செவ்வாய், மே 09, 2006

நோயற்ற வாழ்வு - மருந்துகள்

காய்ச்சல் வந்தால் ஒரு குரோசின் சாப்பிடு, தலைவலி வந்தால் அனாசின் சாப்பிடு, விருந்துக்குப் போகும் முன் ஜெலூசில் சாப்பிடு என்று மருந்துகள் நம் வாழ்க்கையில் இன்றியமையா இடத்தைப் பெற்று விட்டன.

"பிரியாணி சாப்பிட்டால் செமிக்காது, உருளைக்கிழங்கு வருவல் சாப்பிட்டால் வாயுத் தொல்லை வந்து விடும், பூரி சாப்பிட்டால் நெஞ்சைக் கரிக்கும்". அதனால் சாப்பிடும் முன்னால் ஒரு ஜெலூசில் சாப்பிட்டுக் கொள்வேன் என்று கூட மாத்திரைகள் உள்ளே தள்ளுகிறோம்.

நாம் உட்கொள்ளும் மருந்துகளில் பெரும்பான்மை, சோம்பேறித் தனத்தையும், ஒழுக்கமற்ற வாழ்க்கை முறையையும் சரிக்கட்டத்தான் பயன்படுகின்றன. பூரி சாப்பிட்டால் நெஞ்சைக் கரிக்கும் என்றால் பூரி சாப்பிடாமல் இருந்து விடுவது அல்லவா புத்திசாலித்தனம். பூரியுடன் வரும் எண்ணெயிலிருந்து உருவான வேதிப் பொருட்களைச் சரிக் கட்ட, இன்னும் சில வேதிப் பொருட்களை சாப்பிடுகிறோம். நம்முடைய உடம்பு ஒரு வேதிவினைக் குடுவை ஆகி விடுகிறது.

வேதியல் ஆராய்ச்சிக் கூடத்தில் பரிசோதனை செய்த எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு வேதி வினையிலும், பக்க விளைவுகளும் பக்க விளை பொருட்களும் உருவாகின்றன. நம்முடைய உடம்பில் ஏராளமான உயிர் வேதி மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. உயில்வேதி வினைகளின் விளைவுகளைப் பயன்படுத்துவதற்கு நமது உறுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவை இல்ல்லாத வேதிப் பொருட்களை வயிற்றுக்குள் அனுப்புவது, நம் உடல் என்னும் கோயிலை பாழ்படுத்துவதற்கு சமமானது.

இன்னொரு வகை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள். மருந்துகளை தயாரித்து விற்கும் நிறுவனங்கள் உலகெங்கும் ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் மதிப்பிலான மருந்துகளை விற்பனை செய்கின்றன. கொடிய நோய்களுக்கு எதிரான மிகச் சில மருந்துகளைத் தவிர பிற மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தாமல் கெடுக்கவே செய்கின்றன.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன.

1. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடாக தேநீரையோ, காபியையோ குடிக்காமல், அறை வெப்பநிலையில் இருக்கும் நீரைக் குடிக்கவும

உடல் துர்நாற்றத்தை விரட்ட, வாயில் நறுமணம் கமழச் செய்ய மருந்து சோப்புகள், சிறப்பு பற்பசைகள் விளம்பரம் செய்யப்படுகின்றன. இரண்டு கட்டி சோப்பை போட்டுத் தேய்த்தாலும், உடலில் இருந்து வரும் வியர்வை அழுக்குடன் சேரும் போது நாற்றம் ஏற்படத்தான் செய்யும். அதை மறைக்க நறுமணத் திரவியங்கள் என்று இன்னொரு பொருள் வரிசையும் உள்ளது.

நல்ல நீரில் எண்ணெய்ப் பசையை நீக்கும் சோப்பு அல்லது மாற்றுப் பொருளைப் பயன்படுத்திக் குளித்தால் தோல் மீதான அழுக்குகள் நீங்கி விடும். ஆனால் உள் கழிவுகளையும் சுத்தம் செய்து விடுவது துர்நாற்றத்தை நீக்குவதற்கு இன்றியமையாததாகும்.

காலையில் எழுந்த உடன், ஒரு லிட்டர் அறை வெப்ப அல்லது வெது வெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடித்தால், இரவு தூங்கப் போகும் முன் இரண்டு மணி நேரங்களுக்கு எந்த உணவும் உண்ணாமல் இருந்தால், காலையில் குளிக்கும் முன் வயிற்றை முற்றிலும் சுத்தம் செய்து கொண்டால், காலையிலோ மாலையிலோ வியர்வை வரும் வரை உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ செய்து வந்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

சிறு குழந்தைகள் கூட, 8.30 பள்ளிக்குப் போக 8 மணிக்கு எழுந்த்து, பல் தேய்த்து, காலைக் கடன்களை சரிவர முடிக்க நேரம் இல்லாமலேயே அம்மாவின் வற்புறுத்தலால் வயிற்றுக்குத் திணித்துக் கொண்டு, சீருடையை மாட்டிக் கொண்டு ஓடுகின்றன. காலையில் துயில் எழுவதற்கும் வெளியே கிளம்புவதற்கும் இடையே குறைந்தது இரண்டு மணி நேரம் இடை வெளி இருக்க வேண்டும் என்று ஒரு விதியை வகுத்துக் கொண்டு, இந்த இரண்டு மணி நேரங்களில் சரியான நீர் உணவு, சத்தான காலை உணவு உண்டு, காலைக் கடன்களையும், உடல் உழைப்பையும் செய்வதாக வைத்துக் கொண்டால் நம்மைப் பீடிக்கும் நோய்களில் பெரும்பகுதி ஓடி விடும்.

அதே மாதிரி இரவு தூங்கப் போகும் முன்னர் இரண்டு மணி நேரங்கள் உடலைப் பேண செலவிடலாம். தேவையான அளவு தண்ணீர் குடித்தல், திட உணவு உண்பதைத் தவிர்த்தல், பல் துலக்குதல், கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ளுதல் என்று உடலுக்கு வளமளிக்கலாம். தொலைக்காட்சி மெகாத் தொடர் பார்த்ததும் தூங்கப் போவது தூங்கும் எட்டு மணி நேரத்தையும் அந்தத் தொடருக்கே தாரை வார்ப்பது போன்றதாகும். ்

கருத்துகள் இல்லை: