ளே இருப்பதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
  • ஒரு முறை வெளியே வந்து விட்டால், பிறகு திரும்பச் சேர நினைத்தால் ஒவ்வொரு உறுப்பு நாடும் சம்மதிக்க வேண்டியிருக்கும்.
  • வெளியே இருக்கும் போது நூற்றி முப்பது நாடுகளுடனும் தனித்தனியே வர்த்தக வழிகளை வகுக்க வேண்டியிருக்கும்.
  • உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகப் போய் விடுவொம்.

6 கருத்துகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது…

வெளியேற வேண்டும் என்று சொல்பவர்கள் சொல்லும் காரணங்கள்?

மா சிவகுமார் சொன்னது…

வலதுசாரியில் சுதேசி மஞ்ச் கட்சியினரிலிருந்து இடது சாரிக் கட்சியினர் வரை உலகமயமாக்கலை எதிர்க்கின்றனர்.

ஏற்கனவே சொன்னது போல இப்படி உலகமே ஒரே சந்தையாக மாறும் போது, அதில் ஏற்படும் வலிகள் நம்முடைய விவசாயிகள், சிறு வியாபாரிகள், தொழில்களை பாதித்து விடக் கூடாது என்ற கரிசனம், வளர்ந்த நாடுகள் நம் கைகளை முறுக்கித் தமக்குச் சாதகமாக விதிகளை அமைத்துக் கொள்வதாகக் குறைபாடு என்று முக்கிய காரணங்களின் பேரில் WTOவில் இந்தியாவின் பங்கேற்பு எதிர்க்கப்பட்டது.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

Please find a copy of the book

"The road to serfdom" by F.A Hayek

and read it.

May God be with you.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சங்கர்,

நாடு முழுமைக்குமான திட்டக் குழு என்ற நேருவின் சோஷலிச அணுகுமுறையின், சோவியத் பரிசோதனையின் கொடுமைகள் எல்லோருக்குமே தெரிந்ததாகி விட்டன. என்னைப் பொறுத்த வரை சோஷலிசம் அல்லது சமவுடைமை சமூகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனும் தன்னிச்சையாக சோஷலிச அணுகுமுறையை கைக்கொள்வதில்தான் வரும் என்று நினைக்கிறேன்.

எனக்குப் பிடித்த வேலையை நான் செய்ய வாய்ப்பிருந்தால், என் முழு மனதுடன், முழுத் திறமையையும் காட்டி வேலை செய்வேன். அதற்கு வரும் வருமானத்தைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட மாட்டேன். அத்தகைய சமூகம் சாத்தியம்தான் என்பது என்னுடைய புரிதல்.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

சிவக்குமார் சார்,

சோஷியலிசமே (whatever dinomination it might be) அடிமைத்தன்னிலைக்குச் செல்லும் பாதை என்பது தான் அந்தப் புத்தகத்தின் சாரம்.

அதற்காதத்தான் அதை உங்களுக்கு recommend செய்கிறேன்.

உங்கள் கருத்து உங்களுடையது.

ஒரு பொய்யை நம்பி வாழ்க்கையில் ஏமாராதீர்கள் என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன்.

மா சிவகுமார் சொன்னது…

அன்புள்ள சங்கர்,

சோவியத், சீன, இந்திய கம்யூனிஸ்டுகள் பேசும் பொதுவுடைமை இது போன்ற கொடுமைகளுக்கு வழி வகுக்கும் என்று ஏற்றுக் கொள்கிறேன். நான் சொல்வது தனிமனித உரிமை சார்ந்த, ஒவ்வொருவரும் தன்னளவில் பொதுவுடைமைக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வாழும் சமூகத்தைப் பற்றி.

அன்புடன்,

மா சிவகுமார்