செவ்வாய், மே 16, 2006

செல்வி ஜெயலலிதாவுக்கு சில ஆலோசனைகள்.

அதிமுக பொதுச் செயலாளரும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு எனது வணக்கங்கள். ஐந்து ஆண்டுகள் மாநில முதலமைச்சராக இருந்து ஒரு நாளைக்கு 20 மணி நேரத்துக்கு மேல் மக்களுக்காக உழைத்ததாகக் கூறினீர்கள். இப்போது உங்கள் கட்சி எதிர்க்கட்சியாகி விட்டது. ஆட்சி "பரம்பரை" எதிரி மு கருணாநிதியின் கையில் போய் விட்டது.

ஆனால், உங்கள் நாட்களில் அதே 24 மணி நேரங்கள் உள்ளன. அரசின் முழுப்பாரத்தையும் சுமந்த நீங்கள் (ஒப்புக்கு இருந்த அமைச்சர்களின் வேலையையும் நீங்களதான் பார்த்திருப்பீர்கள்!), இப்போது அந்த உழைப்பை பயன்படுத்த சில எண்ணங்கள்.

ஒரு அரசியல் தலைவராக, மக்கள் தொண்டராக, கட்சிப் பொதுச்செயலாளராக நீங்கள் என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது? முதலில் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் குறிக்கோள்களைப் பார்போம்.

1. அரசியல் தலைவர் - இனி வரும் காலங்களில் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு உயர் பதவிகளை அடைய வேண்டும். மாநிலத்தை நாட்டிலேயே முதலாவதாகவும், ஏன், இந்தியாவை உலக அரங்கில் முதலிடம் பிடிக்கச் செய்யவும் உழைக்க வேண்டும்.

2. மக்கள் தொண்டர் - இன்றைய ஆட்சியில் மக்களுக்கு நல்லது கிடைக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெற வேண்டும்.

3. கட்சிப் பொதுச்செயலாளர் - அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் கட்சி வெற்றி பெற வேண்டும், அடுத்த சட்ட மன்ற தேர்தலில் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளின் தயவு, இலவசங்களை அறிவித்து மக்களை மகிழ்விக்க முனைவது இவற்றை எல்லாம் நம்பித்தான் போட்டியிட வேண்டும் என்ற நிலை இல்லாமல் அடுத்த தேர்தலை சந்திக்க என்ன செய்ய வேண்டும்? கடைசியில் வாக்கு அளிக்கப் போவது மக்கள்தான். கூட்டணிக்கு திட்டங்கள் தீட்டுவதை விட, மக்களை நேரடியாக அணுகுங்கள். கடைசி நேரத்தில் சூறாவளி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளாமல் அடுத்த ஆண்டுகளில் மாபெரும் மக்கள் தொடர்பு திட்டத்தை செயல்படுத்துங்கள்.

1. தவறாமல் சட்ட சபைக்குச் செல்லுங்கள். முதலமைச்சராக இருந்து எதிர்க் கட்சியினரின் வாய் அடைந்து போகும்படி, புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்து வாதம் புரிந்த அதே பாணியில் இப்போது, ஆளும் கட்சிக்குக் கிடுக்கிப் பிடி போடுங்கள். ஆளுங்கட்சியினர் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று உங்களுக்குத் தோன்றினாலும், 60 உறுப்பினர்களின் துணையோடு நீங்கள் எதையும் சமாளிக்கலாம்.

2. சட்ட சபை கூடாத நாட்களில் மாதத்துக்கு ஒரு மாவட்டம் என்று ஒவ்வொரு மாவட்டமாக முகாமிடுங்கள். "ஓட்டுக் கேட்க மட்டும் வந்து விட்டு அப்புறம் மறந்தே போய் விடுவார்கள் இந்த அரசியல்வாதிகள்" என்ற மக்களின் விரக்தியை உடையுங்கள். உங்கள் கட்சிப் பிரதிநிதிகளுடனும், சட்ட மன்ற உறுப்பினர்களுடனும் கிராமம் கிராமமாகச் சென்று சாதாரண மக்களைச் சந்தியுங்கள். அவர்களின் குறை நிறைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள். சாதாரண தொண்டன் வீட்டில் ஒரு வேளை உணவு உண்ணுங்கள்.

3. உங்கள் கட்சி உறுப்பினர்களின் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியையும், ஏன் உங்கள் சொந்தப் பணத்தையும் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். விஜயகாந்த் நடிகராகச் செய்தது போல, மருத்துவ முகாம்கள், உதவிப் பொருட்கள் வழங்கும் விழாக்கள் நடத்துங்கள். ஐந்து ஆண்டுகள் முடிவில் உங்கள் சொத்துகள் கரைந்திருக்கலாம். ஆனால் மக்களின் ஆதரவு என்ற அழியா செல்வத்தை ஈட்டியிருப்பீர்கள்.

4. மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கு சரியான தீர்வு கிடைக்கா விட்டால் மக்களாட்சி வழியில் போராட்டங்களை நடத்துங்கள். அறிக்கைகள் விடுங்கள்.

5. நேரம் கிடைத்தால் பிற மாநிலங்களுக்கும் பயணம் செய்யுங்கள். அங்குள்ள தலைவர்கள், பொது மக்களை சந்தித்து அவர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களது நிலைமையை தெரிந்த்து கொள்ளவும் முயலுங்கள்.

6. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் அமைப்புகளின் கூட்டங்களில் கலந்து கொண்டு உங்கள் திட்டங்களையும், எண்ணங்களையும் பறை சாற்றுங்கள்.

7. பத்திரிகை நிருபர்களை அடிக்கடிச் சந்தித்து பேட்டி கொடுங்கள். பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுங்கள்.

இப்படி பல்வேறு தரப்பு மக்களின் மனதில் நீங்களும் உங்கள் கட்சியும் இடம் பிடித்து விட்டால் அடுத்த தேர்தலில் யாருடனும் கூட்டுச் சேராமல், தனித்து நின்றே 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும், பெரும்பான்மை சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பெற்றுவது சாத்தியமாகி விடும்.

1980ல் உங்கள் தலைவரின் வழிகாட்டுதலில், அதிமுக திமுக-காங்கிரசு கூட்டணியை மண்ணைக் கவ்வச் செய்து பெரும்பான்மை பெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அப்படி அதிமுக வெற்றி பெறும்போது, தேசிய அரசியலில் பங்கு ஆற்றும் வண்ணம் இந்திய அளவிலான உங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்னும் 25 ஆண்டுகளுக்கு முழு நேர அரசியலில் பணியாற்ற வயதும் ஆற்றலும் உள்ள நீங்கள் இந்தியாவின் பிரதமராக வருவது கூடச் சாத்தியம்தான்.

அதற்காக உங்கள் செயல்களை சிறிது மென்படுத்தி, மற்றவர்களுக்கு பெரிதும் மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் நலம் விரும்பும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களில் ஒருவன்

8 கருத்துகள்:

ரவி சொன்னது…

கிளம்பிடாங்கய்யா !!! கிளம்பிடாங்கய்யா !!!

மா சிவகுமார் சொன்னது…

எல்லாம் ஒரு நப்பாசைதான், :-)

எண்ணங்களை சொல் வடிவில் வெளிப்படுத்தினால் நிறைவேறி விடாதா என்ற பேராசைதான். எப்போதும், கேடு கெட்ட நிகழ்வுகளையே பேசிக் கொண்டிருக்காமல் எப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று கற்பனை செய்யப் பழகிக் கொள்ளலாம். கனவு காண்பதுதானே, அது நனவாவதின் முதல் படி.

பிரதீப் சொன்னது…

அவங்க கேக்குறாங்களோ இல்லையோ... யோசனை நல்ல யோசனைதானுங்களே...
இன்னும் ஒரு மக்கள் தலைவர் உருவாகலைங்கற மாயையை உடைக்கவாச்சும் அவங்க முயற்சி செய்யலாமே..

மா சிவகுமார் சொன்னது…

பிரதீப்,

எல்லா தலைவர்களுமே இப்படித்தானே இருக்க வேண்டும்!

வங்கிகளில் கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளைப் பாராட்டி விழா எடுக்கும் கதையாக, சரியான அரசியல்வாதியாக ஒருவர் நடந்து கொண்டால் நாம் விழா எடுக்கும் நிலைதான் உள்ளது.

பெயரில்லா சொன்னது…

hi boy

crow is crow. no one can change her

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

காக்கா கறுப்பாக இருப்பது தப்பில்லை. ஆனால் எந்த மனிதனும் தன் இயல்புகளை மேம்படுத்திக் கொள்வது அவரது கையில்தான் உள்ளது. ஜெயலலிதா இப்படி நடந்து கொண்டால் வேண்டாம் என்றா சொல்வோம்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி 3signs.

பெயரில்லா சொன்னது…

பாலு ஜுவல்லரியை பற்றி உங்களுக்கு தெரியுமா?