புதன், ஜூன் 28, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 11

காந்தி தன் வாழ்வில் இரண்டு முறை வன்முறை கூட்டங்களினால் அடித்துத் துவைக்கப்பட்டிருக்கிறார்.

முதல்முறை, தென் ஆப்பிரிக்காவில் போராடி வரும் நேரத்தில் இந்தியா திரும்பி விட்டு மனைவி மக்களுடன் திரும்ப தென் ஆப்பிரிக்க போன சமயம். அவர் சென்ற எஸ் எஸ் கூர்லாந்து என்ற கப்பலுடன் நாதேரி என்ற இன்னொரு கப்பலும் அதே நேரத்தில் மும்பையில் இருந்து நேட்டால் துறைமுகத்தை நோக்கிச் சென்றன. இரண்டு கப்பல்களும் ஒன்றாக துறைமுகத்தை அடைந்தன.

காந்தி இந்தியாவில் தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் பிரச்சாரம் செய்தார், இப்போது இந்தியர்களை குடியேற்றி தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களை அச்சுறுத்தும் வண்ணம் இரண்டு கப்பல் நிறைய பிணைக்கப்படாத சுயேச்சை இந்தியர்களைக் கூட்டி வந்துள்ளார் என்று வெள்ளை அரசியல்வாதிகளும், சமூகத் தலைவர்களும் பிரச்சாரம் செய்து மக்களைக் கோபப்படுத்தியிருந்தனர்.

கப்பல்களை கரைசேர விடாமல் திருப்பி அனுப்ப முயற்சிகள் நடைபெற்றன. அரசில் உயர் பதவியில் இருந்தவர்களு கூட இந்தியர்களுக்கு எதிரான இந்த முயற்சிகளை தூண்டி விட்டனர். 23 நாட்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் கப்பல்களை கரைக்கு வரவும், பயணிகளை கரையிறங்கவும் அதிகாரிகள் அனுமதித்தனர்.

தனது மனைவியையும் குழந்தைகளையும் முன் கூட்டியே வண்டியில் அனுப்பி விட்டு, காந்தி லாட்டன் என்ற வெள்ளை நண்பர் ஒருவருடன் கால்நடையாக போவது என்று முடிவு செய்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் அவரை அடையாளம் கண்டு கூச்சல் இடவே, ஒரு கலவரக் கூட்டம் கூடி விட்டது.

தன் நண்பரிடமிருந்து பிரிக்கப்பட்ட காந்தி கூட்டத்தின் கையில் தர்ம அடி வாங்க ஆரம்பித்தார். ஒரு வீட்டின் வெளிப்புற அளியைப் பிடித்துக் கொண்ட காந்தியின் மீது அடிகளும், உதைகளும் சரமாரியாக விழுந்தன. அந்த சமயம் அங்கு தற்செயலாக வந்த காவல்துறை உயர் அதிகாரி அலெக்ஸாண்டரின் மனைவியின் தலையீட்டால் அவர் உயிரோடு தப்பினார். அதற்குள் வெள்ளையர்கள் காந்தியின் முகத்திலும், உடலிலும் குத்துகளைப் பொழிந்து விட்டிருந்தனர். அவரது தலைப்பாகைப் பிடுங்கப்பட்டிருந்தது. அவர் வெள்ளையர்களால் காலால் உதைக்கப்பட்டிருந்தார்.

"அவருக்கு நடந்ததற்கு காந்தி தன் வாழ்நாள் முழுவதும் எல்லா வெள்ளை முகங்களையும் வெறுத்திருக்கலாம்" என்று குறிப்பிடுகிறார் ஆக்ஸ்போர்டு பேராசிரியர் எட்வர்டு தாம்ஸன். ஆனால் காந்தி, தன்னைத் தாக்கியவர்களை சட்டத்தின் மீது தண்டிக்க முனைய மறுத்து விட்டார். அவர்கள் செய்ததற்கு பொறுப்பாளிகள், அவர்களைத் தூண்டி விட்ட தலைவர்கள்தான், அந்தத் தலைவர்களும் தான் குற்றமற்றவன் என்று தெரிந்தால் கண்டிப்பாக மனம் மாறுவார்கள் என்று கூறி வெள்ளைச் சமூகத்தின் அத்தகைய தலைவர்களில் ஒருவரான அரசு வழக்குரைஞர் எஸ்கோம்பிடம் தனது முடிவைத் தெரிவித்து விட்டார்.

இதற்குப் பிறகு அவர் குற்றுயிராகத் தாக்கப்பட்டது பதான் இனத்தைச் சேர்ந்த முரட்டு தேசியவாதிகளால். இந்தியர்கள் அடையாள அட்டை வாங்குவதை கட்டாயப்படுத்தும், இந்தியர்களை அடையாள அட்டைக் கேட்டுத் தேடும் உரிமையை காவல் துறைக்கு வழங்கும் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி காந்தி உட்பட பல இந்தியர்கள் சிறைக்குப் போனார்கள். சிறையிலிருந்து நேராக ஜெனரல் ஸ்மட்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்த அழைக்கப்பட்ட காந்தி இந்தியர்கள் தாமாக முன்வந்து பதிவு செய்து கொண்டால், கறுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற சமரசத்தை ஏற்றுக் கொண்டார்.

காந்தி பதினைந்தாயிரம் பவுண்டுகள் வாங்கிக் கொண்டு இந்தியர் நலன்களை விற்று விட்டார் என்று மீர் ஆலம் என்ற முரட்டு பதான் குற்றம் சாட்டினார். பதிவு செய்யச் செல்லும் எந்த இந்தியனையும் தான் கொல்லப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

அப்படியே முதல்முதலில் பதிவு செய்யப் போன காந்தியை ஒரு குழுவாகச் சேர்ந்து நையப் புடைத்து விட்டனர்.

தன்னைத் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட காந்தி அவர்களை விடுதலை செய்து விடுமாறும், அவர்கள் மீது எந்த வழக்கையும் தொடரப் போவதில்லை என்றும் சொல்லி விட்டார்.

அதன் பின்பு, கறுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படாமல் சத்யாகிரகம் மீண்டும் ஆரம்பித்தது.

(லூயி பிஷர் எழுதிய காந்தி வாழ்க்கைக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவை இந்த சம்பவங்கள்)

நாம், ஒருவர் ஒரு சுடுசொல் சொல்லி விட்டார் என்று வாழ்நாள் முழுவதும் அவர் முகத்திலேயே விழிக்க மாட்டோம் என்று இருக்கிறோம். நம்மைப் படைத்துக் காக்கும் இறைவன் நம் தவறுகளுக்காக நம்மைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டால் நமக்கு விடிவே இல்லை என்று உணர்ந்தால் எந்த சக மனிதன் மீதும் கசப்பையும் வெறுப்பையும் வைத்துக் கொள்ளவே மாட்டோம்.

2 கருத்துகள்:

VSK சொன்னது…

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. [155]

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல். [158]

மா சிவகுமார் சொன்னது…

நல்ல பொருத்தமான குறள்கள் அய்யா!

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றிய மிகச் சிறந்த கிருத்துவர் காந்தி, ஆனால் அவர் கிருத்துவ மதத்தில் இல்லை என்று மதப் பற்றாளர்கள் குறைப்பட்டனராம். அறத்துப் பாலில் பல குறள்களுக்கு வாழும் உதாரணமாக விளங்கியிருக்கிறார் அவர், அதை அழகாக சுட்டிக் காட்டி விட்டீர்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்