ஞாயிறு, மே 14, 2006

பார்த்தீனியத்தை அழிக்க ஒரு எளிய முறை

பார்த்தீனியம் என்ற செடியின் மகரந்தம் மூச்சிழைப்பு போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றது. பெங்களூரில் மட்டுமே இருந்த இந்த செடி சென்னையிலும் வளர ஆரம்பித்து விட்டது என்ற பீதி நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது பரவியது. எங்களுடைய என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர், இது மாதிரியான சமூகப் பிரச்சனைகளில் கல்லூரி என்எஸ்எஸ் ஈடுபட வேண்டும் என்று கருதுபவர்.

ஒரு நாள் எல்லா தேசிய சேவைத் திட்ட உறுப்பினர்களையும், ஒரு வாளியும் இரண்டு கிலோ உப்பும் வாங்கிக் கொண்டு கல்லூரி முன்னால் கூடச் சொன்னார். எல்லோரையும் 23சி பேருந்தில் ஏற்றி, எழும்பூர் கூவம் நதிக் கரையில் இருந்த ஒரு அரசு அலுவலக வளாகத்திற்கு அழைத்துப் போனார். வாளியில் தண்ணீர் எடுத்து உப்பைக் கரைத்தோம். உப்பு அடர்கரைசலாகும் வரைக் கரைத்தோம். பிறகு, அந்த உப்புத் தண்ணியை பார்த்தீனியம் செடிகளின் மீது தெளித்தோம்.

அந்தச் செடிகள் ஓரிரு நாட்களில் பட்டுப் போய் விடும் என்று உறுதி அளித்தார். உண்மையிலேயே அவை பட்டுப் போயினவா என்று போய்ப் பார்க்கவில்லை.

சமீபத்தில் புதிதாகச் சென்ற வீட்டின் முன்பு சாலையின் இரண்டு பக்கங்களிலும் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துக் கிடப்பதைக் கண்டு பழைய மருத்துவத்தைச் செய்து பார்த்தேன். அயோடின் சேர்க்கப்படாத கல் உப்பு இரண்டு கிலோ ஒரு வாளியில் கலக்கி ஊற்றியதும் இரண்டு நாட்களில் உண்மையிலேயே அத்தனை செடிகளும் பட்டுப் போய் விட்டன.

6 கருத்துகள்:

சங்கரய்யா சொன்னது…

நல்ல பதிவு. நான் பார்த்தீனியம் செடியினைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அச்செடி எப்படியிருக்கும் எனத் தெரியாது. அச்செடியின் படம் இருந்தால் பதிவில் சேர்க்கவும், மேலும் அச்செடியின் தாவரவியல் பெயரினையும் அறியத்தரவும்

மா சிவகுமார் சொன்னது…

கூகிள்தான் நமது தோழன்.

இந்தச் சுட்டியில் ஒரு படம் உள்ளது.
http://www.iprng.org/

செடியின் தாவரயியல் பெயர்
Parthenium hysterophorus L.

இந்தச் சுட்டியில் பல படங்கள் சுழற்சி முறையில் காண்பிக்கப்படுகின்றன.
http://www.iprng.org/IPRNG-Main.htm

வவ்வால் சொன்னது…

பார்த்தீனியம் களையின் பரவல் இப்பொழுது அந்த அளவுக்கு இல்லை என்றே சொல்லலாம்.மேலும் சில விவரங்களையும் நீங்கள் சேர்த்து சொல்லி இருக்கலாம்.

எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன்.ஒரு பகுதியில் பார்தீனியம் வளர்வது அந்த பகுதியின் மாசு அளவினை காட்டும் அளவு கோல் ஆகும்.காற்றில் கரியமில வாயுவின் அடர்த்தி மிகுதி என்பதை சுட்டி காட்டும் ஒரு அளவு கோல்.

பார்த்தீனியம்க்கு வேறு பெயர் "காங்கிரஸ் வீட்" ஒரு செடி முளைத்தால் போதும் உடனே பல்கி பெருகி விடும். காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளை போல! ஆஸ்திரேலியாவிலிந்து கோதுமை இறக்குமதி செய்த போது அதனுடன் கலந்து இந்தியாவிற்கு இறக்குமதி ஆன அந்நிய களைச்செடி இது! நமது நாட்டு "க்வாரன்டைன்" அந்த லட்சணத்தில் இருக்கிறது!

உப்பு கரைசல் ஊற்றியது போல பார்தீனியம் அழிக்க சோப்பு கரைசல் நீர் ஊற்றினாலும் அழிந்து விடும்.இதற்காக தனியாக சோப்பு போட்டு கரைக்க வேண்டாம் துணி துவைத்த நீர் போதும்.ஆனால் அடர்த்தியாக இருக்க வேண்டும்.செடி காய்ந்து போக காரணம் "பின் சவ்வூடு பரவல்" நிகழ்வதே

மா சிவகுமார் சொன்னது…

நன்றி வவ்வால், பயனுள்ள தகவல்கள்.

ஆதம்பாக்கம், ஜீவன் நகரில் இந்தச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. எங்கள் தெருவில்் நான் பெரும்பகுதியை அழித்து விட்டேன். நீங்கள் சொன்னது போல இன்று தரை துடைத்த சோப்புத் தண்ணியில், உப்பு கரைத்து சில செடிகள் மீது ஊற்றினேன். நமது மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டியது மிக அவசியம்.

வஜ்ரா சொன்னது…

பார்த்தீனியத்தில் Anti-Cancer மருந்து இருப்பதாகச் செய்தி. அதை இந்தியாவில் Cancer research institute Bombay கண்டுபிடித்திருக்கிறதாம், தகவல் தெரிந்தவர்கள் எடுத்துச் சொல்லவும்!

ஆனால் பார்த்தீனியத்தினால் தொல்லை தான். வெளி நாட்டுச் செடி, இயற்கையான எதிரிகள் கிடையாது. தீர்த்துக் கட்டுவது தான் நல்லது.

வஜ்ரா ஷங்கர்.

மா சிவகுமார் சொன்னது…

ஷங்கர்,

பார்த்தீனிய இலைகளையும், வேர்களையும் மருந்தாக பயன்படுத்துவதாக ஒரு வலைப்பக்கத்தில் http://www.hort.purdue.edu/newcrop/CropFactSheets/parthenium.html
படித்தேன்.