புதன், அக்டோபர் 25, 2006

எல்லைகளை உடைக்கும் வர்த்தகம் (economics 35)

ஒரு இந்தியாவுக்குள்ளேயே பொருளாதார ஒருங்கிணைப்பை சரிவரச் செய்ய முடியவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? எல்லா பகுதியினரும் பயன்பெறும் வண்ணம் பொருளாதார வளர்ச்சியைக் கையாள்வது குதிரைக் கொம்பாக உள்ளது.
  • சிவகாசியில் பட்டாசுத் தொழில் வளர ராஜஸ்தானத்தில் தொழில் நலிந்து போவதுதான் சந்தைப் பொருளாதாரத்தின்படி சரியான நிகழ்வு.
    ராஜஸ்தானத்தில் வேறு தொழில் தளைத்து அவர்களும் பல பெற்று விடுவார்கள்.
    ஆனால், ராஜஸ்தானத்தில் இருக்கும் பட்டாசுத் தொழிலாளருக்கு பிழைப்பு என்ன ஆகும்?
    இந்தத் தொழிலில் தேர்ந்தவராக வாழ்ந்து விட்டு வேறு துறையில் கூலி வேலைக்குப் போக முடியுமா? இல்லை என்றால் சிவகாசிக்கு மூட்டைக் கட்டிக் கொண்டு போகலாம்,
    அதனால் ஏற்படும் உளைச்சல்களுக்கு யார் பொறுப்பு?
இதுதான் உலகமயமாக்கலின் கேள்விகள். நீண்ட கால நோக்கில் பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றாலும், உடனடிக் காலத்தில் ஒவ்வொரு குழுவாக பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
  • என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளும் முன்னரே பிழைப்பு மறைந்து போய் குடும்பம் கடனில் மூழ்கி விடுகிறது.
  • வேலை கிடைக்கும் இடத்துக்கு தடையின்றி போய்க் குடியேறவும் வழிகள் கிடையாது.
  • பொருட்கள் எல்லை தாண்டி பாய வழிமுறைகள், மூலதனம் நாடு விட்டு நாடு போக தனி விதிகள், மக்கள் குடி பெயர இன்னொரு முறை என்று சமச்சீரின்றி இருப்பது, உலகளாவிய மாற்றங்களை புரிந்து கொள்ளும்படி தகவல் கிடைக்காமல் இருப்பது இரண்டும் சேர்ந்து மாபெரும் துயரங்களை உருவாக்கிச் சென்று விடுகின்றன.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வர்த்தகத்தின் பலன்களை காண முயலும் முயற்சிகள் பல நிலைகளில் நடக்கின்றன.

இரண்டு நாடுகள் தமக்கிடையே செய்து கொள்ளும் bilateral ஒப்பந்தங்கள், இந்திய - ரஷ்ய வர்த்தக ஒப்பந்தம், இந்திய - தென்னாப்பிரிக்க உறவுகள், அமெரிக்க - ஜப்பான் உறவு என்று இயல்பாக நடக்கின்றன.

இதையே கொஞ்சம் விரிவாக்கி பிராந்தியக் கூட்டமைப்புகள் வெவ்வேறு ஆழத்தில் உருவாகியுள்ளன.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (SAARC)
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)
ஐரோப்பிய பொருளாதார ஒன்றியம் (EU)
வட அமெரிக்க வர்த்தக வட்டாரம் (NAFTA)

என்று நாடுகள் ஒன்று சேர்ந்து தமக்குள் சாதகமான வர்த்தக நெறிமுறைகளை ஏற்படுத்திக் கொள்கின்றன.

ஒரே நிலப்பரப்பில் இருக்கும் நாடுகள் பிரிந்திருந்தாலும் இயல்பான பொருளாதார இணைப்பு ஏற்புடையது என்று உருவானவை இந்த அமைப்புகள்.

ஐரோப்பிய ஒன்றியம் போல எல்லைகளைத் தளர்த்தி, ஒரே பணம் ஏற்றுக் கொண்டு பொருட்களும், மக்களும் பணமும் தடையின்றி பாயும் இறுக்கமான உறவுகளிலிருந்து, SAARC போல இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லோரையும் சண்டைக்குள் வைத்திருக்கும் குழப்படிகள் வரை பல நிலைகளில் இத்தகைய அமைப்புகள்.

எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் உருவாகி வருவதுதான் உலக வர்த்தக நிறுவனம் எனப்படும் WTO.

2 கருத்துகள்:

பத்மா அர்விந்த் சொன்னது…

என்னதான் WTO, NAFTA வும் விதிகள் விதித்தாலும் சில பிஅச்சினைகள் எழாமல் இல்லை.
1. போதைப்பொருட்கள் சுல்பமாக கடத்துவதும் பிறகு மற்றொரு பொருளை சாக்கிட்டு money laundering செய்வதும்
2. சில அமெரிக்க நிறுவங்கள் (னைக்கே) பொன்றவை மெக்சிகோ போன்ற நாடுகளில் உள்நுழைந்து அடிப்படை வசதிகலும், உரிமைகளும் தராமல் பெண்களை ஆண்களை வதைப்பதும் நடக்கிறது. (குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்பதால் சிறுநீர் கழிக்க கூட போதிய இடைவெளி தராமல்)
3. எல்லாவற்றுக்கும் மேலாக dumpingநடப்பது
நல்ல காரணங்களுக்காக செய்யும் எல்லாவற்றிலும் சுய இலாபத்தை மட்டுமே கணக்கிட்டு செய்வதால் ஊழலும் வதைப்பும் ஏமாற்றுதலும் சில இடங்களில் நடக்கிறது

மா சிவகுமார் சொன்னது…

WTO இல்லாவிட்டாலும் விதிகளை மீறுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் இல்லையா! சீனா WTOவில் சேரும் முன்பே பல நூறு அமெரிக்க நிறுவனங்கள் தென்சீனாவில் தமது அடாவடி தொழிலாளர் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டுதான் இருந்தார்கள்.

எல்லோருக்கும் பொதுவான விதிமுறைகள், சரியான நீதி கிடைக்கும் வகையில் உருவாவது நடந்தால் நல்லதுதான்.

அன்புடன்,

மா சிவகுமார்