வெள்ளி, மே 12, 2006

குழந்தைகளின் பசி தீர்ப்போம்

1. ஐந்து வயதுக்குள் இறந்து விடும் ஐந்து லட்சம் இந்தியக் குழந்தைகள், சரியான உணவு எளிய ஆரோக்கிய உதவிகள் மூலம் காப்பாற்றப்பட முடியும்.
2. இந்தியாவில் நூற்றுக்கு 47 குழந்தைகள் சரியான சாப்பாடு கிடைக்காமல் வளர்கின்றன.

இந்து பத்திரிகையில் இரண்டாவது தலையங்கமாக மே10 அன்று வடிக்கப்பட்ட இந்த பிரச்சனை எத்தனை பேரை போய்ச் சேர்ந்திருக்கும்? உலகத்திலேயே எத்தியோப்பியாவும் இந்தியாவும்தான் இவ்வளவு மோசமாக உள்ளன. சீனாவில் 8% குழந்தைகள்தான் ஊட்டச் சத்து போதாமல் உள்ளன.

இந்தியா ஒளிர்கிறது. பங்குச்சந்தை குறியீடு பத்தாயிரத்தைத் தாண்டி விட்டது, தங்க விலை பத்து கிராமுக்கு பத்தாயிரமாகி விட்டது என்பதெல்லாம் முதல் பக்கத்தில் எட்டு பத்தி தலைப்புச் செய்திகளாக வெளி வரும் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிக்கை நமது செய்தி ஏடுகளுக்கு ஒரு மூலையில் போட்டு விட வேண்டிய செய்தி ஆகி விட்டது.

இந்தியர்களால், இந்தியர்களுக்காக நடைபெறும் ஆட்சி என்றால், மத்திய மாநில அரசுகள் இந்தச் செய்தியை பேரவமானமாக அறிவித்து, அடுத்த ஒரு ஆண்டுக்குள் சாப்பாடு போதாமல் வளரும்/இறக்கும் குழந்தைகளை இல்லை என்று செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா? தமிழகத்தின் மதிய உணவுத் திட்டம் போல, நாடெங்கும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்தான காலை உணவும், மதிய உணவும், மாலை உணவும் பள்ளிக் கூடங்களிலும், தாய் சேய் நல விடுதிகளிலும் வழங்க எத்தனைக் கோடி செலவாகி விடும்?

வண்ணத் தொலைக்காட்சி வழங்கி விட முடியும் என்று உறுதி அளிக்கும் மத்திய நிதியமைச்சர், அதை விட குறைந்த செலவில் குழந்தைகளுக்கு சாப்பாடு போடும் திட்டத்தை செயல்படுத்தி விட முடியுமா என்று கணக்கிடுவாரா?

குழந்தைகளை பிச்சைக்காரர்கள் ஆக்கி விடக் கூடாது, பெற்றோர்களை பொறுப்பற்றவர்களாக்கி விடக் கூடாது என்ற விவாதங்களை எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்வோம். இது மூன்று வேளை பசியாறும் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானமான செய்தி. இதை முதலில் துடைப்போம்.

இதற்கு தனி மனிதர்களாக நாம் ஏதாவது செய்ய முடியுமா? அல்லது அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டு விட்டு நமது தங்க நகைகள் வாங்கலிலும், வரி தவிர்த்தல்களிலும், மானியத்தில் விற்கப்படும் சமையல் வாயு வாங்கி பணம் சேமிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம்.

நாம் என்ன செய்ய முடியும்?

1. தங்க நகைகள்
நாம் செலவளிக்கும் ஒவ்வொரு தொகையும் மூன்றாகப் பிரிகிறது. நிலத்துக்கான வாடகை, தொழிலாளியின் சம்பளம், முதலாளியின் முதலீட்டுக்கான லாபம். சந்தையில் கத்திரிக்காயின் விலை கிலோவுக்கு பத்து ரூபாய் என்றால் அதில் ஒரு பகுதி அது பயிரிடப்பட்ட நிலத்தின் சொந்தக்காரருக்கும், ஒரு பகுதி அதில் உழைத்த விவாயியின் கூலியாகவும், ஒரு பகுதி கன்று வாங்கல், நிலத்தை குத்தகைக்கு எடுத்தல், வேலைக்கு ஆள் வைத்தல் என்று தன் முதலை முடக்கிய விவசாயிக்கு லாபமாகவும் போய்ச் சேரும்.

நாம்் சேமிப்பைப் பயன்படுத்தி ஒரு தொழில் ஆரம்பிக்க உதவினால், அது அந்தத் தொழிலுக்குத் தேவையான முதல் ஆகி விடுகிறது. அந்த முதல் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்கவும், மூலப் பொருட்கள்/எந்திரங்கள் வாங்கவும் பயன்பட்டு, பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து, நமக்கு லாபத்தையும் ஈட்டித் தந்து விடும்.

நாம் தங்கம் வாங்கும் போது கொடுக்கும் பணம் எங்கே போகிறது? ஒரு சிறு பகுதி நகை வேலை செய்யும் தொழிலாளிக்குப் போகிறது, ஒரு சிறு பகுதி நகைக்கடை ஊழியர்களின் ஊதியமாக மாறுகிறது, இன்னும் ஒரு பகுதி தங்கத்தை இறக்குமதி செய்து நகையாக மாற்றி விற்கும் கடைக்காரருக்கு லாபமாகப் போகிறது. இது எல்லாம் நம் சமூகத்துக்குள்ளேயோ, வெளி நாடுகளிலோ ஆக்க பூர்வமான கைகளில்தான் போய்ச் சேருகின்றன. ஆனால், தங்கம் கிராமுக்கு 1000 ரூபாய் என்றால் அதில் பெரும்பகுதி (900 ரூபாய என்று வைத்துக் கொள்வோம்) தங்கச் சுரங்கத்தின் சொந்தக்காரர்களான தனி நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ போய்ச் சேருகின்றன. அப்படி உழைக்காமல் கிடைக்கும் பணம் உருப்படியாகப் பயன்படாமல், ஆயுதங்கள் செய்யவும், போதை மருந்துகள் கடத்தவும், ஆடம்பர வாழ்க்கையிலுமே பயன்படுகின்றன.

நாம் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும், இந்திய குழந்தை ஒன்றின் வயிற்றுக்குப் போக வேண்டிய உணவுக்கான பணத்தை பண முதலைகளிடம் கொண்டு சேர்க்கின்றது. இதில் ஏதாவது ஐயம் இருந்தால், தெளிவு படுத்தத் தயாராக இருக்கிறேன். அதற்காக சேமிப்பை எல்லாம் தானமாக கொடுத்து விடச் சொல்லவில்லை. சேமிப்பை சரியான வழிகளில் முதலீடு செய்தால் போதும்.

2. வரி தவிர்த்தல்
வருமான வரியைத் தவிர்க்க சேமிப்புப் பத்திரங்கள், வேலை பார்க்கும் நிறுவனத்தின் துணையோடு வரவினங்களை பல்வேறு தலைப்புகளில் பிரித்துக் கொள்ளுதல் இவை அனைத்தும் அரசின் கைகளில் போய்ச் சேரும் பணத்தைத் தடுத்து நிறுத்தி, அரசு குழந்தைகள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதைத் தடுத்து விடுகின்றன.

3. மானிய விலை சமையல் வாயு
ஒவ்வொரு முறை அரசு நிறுவனங்களிலிருந்து சமையல் வாயு சிலிண்டர் வாங்கும் போதும் அரசு 100 ரூபாய்களுக்கு மேல் மானியம் அளிக்கிறது. நம்மால் இந்த நூறு ரூபாய் விலை உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாதா? இந்த மானியத்தை ரத்து செய்தால் அரசின் கையில் ஏழைக்கு உணவிட பணம் மிஞ்சி விடாதா?

நாம் என்ன செய்யலாம்? என்னுடைய சொந்த வாழ்வில், இன்று முதல் எனக்கு வரும் வருமானத்தில் 10% குழந்தைகளின் பசி தீர்க்க ஒதுக்கப் போகிறேன். இதை எப்படிச் செலவளிப்பது என்று எனக்குப் புரியவில்லை. வரும் நாட்களில் கண்டிப்பாக ஒரு வழி தெரியும்.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இப்படி ஒரு நிதியை உருவாக்கலாம்:

1. இனிமேல் தங்க நகை வாங்கும் சகோதரிகள் அதன் விலையில் 10% இந்த நிதியில் சேர்த்து விடுங்கள்்.
2. ஓவ்வொரு முறை கேஸ் சிலிண்டர் வாங்கும்போடும் 100 ரூபாய் இந்த நிதியில் சேர்த்து விடுங்கள்.
3. கையில் இருக்கும் தங்க நகைகளில் பத்தில் ஒரு பகுதியை இந்த நிதியில் சேர்த்து விடுங்கள்.
4. நிலம் வாங்கி விற்கும் போது பதிவுக் கட்டணத்தை குறைக்க பத்திரத்தில் விலையைக் குறைவாக குறிப்பிட்டால், அந்த லாபத்தை இந்த நிதியில் சேர்த்து விடுங்கள்.

அரசுகளை நம்ப முடியாது என்ற இந்த நாட்களில் இந்த நிதியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு இறைவன் வழி காட்டுவான்.

கருத்துகள் இல்லை: