வியாழன், அக்டோபர் 12, 2006

துணிந்தவருக்கு துக்கமில்லை் (economics 30)

பொருளாதார வாழ்க்கையில் நிச்சயமற்ற நிலை ஒவ்வொரு துறையிலும் இருக்கிறது.

  • இன்றைக்கு விதை விதைத்தால் நமது சாப்பாட்டுக்குப் போக மீதமிருக்கும் நெல்லை விற்று மீதித் தேவைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று விவசாயி கணக்குப் போடுகிறார். ஆறு மாதத்துக்குப் பிறகு நெல் அறுவடையாகி சந்தைக்குப் போகும் போது விலை குவின்டாலுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற துணிச்சலில் செலவுகள் செய்கிறார். அறுவடை காலத்தில் விலை குவின்டாலுக்கு ஐநூறு ரூபாய் என்று சரிந்து விட்டால் என்ன கதி?

  • தொழிற்சாலை கட்டி இயந்திரங்கள் வாங்கி வேலைக்கு ஆள் வைத்து பொருளை உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு வந்தால் இன்ன விலைக்கு விற்கலாம் என்று துணிந்து தொழில் நடத்தும் தொழில் முனைவோருக்கும் கணிப்புகள் பொய்த்துப் போகும் வாய்ப்புகள் இருக்கின்றன. மருந்து, உயர் மின்னணுப் பொருள் இவற்றின் உற்பத்தியில் கோடிக்கணக்கான ரூபாய் ஆராய்ச்சி செலவுகளுக்கும் போகின்றன.

  • தேர்தலில் நிற்பதற்கு ஓரிரு கோடி செலவளிக்கிறோம், வெற்றி பெற்று விட்டால் ஒன்றுக்கு மூன்றாகப் பார்த்து விடலாம் என்ற துணிச்சலில் தேர்தலில் நிற்பதும் ஒரு வகையில் வாய்ப்பை முயன்று பார்ப்பதுதான்.
இப்படி தன் சேமிப்பை முடக்கிப் பணத்தைப் போட்டு நாள் பிடிக்கும் வழிகளில் பொருட்களையும் சேவைகளையும் உருவாக்கத் துணிச்சல் காட்டும் தொழில் முனைவோருக்கு வெற்றி பெற்றால் பரிசாக ஆதாயம் கிடைக்கிறது. அது இல்லா விட்டால் எந்த விதமான முயற்சிகளும் புதிதாக மேற்கொள்ளப்படாமல் பொருளாதார நடவடிக்கை முடங்கிப் போய் விடும்.

ஒருவர் வேலை செய்து மாதக் கடைசியில், வார இறுதியில், நாள் தோறும் வாங்கும் ஊதியத்தைத் தவிர்த்து இன்னொரு வருமானம் வரும் வழி மேலே சொன்ன துணிச்சலுக்குக் கிடைக்கும் ஆதாயம். இந்த ஆதாயத்தின் மறுபக்கம், தோல்வியடைந்தால் துண்டைப் போட்டுக் கொண்டு போக வேண்டிய இழப்பு. எங்கு அதிக நிச்சயமின்மை நிலவுகிறதோ அந்தத் துறைகளில் ஆதாயமும் அதிகமாக இருக்கும்,

பில் கேட்ஸ் எண்பதுகளில் தனது உழைப்பின் மூலமும், திட்டமிடல் மூலமும் தொண்ணூறுகளில் பெரும்பலன் அளித்த மென்பொருள் உருவாக்கத்துக்கு வித்திட்ட முனைப்புக்கு பரிசுதான் இன்று அவருக்கு வரும் பெரு ஆதாயங்கள்.

உழைத்தால் காசு, அப்போ துணிந்து இறங்கியதற்கு இன்றைக்கு ஆதாயம் என்ற இரண்டிலுமே யாருக்கும் எந்த மனத் தாங்கலும் இருக்க முடியாது. அடுத்தவர்களிடமிருந்து திருடுவது, ஏமாற்றிப் பணம் ஈட்டுவது என்பது சரியில்லை என்பதும் எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை.

சர்ச்சைக்குள்ளாகும் வழிகள் இன்னும் சில இருக்கின்றன. ஒரு தரப்பார் முழு மூச்சாக எதிப்பதும், மற்றொரு தரப்பில் முழு ஆதரவு தருவதுமாக சூடு பறக்கும் விவாதத்துக்குள்ளாகும் அவை என்ன?

9 கருத்துகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது…

கேள்வி புரியவில்லை சிவகுமார், நீங்கள் சுட்டியுள்ளது போன்ற சில உதாரணங்கள் கேட்கிறீர்களா? அல்லது வேறு ஏதாவது தத்துவங்களைப் பற்றிய கேள்வியா?

எப்படியும், எனக்குத் தோன்றும் முதல் பதில், பங்கு சந்தையும் சினிமாத்துறையும்.. சினிமாத்துறையில் இப்போது சின்னத்திரையின் வரவால் கொஞ்சம் நிச்சயத்தன்மை வந்துவிட்டதாகத் தோன்றுகிறது.

செலவளிக்கிறோம் = மறுபடி செலவழிக்கிறோம்

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

'சிலருக்கு போகும் பணம் அநியாயமானது, ஏற்றுக் கொள்ள முடியாதது' என்று வாதிடக் கூடிய வருமானங்கள் ஏதாவது இருக்கிறதா? அதுதான் கேள்வி.

அன்புடன்,

மா சிவகுமார்

நாமக்கல் சிபி சொன்னது…

//ஒரு தரப்பார் முழு மூச்சாக எதிப்பதும், மற்றொரு தரப்பில் முழு ஆதரவு தருவதுமாக சூடு பறக்கும் விவாதத்துக்குள்ளாகும் அவை என்ன?//

நீங்கள் சொல்வது பங்கு வர்த்தகத்தைப் பற்றி என எண்ணுகிறேன்.

பத்மா அர்விந்த் சொன்னது…

சிவகுமார்

கலைத்துறை, விளம்பரத்துறைமற்றும் விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு தரும் ஊதியத்தை, அவர்களது திறமையை மட்டும் அல்லாமல் அவர்கள் மக்களிடையே கொண்ட செல்வாக்கும் சேர்த்து நிர்ணயிக்கிறது. இங்கே ஊதியமும் அவர்களது திறமையும் மட்டும் அல்லாமல் இன்னபிறவும் அவர்களது வருமானத்தை நிர்ணயிக்கின்றன.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

அரசியல் செய்து சம்பாதிப்பது?

லஞ்சம்?

ஒருவேளை இவற்றைத் தான் சொல்கிறீர்களா?

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சிபி,

பங்குச் சந்தைகளின் குறைபாடுகள் நன்கு புரிந்து கொள்ளப்பட்டு சரியான கண்காணிப்பு அமைப்புகள் இருந்தால் அதில் சூதாட்ட முறையில் பெருவருமானம் ஈட்டுவது அதிக சாத்தியமில்லை. தேவையான அளவில் அனுமான வர்த்தகமும், அதனால் உருவாகும் சந்தையைச் சார்ந்த முதலீடு சார்பான விற்றல் வாங்கல்களும் மட்டும்தான் நடக்க முடியும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

அழித்தல் - destroy
அளித்தல் - to give

செலவு செய்து அழிக்கிறோமா, அளிக்கிறோமா? எனக்கென்னவோ செலவளிக்கிறோம் என்றுதான் நினைவு. தமிழ் அகராதி ஏதாவது இருந்தால் பார்த்து விடுங்களேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

அரசியல் செய்து சம்பாதிப்பது, லஞ்சம் எல்லாம் சட்டப்படி தவறானவைதானே! அதில் வாதத்துக்கு என்ன இடம்? :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

Agree with you tamilreber. What Bill Gates earned was supported by the social, legal structures. He cleverly exploited them.

That is why I believe that the wealth accumulating to an individual is not entirely his. The sociey has a large stake in it.

Please have a look at these

Profits
What is Luxury
How to manage wealth

anbudan,

Ma Sivakumar