சனி, மே 13, 2006

கலைஞர் அவர்களின் குறுமதி

தமிழகத்தில் அரசை தலைமை ஏற்றுள்ள் கருணாநிதியை தாக்கிக் குறை கூறி எழுதப்படும் பதிவு இது.

முதலில் சமீபத்திய நிகழ்வுகள்.

1. நாங்கள் ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு 15,000 ரூபாய் கொடுக்கிறோம். எதிர்க் கட்சியினர், அவர்கள் வாக்களித்த அரைப் பவுன் தங்கத்தைக் கொடுக்கட்டும் நாம் இணைந்து திருமணங்களை நடத்துவோம் என்று பேட்டியில் கூறி விட்டு, அதே பேட்டியில், எதிர்க் கட்சிகளை எப்படி நடத்துவோம் என்பது தெரிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இவர் 15,000 ரூபாய் கொடுப்பாராம், தோற்று எதிர்க்கட்சியில் அமையப்போகும் மாற்றுக் கட்சியினர் தங்கம் கொடுக்க வேண்டுமாம். அவ்வளவு நக்கல், கேட்டால் அவர்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்து கொடுக்கலாமே என்று கவிதை எழுதுவார்.

2. "சிறுத்தைகள் உலாவும்போது, சிங்கங்கள் உலாவக் கூடாதா! மிருக சாதிகள் அடித்துக் கொள்வது இயல்புதானே"

இது இயல்பாக இலக்கிய மனதிலிருந்து வந்த சொற்றொடர்கள்தான். இயல்பான சிந்தனைகளே இப்படி இருந்தால் இவர் முயன்று சிந்தித்து நடத்தும் திட்டங்கள் எப்படி இருக்கும்?

3. வைகோ திமுக கூட்டணியை விட்டு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததை யசோதரா காவியம் என்ற கதையுடன் ஒப்பிட்டு எழுதியது
இவ்வளவு வயதுக்கு அப்புறம், இத்தனை கோடி மக்கள் வழி நடக்கக் காத்திருக்கும் போது, எத்தகைய மன ஓட்டம் இது மாதிரியான ஒப்பீட்டைச் செய்யத் தூண்டியிருக்கும்.

ஆரம்பம் முதலே தனது சுயநல நோக்கங்களுக்காகத்தான் தமிழ், தமிழ் நாடு என்று கலைஞர் பேசி வந்திருக்கிறாரே தவிர, மக்களின் மீது அன்பு பொங்கி அவர் ஆட்சியிலிருக்கும் போதோ, எதிர்க் கட்சியிலிருக்கும் போதோ செய்த பணிகளை யாராவது பட்டியலிட்டால் உதவியாயிருக்கும். அவர் செய்த ஒவ்வொரு திட்டத்துக்கும், அவரது தனி வாழ்க்கை நலம் காரணமாக இருந்திருக்கும்.

4. இலவசத் தொலைக்காட்சித் திட்டம்

மக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அறிவித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தோன்றிய தலைவர்களில் யாருக்கு என்ன திட்டம் தோன்றியது:
அ. மா கோ இராமசந்திரன் - பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம், முதியோர்களுக்கு வேட்டி சேலை, ஏழைப் பெண்களுக்கு திருமணத் திட்டம்.
ஜெ ஜெயலலிதா - பள்ளி மாணவர்களுக்கு மிதி வண்டி, இலவச அரிசி, பள்ளித் தேர்ச்சி பெற்றால் கணினி

ஆ. மு கருணாநிதி
இலவசமாக தொலைக்காட்சி

முதல் பிரிவு, பசிப்பிணி, வறுமைப்பிணி, அறியாமைப் பணி தீர்க்க வேண்டும் என்று கொடுக்கப்படுபவை. இரண்டாவது பார்ப்பவரை மந்தமாக்கும் முட்டாள்பெட்டி. அறுபது ஆண்டு காலம் அரசியல் பார்த்து விட்ட தலைவருக்கு தோன்றிய திட்டம் இது.

5. ஆடம்பர வீடு
திருக்குவளையில் ஏழைத் தந்தைக்கு மகனாகப் பிறந்து போராட்டங்களைச் சந்தித்து, எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கை நடத்திய தலைவரின் வீட்டை என்டிடிவியின் காட்டினார்கள். வீட்டை இல்லை, வீட்டின் வரவேற்பறையை. அவரது மகள் திருமதி கனிமொழி தொலைக்காட்சி நிருபருடன் பேசுகிறார். அவர்கள் அமர்ந்திருந்த மென் இருக்கைகள் மட்டுமே இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிருக்கும். அவர் போகும் ஊர்தி இலட்சக்கணக்கான மதிப்பிலிருக்கிறது.

அவமானமாக இல்லை! தன்னைத் தலைவராகக் கொண்டாடும் தொண்டர்கள் எங்கே, இவரின் வாழ்க்கைத் தரம் எங்கே?

ஏன்? ஓட்டு வீட்டில், கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு என்டிடிவி நிருபர் தமிழினத் தலைவரை பேட்டி காண்பதுதானே தமிழ் நாட்டின் இயல்புக்குப் பொருத்தம். காணி நிலம் வேண்டும், பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் வேண்டும் என்று கனவு கண்ட தமிழன் வாழ்ந்த அதே நூற்றாண்டில் வாழ்ந்த இவர்தான் தமிழினத் தலைவரா?

என்ன செய்து விட்டார் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறோம்?

6. ஸ்டாலின் உயர்ந்த சாதி தகப்பனுக்கு மகனாகப் பிறக்காததுதான் ஒரே தவறாம். ஏன் ஐயா, ஸ்டாலினின் வயதில் இருக்கும் சராசரித் தமிழனின், கலைஞர் வயதில் இருக்கும் ஒர் சராசரி தகப்பனின் நிலைமையை விட என்ன குறைந்து விட்டது உங்களுக்கு. இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?

7. முரசொலி மாறனை இலாகா இல்லாத அமைச்சராக வெளி நாடெல்லாம் அனுப்பு மருத்துவம் பார்த்தாரே தமிழினத் தலைவர்? அவரது தொண்டர்களில் எத்தனை பேருக்கு அந்த வசதி கிட்டிடும்?

8. தொண்ணூற்றி சொச்சம் இருக்கைகளே இருந்தாலும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள ஏன் மனமில்லை? இதையே ஜெயலலிதா செய்திருந்தால் இன்றெல்லாம் பதிவுகள் தூள் பறந்திருக்கும்? கவிதைகள் முரசொலியை நிறைத்திருக்கும். என்ன ஒரு ஆணவம் என்று நாடே குமுறியிருக்கும். செய்திருப்பவர் பெருந்தலைவராயிற்றே, எந்த முணுமுணுப்பும் இல்லை.

கலைஞர் மீது சுமத்தப்படும் புகழ் மொழிகளும், பட்டங்களும், தகுதிகளும் அவருக்கு உண்மையிலேயே பொருந்துமா? அவர் செய்பவையும், சொல்பவையும் படித்த வசதி படைத்த மக்களுக்கு ஏன் கண்ணில் தென்படுவதில்லை?

ஆள்பவரின் செங்கோலின் கீழ்தானே நாடு சிறக்க வேண்டும். இத்தகைய குறுமதியுடைய தலைவர் எப்படித்் திரும்ப திரும்ப ஆட்சியில் அமர்ந்து விடுகிறார்?

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Excellant article all the points are valid.

un honourable chief minister!

Radha N சொன்னது…

நீங்கள் தந்தது தான் சரியான வெகுமதி!

ragasiya snehithan சொன்னது…

தாத்தாவுக்கு(கே) ஒரு குறள்(ளா) :D

யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர்
சொல் லிழுக்குப் பட்டு

(குறளில் தவறு இருப்பின் மன்னித்தருள்க!)

பெயரில்லா சொன்னது…

என்னங்கடா இது? இவர் அரசு செலவில 15ஆயிரம் கொடுப்பாராம் ஜெயலலிதா சொந்தப் (கட்சி) பணத்தில்
தங்கம் கொடுக்கலாமாம். இப்படிக் கூறுபவர் தனது சொந்தப் பணத்தில் தமிழ் நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டாம் தனது தொண்டர்களுக்காவது உதவி செய்தாரா? ஆனால் அரசு செலவில் கூட தனது குடும்ப வருமானத்தை எப்படி பெருக்கலாம் என்று சிந்திப்பவர்தான் இந்தக் கலைஞர்.

இளையவன் (khajanai@gmail.com)

ஸ்ரீ சரவணகுமார் சொன்னது…

இங்கு வலைப்பூக்களை படிக்கும் எத்தனை பேர் வீடு சிறுவயதில் செழிப்பாக இருந்தது. பெரும்பாலனவர்கள் வீட்டில் தரையில் அமர்ந்து தான் சாப்பிட்டுருக்கிறோம். இப்போது நிறைய வசதி வாய்ப்புக்கள். உயர்தர Sofa, Dining Table,etc. எல்லோரும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம். கனிமொழி உயர்தர sofa வில் அமர்ந்து பேட்டி கொடுத்ததில் குறை காண்பதைக் கண்டிக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

சார் பல வருசத்துக்குமுன்னாடியே சொல்லிட்டாரே அவரு
தமிழர்களைப் பார்த்து சேர்ற்றால் அடித்த பிண்டங்கள்னு
அப்புறம் எப்படி இவருக்கிட்டயிருந்து இவருடைய தொண்டர்களே
நல்லத எதிர்பார்க்க முடியும்.....

நாகை சிவா சொன்னது…

நியாமான கேள்விகள். பதில் கூற தான் ஆள் இல்லை.
அன்புடன்
நாகை சிவா

மா சிவகுமார் சொன்னது…

ஸ்ரீசரன்,

கனிமொழி சோஃபாவில் அமர்ந்து பேட்டிக் கொடுப்பதை குறை கூறவில்லை. அந்த சோஃபா இருப்பது கலைஞரின் வீட்டில். கலைஞர் ஒரு தனி மனிதர் இல்லை. பொது வாழ்க்கையில் உள்ள தலைவர். சின்ன வயதில் தரையில் அமர்ந்த நம்மில் எத்தனை பேர், 25 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி? பொது வாழ்க்கையில் தவறான முன் மாதிரி காட்டும் கலைஞருக்கு ஏன் இவ்வளவு புகழுரைகள் என்பதுதான் கேள்வி.

திரு சொன்னது…

"எதிர்க்கட்சிகள் சார்பாக ஒரே கூட்டணியிலிருந்து 69 பேர் வருகிறார்கள். ... எதிரே விஷப்பாம்புகள் மத்தியில் இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் நீங்கள் இருக்க வேண்டும்..."...

ஒரு முதலமைச்சர் தன்னுடைய M.L.A-களுக்கு சொல்லும் அறிவுரையா இது..? என்ன சொல்ல விரும்புகிறார்?
மக்களின் பிரதிநிதிகள் விஷப்பாம்புகளா? பின், சென்ற ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சியினர் (சிலர் தற்போதையா அமைச்சர்கள்!) எல்லாம் விஷப்பாம்புகள் என்பதையும் ஒத்துக்கொள்கிறாரா?

அது சரி.. கருணாநிதியின் நாவடக்கம் பேர் போனது தானே!!!?

வவ்வால் சொன்னது…

நடு நிலைனா வீசம் என்ன விலை என்று கேட்பார் போல் உள்ளது (அம்)மா.சிவகுமார்! கலைஞர் ஒன்றும் சொத்து சேர்க்காதவர் என்று எல்லாம் வக்காலத்து வாங்க வரவில்லை.அவரை விட ஜெ.ஜெ எந்த வகையிலும் எளிமையானவர் அல்ல . ஜெ.ஜெ.ஏதோ அன்றாடம் காய்ச்சி போலவும் தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிப்பது போலவும் சொல்கிறீர்கள்.

ஜெ.ஜெ வின் சிறுதாவூர் பண்ணை வீடு உள்ளே எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது ஆனால் வீட்டின் பரப்பளவை வைத்தே அது ஒன்றும் சிறு குடிசை அல்ல என்று பாமரனுக்கும் தெரியும்.ஜெ.ஜெ விடம் இல்லாத வசதிகளா?அதையும் சொல்லலாமே,ஏதேனும் தொலைக்காட்சில் காட்டினால் தான் சொல்வீர்களா.கவலை வேண்டாம் வெகு விரைவில் முன்பு காலணிக் குவியல்களை வருமானதிற்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கில் சோதனை இட்டப்பொழுது சன் தொலைக்காட்சி காட்டியது போல காட்டும் அப்பொழுது வந்து இதே போல் வலைப்பதிவு போடுங்கள்!

பெயரில்லா சொன்னது…

I strongly condemn calling that Thug as Kalalignar, just write his name, thats enough for that fellow

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

ஜெயலலிதா உத்தமம் என்று சொல்லவில்லை. ஆனால் அவருக்கு இவ்வளவு புகழ் மாலைகளும், சுமக்க முடியாத பட்டங்களும் இல்லை. அவரை சிலுவையில் அறைய பத்திரிகைகளும் படித்தவர்களும் எப்போதும் தயாராக இருக்கின்றனர். கலைஞரோ அறிவுஜீவிகளின் அன்புத் தலைவர், அவரது இரட்டை முகங்கள்தான் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.

Prasanna சொன்னது…

கருணாநிதி அவர்கள் பேசியது எல்லாம் சொன்னா ஒரு நாள் போதாதுங்க. முன்னால ஒரு நண்பர் கேட்டார், நாமெல்லாம் சின்ன வயசுல தரைல உக்காந்து சாப்டோம், இப்போ டேபிள்ல உக்காந்து சாப்பிடலையானு. உங்க தாத்தா 7 ரூவா சம்பளத்துக்கு வேலை பார்த்துட்டு, உங்களுக்கு 6000 கோடிக்கு சொத்து இருக்குறதா இருந்தா அது தப்பு தான? அவர் வாய்கொழுப்பு கொஞ்சமா? மந்திரி குமாரி படத்துல வில்லன் பேசுற முதல் டயலாக் தெரியுமா???
"கொள்ளையடிப்பது ஒரு கலை"
படத்திற்கு வசனம் மு.கருணாநிதி அவர்கள். அதன்படி தான் நடந்து வருகிறார்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி பிரசன்னா.