செவ்வாய், ஜூன் 27, 2006

திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கை

அதிமுக தோற்று திமுக தலைமையிலான கூட்டணி வென்றால் என்னென்ன நல்லது நடக்கும் என்று நினைத்தோமோ அதில் பலவற்றில் மண்ணள்ளிப் போட்டாயிற்று.

ஜெயலலிதா மக்களாட்சி மரபுகளைக் குழி தோண்டிப் புதைத்து ஆணவமாக நடந்து கொண்டார் என்று சொன்ன நீங்கள் இன்றைக்கு அவர் செய்த அதே தவறுகளை அவர் பெயரைச் சொல்லியே நியாயப்படுத்தி செய்கிறீர்கள்.
  1. சட்ட சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கூண்டோடு நீக்கம் செய்தல்
  2. அவைத் தலைவரை கட்சி உறுப்பினர் போல நடக்கச் செய்தல்
  3. எதிர்க்கட்சியினர் பேசும் போது குறுக்கே குறுக்கே பேசி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை ஆக்கிரமித்தல்
  4. தனக்கு மாறான கருத்துகளை ஒரு பத்திரிகை எழுதினால் அதன் மீது சகிப்பின்மையைக் காட்டுதல். கண்ணகி சிலை பற்றி மாற்றுக் கருத்தை எழுதி விட்டதால் ஊடகங்கள் எல்லாம் பார்ப்பனச் சதிக்கூட்டங்கள் என்று வெறுப்பை உமிழும் நீங்கள் ஜெயலலிதாவை விட எந்த விதத்தில் உயர்த்தி?
  5. பெட்ரோல் விலை ஏறியது, எதிர்க்கட்சியிலிருந்த போது மாநில அரசு விற்பனை வரியைக் குறைக்கக் கோரிய நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வீர்கள் என்பதுதானே உங்களுக்கு வாக்களித்தவர்களின் எண்ணமாயிருந்திருக்கும். அவர்கள் எனக்கு என்ன பதிலைச் சொன்னார்களோ அதே பதில்தான் நானும் அவர்களுக்குச் சொல்லுவேன் என்றால் ஏன் ஆட்சி மாற்றம்?
  6. அதிகாரிகளைப் பந்தாடினார்கள், குறிப்பிட்ட குடும்பத்தை வளர்த்தார்கள் என்றெல்லாம் வெறுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு மாற்றாக வந்த உங்களின் நடவடிக்கைகள் என்ன வேறுபாட்டைக் காட்டுகின்றன?
  7. கூட்டணிக் கட்சியினரைத் துச்சமாக மதித்தார் என்ற ஜெயலலிதாவுக்கும் காங்கிரசைக் கிள்ளுக்கீரையாக மிதிக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்றும் வென்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒருவரை அமைச்சராக்கியுள்ளீர்கள். தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முதிர்ச்சி ஏன் இல்லாமல் போய் விட்டது. தேர்தலுக்கு முந்தைய உடன்பாடு என்று என்ன ஒரு சாக்கு.
இப்படிச் செயல்படுங்கள்
  • இரண்டு ரூபாய்க்கு அரிசி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கிடு, கோயில்களில் சம உரிமை என்று நீங்கள் செய்யும் சீர்திருத்தங்களைத் தொடருங்கள்.
  • தயாநிதி மாறனை அமைச்சர் பதவியை கைவிட்டு கட்சிப் பணிக்கு அனுப்புங்கள் (இளைஞர் அணித் தலைவர்?).
  • கேபிள் தொலைக்காட்சி வினியோகத்தை முறைப்படுத்தும் முழுமையான சட்டம் ஒன்றைக் கொண்டு வாருங்கள்.
  • கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களின் மீது நடவடிக்கைகள் எடுங்கள். வாழ்வோம் வாழ விடுவோம் என்று இரண்டு பேரும் ஏதாவது உடன்படிக்கைக்கு வந்து விட்டீர்களா?
  • தமிழ் நாட்டின் நெடுஞ்சாலைகளில் இந்தி மொழி எழுத்துகளை் நீக்க வழி செய்யுங்கள்? வட மாநிலங்களில் தமிழுக்கு இடம் கொடுத்தவுடன் இங்கு வந்து எழுதச் சொல்லுங்கள்.
  • இறுதியாக, ஆனால் அனைத்திலும் முக்கியமாக தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியைக் கைவிட்டு விடுங்கள். அரசியலில் எவ்வளவோ நீக்குப் போக்கு காட்டியுள்ளீர்கள், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாததற்கு நிச்சயமாக உலகம் உங்களை வாழ்த்தும்.

7 கருத்துகள்:

VSK சொன்னது…

எடுத்துச் சொல்லிய ஒவ்வொன்றும், அப்பாவித் தமிழனின் அன்றாட அறைகூவல்கள்!

ஏறுமோ காதுகளில்?
மாறுமோ நெஞ்சம்?
தீருமோ துன்பம்!

மா சிவகுமார் சொன்னது…

நன்றி sk,

அடுத்த தேர்தல் வந்தாலொழிய அப்பாவி சொல் அரசின் காதில் ஏறுமா? பார்க்கலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க gosthoso (பெயர் உச்சரிப்பு?)

உங்கள் பதிவில் அழகாக தமிழில் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதிய கருத்துக்களை ஒரு பதிவாகப் போட்டு விடுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown சொன்னது…

மாசிவக்குமர்.... ஆரம்பத்திலயிருந்தே நீங்க இப்படித்தானா?...எழுதறீங்க?

மா சிவகுமார் சொன்னது…

வாங்க மகேந்திரன்,

புரியலையே, என்ன சொல்ல வர்றீங்க என்று?

அன்புடன்,

மா சிவகுமார்

லக்கிலுக் சொன்னது…

////ஆகவே, இந்த தேர்தலில திமுக ஆட்சி அதிகாரம் பெறாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது என்பது என் கருத்து.////

இது ஏப்ரல் 25ல் நீங்கள் எழுதியது....

எனவே உங்களிடமிருந்து இன்னமும் திமுக அரசுக்கு நிறைய எச்சரிக்கைகளை எதிர்பார்க்கிறோம் :-)

மா சிவகுமார் சொன்னது…

உசுப்புறீங்களே :-)

இதை எல்லாம் எழுதி நேரம்தான் வீணாகிறது. நம்மால் ஆனவற்றை, நம்முடைய வட்டத்துக்குள் செய்து மாற்றங்களைப் பார்க்கலாம் என்று முடிவு இப்போது. தாங்க முடியாமல் போகும் போது எச்சரிக்கைகளையும் எழுதலாம். ஒரு பதிவாகவே போய் விடும் அது. என்ன தாக்கம் வந்து விடும் என்று தெரியவில்லை :-(

அன்புடன்,

மா சிவகுமார்