சனி, ஜூன் 24, 2006

உடல் பருமனைக் குறைக்க(??)

சூரியன் உதித்த பிறகு தூங்காதே
சூரியன் மறைந்த பிறகு சாப்பிடாதே

பின் தூங்கி பின் எழுபவர்கள் பொதுவாகக் குண்டாகி விடுவார்கள் என்பது நான் குத்து மதிப்பாக உணர்ந்தது.

இரவு 10 மணிக்கு மேல் இரவு உணவு உண்டு, பன்னிரண்டு மணிக்கு மேல் தூங்கப் போய் காலை எட்டு மணிவாக்கில் எழுந்து காலை உணவைப் புறக்கணிக்கும் உடல்கள் கொழுப்பு, சதை போட சாத்தியங்கள் அதிகம். சில காரணங்கள்:

1. அதிகாலையில் நம் உடலின் வளர்சிதைமாற்ற வீதம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் எழுந்து விட்டால், நாள் முழுவதும் உடலின் ஆற்றல் தேவை அதிகமாக இருப்பதால் சாப்பிட்ட உணவு சரிவர உட்கொள்ளப்பட்டு விடுகிறது.
2. அதிகாலைக் காற்றில் ஓசோன் அதிகமாக இருப்பதால், உடலில் உயிர் வாயு உட்கொள்ளலின் திறன் அதிகமாக்கப்படுகிறது.
3. வளர்சிதை மாற்ற வீதம் குறைவாக இருக்கும் மாலை/ பின்னிரவு நேரத்தில் சாப்பிடும் உணவு செரிக்க அதிக நேரமாவதுடன், அதன் ஆற்றலை உடல் பயன்படுத்துவதில் சுணக்கமும் ஏற்படலாம்.

இதில் எந்த அறிவியல் ஆதாரமும், ஆராய்ச்சியும் இல்லை. நான் பார்த்தது, உணர்ந்ததிலிருந்து எழுதியதுதான். பிறரின் அனுபவங்கள் வேறாக இருக்கலாம்.

7 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்,

//2. அதிகாலைக் காற்றில் ஓசோன் அதிகமாக இருப்பதால், உடலில் உயிர் வாயு உட்கொள்ளலின் திறன் அதிகமாக்கப்படுகிறது.//

நீங்கள் கூறிவற்றில் மற்றவை பற்றி தெரியவில்லை ஆனால் காலைக்காற்றில் ஓசோன் உள்ளது விஞ்ஞான உண்மை தான். அது நமது உயிர்காற்றில் அதிகம் கலந்து சுவாசிப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும் என எங்கோ படித்தேன்.அதிகாலையில் காஸ்மிக் கதிர்கள் மற்றும் குறைந்த வெப்பம் நிலவுவதால் ஓசோன் வளிமண்டலத்தில் அதிகம் இருக்கும் என கூறுகிறார்கள்.எனவே தான் அதிகாலையையை பிரம்ம முகுர்த்தம் என்கிறார்களோ எனத்தோன்றுகிறது.

//3. வளர்சிதை மாற்ற வீதம் குறைவாக இருக்கும் மாலை/ பின்னிரவு நேரத்தில் சாப்பிடும் உணவு செரிக்க அதிக நேரமாவதுடன், அதன் ஆற்றலை உடல் பயன்படுத்துவதில் சுணக்கமும் ஏற்படலாம்.//

இதுவும் விஞ்ஞானப்பூர்வமான கருத்து தான் ஆனால் கொஞ்சம் மாற்றி சொல்லிவிட்டீர்கள்,மாலையில் அதிகமாக இருக்கும் வளர்சிதை மாற்றம்.இதற்கு உதாரணமாக காலணி வாங்க மாலையில் செல்ல வேண்டும் அப்போது தான் காலைக்கடிக்காத செருப்பு அளவு நாம் தேர்வு செய்ய முடியும் எனவும் படித்துள்ளேன்.
மேலும் இரவில் தான் நம் பாதங்களில் நடப்பதால் தேய்வடையும் தோல்கள் மீண்டும் வளர்கின்றன.

இவையெல்லாம் சில புத்தகங்கள்/பத்திரிக்கைகளில்
விஞ்ஞான உண்மை எனப்போட்டது எந்த அளவு உண்மை எனத்தெரியாது!

நீங்கள் கூறிவாறு பின்னூட்டம் வருமா வராதா எனக்காத்திருப்பதை விட நம் பின்னூட்டம் உடனே வருவதைப் பார்ப்பதை நானும் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்துடன் பார்ப்பதுண்டு.உங்கள் பதிவுகளில் உடனே பின்னூட்டம் வந்துவிடும் அது ஒரு வகையில் எனக்கு அல்ப சந்தோஷம் !
(பல வலைபதிவுகளில் இந்த அல்ப சந்தோஷம் கிடைப்பதில்லை எனக்கு
:-)) ) .
எனக்கு செல் ஃபோனே இன்னும் ஆச்சரியமான பொருளாகத்தான் இருக்கிறது.கை அடக்க கருவியில் எங்கு இருந்தாலும் பேச முடிகிறதே என!

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்,

நீங்கள் ஃபயர்ஃபாக்ஸில் எனது வலைப்பதிவு தெரியவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா,எனக்கு சரியாகவே வருகிறது ,நான் ஃபயர் ஃபாக்ஸ் 1.5.0.4 என்ற பதிவு வைத்துள்ளேன்.ஏன் உங்களுக்கு சரியாக தெரியவில்லை என எனக்கு புரியவில்லை. வலைப்பதிவில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா ,அப்படி எனில் என்ன செய்ய வேண்டும் எனக்கூறுங்கள் செய்துவிடலாம்.

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

1. உங்கள் பிளாக்கில் எந்தக் குறையும் இல்லை. நான் பயன்படுத்துவது லினக்சில் (ஃபெடோரா கோர் 1) ஃபயர் ஃபாக்ஸ். பெரும்பாலான தளங்களில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்கள் சரியாகத் தெரிகின்றன. அதில் போல்டு அமைக்கப்பட்ட எழுத்துக்களில் கொம்பு, புள்ளி போன்றவை எழுத்துக்களின் மேலே இல்லாமல் பக்கவாட்டில் தெரியும். உங்கள் பக்கங்களிலும் இந்தக் குறைதான். முத்துத் தமிழினியின் பக்கமும் அப்படியேதான் வருகிறது. நான் என்னுடைய கணினியில் எழுத்துருக்களைச் சரி செய்ய வேண்டும்.

2. இந்து சாத்திரங்களின் படி குண்டலினி காலை சூரிய உதயத்தில் விழித்து சூரியன் அடையும் போது தாழ்ந்து விடுகிறது என்று படித்திருக்கிறேன். அதையும் வளர்சிதை மாற்றத்தையும் கலந்துதான் நான் சொன்னது :-)

3. பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்யாமல் இருப்பது பின்னூட்டமிடுபவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்று எனக்குப் படுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

Chandravathanaa சொன்னது…

சிவகுமார்
இவைகள் எனது அனுபவத்திலும் பொருந்துகின்றன.

அதிகாலையில் எழுந்து விட்டால் அன்றைய பொழுது
உற்சாகமாகவும் நலமாகவும் அமைந்திருக்கும்.
என்றாவது சற்றுத் தாமதமாய் எழுந்தால் அன்றைய பொழுது
சோர்வு தலையிடி, நேரம் போதாமை... என்று பல சிக்கல்களைத் தந்து விடுகிறது.

சாப்பாடும் அனுபவத்தில் கண்ட உண்மையே. இரவில் பழங்களுடன் நிறுத்தி விட்டால்
உடல் எடை போடாமல் நலமாக இருக்கிறது.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சந்திரவதனா,

அதிகாலையில் விழிப்பு வந்து சோம்பலாக புரண்டு கொண்டிருப்பதுதான் எனக்கு முழு நாளையும் கெடுத்து விடுகிறது. 5-6 மணி நேர நிம்மதியான தூக்கத்துக்குப் பிறகு எழுந்து விட்டால் நீங்கள் சொல்வது போல நாள் முழுவதும் நிறைவான உணர்வு வருகிறது.

இரவில் உணவைக் குறைப்பது எனக்கு நன்கு பழகி விட்டது. நடு இரவில் வரும் நெஞ்சு எரிச்சல் எல்லாம் பழைய கதையாகி விட்டது.

அன்புடன்,

மா சிவகுமார்

வல்லிசிம்ஹன் சொன்னது…

மோரைப் பெருக்கி உண்,
நெய்யை உருக்கி உண்,

கால் வயிறு காலியாக இருப்பது நல்லது,
சாப்பிடும்போது பேச்சு வேண்டாம்,

சாப்பிடுவதற்கு முன்னால் தண்ணீர் குடிக்கக் கூடாது,
பின்னாலும் தான்.:-)

ஊண் குறுக உடலும் குறுகும்,
பெருந்தீனி பாபம்,
இதெல்லாம் நான் வளரும்போது கேட்ட சொற்கள்.
அப்போது இந்தக் கண்ட நேரத்தில் சாப்பிடும் வழக்கமும் கிடையாது.

நல்ல பதிவுக்கு நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி அம்மா,

நம் பாரம்பரிய உணவு முறைகளில், நம் பாட்டி சொன்ன பழக்கங்களில் இருக்கும் அறிவியியல் சிந்தனைகளை தொலைத்து விட்டோம். ஒவ்வொரு உணவுக்கும் ஒரு காரணம் வைத்திருக்கிறார்கள். எதனுடன் எதைச் சாப்பிட வேண்டும், எந்த வேளையில் எதைச் சாப்பிட வேண்டும், கிரஹணத்தின் போது என்ன சாப்பிட வேண்டும் என்று ஒவ்வொன்றிலும் ஆழமான சிந்தனைகள்.

அன்புடன்,

மா சிவகுமார்.