சனி, அக்டோபர் 07, 2006

போட்டி நிலைகள் (economics 28)

இரண்டு அல்லது ஒரு சில நிறுவனங்களே போட்டி போடும் துறைகளில் விலைப்போட்டிகள் சூழ்நிலையைப் பொறுத்து வெவ்வேறு உருவெடுக்கலாம்.

1. எதிராளி என்ன செய்தாலும் நான் இதைச் செய்தால் போதும் என்று தெளிவான தேர்வு இருக்கும் நிலை (dominant strategy). வகுப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டால், அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க ஒரே வழி நூற்றுக்கு நூறு வாங்கி விடுவதுதான். ஒரு மதிப்பெண் குறைந்தாலும், நம்மை விட யாருக்கு அதிகம் என்று பார்க்க வேண்டியிருக்கும்.

தன்னுடைய பொருளையும், சேவைகளையும் தனிப்படுத்திக் காட்டி தனக்கு ஏற்ற விலையை நிர்ணயித்துக் கொள்ள எல்லா நிறுவனங்களும் முயற்சி செய்கின்றன. பத்மா சொல்வது போல தரத்தை உயர்த்துதல், சிறப்பு அம்சங்களை சேர்த்தல், நடிகர்கள், விளையாட்டு வீரர்களை விட்டு விளம்பரம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. சுருக்கமாக தனக்கென ஒரு சிறிய மோனோபொலி சந்தையை உருவாக்க முனைகின்றன. அந்த நிலையில் போட்டியாளரைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

2. என்னதான் செய்தாலும் விலையைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் போட்டியாளர்களின் பொருட்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கும் போது ஒருவருக்கொருவர் போட்டி (price war) போட்டுக் கொண்டு விலையைக் குறைத்து இழப்பை சந்திக்கலாம். போட்டி போடும் போது எதிராளி இழப்பைத் தாங்க முடியாமல் நிறுவனம் கவிழ்ந்து விட்டால், அப்புறம் நாம் விலையை விருப்பம் போல ஏற்றிக் கொள்ளலாம் என்ற கணக்கு இருக்கலாம்.

தனக்குப் போட்டியாக இருந்த நெட்ஸ்கேப் நிறுவனத்தை தனது வலையுலாவி இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இலவசமாகக் கொடுக்க ஆரம்பித்ததன் மூலம் ஒழித்துக் கட்டிய மைக்ரோசாஃப்டின் திட்டம் விலைப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு கதை.

பொதுவாக போட்டியில் ஈடுபடும் எல்லா நிறுவனங்களும் சூடுபட்டு ஒதுங்கத்தான் நேரும்.

3. எழுதப்படாத ஒப்பந்தமாக ஒரு நிறுவனம் விலை ஏற்றத்தை அறிவித்த உடனேயே மற்ற நிறுவனங்களும் அதற்கு ஒத்த விலையேற்றத்தை அறிவிப்பதை சில துறைகளில் பார்க்கலாம். இதுதான் நீண்ட கால நோக்கில் எல்லோருக்கும் நல்லது என்ற புரிதலுடன் எல்லோரும் ஆட்ட விதியைக் கடை பிடிப்பார்கள். (price leadership).

ஸ்டீல் துறையில் டாடா விலை ஏற்றத்தை அறிவித்த ஓரிரு நாட்களில் பிற நிறுவனங்களும் அதே அளவுக்கு விலையை ஏற்றிக் கொள்வார்கள். முன்பெல்லாம் விகடன், கல்கி, குங்குமம் என்று எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் ஒரே விலையில் விற்கும். குமுதம் மட்டும் விலை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஒரு நிறுவனம் விலை உயர்வை அறிவித்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒவ்வொன்றாக எல்லாப் பத்திரிகைகலும் விலை ஏற்றம் அறிவித்து விடுவது வழக்கம்.

4. குறுகிய காலத்தின் விற்பனையைப் பெருக்க வேண்டும், விலையைக் குறைத்தால் எதிராளியை உசுப்பி விட்டு விலைப் போட்டி வந்து விடக்கூடாது என்ற நிலைமைகளில், அதே பேக்கில் அதிக அளவு, சோப்பு வாங்கினால் பல் பொடி இலவசம், பரிசுப் போட்டிகள் என்று விலை சாராத ஆதாயங்களை அளித்து வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிப்பார்கள்.

4 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

அப்ப வியாபரத்தில் நேர்மையே இருக்காதா?

மா சிவகுமார் சொன்னது…

நேர்மையாக செயல்பட முதல் முறை ஒத்து வருகிறது அல்லவா? அடுத்த நிறுவனம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், என்னுடைய பொருள்/சேவைகளை மேம்படுத்தினால் வாடிக்கையாளரின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று செயல்படலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

3?

மா சிவகுமார் சொன்னது…

//3?//

அது எனக்குக் கொசுறு மதிப்பாக :-).

சரி செய்து விட்டேன். நன்றி பொன்ஸ்.

அன்புடன்,

மா சிவகுமார்