வெள்ளி, மே 12, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 7

ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படம் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப் போய், இப்போதெல்லாம் அது கண்ணில் படுவதே இல்லை. அக்டோபர் இரண்டாம் தேதி வரும் விடுமுறையில் தொலைக்காட்சியில் சிறப்புத் திரைப்படங்கள் பார்க்கிறோம். ஜனவரி 30 அன்று முற்பகலில் இரண்டு அஞ்சலி செலுத்துவது கூட ஏறத்தாழ நின்று விட்டது. இதனால் காந்தியை மறந்து விட்டொம் என்று பொருளா?

"காந்தியம் என்பது காலத்துக்கு ஒவ்வாதது, அந்தக் கிழவர் ஏதேதோ உளறி விட்டுப் போய் விட்டார். இப்போதைய வாழ்க்கைக்கு அதெல்லாம் ஒத்து வருமா?" என்று அலட்டிக் கொள்வதால் காந்தி நினைத்த, செய்த, சொன்ன கருத்துகள் நம்மை பாதிப்பதே இல்லை என்று பொருளா?

இந்தியா என்ற நாடு ஒரே நாடாக தேர்தலில் பங்கேற்பது, மத்தியில் ஒரு அரசு செயல்படுவது எல்லாமே காந்தியத்தின் அடித்தளத்தின் மீது உருவாக்கப்பட்டவை. இந்தியப் பெருநாட்டின் பெரும்பகுதிகள் நேபாளத்தைப் போல மன்னரால் ஆளப்படலாம். பிற பகுதிகள் வங்காள தேசம் போல ராணுவ அதிகாரத்தின் கீழ் உழன்று கொண்டிருக்கலாம். யூகோஸ்லேவியா போல நாடு சிதறியிருக்கலாம்.

இவை எல்லாம் நிகழாமல் இன்று நாம் அனுபவிக்கும் வாழ்க்கை காந்திய சிந்தனைகளிலிருந்து பிறந்தது. காந்தியின் படிப்பினைகளைப் புறக்கணித்து சாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் ஒடுக்கப்பட்டவரகள் இன்னும் முன்னேற முடியாமல் இருப்பது நமது "ஒளிரும்" வாழ்க்கையைத் தகர்த்து விடக்கூடிய வெடி குண்டுகள். காந்தியின் பாடங்களை மறந்து, சிறுபான்மையினர் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்து, தேவைக்கதிகமாக செலவளித்து இல்லாதவர் வாழ்வைத் தகர்ப்பது நமது "மிளிரும்" வாழ்க்கையில் இருள் புகுத்தி விடக் கூடிய கார்மேகங்கள்.

நல்ல நிலையில் இருக்கும் குடும்பங்கள் வாங்கிப் பதுக்கும் நகைகள் ஒரு ஏழைக் குழந்தையின் தட்டிலிருந்து உணவைப் பறிக்கின்றன.
நிலத்தை வாங்கி விற்று பணத்தைப் பெருக்கும் நபர்கள் ஒரு சிறு குழந்தையின் கல்வி வாய்ப்பை மறுக்கிறார்கள்.

இதைத் தெரிந்து கொள்ள காந்தியம் படிக்க வேண்டாம். 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆதம் சுமித் எழுதிய முதல் பொருளாதார நூலைப் படித்தால் போதும். 150 ஆண்டுகளுக்கு முன் மார்க்சு எழுதிய பொருளாதார நூலைப் படித்தால் போதும். வரலாற்றில் வழிகாட்டிச் சென்ற பெரிய மனிதர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டால் போதும்.

கருத்துகள் இல்லை: