செவ்வாய், மே 02, 2006

தினமலர் == கட்டுரை மலர் - 2

இப்போது நடக்கும் தேர்தலைப் போன்ற பரபரப்பான ஒரு தேர்தல் 1989ல் நடந்தது.

திமுக, அதிமுக - ஜெ அணி, அதிமுக - ஜானகி அணி, காங்கிரசு என்று நான்கு முனைப் போட்டி. எம்ஜிஆர் இறந்த பிறகு நடந்த வாரிசுச் சண்டையில் ஜானகி அம்மையாரை முன்னிருத்தி ஆர் எம் வீரப்பன் (இரட்டைப் புறா சின்னம்) மற்றும் நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ருட்டி ராமச்சந்திரன், கேகேஎஸ் எஸ் ஆர் ராமசந்திரன் என்ற இளம் தலைவர்களின் ஆதரவுடன் ஜெ அணியும் (சேவல் சின்னம்) மல்லுக் கட்டி நிற்க, காங்கிரசு, இருபது ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு தமிழ் நாட்டில் வாழ்வு வரப் போகிறது என்று யாருடனும் கூட்டுச் சேராமல் நின்றது.

தினமலரில் காங்கிரசை ஆதரித்தும் ஒரு பெரிய இயக்கமே நடந்தது. ராஜீவ் காந்தியின் வருகைகளால் தமிழகமே எழுச்சி அடைந்து விட்டதையும், ஜெ அணி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டதையும், சித்தரிக்க பன்முனை தாக்குதல் நடத்தியது. "வாசகர்" கடிதங்கள், செய்தி "குறிப்புகள்", தொகுதி வாரியாக அலசல் என்று தினமலரில் அரசியல் அலசல் கொடி கட்டிப் பறந்தது.

தேர்தல் தினத்தன்று முதல் பக்கத்தில் 234 தொகுதிகளுக்குமான கணிப்பை வெளியிட்டு, காங்கிரசும், திமுகவும் ஏறக்குறைய சமமான இடங்களில் (ஆளுக்கு 90க்கு பக்கம் என்று நினைவு) வெற்றி பெறப்போவதாகவும், ஜானகி அணி ஜெயலலிதா அணியை பின் தள்ளி விட்டதாகவும் தொகுதிவாரியாக அலசி தொண்டு புரிந்தது.

கடைசியில் அத்தகைய அலசல்களை முற்றிலும் தவறாக்கி திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரசும், ஜெயலலிதா அணியும் சமமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றின (30க்குப் பக்கத்தில்). ஜா அணியில் பி எச் பாண்டியனைச் தவிர ஜானகி உட்பட அனைவரும் மண்ணைக் கவ்வினர். அதிமுக அணிகள் விரைவாக ஒன்று சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற்றன.

கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் தினமலர் வெளியிடும் செய்தித் திரிப்புகளை அப்பட்டமாக வெளிப்படுத்திய ஒரு நிகழ்வு இது.

கருத்துகள் இல்லை: