ஞாயிறு, மே 14, 2006

சமையல்வாயு விலை உயர வேண்டும்

சமையல் வாயு ஒரு சிலிண்டருக்கு அரசு 113 ரூபாய் மானியம் வழங்குகிறதாம். பணக்காரருக்கும், மத்திய தரத்தினருக்கும், ஏழைகளுக்கும் இதே மானியம்தான். மிக ஏழைகளுக்கு இந்த மானியம் கிடைப்பதே இல்லை, அவர்கள் பயன்படுத்துவது மண்ணெண்ணையும், விறகும்தான.

அப்படிப் பார்க்கும் போது, இந்த மானியம் நியாயப்படுத்தப்பட முடியாதது. இதை உடனடியாக ரத்து செய்து, சமையல் வாயு சிலிண்டர் விலையை அரசு ஏற்றி விட வேண்டும். சமையல் வாயு பயன்படுத்தும் குடும்பங்களில் மாதத்துக்கு 100 ரூபாய் கூடுதல் செலவு சுமையை அதிகரித்தாலும், அது தாங்கக் கூடியதாகவே இருக்கும்.

இப்படி மிச்சப்படும் பணத்தை தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை மேலும் விரிவு படுத்தப் பயன்படுத்தலாம்.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்,
நீங்கள் சொல்வது எல்லாம் சரி .

ஆனால் எனது கேள்வி இது தான்:

ஏதாவது வாக்குறுதிகளை கூறி, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிட நினைக்கும் இக்கால அரசியல் கட்சிகள் இதனை உடனடியாக செயல்படுத்த முன்வருமா?

அப்படியே செயல்படுத்தினாலும் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் நடுத்தர வர்க்கம் இதை ஆதரிக்குமா? அல்லது அரசியல் எதிர் கட்சிகள் தான் சும்மா விடுமா?


அதையும் மீறி மத்திய அரசு இதனை நிறைவேற்றினால், தமிழகத்தை பொருத்தமட்டில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும், புதிதாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கும் தி.மு.க அரசியல் லாபத்திற்காக ஆதரவை திரும்ப பெறும் சூழல் ஏற்ப்பட்டால் என்னாவது?

Bala சொன்னது…

மிகவும் அற்புதமான ஒரு பதிவு.

இது போன்றே, அரசாங்க பேருந்துகளிலும், ரயில் கட்டணங்களிலும், இனி உயர்தர கட்டணம், மத்திய தர கட்டிணம், ஏழைகளூக்கான கட்டிணம் என வசூலிக்கலாம்.

பிரதீப் சொன்னது…

ஆந்திர அரசு இப்படி ஒரு யோசனையை மத்திய அரசு மூலம் முன் வைத்திருக்கிறது.
சலுகை விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுவை மத்திய அரசு நேரடியாக வழங்காமல் மாநில அரசுகள் மூலம் ரேஷன் பொருட்களைப் போல் வழங்கலாம் என்று வலியுறுத்தி இருக்கிறது.

இது ஒரு நல்ல யோசனை.

மா சிவகுமார் சொன்னது…

அனானி,
மத்திய தர மக்களின் அரசியல்தான் இப்போது பெரிய பிரச்சனை. ஊடகங்கள் போடும் கூச்சலைத் தவிர்க்க விரும்பி அரசியல்வாதிகளும் தேவையற்ற மானியங்களை ஒழிக்கத் தயங்குகிறார்கள். இது மாற வேண்டும் என்றால், நடுத்தர மக்களின் மனப்பான்மை மாற வேண்டும்.

பாலா,

ரயில்களில் ஏற்கனவே அப்படி உள்ளது. முதல் வகுப்புக்கும், முன்பதிவில்லா வகுப்புக்கும் உள்ள கட்டண வேறுபாடு பணம் படைத்தவர் கொடுக்கும் வரி என்று வைத்துக் கொள்ளலாம்.

பிரதீப்,

நானும் கூட அப்படி எழுத நினைத்தேன். ஆனால், நியாய விலைக் கடைகளில் ஏற்கனவே நடக்கும் அநியாயங்களில் இதுவும் சேர்ந்து கொண்டால் ....

மா சிவகுமார் சொன்னது…

இல்லை மூர்த்தி, அப்படி ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

தமிழகத்தின் சத்துணவுத் திட்டம் விளைவித்த சமூக மாறுதல்களை நாம் அனைவரும் கண்கூடாக கண்டுள்ளோம். நலிந்த பிரிவினரைக் கைத்தூக்கி விடும்படியான அரசு திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான்.

அன்புடன்,